சனி, 25 பிப்ரவரி, 2012

தமிழ் சினிமாவில் தலித் கதைகள்?

தமிழ் சினிமா தொழில் நுட்பங்களில் வளர்ச்சி அடையாத தொடக்க காலங்களிலேயே நந்தனார் சரித்திரம் நான்கு முறை படமாக்கப்பட்டுள்ளது.  தலித் மக்களைப் பற்றிய கதைகள் அந்தக் காலத்திலயே வெள்ளித் திரையில் இடம் பிடித்திருந்தது.  ஆனால் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டுவிட்ட இன்றைய தமிழ் சினிமா தலித்துகளின் வாழ்க்கையை படமாக்குவதில் தயக்கம் காட்டுவது ஏன் அல்லது பாரா முகமாய் புறக்கணித்துச் செல்வது ஏன்? லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறை 25.02.2012 அன்று 21ஆம் நூற்றாண்டில் தமிழ் சினிமா என்ற தலைப்பில் நடத்திய மாநில கருத்தரங்கில் கட்டுரையாளர் முனைவர் திருவாசகம் மேற்கண்ட கேள்வியை எழுப்பியபோழுது மாணவர்கள் தலையாட்டி ஆமோதித்தனர்.  இந்தக் கருத்தரங்கில் தொடக்க உரை ஆற்றிய இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் நல்ல சினிமா என்பது எது என்ற வினாவை எழுப்பி விளக்கமும் அளித்தார்.  உங்களுக்குப் பயனுள்ள வகையில் எடுக்கப் பட்டுள்ளதா அது நல்ல சினிமா, உங்கள் வளர்ச்சிக்கு உதவுகிறதா அதுவும் நல்ல சினிமா, உங்கள் வாழ்க்கையை முன் வைக்கிறதா அது நல்ல சினிமா என்ற அவரது உள்ளார்ந்த பதிலில் திருவாசகத்தின் கேள்விக்கான பதிலைத் தேடினால் கிடைப்பதென்னவோ ஏமாற்றம் தான்.

கறுப்பின மக்கள் பற்றிய எழுத்துக்களும் கதைகளும் தீவிரம் அடைந்து வருவது போலவே தமிழில் தலித் மக்களைப் பற்றிய கதைகளும் கவிதைகளும் அவர்கள் வாழ்வையும் வாழ்வுக்கான போராட்டத்தையும் முன் வைத்து எழுதப்பட்டுவரினும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இவ்விஷயங்களைப் படமாக்க முன் வராமல் போனது ஏன் என்ற கேள்வி நியாயமானதுதான்.  முனைவர் திருவாசகம் தமது கட்டுரையில் அந்தக் காலத்திலாவது மதுரைவீரன் படத்தில் கூட அருந்ததிய இனத்தை சேர்ந்தவர்கள் எம்.ஜி.ஆரின் பெற்றோராகக் காண்பிக்கப்பட்டார்கள், இப்பொழுது அந்த அளவு கூட தலித் மக்களின் பிரதிநிதித்துதுவம் திரைப்படங்களில் இல்லை என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.  நான் இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  மறைந்த முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் திரு எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களைத் தெய்வமாகவே உயர்த்திப் பார்க்க வைத்த மதுரை வீரன் திரைப்படம் அவரை ஒரு அருந்ததியர் இனத்து குடும்பத்தின் பிள்ளையாகக் காட்ட விரும்பவில்லை என்பது அவலமான உண்மை.  வழக்கில் இருக்கும் கதைப்படி மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவன் தான்.  ஆனால் எம்.ஜி.ஆரை ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில் தாழ்த்தப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த மகனாக சித்தரிக்க வேண்டுமா என்று இரவு பகலாக தூங்காமல் சிந்தித்திருப்பார்கள் போலும்!  அது எம்.ஜி.ஆரின் புகழுக்கும் உயர்ந்த தெய்வீக மனிதர் என்ற பிம்பத்திற்கும் களங்கம் கற்பிக்கும் என்று நம்பினார்களோ என்னவோ.  மதுரை வீரன் ஜனன கதையே மாற்றப்பட்டு உண்மையில் அவர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் என்றும் அருந்ததியர் குடும்பத்தால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர் என்றும் எனவே மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் இல்லை என்றும் கதையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள்.  சமீப காலங்களில் தலித்துகள் பற்றி படங்களில் இடம் பெறுவதில்லை என்று யார் சொன்னது? புத்தியற்ற காமெடியன்களாகவும் கோமணம் மட்டுமே கட்டித் திரியும் கூலிக் காரர்களாகவும் கதாநாயகர்களுக்கு கால் பிடித்துவிடும் விசுவாச வேலைக்காரர்களாகவும் இவர்கள் தானே சித்தரிக்கப்படுகிறார்கள்.  சின்னக் கவுண்டர் என்ற படத்தில் 'வண்ணான் பயலுக்கு இவ்வளவு அறிவா அப்படின்னு பொறாம படராங்கடா' என்று கவுண்டமணி செந்திலிடம் கூறும் காட்சியில் ஆழமாகத் தெரிகிறதென்ன?  இம்மக்கள் அறிவிலிகள் என்பதுதான் சமூகத்தின் பரவலான மதிப்பீடு என்பதுதானே.  

வெள்ளித்திரையில் வெள்ளிவிழா கண்ட நாட்டாமை படத்தில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண்ணுக்கு நியாயம் வழங்குகின்ற நாட்டாமை 'அவங்களுக்கு படுக்குறதுக்கு நாம பாய் குடுக்கலாம்.  அதுல நாமளே போய் படுத்துக்கலாம்ங்கறது என்னடா நியாயம் என்று உச்ச ஸ்தாயியில் கர்ஜிப்பார்.  அந்த கர்ச்சனைக்குள் தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம் தூங்குவதற்கு பாய் கூட இவர்களிடம் தான் கையேந்திப் பெறவேண்டும் என்ற செய்திதானே ஒளிந்திருக்கிறது.

முனைவர் திருவாசகம் சகலகலா வல்லவன் கமலஹாசன் கூட தலித் மக்களை தசாவதாரத்தில் அவலட்சணமாகத்தானே காட்டினார் என குறைபட்டுக்கொண்டார்.  சந்தர்ப்பம் கிடைக்கும்போழுதேல்லாம் வைணவத்தையும் பிராமணத்தையும் தூக்கிப் பிடிக்கும் கமலஹாசன் போன்றவர்கள் தேவரின் மகனாக மட்டும் தான் நடிக்கவேண்டுமா, அருந்ததியர் மகனாக நடிக்கக் கூடாதா என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?  பெரும் அறிவு ஜீவி என்ற போர்வைக்குள் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்ற தேவாரத்தின் அடி நாதத்தையே மாற்றிப் போடுவதுபோல தமிழ் மண்ணுக்கு உரியது சைவம் அல்ல வைணவம் தான் என்று வரலாற்றையே தசாவதாரத்தில் திரித்து கிராபிக்ஸ் கலை நுட்பத்தில் அதை மறைத்து இளைய தலைமுறையினருக்கு தவறான சரித்திரத்தைக் கூறிய கமலஹாசனிடம் தலித் மக்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்ற அக்கறையை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?

விவாத நேரத்தின் பொழுது பாலு மகேந்திரா போன்றவர்கள் கூட இது பற்றி சிந்திக்கவில்லை என்று திருவாசகம் அங்கிருந்த பாலு மகேந்திரா முன்னிலையிலேயே குறிப்பிட்ட பொழுது அவர் படங்கள் எடுத்த காலங்களிலும் தொலைக்காட்சியில் குறும்படங்கள் கொண்டுவந்த வேளையிலும் தலித் கதைகள் எழுதப்பட்டிருக்கவில்லை என்று குறுக்கீட்டாளர்கள் பாலு மகேந்திராவிற்காக பரிந்து பேசினார்கள்.  அந்த தகவல் தவறானது என்பதோடு அப்படியே தலித் கதைகள் எழுதப்பட்டிருக்காவிட்டாலும் சுற்றிலும் சேரியிலும் வயக்காட்டிலும் இருத்தலுக்காகப் போராடும் தலித் மக்களின் வாழ்வும் சூழலும் இச்சிறந்த இயக்குனரின் கலைக் கண்களுக்குத்  தெரியாமல் போய் விட்டதா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.  தலித் பெண்ணின் உடல் 'பொதுவானது', 'கீழானது'.  அதன்மேல் யார் வேண்டுமென்றாலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற கேவலமான சிந்தனையை எத்தனை தமிழ்ப் படங்கள் போதித்திருக்கின்றன!

இந்த விவாதங்கள் மிக நீண்ட ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.  கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் லயோலா கல்லூரியின் காட்சி தகவலியல் துறை பேராசிரியர் சின்னப்பன் அவர்களின் அந்நியன் படம் பற்றிய அலசல் இயக்குனர் ஷங்கரின் எல்லாப் படங்களுமே மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்ற எண்ணத்தை வலுவாக சொன்னது.  சினிமா என்ற அற்புதமான கலை ஒரு பொழுதுபோக்கு தான்; ஆனால் அதன் வீச்சு சமூகத்தின் எல்லாப் பக்கங்களையும் எளிதாகச் சென்று தாக்கக் கூடியது.  எனவே இது போன்ற விழிப்புணர்வைத் தூண்டும் கருத்தரங்குகள் வரவேற்கப்படவேண்டியவை.  அக்கருத்தரங்கில் இடம் பெற்ற அனைத்துக் கட்டுரைகளையும் வாசிக்க விரும்புவோர் லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையை தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக