ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

பா.ஜ.க.பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டியா 

மாஃபியா கும்பலுக்கு சாமரம் வீசும் போலி அறிவு ஜீவிகள் 

முன் குறிப்பு 

நான் பா.ஜ .க கட்சியினைச் சேர்ந்தவள் இல்லை 


கடந்த சில நாட்களாக இந்திய ஜனநாயகத்திற்கும் தமிழக மக்களின் நலனுக்கும் எதிரான காட்சிகள் அரசியல் களத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.அதன் உச்சக்  காட்சியில்  தமிழக மக்கள் தோற்றுப் போய் கையறு நிலையில் வெம்பிப் போய் நிற்கிறார்கள். இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப் பட்ட முன்னாள் முதல்வரின் காரணகாரியங்கள் கிடைக்காத மர்ம மரணம் முதல் ஊழல் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்டவர் கைகாட்டிய ஒருவர்  முதல்வராகத் தம்  தலையில் கட்டப் பட்டது வரை அவலங்களைச் சந்தித்து வருகிறார்கள்.இதையெல்லாம் கூட சகித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது .ஆனால் அறிவு ஜீவி என்ற போர்வையில் பா.ஜ .க கட்சியினைப் பூச்சாண்டியாகக் காட்டி அந்தப் பிள்ளை பிடிக்கும் கட்சியிலிருந்து தப்பிக்க மாஃபியா கும்பலை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் அதுவே ஜனநாயகம் என்று மக்களுக்குச் சொற்பொழிவாற்றுகின்ற சில போலி அறிவு ஜீவிகளைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை .

தனியார் தொலைக்காட்சிகளின் விவாத அரங்குகளில் ,முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் இந்த மேம்போக்கு மேதாவிகள்   மக்களின் மனநிலைக்கும் விருப்பத்திற்கும் அவர்களின் நலனுக்கும் விரோதமான கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிடுகிறார்கள்.எம் மக்களின் உடனடித் தேவை ஒரு நல்லாட்சி .ஊழலற்ற ஆட்சி அவர்களின் உரிமைக்கும் சுய மரியாதைக்கும் பங்கம் விளைவிக்காத ஆட்சி .

 மணல் கொள்ளை.சுரண்டல்.விவசாயிகளின் தற்கொலை வறுமை என்று மக்களைப்  படுகுழியில் தள்ளி அவர்களின் தகர்ந்து போன கனவுகளின் மீதும் நைந்து போன வாழ்வின் மீதும் பல்லக்கு ஏறியிருக்கும் ஒரு கொள்ளைக்கார கும்பலின் அதிகார வெறிக்கு மக்களைப் பலியாக்கத் துடிக்கிறார்கள் சில சிந்தனாவாதிகள் .எந்த ஆட்சி அதிகாரமும் இல்லாத வேளையிலேயே ஆட்சிக் கட்டிலில் இருந்தவரின் நிழலாக இருந்து மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்த கும்பல் ஊழல் குற்றவாளியாகத் தண்டிக்கப் பட்ட பின்பும் பினாமி ஆட்சி நடத்துவதையும் அதற்காக மக்கள் பிரதிநிதிகளைக் கடத்திச் சிறை வைப்பதையும் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?

  தமிழ் நாட்டில் காலூன்றவே அவசர அவசரமாக சசிகலா மீதான ஊழல் வழக்கில் ஒரே வாரத்தில் நீதிமன்றத்தினைத் தீர்ப்பு வழங்க வைத்தது பா.ஜ .க  என்று முகநூல் காணொளியில்  கதறுகிறார்கள்  .தண்டிக்கப் பட்டவரும் அவர் சார்ந்த கும்பலும் தமிழ் நாட்டை மீட்க வந்த ரட்சகர் போலவும் அதனைத் தடுத்து நிறுத்தி பா.ஜ.க மதவாத அரசியலைத் திணிக்க முற்படுவது போலவும் பேசுகிறார்கள் . அய்யா கனவான்களே என்றேனும் ஒரு நாள் நீதி வெல்லும் என்ற சாமானியர்களின் நம்பிக்கையை உண்மையாக்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு இது . எல்லாத் தரப்பு மக்களும் வரவேற்கிறார்கள் ,திருவிழா போலக் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் இந்த மாஃபியா கும்பல் சூறையாடியது எம் மக்களின் வாழ்வையும்  வளத்தையும்தான்.  தமிழ் நாட்டையும் மக்களையும் மாஃபியா கும்பலிடமிருந்து காப்பாற்றுங்கள் என்ற ஓலம் எம் மக்களின் ஒருமித்த குரலாய் எழுந்திருக்கும் இவ்வேளையில் ;யார்தான் மாஃபியா இல்லை' என்று விதண்டாவாதங்களை வெட்கமின்றிப் பதிவிடுகிறார்கள்.

 இந்த மதவாதம் மண்ணாங்கட்டிவாதம் பிதற்றலை நிறுத்துங்கள்.  வயிற்றுக்குச் சோறும் உடுத்த உடையும் ஒண்ட ஒரு குடிசையும் கூட இல்லாமல் இயற்கை வளங்களையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து,யார் அதனைப் பறித்தார்களோ அவர்களின் முறையற்ற அரியணை ஏறும் முயற்சியைத் தடுக்க இயலாது தவிக்கும் எம் மக்களிடம் உங்கள் அண்ணாவித்தனத்தை, பா.ஜ.க. வைப் பூச்சாண்டியாகக் காட்டி எம் மக்களை வஞ்சிக்க நீங்கள் போடும் கபட நாடகத்தை நிறுத்திக்   கொள்ளுங்கள் .


மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.தமிழக வரலாறு வெறும் 60 ஆண்டு கால அரசியலுக்குள் அடக்கமில்லை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல் வேறு சமயங்களையும் சமயச் சண்டைகளையும் கண்டதுதான் தமிழகம் .இயற்கை வழிபாடு, முருகன்,அருகன் சைவம் ,வைணவம் சமணம் பௌத்தம் என்று பல மத நெறிகளையும் ,ஏன்  மதமே இல்லாத வழிபாட்டு முறையையும் கண்டவர்கள் . இறைவனையே பித்தா என்று உரிமையோடு அழைத்து காதலிக்கே தூது விட்ட சைவ மதத்திடமிருந்து அன்பே சிவம் என்று கற்றுக் கொண்டவர்கள்   தமிழர்கள் . என்னை மதிக்காத ஊரில் உனக்கென்ன வேலை உன் பை நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு நீயும் கிளம்பு என்று ஆண்டவனுக்கே உத்தரவு போட்ட வைணவத்திடம் சுயமரியாதையைக் கற்றுக் கொண்டவர்களய்யா தமிழர்கள் .கொல்லாமையை சமண பௌத்தத்திலிருந்தும் வாழும் முறையினை இயற்கையிடத்திருந்தும் தெரிந்து கொண்டவர்கள் நாங்கள் அனல் வாதம் புனல் வாதம் என்ற சமயச் சண்டைகளையெல்லாம் ஏற்கனவே பார்த்ததுதான் தமிழகம் . அதை எல்லாம் கடந்து தெளிவான பாதையைத் தேர்ந்தெடுத்து வாழும் திறன் படைத்தவர்கள் தமிழர்கள்.  நிலம் நீர் ஆகாயம் என்று இயற்கையையும் செல்வத்தை வழங்கும் கால் நடைச் செல்வங்களையும் வணங்குபவர்கள் தமிழர்கள் .இங்கு இந்த மதவாத முடக்குவாத தந்திரம் எல்லாம் எடுபடாது .

 தமிழக வரலாற்றில்  வரி வாங்காதே நீர்நிலைகளைக் காப்பாற்று என்றுமன்னர்களுக்கே அறிவுரை வழங்கிய புலவர்கள் இருந்தார்கள் . இன்று நாம் பேசும் நீர் மேலாண்மை பற்றி அப் புலவர் பெருமக்கள் அறிவுறுத்தியதுடன் செயல் படுத்தவும் செய்தார்கள் .இந்த நவீன அறிவுஜீவித் தரகர்களோ .பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு எம் ஜீவநதிகளைத்  தாரை வார்த்துக் கொடுத்து விட்டு மணல் கொள்ளை போன்ற அடாவடித்தனத்தால் விவசாயத்தையும் மக்களையும் புதைகுழியில் தள்ளி விட்ட  மாஃபியாக்களுக்கு பட்டாபிஷேகம் செய்யத் துடிக்கிறார்கள் .

இது எம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல .அவர்களின் சுயமரியாதைக்கு விடப் பட்டிருக்கின்ற சவால் .மதியாத மன்னனிடம் பரிசில் பெற்று வாழ்வதைக் காட்டிலும் மடிந்து போவதே மேல் என்று எம் தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்தார்கள் .அவர்களும் குயவராகவும் பொற்கொல்லர்களாகவும் உழைத்து வாழ்ந்தார்கள். காசுக்காக இப்படி அநீதிக்குக் கொடி பிடிக்கவில்லை.


    மக்கள் தங்கள் கொள்கைகளில் தெளிவாகவே இருக்கிறார்கள் .எனவே   "சாப்பிடு  இல்லேன்னா பூச்சாண்டி பிடிச்சிட்டுப் போயிடுவான் " என்று தாய்மார்கள் குழந்தைக்குச் சோறு ஊட்டுவது போல    #பா.ஜ.க  கட்சியினைப் பூச்சாண்டியாகக் காட்டி மக்களுக்குப் போதனைகள் செய்கின்ற வேலைகளை விட்டு விடுங்கள்.

தரகு வேலை பார்க்கும்  போலி அறிவு ஜீவிகளின் பிதற்றல்கள் எங்களுக்குத் தேவையில்லை. சிலர்  ஆய்வாளர்கள் என்ற போர்வையிலும் மக்கள் நலனுக்கு முரணான  வெற்றுக் கூச்சல்களை முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு'ஆய்வாளர் ' காமராஜர் ஆட்சியை விட மிகச் சிறப்பான ஆட்சி மக்களுக்கு இப்போது கிடைத்திருப்பதாகப் புகழ்ந்து கொண்டிருந்தார் .இவர்களெல்லாம் என்ன மாதிரியான ஆய்வினைச் செய்தார்கள் ?முனைவர் அதாவது P.HD பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபடும் சிலர் பல்கலைக் கழகத்தில்  தங்கள் பெயரைப் பதிவு செய்வதுடன் சரி .யாரோ ஒருவர் எழுதித் தர, பட்டத்தை மட்டும் இவர்கள்  கூசாமல் வாங்கி விடுவார்கள்.சில போலி அறிவுஜீவிகளும் அவர்கள் மக்கள்களும் கூட இப்படிச் செய்வதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்   இப்படி பா.ஜ.க.பூச்சாண்டி என்று வெற்றுக் கூச்சல் போடுவதை விட்டு விட்டு மாஃபியாக்கள் எப்படி  எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்  என    #உண்மை  அறியும் குழு மூலம் கண்டு பிடிக்க முயற்சி செய்யலாம்.

மக்களுக்குத் தேவை மக்களுக்கான நல்லாட்சி .மக்களாட்சி .எங்களிடமிருந்தே  கொள்ளையடித்த பணத்தில் ஜனநாயக வழிமுறைகளைக் கொன்று விட்டு  அரியாசனம் அமரத் துடிக்கும் மாஃபியாக்களின் கொடுங்கோல் ஆட்சி அல்ல .

கடைசியாக ஓன்று

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

நீங்கள் நல்லது செய்யவில்லையென்றால் கூடப் பரவாயில்லை , தீயதைச் செய்யாதீர்கள் என்று புறநானூற்றுப் புலவன் சொல்கிறான் .கொஞ்சம் தமிழ் இலக்கியத்தையும் வரலாற்றினையும் படித்து விட்டு விவாதிக்க வாருங்கள்