புதன், 7 டிசம்பர், 2011

கையற்ற காதல்


என் காதலுக்குக்
கண் இருந்தது
கைதான் இல்லை !
யாருக்குப் புரிகிறதோ
இல்லையோ
உனக்குப் புரியும் .
ஆகாயம் தொட்ட
பசுமையை
அண்ணாந்து அதிசயித்த வேளை
நீ என்றும்
என் நெஞ்சில்
பசும் பூ என்றாய் .
கொடைக்கானல் மலைக்காற்றில்
உன் நெருக்கத்தின் வாசம் .
மறைத்து வைத்த
மகிழம் பூவாய்!

ஒன்றரைக் கையுடன்
குழந்தை என்றதும்
முடத்தைப் பெற்ற
மூடக் கழுதை
வசவுகளில் வறுபட்டதில்
எனைத் தொலைவில்
வைத்து விட்டாள் தாயும் !
நீயோ தூக்கி வைத்துக்
கொண்டாடினாய் !
வீட்டு விசேஷம்
ஊர் விழாக்கள்
ஒதுக்கப்பட்டு மறக்கப்பட்டேன்
பிறகு நானே
புறக்கணித்தேன்
புறக்கடையில் நின்று
கொண்டு !

நீயோ
உன் வாழ்வின்
ஒரே விசேஷம்
நான் என்றாய்
தேரில் ஏறி வரும்
திருநாள் அம்மனாய்
அவதரித்தேன்
உன் வார்த்தைகளில்


வார இறுதியில்
மதுரையிலிருந்து
கொடைக்கானலுக்குப்
பேருந்து வருகிறதோ
இல்லையோ
நீ வந்தாய்
எனக்காகவே !
அனுதாபமா என்றேன்
அன்பு என்றாய்

கல்லூரியில் சொல்லாத
உலக வரலாறுகளை
நீ எனக்கென்றே
விவரித்த போது
ஆங்கில ஆசிரியை
வரலாற்று மாணவியாய்
மாறிய மாயம்
உன்னோடு நானும்
இரசித்தேன் .
இலக்கியமும் வரலாறும்
பிரிக்க இயலாதவை
உன்னையும் என்னையும் போல
என்றாய்
கண்ணோடு கண் நோக்கி
நீ பேசிய காவியத்தை
உயிரில் எழுதிக் காத்தேன்

எனக்குப் பிடித்த
சொடக்குத் தக்காளி
கை நிறையத் தந்து
காதல், வார்த்தைகளில்
இல்லை ,
காட்டும் அக்கறையில்
என்ற போது
ஆயிரம் சூரியன்களாய்
நீ அருகிருக்க
ஆலங்கட்டி
மழை கொட்டியது
நெஞ்சுக்குள்.
பரணில்
வீசப்பட்ட
பழைய பொருளாய்
கிடந்தேன்
நீ
என்
நினைவுகளை
சுவாசிப்பதாய்
சொன்னபோது
பொதிகையின்
புதிய
தென்றலாய்
புலர்ந்தேன்

என் 
கண்கள் 
மின்னலின் 
பனிப் பொழிவு 
என்றாய் 
என் 
மொழி
கலைகளின் அபிநயம் 
என்றாய் 

தேரிக் காட்டுச் 
செம்மண்ணில் 
படர்ந்திருக்கும் 
செண்டுப்பூ 
நான் என்றாய் 
செவ்வரளி 
இதழ் 
சேவல் கொண்டைச் 
சிவப்பில் 
என்
பட்டுப் பாதங்கள் 
என்றாய் 
ஆவாரம் பூவையும் 
அந்திச் சூரியனையும் 
குழைத்து தீட்டிய 
முகம் 
என்றாய் !

புத்தகங்களில் 
மூழ்கிக் கிடந்தவனை 
கவிதை முத்தெடுக்கச்
செய்த 
என் மகாராணி 
நீ 
என்று 
மலைகளின் இளவரசி 
சாட்சியாய் 
சொன்ன 
அந்தக் கணத்தில் 
என் 
ஒன்றரை கை 
காணாமலே 
போய் விட்டது .

கிளியோபட்ரா
சின்ட்ரெல்லா 
எல்லாமே நானோ 
இறுமாந்து கேட்டேன் 
நான் 
தேவதையா ?
இல்லை 
தேவதைகளின் 
தேவதை என்றாய் .

உன் 
அறிவின் விசாலம் 
நகம் தீண்டாத 
நாகரீகம் 
பாலையில் 
புதிய மழையாய் 
உன் அன்பு 
நீயே 
நானாய் 
நினைவுகளில் 
கலந்து கரைந்தேன் 

என் வீட்டார் 
நம்பவேயில்லை 
இந்த ஊனத்தையும் 
நேசிக்க ஒருவன் 
என்பதை 
பிறந்த நாள் முதல்
பார்த்திராத 
நாணத்தை 
பெண்மையின் 
நெகிழ்வைக் 
கண்களில் கண்டதும் ,
ஒரே முடிவாய்
வந்தார்கள் உன்னிடம்
திருமணத் தேதி குறிக்க!


பாவம் எனப் பரிவு
காட்டியது பாவமா ?
தன்னம்பிக்கை தர
நட்பு பாராட்டியதற்குத்
தண்டனையா?
பரிகாசச் சொற்களில்
நீ 
அள்ளி வீசிய 
அமிலத்தில் 
அவர்கள் 
துடித்துப் போனார்கள் 
நானோ 
மரித்தே போனேன்!


நட்புக்கும்
காதலுக்கும் 
வித்தியாசம் 
தெரியாதா 
என்று 
முகத்தில் அறைந்தாயாம் 
ஏன் தெரியாது ? 
உதடுகளோடு 
சேர்ந்து சிரித்த 
கண்களின் 
கயமைதான் 
தெரியாமல் 
போய் விட்டது 

ஆனால்
உனக்கு
நான் கண்டிப்பாக
நன்றி சொல்ல வேண்டும்
கண்ணீரில் கலைந்த
என்
கையறு நிலைப்
பாடல்களும்
எனை எள்ளி
நகையாட
இருட்டில்
நான் நத்தையாய்
என் முடத்தொடு
முடங்கிப் போன போது
வீழ்த்திய காதலின்
கட்டுக்கள் கத்தரித்து
துக்க முக்காடு களைந்து
எனை எழச்செய்தது
உன்
வரலாற்றுக் கதைகள்தான் !

உயர வைத்து
உயர்ந்த
பெண்களின்
சரித்திரம்
நீ
முறித்துப் போட்ட
என்
கனவுகளுக்குப்
பதியம் போட்டன .
என் தாய் கூட 
அஞ்சினாள்
நான் 
தற்கொலை 
செய்து கொள்வேன் என்று 
நானோ 
உன் 
வஞ்சனையில் செத்து 
மீண்டும் பிறந்தேன் 
மலைக் குறிஞ்சியாக 


எழுதியவர்:  ஜெயசாந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக