திங்கள், 15 ஆகஸ்ட், 2011

நண்பனுக்கு...

நான்
பட்டம் விடவும்
பயன்படாத
குப்பைக் காகிதம்
என்றுதான்
எண்ணியிருந்தேன்.
அக்கறை மை தோய்த்து 
என் கண்களில் 
உன் அன்பை
நீ எழுதிய பொழுதுதான்
சிறகின்றி கூட நானும்
வானம் தொட முடியும்
என்றுணர்ந்தேன்


பாலை வெளியில்
தகிக்கும் மணலில்
நழுவிய என் கால்கள்
உன் சிநேகக்
கரங்களில்தான்
வலுப் பெற்றன.


உன் நினைவுகள்
தனிமையிலும்
தலை கோதிவிட்ட பொழுதுதான்
நட்சத்திரக் கூட்டங்களில்
நானும் ஒருத்தியாய்
ஒளிர்ந்திருக்கக் கண்டேன்


பாச இழை பின்னிய
உன் மடியில்
மனம் களைப்பாறிய 
வேளையில்தான்
சதா குழம்பிய
என் சிந்தனையில்
தெளிவு கண்டேன்


கள்ளிச்செடி என்று
கவிழ்ந்து போயிருந்தேன்
புதை மணலுக்குள்
கற்பகத் தருவாய்
கம்பீரமாய் நிற்கச் செய்தது
உன் சிநேகம்.


உன் தோழமைக் காற்றை
சுவாசிக்கையில்தான்
பழைய ரணங்களின்
சுவடுகள் கூட
சொல்லாமல் கரையேற
என்
ஆழ்மனசு கூட
ஆசுவாசம் பெற்றது.




எரிகற்கள்
எதுவும் இல்லாமல்
விரல்களைத் தீண்டும்
மீன்களை
விண்மீன் கூட்டத்தைப்
பார்க்கின்ற பரவசத்துடன்
குளத்தங்கரையின்
கடைசிப் படிக்கட்டில்
மடி நிறைய புளியம் பழத்துடன்
ஒய்யாரமாய் வேடிக்கை பார்த்திருக்கும்
சிறுமியாய் மாறிய
நான்
குழந்தையாய் மலர்ந்த
அந்த வேளையில்தான்
நீ
வெடிவைத்தாய்
எல்லாம்
ஆற்று மணலில்
வீடுகட்டி விளையாடிய
குழந்தைகளின்
கூட்டாளித்தனமாய்
நினைத்துக் கொள் என்று!
எப்படி நண்பா?
இடையறாத
என் கண்ணீர் நெடி 
எட்டவில்லையா உன்னை...






எழுதியவர்: ஜெயஷாந்தி

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கொங்கைகள் வேண்டும்


வானம்
கறுப்புக் குடை பிடித்திருக்க
இரவெல்லாம்
கொட்டிய மழையில்
மண் சுவருக்கு வெளியே
முளைத்திருந்த
குட்டைக் காளான்கள்
நான்காவது
கண்டிப்பாக
ஆண்தான்
அசலூர் ஜோசியக்காரன்
அடித்துச் சொன்னபிறகும்
இரட்டையாய் பிறந்திருந்த
தங்கச்சிப் பாப்பாக்களின்
விரல்களை போலவே
மெத்தென்றிருந்தன

நேற்று வரையிலும்
நெஞ்சுக்கு ஏறிய
வயிற்றுப் பாரத்தோடு
முதுகு நிமிராது
பனிக்குடம்
உடையும் வரை
பீடிசுற்றி,
பெற்றுப் போட்ட
ரெண்டும் பெட்டை
என்றதும்
ஜன்னி கண்டு
விழுந்தாள்.
பீடி சுற்றும் பெண் 

உள்ளுர் மருத்துவச்சி
கைவிரித்த பிறகும்
கையில் காசில்லை
என்று
காணாமல் போய்விட்டான்
மலையாண்டி
பெரண்டை ஊறிய
கள் தலைக்கேறியதும்
மூதேவி
ரெண்டு மூதேவிகளை
பெத்துப் போட்டுட்டா
சாமியாடி
சாமியாடி 
மலையேறிய அப்பனின்
கண்ணைக் குத்தச் சொல்லி
எசக்கி அம்மனிடம்
வேண்டிக் கொண்ட
பேச்சிக்கு
ஈரக்காளான்
ஸ்பரிசம்
தங்கச்சிப் பாப்பாக்களை
கண்ணுக்குள் கொண்டுவர
நாடா இல்லாத
முக்கால் பாவாடையை
இடுப்பில் இறுக முடிந்து
ஒரே பாய்ச்சலில்
குடிசையில் நின்றாள்

கோணிப் பாயில்
விறைத்துப் போய்க்
கிடந்த செல்லாயி
ஒன்ன நிர்க்கதியாக்கிட்டுப்
போய்ட்டாளே
மாரில் அடித்துக்கொண்ட
பெண்கள்

வைசூரி கண்டு
மருந்தில்லாமல்
தங்கை மாரி
சாமியிடம் சென்றபோது
செல்லாயி அழுதது
ஏனோ நினைவுக்கு
வந்தது பேச்சிக்கு

பறச்சேரி சுடுகாட்டில்
செல்லாயி புதையுண்ட பிறகும்
புழுதி மண்ணை
தலையிலிறைத்து
ஒப்பாரி வைத்த
மலையாண்டி
மீண்டும் மீண்டும்
சாமியாடி
மலையேறினான்.
ஈரமான
துணித் தொட்டிலில்
வீரிட்ட
தங்கச்சிப் பாப்பாக்களுக்கு
யார் பால் கொடுப்பார்கள்?

குழந்தைகள்
தாமாகவே
சாமியிடம் செல்லும்வரை
உயிரோடு
விட்டிருக்கிறார்கள்
என்று
எட்டு வயது
பேச்சியின்
புத்திக்கு எட்டவில்லை

மாராப்புக்குள்
மாரியை
சாய்த்துக்கொண்டு
பேச்சியின்
தலைகோதும்
செல்லாயி
மறுபடி
பிறக்கமாட்டாளோ
இசக்கி அம்மா
எனக்காவது
கொங்கைகளைக்
கொடு தாயே!
பேதலித்துப் புலம்பினாள்
பேச்சி.


எழுதியவர்: ஜெயஷாந்தி