புதன், 22 ஜனவரி, 2014

நவீன ஊடகங்கள் நாட்டார் கலைகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்

நாட்டார் கலைகள் (folk arts) நாட்டார் வழக்காறுகள் மற்றும் இலக்கியங்கள் போலவே மண் சார்ந்து மக்களிடையே உருவாகி நாட்டுப்புற மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டவை. நாட்டார் என்ற சொல்லுக்கு விவசாய மக்கள், கிராமப்புற மக்கள் என்று பல்வேறு இலக்கணங்கள் கூறப்பட்டாலும் நகர்ப்புற வாழ்க்கையின் தாக்கம் இல்லாமல் ஆங்காங்கே இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள் என்ற விளக்கமே நாட்டுப்புறவியலில் வல்லுனரான தே.லூர்து போன்றவர்களால் முன் வைக்கப்படுகிறது. அவ்வாறு கிராமப்புறங்களில் தொழில் அடிப்படையில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மக்கள், விவசாயம் பிற தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அந்த மக்கள் தங்களுடைய களைப்பைப் போக்கிக் கொள்வதற்காகவே மாலை நேரங்களில் வில்லுப்பாட்டு, தெருக்கூத்துப் போன்ற கலைகளை நிகழ்த்தியதோடு, பழமொழி, விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றை தங்கள் வாழ்க்கையில் இயல்பாகவே பயன்படுத்தி வந்தார்கள். அதே போல திருவிழா காலங்களில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற மண் சார்ந்த நாட்டுப்புறக் கலைகளையும் நிகழ்த்தி கண்டுகளித்தார்கள்.

பழந்தமிழகத்தில் பாடப்பட்ட சங்கப் பாடல்கள் நாட்டுப்புற பாடல் அல்லது வாய்மொழிப் பாடல் ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. அதே காலகட்டத்தில் நாட்டுப்புறக் கலைகள் பாடினி ஒழுக்கத்தில் வாழ்ந்த விரலியரும், மேலும் கூத்தர், பொருநர் போன்றவர்களும், அக்கலைகளை வளர்த்த கலைக் குடும்பத்தினராகவே போற்றப்பட்டார்கள். பொருநர் என்ற சொல்லுக்கு, பிறரைப் போல் வேடமிட்டு நடிப்பவர் என்று பொருள். இதையெல்லாம் வைத்து சிந்திக்கின்றபோது, மரபு ரீதியாகவே நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டில் போற்றி பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது புலனாகிறது. தொழிற்புரட்சியின் காரணமாகவும், மறுமலர்ச்சி (Renaissance) காலகட்டம் ஏற்படுத்திய மாற்றங்களின் விளைவாகவும், அச்சு மற்றும் மின் ஊடகங்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை இலக்கியத்திற்கும் கலைகளுக்கும் புதிய பரிமாணங்களை கொடுக்கின்றன. உதாரணமாக, ஆசிரியர் இன்னார் என்று சொல்லப்பட முடியாமல் பலத் தலைமுறைகளாகப் பாடப்படும் வில்லுப்பாட்டு மற்றும் பிற நாட்டார் பாடல்கள், கலைகள் ஆகியவற்றிற்கும் நவீன ஊடகங்கள் உருவாக்கும் இலக்கியங்களுக்கும் கலைகளுக்கும் அடிப்படையிலேயே பெரும் வேறுபாடு காணப்படுகிறது. திட்டமிடப்படாமல் இயல்பாக எழுந்த நாட்டார் கலைகள் வழி, வழியாக மக்கள் வாழ்க்கையில் இடம்பெற இன்றைய நவீன ஊடகங்கள் மக்களின் இயந்திர கதியான வாழ்க்கையில் ஒரு சிலரால் திட்டமிட்டு குறிப்பிட்ட வரையறைகளுடன் படைக்கப்படுகின்றன. வாழ்வோடு இயைந்து வாழ்க்கையையே எடுத்து காட்டிவந்த நாட்டார் கலைகளும் மக்கள் வாழ்க்கையிலிருந்து எட்டியே நிற்கும் நவீன ஊடகக் கலைகளும் மாறுபட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், நவீன ஊடகங்கள், பழம் மரபு ரீதியான கலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதே உண்மை. உதாரணமாக, தமிழ் நாட்டில் திருவிழா காலங்களில், மாலை நேரங்களில் கோயில்களிலும், தெரு சந்திகளிலும் நடத்தப்படும் வில்லுப்பாட்டுக்கள் மக்களால் வணங்கப்படும் சிறு தெய்வங்களை மையமாக வைத்தே நிகழ்த்தப்படுகின்றன. அச்சிறு தெய்வங்கள் ஆண் அல்லது பெண், யாராக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், அதிலும் குறிப்பாக விளிம்பு நிலை சமூகத்தின் பிரதிநிதிகளாகவும் அம்மக்களின் வாழ்க்கைக்கு போராடியவர்களாகவுமே சிறு தெய்வக் கதைகள் சொல்லப்படுகின்றன. மதுரை வீரன், காத்தவராயன், முத்துப்பட்டன் கதை, தென் தமிழ்நாட்டில் சிறப்பு பெற்ற இசக்கி கதை, அண்ணன்-தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டான நல்லதங்காள் கதை ஆகியவை திரைப்படம் போன்ற நவீன ஊடகங்களில் பெரும்பாலும் எடுத்தாளப்படுவதில்லை. மதுரை வீரன் திரைப்படமாக்கப்பட்டிருந்தாலும், கதை நாயகனாக நடித்த எம்.ஜி.ஆர்-க்கு ஏற்றார்போல் மாற்றப்பட்டது. மேல்நிலையாக்கம் (Sanskritization) என்ற கோட்பாடு பின்பற்றப்பட்டு, தவறான செய்தியையும் மக்களுக்குக் கொண்டு செல்கிறது. அதேபோல் ‘துலாபாரம்’ படமாக உருவாக்கப்பட்ட நல்லதங்காள் கதையின் அடித்தளம் மாற்றியமைக்கப்பட்டது.

‘மதுரை வீரன்’ திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தின் விடுதலை வீரனாக போற்றப்பட்ட மதுரை வீரன் திரைப்படமாகும்பொழுது, மேல்தட்டு வர்க்கத்தின் வாரிசாக திரித்து சித்தரிக்கப்படுகிறான். இன்னும் நவீன ஊடகத்திற்குள் வராத முத்துப்பட்டன் கதையும் மதுரை வீரன் கதைப் போலவே தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்களை மேல் சாதிப் பெண்களாக மாற்றி சித்தரிக்கும் போக்கில் இன்று வில்லுப்பாட்டில் திரிக்கப்பட்டிருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இவ்வகையில் சிந்தித்தால் நவீன ஊடகங்கள் நாட்டர் கதைகளை திரித்துவிட்டன என்பதோடு அக்கதைப் பாடல்களின் தொடர் நிகழ்ச்சிகளையும் கூட பாதித்துவிட்டன என்றே சொல்ல வேண்டும்.

நீண்ட காலமாக மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிப்போன கதைப்பாடல்கள், கும்மி, கரகாட்டம், ஒயிலாட்டம், பழமொழிகள், விடுகதைகள் இன்றைய நவீன ஊடகங்களில் அவற்றிற்குரிய இடத்தைப் பெறவில்லை என்பதுடன் மக்களின் வாழ்வில் அந்நவீன ஊடகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால் அக்கலைகள் மக்களின் வாழ்விலிருந்தும் மறைந்து போய்க் கொண்டிருக்கின்றன.

*****