கட்டுரைகள்


கர்மவீரர் காமராஜர்
அக்டோபர் 2, 2012:  (தமிழர் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற காமராஜரின் 38வது நினைவு தினத்தையொட்டி தொகுக்கப்பட்ட கட்டுரை)
1903ஆம் ஆண்டு - ராஜ யோகம் என்ற நூலை காந்திஜி படித்த ஆண்டு அது.  சுவாமி விவேகானந்தரின் அந்த நூல், காந்தியை கவர்ந்ததுபோல், கீதையும் அந்த ஆண்டுதான் அவர் உள்ளத்தை தொட்டது.  அந்த ஆண்டில் சிந்திப்பதற்கு அவருக்கு இருந்த நேரத்தை எல்லாம் சத்தியாகிரகத்தின் பிறப்பும் அதன் வளர்ச்சியும் கிரகித்துக் கொண்டன.  காந்திஜியை பொறுத்தமட்டில், அவருக்கு வழிகாட்டும் தவறாதத் துணையாக அந்த ஆண்டு முதல் பகவத் கீதை ஆகிவிட்டது.  ஒரு கொள்கையை சரியானபடி பரப்பவேண்டுமானால், அதற்கு எனக்குத் தெரிந்தது ஒரே வழிதான்.  அந்தக் கொள்கையை நானே கடைபிடித்துக் காட்டுவதுதான் அந்த வழி என்று கூறி, தன்னையே காந்திஜி ஒரு சோதனை கருவியாக உலகுக்குக் காட்டியதும் அதே 1903ஆம் ஆண்டில்தான்.  அந்த 1903ஆம் ஆண்டில்தான், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தார்.  காந்தியின் கடமை தவறாத வாரிசு, அன்றைய விருதுபட்டி, இன்றைய விருதுநகரில் பிறந்தபொழுது, இந்தியாவின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியாக அவர் பிறந்திருக்கிறார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.
அன்னை சிவகாமி அம்மையாரால் ‘ராஜா’ என்று கொண்டாடப்பட்ட காமராஜுக்கு உண்மையில் வைக்கப்பட்ட பெயர் மீனாட்சி அம்மையின் நினைவாக வழங்கிய காமாட்சி என்ற பெயர்.  காமாட்சியும் ராஜாவும் சேர்த்து காமராஜ் என்ற பெயர் நிலைத்துவிட்டது.  சிறுவயதிலேயே வீரமும் விவேகமும் கொண்டவராக விளங்கினார் என்பதற்கு விருதுநகர் வீதியில் சிறுவன் காமராஜ் மதங்கொண்ட யானையை அடக்கியதே சான்றாகத் திகழ்கிறது.  ஒரு நாள், குளித்துவிட்டு கோயில் திரும்பிய யானை, அடங்காமல் பாகனையும் மீறிக்கொண்டு பிளிறிக்கொண்டு ஓடி வந்தது.  ‘வெண்கலக் கடைக்குள் யானைப் புகுந்தாற் போல்’ என்பார்களே.., அது அந்தக் கடை வீதியில் நடக்க இன்னும் கொஞ்சம் நேரமே இருந்தது.  பீதியில் மக்கள் வீதியில் சிதறி ஓட ஆரம்பித்தனர்.  ஒரு நொடி நின்று நோக்கினார் காமராஜ்.  யானையின் தும்பிக்கையில் சங்கிலி இல்லை.  குதிரைப் பாய்ச்சலில், கோவில் அருகே உள்ள யானை கட்டும் இடத்தை அடைந்தார்.  யானையின் சங்கிலியை எடுத்துக்கொண்டு வந்து அதன் முன்னால் வீசி எறிந்தார்.  மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்தன.  சங்கிலியைக் கண்டதும் சாந்தமாகிய யானையை அவரே கோவிலுக்கு வழிநடத்திச் சென்றார்.  இந்த யானைக்கு காமராஜர் அடிக்கடி வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளை உண்ணக் கொடுப்பது உண்டாம்.  இந்த நட்புறவு பாகனை மீறி யானை செயல்பட்டபொழுதெல்லாம் அதை அடக்க உதவியது.  காமராஜ் முகத்தை பார்த்தாலே போதும், அந்த யானை பசுவாகிவிடுமாம்!  ஆறாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டிருந்த காமராஜர், தினசரி பத்திரிக்கைகளை படிப்பதிலும், நண்பர்களுடன் அதைப் பகிர்ந்துக் கொள்வதிலும் உற்சாகம் காட்டினார்.
பஞ்சாப் படுகொலை நிகழ்ச்சியே காமராஜின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.  அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து சுதந்திர பாரதத்தை நிறுவுவதே ஒரே லட்சியம் என சபதம் ஏற்றார்.  1942ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஆகஸ்ட் புரட்சி வெடித்துக் கிளம்பியது இந்த ஆண்டில்தான்.  பொறுமையின் சின்னம், அஹிம்சையின் அவதாரம் காந்திஜி உள்ளம் வெதும்பி British ஆட்சியை நம்பிப் பயனில்லை என்று காங்கிரஸுக்கு போராட்டம் நடத்த பச்சை விளக்குக் காட்டியது இந்த ஆண்டில்தான்.  இந்த நிலையில் பம்பாய் நகரிலுள்ள கோவாலியா என்ற தெப்பக்குள மைதானத்தில் நடந்த வரலாற்றுப் புகழ் பெற்றக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ் முப்பது பேருடன் சென்றிருந்தார்.  140 நிமிடங்கள் உணர்ச்சிப் பிளம்பாகப் பேசிய காந்திஜி, “ ‘செய் அல்லது செத்து மடி...’ இந்தியாவை விடுவிப்போம் அல்லது அந்த முயற்சியில் செத்து மடிவோம். அடிமைத்தனம் நிலைத்திருப்பதைப் பார்க்க நாம் உயிர்வாழத் தேவையில்லை” என்று முழங்கினார். அதன் பிறகு காமராஜின் இதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்த சுதந்திரத் தீ, தமிழகத்தின் மூலை முடுக்கொல்லாம் பரவியது.  சிறைக்கு அஞ்சாத சிங்கத் தலைவர், தம் வாழ்நாளின் பொன்னான இளமை பருவத்தில், ஒன்பது ஆண்டுகளை சிறையில் கழித்தார்.  1942டிலும் அவரை கைது செய்வதற்கு எழுத்தச்சன் என்ற தேசியவாதியாகிய இன்ஸ்பெக்டர் தயங்கியபொழுது, இப்படி கூறினாராம் காமராஜ்: “என்னால் செய்யக்கூடிய பணிகள் அனைத்தையும் சிறப்புற செய்து முடித்துவிட்டேன்.  இனி நான் மட்டும் ஏன் வெளியே இருக்க வேண்டும்?  என் அருமைத் தலைவர்கள் எல்லோரும் கண்காணா சிறைகளில் வாடும்போது, நான் மட்டும் இங்கே சுகமாக ஓய்வெடுப்பதா?  அடிமை நாட்டில் அடிமைக்கு சுகம் ஏது.  சுதந்திரம் இல்லாத நாட்டில் சிறையில் இருப்பதுதான் விடுதலை வீரர்களுக்கு சுகமான அனுபவம்.  வெளியே இருப்பதுதான் சித்தரவதை.” என்று கர்ச்சித்தாராம்!
முதலில் வேலூர் சிறைக்கும், பிறகு அமராவதி சிறைக்கும் அனுப்பப்பட்ட காமராஜ், அங்குதான் பல தேசியத் தலைவர்களை சந்தித்தார்.  அது, அவரது மன உறுதியை அதிகமாக்கியது.  நாடு சுதந்திரம் பெறும் வரை, திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருந்த காமராஜ், விடுதலை பெற்றப் பிறகும், நாட்டுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.
1948ஆம் ஆண்டு காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பேர் இடியாக செய்தி வந்தபொழுது, காமராஜர் கூறியவை இவைதான்:  “துன்பம் ஒருபுறம் இருக்க, வேற்றுமைகளை வளர்க்காதீர்.  மத வெறியை ஊட்டாதீர்.  மன உறுதியுடன் சமுதாய வாழ்வு நலம் பெற பாடுபடுவோம்.”  காமராஜ் தமது அரசியல் வாழ்வில் அன்றுதான் முதல் முறையாக கண்ணீர் சிந்தினார். 1954ஆம் ஆண்டு, பலரது வர்புறுத்தலுக்கு இணங்க தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட காமராஜ், அதற்காக போட்ட நிபந்தனை என்ன தெரியுமா?  “நான் முதல் மந்திரியாக வரும் பட்சத்தில் மந்திரியாக அவரைப் போடவேண்டும், இவரை போடவேண்டும் என்று யாரும் சொல்லக்கூடாது.  இதற்கு நீங்கள் சம்மதித்தால், நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.” என்று நிபந்தனையிட்ட அவர், மந்திரி சபை அமைத்தது ஒரு புதிராகவும், அதிசயமாகவும் எல்லோருக்கும் தெரிந்தது.  காந்திஜியின் வழிகாட்டியாக விளங்கிய பகவத் கீதையில் வரும் கர்ம யோகம் செய்யும் கர்ம யோகி ஆனார் காமராஜர்.
“நாள்முழுவதும் உழைக்கிறவர்களை, வேலைக்காரர், கூலிக்காரர் என்று குறை கூறுகிறோம்.  உழைப்பே இல்லாமல் பிறர் உழைப்பால் வாழ்ந்துவரும் சோம்பேறிகளை எஜமானர், மகராசர் என்கிறோம்.  ஏழைகளின் துயரம் நீக்கவே நான் முதல் மந்திரியாக பதவி ஏற்றுள்ளேன்” என்ற காமராஜ், மக்கள் முதலமைச்சராக விளங்கினார்.  ‘காமராஜ் வாழ்க’ என்ற கோஷம் ஏழை குடிசைகளில் எதிரொலித்தது.  ஒருமுறை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு சென்னை துறைமுகத்தை விஸ்தரிக்கும் பற்றி கடிதம் எழுதியது.  கோட்டைக்கு எதிரே துறைமுக விஸ்தரிப்பு செய்தால், சென்னையின் அழகு கெட்டுவிடும்.  ஆகவே, ராயபுரம் பகுதியில் விஸ்தரிக்கலாம் என முதல்மந்திரி காமராஜ் சிபாரிசு செய்தார்.  உடனே மத்திய அரசு தமிழக அரசுக்கு எழுதியது: பாறைகள் நிறைந்த பகுதியில், விஸ்தரிப்பு செய்ய இயலாது.  ஆகவே, உங்களுக்கு வேண்டியத அழகா, உணவா? என்று கேள்வி எழுப்பியது.  உடனே காமராஜ், எனக்கு அழகை விட உணவுதான் தேவை என்று எழுதினார்.  காமாராஜ் அவ்வாறு எழுதியதன் பயன்தான் விஸ்தரிக்கப்பட்ட துறைமுகத்தை இன்று காண முடிகிறது.
தலைவர், தன் தாயாரின் செலவுக்கு மாதம் 120 ரூபாய் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்.  ஆனால், அவர் முதலமைச்சர் ஆன பிறகு அந்தப் பணம் அவருக்குப் போதவில்லை.  அதற்கு அந்த அன்னையார் ஒரு காரணத்தையும் கூறினார்களாம்:  “அய்யா மந்திரியாக இருப்பதால், என்னை பார்க்க யார் யாரோ வருகிறார்கள்.  சிலருக்குத் தமிழ் கூட பேசத் தெரியவில்லை.  என்னென்ன பாஷையோ பேசுகிறார்கள்.  என்னை பார்க்க வருகிறவர்களுக்கு, ஒரு சோடா கலர் கொடுக்காமல் எப்படி அனுப்புவது?  எனவே ஐயாவிடம் சொல்லி ரூபாய் 150 கிடைக்கச் செய்தால் நலம்” என்று காமராஜின் நண்பர் முருகதனுஷ்கோடியிடம் சொல்லியனுப்பினார் சிவகாமி அம்மையார்.
அது காமராஜரிடம் தெரிவிக்கப்பட்டபோது, “யார் யாரோ பார்க்க வருவார்கள் உண்மைதான்.  வரக்கூடியவர்கள் சோடா கலர் கேட்கிறார்களா?  அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம்.  எனவே 120 ரூபாயே போதும்.” என மறுத்துவிட்டார்.
கல்வியை கண் என்று போற்றியவர் காமராஜர்.  இலவச கல்வி வசதி, கட்டாய கல்வித் துறை, இரண்டும் இருந்தும் எல்லா குழந்தைகளும் படிக்கும் நிலை ஏற்படவில்லை..!  ஏன் என்று சிந்தித்தார் காமராஜர்.  கிராமங்களில் மக்களை சந்தித்தார்.  காரணங்களை அறிந்துகொண்டார்.  வறுமையால் மெலிந்த உடல், ஒளியில்லா கண், எண்ணெய் இல்லாத தலை, உடையில்லாத உடம்பு, ஒதுங்கி வாழ குடிசை, வயிராற உண்ண ஒரு வேளை கஞ்சி இல்லாத ஏழை எப்படி தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவான்!?  ஒரு வேளையாவது குழந்தைகளுக்கு உணவு அளித்தால் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பும் ஆசை பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் ஏற்படுமே!  இதை காமராஜ் உடனே செய்தார்.  இலவச மதிய உணவுத்திட்டம், லட்சக்கணக்கான குழந்தைகளை பள்ளிக்கு வரச் செய்தது.  உலக நாடுகள் பலவும் இத்திட்டத்தை பாராட்டின.  கல்வி என் பொறுப்பு.  கல்வி வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும்படி, மக்கள் பங்குபெறும் வகையில் ஒரு அற்புத திட்டத்தைத் தொடங்கினார் காமராஜர்.  நான்கு கோடி ரூபாய் நன்கொடையாக, மக்களிடம் இருந்தே பெறப்பட்டது.  ஏழை சிறுவர்களுக்கு இலவச சீருடை, இலவச புத்தகம் என்று 1960ஆம் ஆண்டில் 11வது வகுப்பு வரை ஏழை குழந்தைகளை அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது.  அவரது ஆட்சி காலத்தில்தான் அரசாங்க கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் மளமளவென உயர்த்தப்பட்டது.  ஆசிரியர்களுக்கு, முதல் முறையாக சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.  கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு சென்றதும், நீர் பாசன திட்டங்கள் மூலம் விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியதும் காமராஜ் ஆட்சியில்தான்.  கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும்.  செல்வம் ஒருசிலர் கையில் குவிந்திருக்கக் கூடாது.  சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை.  அது விரும்பதக்கதும் அல்ல.  காந்திஜி அஹிம்சை வழியில் சுதந்திரம் பெற்று தந்தார்.  அவர் காட்டிய வழியில் சமதர்ம சமுதாயத்தை அமைப்போம் என்று 1956ஆம் ஆண்டில் ஆவடியில் நடந்த மாநாட்டில் முழங்கிய காமராஜ், அதற்காகவே பாடுபட்டு தமிழகத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக முன்னேற்றுவதில் சாதனை படைத்தார்.
நரிக்குறவர்களுக்கு முதல் முறையாக வீடு கட்டி கொடுத்ததும் அவர்தான்.  அவர் மிக விரும்பி படித்த புத்தகம், கம்ப ராமாயணம்.  அதே போல், காந்திஜியின் சத்திய சோதனை.  அதனால்தானோ என்னவோ வாழ்வின் எல்லா சோதனைகளில் சத்திய வேந்தனாகவே உயர்ந்து நின்றார்.  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1963ஆம் ஆண்டு நேருஜியின் விருப்பத்திற்கேற்ப பொறுப்பேற்றுக் கொண்டார்.  இந்தியா முழுக்க அவருக்கு செல்லுமிடமெல்லாம் பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
1964ஆம் ஆண்டு, மே மாதம் நேருஜியின் திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கியது.  நாட்டின் தூண் சரிந்தது என்று மக்கள் கலங்கியிருக்க, இந்தியாவில் ராணுவ ஆட்சிதான் வரும் என்று மேலைநாட்டு சில அரசியல் சூதாடிகள் தங்கள் அந்தரங்க விருப்பத்தை அரசியல் ஜோசியம் என்ற பெயரில் வெளியிட்டு வந்தனர்.  அப்போதிருந்து இந்தியாவின் பக்கம் திரும்பியிருந்த உலக நாடுகளின் கண்கள் காமராஜ் மேல் பதிந்தன.  நேருஜி மறைவிற்குப் பின் போட்டியின்றி அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்த காமராஜர், முதலில், போட்டியிலிருந்த மொரார்ஜி தேசாவையும், மாளவியாவையும் சந்தித்துப் பேசினார்.  பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் லால் பகதுர் ஷாஸ்திரியே பிரதமராக வரவேண்டுமென விரும்புகிறார்கள் என்று மொரார்ஜி தேசாயையே நிருபர்களிடம் சொல்ல வைத்தார் காமராஜர்.  இந்தியாவின் முதல் பிரதமர் நேருஜியை அன்னல் காந்தியடிகள் நமக்கு வழங்கினார்.  இரண்டாவது பிரதமரை தென்னாட்டு காந்தியான தலைவர் காமராஜ் வழங்கினார்!
1965ந்தில் இந்தியா - பாகிஸ்தான் போர் மூண்டபொழுது, பஞ்சாப் போர் முனை பகுதிகளில் காமராஜ் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வீரர்களை உற்சாகப் படுத்தினார்.  அதே ஆண்டில் சென்னை வந்த லால் பகதுர் ஷாஸ்திரி, யுத்த களத்தில் நம் வீரர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.  அதற்கான அரசாங்க முயற்சியில் உதவியவை காமராஜரின் யோசனைகளே.  அவர் என் உடன்பிறவா சகோதரர்.  அவர் எனக்குத் தந்த ஆலோசனைகளும் உற்சாகமுமே எதிரிப் படைகளை பின்வாங்கச் செய்தன என்று நெஞ்சு நெகிழப் பேசியபோது எழுந்த கரவொலி அடங்க வெகு நேரம் ஆகியதாம்.
ஷாஸ்திரி மறைந்த பிறகும் அடுத்த பிரதமரான இந்திராவை தேர்ந்தெடுத்து ‘Kingmaker’ என்று பெயர் பெற்றவர் காமராஜர்.
கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லொவாக்கியா, ஹங்கேரி, யுகோஸ்லாவியா, ரஷ்யா என பல நாடுகளுக்கும் பயணம் செய்து ஆட்சியாளர்களிடம் பல்வேறு விஷயங்களை விவாதித்து அங்கிருந்த நல்ல நடைமுறைகளை தமிழகத்திற்கு கொண்டுவந்தவர் காமராஜர்.  இறுதிவரை காந்திஜியின் வழியில் மக்கள் தொண்டே தன் வாழ்வு என்று வாழ்ந்த காமராஜரிடம் ஒருமுறை இப்படி கேட்டார்களாம்: “நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு காலமாகியிருக்கம்?”
“ஒரு 25 அல்லது 30 வருடங்கள் ஆகியிருக்கும்” என்று காமராஜர் சிரித்தபடியே கூறினாராம்!
தன் தாயின் எந்த ஆசையையும் நிறைவேற்றாத காமராஜர், அவர் மரணப் படுக்கையில் இருந்த வேளையில் தன் மகன் தன் கையினால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை பிறரது வற்புறுத்தலுக்காக நிறைவேற்றினாராம்!
காந்தியடிகளின் பிறந்தநாள் அக்டோபர் 2.  அதுவே காமராஜ் பிரிந்த நாளாகவும் ஆகியது.  புனிதன் போனால் பூ உண்டு, நீர் உண்டு என்பது பெரியவர்களின் வாக்கு.  அன்று கொட்டும் மழையிலும் கூட மக்கள் தானே தலைவனுக்கு மரியாதை செலுத்த விரைந்து வந்தார்கள்.  திருமலைப் பிள்ளை ரோட்டின் எட்டாம் எண் வீட்டிற்குள் மக்கள் பிரளயம் பொங்கி வந்தது.  ஊர் மணக்க, உலகம் மணக்க வாழ்ந்த மன்னனின் கோவிலிலே மக்களின் அழுகை ஓலம்.  திருப்பூர் குமரனின் துணைவியார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தார்.  British அரசு கீழ்கண்ட இரங்கல் செய்தியை பிரதமர் இந்திராவுக்கு அனுப்பியிருந்தது.
“இந்தியாவில் பெரிதும் மதிக்கப் பெறும் மூத்தத் தலைவர் காமராஜ் குறித்தும், அதனால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள இழப்புக் குறித்தும் மாட்சிமை தங்கிய British அரசு, தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.  காமராஜ் நீண்ட காலம் முதல் மந்திரியாக இருந்தபோழுது தமிழ்நாடு அடைந்த பிரமாதமான முன்னேற்றத்தை Britain என்றும் நினைவில் வைத்திருக்கும்.” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.  கல்வி கண் திறந்த காமராஜர் கண் மூடிய அந்த அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி விடுத்த செய்தியில், “மனித சமுதாயத்தில் இருக்கும் போட்டி, பொறாமைகள், ஏற்றத் தாழ்வுகளை நீக்க, அமைதியான முறையில் காந்திஜி காட்டிய வழியை பின்பற்றி, மனித சமுதாயம் உயர நாம் அனைவரும் பாடு படுவோமாக” என்று குறிப்பிட்டிருந்தார்.  அவரது அந்த கடைசி செய்தி தமிழர்களின் தாரக மந்திரமாக இருக்கட்டும்!

-கட்டுரையின் முடிவு-

1 கருத்து: