திங்கள், 8 பிப்ரவரி, 2016

'இறுதிச்சுற்று' - திரைப்பட விமர்சனம்

- கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்ற அசட்டு வாதத்தை முன்வைத்து - 

முகநூல் பக்கத்தில் சிலர் இறுதிச்சுற்று கிறிஸ்தவத்திற்கு எதிரான படம், நல்ல பெண் இயக்குநர் தமிழ் திரையுலகிற்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது இதுபோன்ற பெண் இயக்குநர்களின் வருகைக்காகத்தானா போன்ற புலம்பல்களைப் பார்க்க நேரிட்டது. இதற்காகவே இறுதிச்சுற்றுப் படத்தை உடனடியாகப் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். போலியான மதச் சார்பின்மைவாதிகளின் பிதற்றலே முகநூல் பக்கத்தில் நான் பார்த்தது என்பதைப் படத்தைப் பார்த்ததும் புரிந்துகொள்ள முடிந்தது.

வலுவான கதையும், திரைக்கதை அமைப்பும் காட்சிக்குத் தேவையான பொருள் செறிந்த வசனங்களும் மாதவன் மற்றும் உண்மையில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங்கின்  தேர்ந்த நடிப்பும், ஒவ்வொரு காட்சியிலும் மின்னிய இயக்குநரின் சிந்தனைத் திறனும், வேகமான காட்சி நகர்வும், வாழ்க்கையைப் போலவே எதிர்பாராத திருப்பங்களுமாக அழுத்தமான தனி முத்திரை பதித்திருக்கும் திரைப்படம் இறுதிச்சுற்று.

பொதுவாக யாரும் கையாண்டிராத பாக்சிங் துறையில் பெண்கள் பற்றிய கதைக்கருவை எடுத்துக்கொண்டு பல்வேறு துறைகளைப் போலவே இந்த விளையாட்டுத் துறையிலும் பெண்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள், வக்கிர மனிதர்களின் பாலியல் வன்கொடுமைகளை வன்மையாகவும், அதே நேரத்தில் கொஞ்சங்கூட விரசம் கலக்காமலும் சொல்லும் விதத்தில் கதையை நுட்பமாகவும், கவனமாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

இப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய இருக்கின்றது. ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு கிறிஸ்தவத்திற்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான படம் போல் முகநூல் பக்கங்களில் ஒருசிலரால் ஏன் உருவாக்கப்பட்டது என யோசித்தால், ஒரே ஒரு பதிலை அவர்கள் தருகிறார்கள்.
சாதாரண ஒரு மீனவக் குப்பத்தில் பிறந்து வளரும் இரு பெண்களின் தந்தையான சாமிக்கண்ணு, பொறுப்பின்றித் திரிபவராகவும், பெரும் குடிகாரராகவும் வலம் வருகிறார். (தமிழ் நாட்டில் நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்).

குத்துச்சண்டையில் தேர்ச்சி பெற்று எப்படியாவது போலீஸ் வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என பல வருடங்கள் விடாது முயற்சி செய்துகொண்டிருக்கும் மூத்த பெண், விளையாட்டுத்தனமும் துடுக்குத்தனமுமாக இருந்தாலும், மொத்த குடும்பத்திற்கும் சோறு போடுவதற்காகவும், தனது தமக்கை குத்துச்சண்டையில் தேர்ந்து போலீஸ் வேலைக்குப் போய்விட வேண்டும் என்று மீன் விற்கும் இரண்டாவது பெண். இவர்களுடைய தந்தையாக வருகின்ற சாமிக்கண்ணு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து, “இப்ப நான் சாமிக்கண்ணு இல்ல. சாமுவேல்.” எனத் தள்ளாடியபடியே சொல்வதும், அதே தள்ளாட்டத்துடன் “அல்லேலூயா” கோஷம் போடுவதும் வேடிக்கையாக இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் யோசிக்க வைக்கிறது. அந்தக் காட்சியில், ‘காசுக்காக மதம் மாறிட்டியா?’ என சாமுவேலாகிப் போன சாமிக்கண்ணுவின் மனைவி கத்துவதும், சில போலி மதச்சார்பின்மை பேசுபவர்களுக்கு உறுத்தியிருக்கிறதுபோலும்! ‘காசுக்காக மதம் மாறிட்டியா?’ என்ற கேள்வியில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கிறிஸ்தவம் வேர்விட்டு எழுந்து நிற்கும் இடங்களிலெல்லாம் மதம் மாற்றப்பட்டவர்கள் ஆன்மீக காரணத்திற்காக அல்ல, ஏதேனும் ஒரு உலகக் காரணத்துக்காகவே அந்த மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மணப்பாடு பகுதியில் ஒரே நேரத்தில் கத்தோலிக்க மதத்தைத் தழுவிய ஆயிரக்கணக்கான மீனவர்கள் இஸ்லாமிய படையெடுப்புக்கு அஞ்சியே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக வரலாறு சொல்கிறது. எந்தக் கத்தோலிக்க மதம் தங்கள் கடல் வளத்தையும், தொழிலையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் என நம்பி தங்களை இணைத்துக் கொண்டார்களோ, அதே கத்தோலிக்க மதம் அவர்களைச் சுரண்டி விளிம்புநிலைக்குத் தள்ளியது வேறு கதை. இதைப்பற்றி கதை வடிவிலும் ஆழமாகவும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், ஜோ டி குரூஸின் ஆழி சூழ் உலகு, கொற்கை, மற்றும் ராஜம் கிருஷ்ணனின் அலை வாய்க்கரையில் ஆகிய நாவல்களைப் படிக்கலாம்.

கோவாவில் போர்ச்சுகீசியர்களின் வருகை நிகழ்ந்திருக்காவிட்டால், அது ஒரு இஸ்லாமிய மாநிலமாக உருமாறிப் போயிருக்கும் என்பதுவும் நாம் அறிந்ததுதான். பல அரசியல் சூழல்களின் அடிப்படையிலும் தங்களுடைய எதிரிகளாகப் பாவித்துக்கொண்டவர்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்கள் முதல் பல்வேவறு இனக்குழுவினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள் அல்லது வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த விவாதத்தில் காசுக்காக மதம் மாறுவது எங்கிருந்து வருகிறது என யாரேனும் கேட்கக் கூடும். ஏழை எளிய மக்கள் கோதுமைக்காகவும், ரொட்டித் துண்டுகளுக்காகவும் மதம் மாறிய கதைகள் தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் பேசப்படுபவைதான். இன்றும் கூட ஆன்மீகம் என்ற பெயரில் வழிவழியாக தாங்கள் வணங்கிவரும் குல தெய்வங்களையெல்லாம் குப்பையில் வீசிவிட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவுவதற்கு சாதாரண ஜனங்கள் தூண்டில் வீசிப் பிடிக்கப்படுகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மைதானே.

இந்தக் குறிப்பிட்ட காட்சியமைப்பின் உரையாடலில் சாமுவேலாகிப்போன சாமிக்கண்ணு அல்லேலூயா எனக் கோஷம் போடுகிறார். காசுக்காக மனம் மாறிவிட்டதாக அவர் மனைவி ஆத்திரப்படுகிறார். இந்தக் காட்சியிலும் வசனத்திலும் ‘கிறிஸ்தவத்திற்கு எதிரானது’ எனக் குற்றம் கண்டுபிடித்தவர்கள், படத்தின் இறுதிக் காட்சியில் தன் மகள் குத்துச்சண்டையிடும் நேரலைக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் அதே சாமிக்கண்ணு, கையில் ஜெபமாலை மணியை உருட்டியபடி, “என் குழந்தையக் காப்பாத்து இயேசப்பா.” என நெஞ்சுருக வேண்டுகிறாரே. அதைப் பார்க்க மறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. திக்கற்றவர்களுக்கு எந்த தெய்வமும் துணை ஆகலாம். தெய்வம் மட்டுமே துணையாக முடியும். பணமோ, பதவியோ, அதிகாரமோ இல்லாத எளிய மக்கள் இறுகப் பற்றிக் கொள்வது தெய்வம் என்ற நம்பிக்கையைத்தான். அது இயேசுவோ, சிவ பெருமானோ, அல்லது முருகனோ. இந்தக் காட்சியில் சாமுவேல் என்ற சாமிக்கண்ணுவோடு சேர்ந்து நம்மையும் மனம்பதைக்க பிரார்த்தனை செய்ய வைக்கும் சுதா கொங்கராவின் நுண்ணிய உணர்வு இதில் அற்புதமாக வெளிப்படுகிறது. பொதுவாகவே கிறிஸ்தவம் பற்றிய சரியான புரிதல் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு இல்லை (மணிரத்தினம் உட்பட) என்பது என் எண்ணம். கிறிஸ்தவத்தின் சில மரபுகளைப் புரிந்துகொண்டு திரைப்படம் எடுத்த ஒரு காலமும் உண்டு. அன்னை வேளாங்கண்ணி என்ற திரைப்படத்தை உருவாக்கிய வேளையில் கத்தோலிக்க மதத்தின் நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளுக்கு முரண்பட்டு ஒரு காட்சி கூட அமைந்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்த அப்படக் குழுவினர், மறைந்த பிஷப் தாமஸ் ஃபெர்ணாண்டோ அவர்களிடம் ஆலோசனை கேட்டு சில காட்சிகளில் மாற்றங்களையும் செய்தார்களாம். ஆனால் காலப் போக்கில் தங்கள் புரிதலின்படியே எந்த ஆலோசனையும் இன்றி படம் எடுத்தபொழுது பல குளறுபடிகள் நேரிட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வெள்ளை ரோஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் மூன்று என்ற படத்தில், சிவாஜி கணேசன் கத்தோலிக்கப் பாதிரியாராக வருகிறார். அதில் அவரது மகளாகவே ரஞ்சனி காட்டப்படுகிறார். இறுதியில் அவர் தனது வளர்ப்பு மகள் என்று சொல்லும் இடத்தில், சொந்த மகள் இல்லையா? வளர்ப்பு மகளா என்று நாயகன் ஆச்சரியமாகக் கேட்பது போல காட்சியமைப்பு கோமாளித்தனமாக இடம்பெற்றிருந்தது. உலகெங்கிலும் கத்தோலிக்கப் பாதிரிகளுக்கு திருமணம் செய்துகொள்ள இன்றுவரை அனுமதி இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், இதைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், படம் முழுக்க அந்த ஊரில் இருக்கின்ற கத்தோலிக்கர்களே பாதிரியாரின் சொந்த மகள் ரஞ்சனி என்று இயல்பாக நினைத்துக் கொண்டிருப்பதாகவே படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அன்றைய நாளில் எந்தக் கேள்வியும் எழவில்லை. ஒருவேளை கத்தோலிக்க மக்களே, ‘அட என்ன பெருசா எடுத்துட்டான், இதுல என்ன இருக்கு?’ என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அது ஒரு மதத்தின் ஒரு அடிப்படையான அம்சத்திலிருந்து முற்றிலும் முரண்பட்டு நிற்கின்ற விஷயம்.

சமீபத்தில் வெளிவந்த 'கடல்' திரைப்படத்தில் கத்தோலிக்க சாமியாராகப் போக விரும்பும் ஒரு இளைஞன் கிறிஸ்தவக் கல்லூரியில் தான் செய்த தவறை மற்றொருவன் காட்டிக் கொடுத்ததால் அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட, அதற்குக் காரணமான கதாநாயகக் கத்தோலிக்கப் பாதிரியாரைப் பழிவாங்கும் கதை. இப்பொழுதெல்லாம் கத்தோலிக்க சாமியாருக்குப் படிப்பது என்பது அரிதான சிலரைத் தவிர, ஒரு புரொஃபஷனல் கோர்ஸ் படிப்பது போலத்தான் என்பதும் ஒருவேளை அதிலிருந்து வெளியேற்றப்பட்டால் யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பதும் இயக்குநர் மணிரத்தினத்திற்கு யாரும் சரியாகச் சொல்லவில்லைபோலும்! இறுதிச்சுற்று படத்திலும் இதுபோன்ற கிறிஸ்தவக் குழப்பம் வருகின்றது.

சாமுவேலாகிப்போகும் சாமிக்கண்ணு ‘அல்லேலூயா, அல்லேலூயா’ என்றே சொல்கிறார். பொதுவாக பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்தவர்களே அடிக்கடி அல்லேலூயா, அல்லேலூயா என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். இந்த பெந்தேகோஸ்தே சபையினருக்கும், புரொட்டெஸ்டாண்ட் என்கிற பிரிவினை சபையினருக்கும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கன்னிமாதா என்று கொண்டாடும் அன்னை மரியும், ஜெப மாலையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால் சாமுவேலோ, மகளைக் காப்பாற்றச் சொல்லி இயேசுவிடம் பிரார்த்திக்கும்பொழுது ஜெப மாலையைக் கையில் வைத்திருக்கிறார். இதையும் கூட பெரிய குறைபாடாக எடுத்துக்கொள்வதற்கு இல்லை.

உலகம் முழுக்க 6000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகளும், அததற்கு என்று வெவ்வேறு நடைமுறைகளும் இருக்க, கிறிஸ்தவர்களே குழம்பிவிடும் நிலையில், இதுபோன்ற வேறுபாடுகளை சுதா கொங்கரா எங்கிருந்து அறிந்துகொள்ள முடியும்? இது கிறிஸ்தவ மதத்தின் குறைபாடே தவிர, இயக்குநரின் குறைபாடில்லை.

இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தனியாகவே ஒரு கட்டுரையாக எழுதலாம். ஆனால், நான் இங்கு சொல்ல விரும்புவது வேறொன்று.

ஆண்கள் பல காலம் கோலோச்சிவரும் திரைப்படத் துறையில் ஒரு பெண் இயக்குநரின், பெண்களுக்கு உத்வேகம் தரும் விதத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் இருக்கின்ற பல நல்ல அம்சங்களையெல்லாம் விட்டுவிட்டு தேடித்தேடி குறை கண்டுபிடிப்பதுபோல் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான படம் என்று எப்படிச் சொல்ல முடிகிறது?

அடிமட்டத்திலிருந்து வரும் பெண்கள் தங்கள் உடலைக் குறிவைத்துத் தாக்கப்படும் சூழலில் இருந்தெல்லாம் கிளர்ந்தெழுந்து சவால்களைச் சந்திப்பதும், வெற்றி பெறுவதும் சாத்தியமான ஒன்று என்ற கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட படம் இது. குறிப்பாகப் பெண்கள் அவ்வளவாகப் பிரவேசித்திராத குத்துச்சண்டை போன்ற துறைகளில் கூட பொருளாதார வசதியற்ற நிலையிலிருக்கும் பெண்களும், முயன்றால் சாதிக்கலாம் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் சுதா கொங்கரா.

மங்கோலிய மன்னன் செங்கிஸ் கான் வரலாறு படிக்கின்ற மாணவர்களுக்கு ஒரு அதீத கனவு நாயகன். தன்னிடம் இருக்கும் பலவீனத்தையே பலமாக மாற்றி எதிரியை வீழ்த்தும் அவனது திறனும் உத்தியும் இந்தப் படத்தில் மிகப் பொருத்தமாக எடுத்தாளப்பட்டுள்ளது. வரலாறு என்ற பாடமே பள்ளி, கல்லூரிகளிலிருந்தும், மக்களிடமிருந்தும் மறைந்துகொண்டிருக்கும் சூழலில் மறக்கப்பட்ட ஒரு வரலாற்று நாயகனை எதிரிகளைத் தோற்கடிக்கும் அவனது யுக்தியைக் கொண்டாடுவதன் மூலம் கொஞ்சமேனும் வரலாற்று ஆர்வத்தை இந்தப் படம் தூண்டிவிட்டிருக்கும் என்றால் அது பெரும் சாதனையே.

பெண்களின் மனது, உணர்வு, ஆன்மா எதையும் பொருட்படுத்தாது உடலை உடைமையாக்கத் துடிக்கும் ஆண்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் தோற்றுப்போனவராய் ஆவேசம் கொண்டு அலைந்தாலும், ஒரு மீனவக் குப்பத்துப் பெண்ணைத் தன் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் நாயகியாக உயர்த்தும் கதாப்பாத்திரத்தில் மாதவன் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்! இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் நம்முடன் நேரடியாகப் பேசுகின்றன. நம்மை உலுக்கி எழுப்புகின்றன.

கேமராவும், இசையும் பலம் சேர்த்திருக்கின்றன. மொத்தத்தில் நடிகர்களின் கடுமையான உழைப்பில் ஒரு திறமையான இயக்குநரின் தெளிவான படம்.


வழக்கமான ஆண்-பெண் மோதல், காதல், கலாட்டா, நம்பமுடியாத சண்டைக் காட்சிகள், நாயக வழிபாடு போன்ற மசாலாக்கள் இடம்பெற்றிருக்கும் தமிழ்ப் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் பாராட்டப்பட வேண்டிய படத்தை, கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்று குறை கண்டுபிடிக்கும் நண்பர்கள் அதிகார மமதையில் சாதிய துவேஷம் கொண்டு பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் செய்து, அல்லது அதற்குத் துணையாக நின்று கோர முகம் காட்டும் சில கத்தோலிக்க கார்ப்பரேட் நிறுவனங்களைக் கேள்விக்குட்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவது சமுதாயத்திற்கு நலம் பயக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக