ஜெயஷாந்தியின்
பரணி
கட்டுரையாளரின் கதை
சாம்சன் துரை சா.
உதவிப் பேராசிரியர், ஊடகக் கலைகள் துறை
லொயோலா கல்லூரி, சென்னை-34
Loyola_Sam2000@Yahoo.Com
இலக்கியங்களிலிருந்து
கதைக்கருக்கள் எடுக்கப்பட்டு திரைப்படத்திற்கேற்ற காட்சியமைப்பு கதைகளாக உருவாக்கப்பட்ட
மரபு கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உலகளாவிய நிலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நோபல் பரிசு பெற்ற ஜான் ஸ்டீஃபன் பெக் போன்ற இலக்கிய உலகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற
எழுத்தாளர்கள், திரைக்கதைகளை எழுதியிருக்கிறார்கள்.
சங்க
இலக்கியங்கள், காப்பியங்கள் அதற்குப் பின் வந்த நீதி நூல்கள், இடைக்கால இலக்கியங்கள்,
தற்கால இலக்கியங்களில் நாவல்கள், சிறுகதைகள் என்று தமிழில் காலம் தோறும் தோன்றிய இலக்கிய
வகைகளிலிருந்து ஏராளமான கதைக் கருக்களை தமிழ்த் திரைப்படத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும்.
அந்த வரிசையில், 2001ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘பரணி’ என்ற நாவல் திரைப்படமாக்கப்படுவதற்குரிய
கதையம்சத்தைக் கொண்டுள்ளது என்பதை விளக்குவதே இக்கட்டுரை.
“வார்த்தைகளின்
வலிமை கொண்டு வாசகர்களை பார்க்கவும் கேட்கவும், அதையும் மீறி காட்சிப்படுத்தவும் செய்வது
எழுத்தின் கடமை” என்கிறார் எழுத்தாளர் ஜோசஃப் கான்ராட். ஒரு நாவல் திரைப்படமாகும்போது
வாசகன் படிக்கும் அனுபவத்திலிருந்து அவனைக் காட்சி உலகிற்குக் கொண்டு செல்கிறது. வரி
வடிவில் இருக்கும் கதையைக் காட்சியமைப்பிற்குள் கொண்டு வருவது இயக்குநரின் திறமை மட்டுமல்ல;
அவர் முன் வைக்கப்படுகின்ற பெரும் சவாலும் ஆகும். ஆனால், சில நாவல்கள் இயல்பாகவே காட்சியமைப்பினை
எளிதாகப் பெற்றுவிடும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. பரணி நாவலிலும் அந்த இலகுத்
தன்மையைக் காண முடிகிறது.
கிராமப்
பின்னணியில் ஆரம்பிக்கப்படுகின்ற கதையில், குடும்ப உறவுகளும் உணர்வுச் சிக்கல்களும்
நடப்பியல் பாங்கில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
‘வக்கத்தவன்தான்
வாத்தியார் வேலைக்குப் போவான் வசதியாயிருக்கிற நம்ம குடும்பத்திலயிருந்து நீ ஏன் வாத்தியார்
வேலைக்குப் போகணும்’ என்று தன்னுடைய தாய் எவ்வளவோ மறுத்தும் ஆசிரியர் பணிக்கே செல்ல
வேண்டும் என லட்சிய நோக்கத்துடன் அப்பணியைத் தேர்ந்தெடுக்கிறான் சிவனேசன்.
கணவனை
இழந்து கைம்பெண்ணாக வயல்வெளியில் வேலை செய்து உருக்குலைந்து போகும் பேச்சி, தன் மகன்
கருப்பண்ணனை நன்றாகப் படிக்க வைக்கிறாள். அவனோ பட்டணத்துப் படிப்பை முடித்ததும் மேல்தட்டு
வர்க்கத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன் தாயையும் தங்கை செண்பகத்தையும் கிராமத்தையும்
ஒரேயடியாகப் புறக்கணித்து விடுகிறான். இதனால் படிப்பின் மீதே வெறுப்பு கொள்ளும் பேச்சி,
தன் மகள் செண்பகத்தின் படிப்பை நிறுத்திவிட்டு வயல் வேலைக்கு அழைத்துச் செல்கிறாள்.
செண்பகம் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் சிவனேசனால் விரும்பித் திருமணம் செய்துகொள்ளப்படுகிறார்.
அவர்களுக்குப் பிறக்கின்ற மூத்த மகளான பரணியின் அடையாளச் சிக்கல்களைப் பிரதானப்படுத்தி
எடுத்துச் செல்கிறது நாவல். கலப்புத் திருமணம்
பற்றிய பல்வேறு சர்சைகளும் சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில்,
இந்த நாவல் திரைப்படமாகும்பொழுது விவாதிக்கப்படும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கக்
கூடும்.
யதார்த்தமான
கிராமங்களும், அழகான குடும்ப உறவுகளும், நெகிழ வைக்கும் சின்னச் சின்ன சுவாரஸ்யமான
நிகழ்வுகளுமாகச் செல்லும் கதை ஓட்டத்தில், பெண்களின் நிலையும் விவாதிக்கப்படுகிறது.
பள்ளிப் படிப்பு இல்லையென்றாலும் சிவனேசனால் புத்தகங்கள் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக்
கொள்ளும் செண்பகம், அறிவுபூர்வமாகச் சிந்திப்பவளாகவும் பேசுபவளாகவும் காட்டப்பட்டிருக்கிறாள்.
மகள் பரணியும் தந்தையைப் போலவே சிந்திப்பவளாகவும், நிறைய கேள்விகள் கேட்பவளாகவும் உருவாக்கப்பட்டிருப்பதுடன்,
தனித்தன்மை கொண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.
கல்லூரியில்
படிக்கும் பரணி, அவள் தாய்மாமன் கருப்பண்ணன் மகனாலும், அவனுடைய நண்பனாலும் காதலிக்கப்படுவதும்,
கடைசியில் அவள் கல்யாண விஷயத்தில் எதிர்பாராத முடிவை எடுப்பதும் கதையின் உச்சம் எனச்
சொல்லலாம்.
பரணியுடன்
விடுதியில் தங்கிப் படிக்கும் இலங்கையைச் சேர்ந்த காந்தா, நாகலாந்தைச் சேர்ந்த ஷெரில்
மற்றும் கிராமத்துப் பெண்ணான சொர்ணா ஆகியோரது குடும்பமும் கதைகளும் தனித் தனியே திரைப்படமாக்கக்
கூடிய அளவுக்குச் செறிவான காட்சியமைப்புடன் உணர்ச்சி பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளன.
ஒரு நல்ல திரைப்படமென்பது கலை படைப்பாகவும், அதே நேரத்தில் சமூகத்திற்குத் தேவையான
கருத்துக்களோடு விறுவிறுப்பாகவும் எடுக்கப்பட வேண்டும். அதற்கு வலுவான கதையமைப்பும்,
கதாபாத்திரங்களும் அவசியம்.
கல்வி
வியாபர மயமாகிவிட்டது என்று கவலைப்பட வைக்கும் இக்காலச் சூழலில் ஒரு ஆசிரியர் எப்படி
இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சிவனேசன் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. ஊரில்
ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும் என்று, அதற்காக இடையறாது முனைப்புடன் பாடு படுவதும்,
கிராமத்துக்கு நூலகம் கொண்டு வருவதற்காக உழைப்பதும், குடும்பத்தின் நல்ல தலைவனாகத்
திகழ்வதோடு, சமூக அக்கறை கொண்ட ஆசிரியருமாகப் படைக்கப்பட்டுள்ளார் சிவனேசன்.
வன்முறைகளும்,
நோக்கமற்ற காதலும் கொண்ட திரைப்படங்கள் பல இன்று நம் தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை அமைப்பான
குடும்பங்களின் அற்புதமான உறவுகளைப் பற்றிப் பெரும்பாலும் பேசுவதில்லை. பரணி நாவலில்,
பரணியைத் தவிர, அவளது தம்பியர் கணேசன் மற்றும் முருகன் இவர்களுடைய பாசம், சின்னச் சின்ன
சண்டைகள், பிறகு விட்டுக் கொடுத்தல் என்று குடும்பங்களில் நிகழும் சிறு, சிறு சம்பவங்களால்
பின்னப்பட்டுள்ளக் கதை, உணர்வு பூர்வமானதாக உள்ளது.
குண்டாக
இருக்கும் கணேசன் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதும், பாம்பு பிடிப்பதும்,
புத்தகப் பையில் உண்டிகோலை எடுத்துச் செல்வதும், தம்பி வைத்திருக்கும் மயிலிறகை எடுத்து
வைத்துக்கொண்டு ‘குட்டிப் போடுதான்னு பார்க்கிறேன்’ என்று அவனைச் சீண்டுவதும், மேலும்,
கண் திறக்காத அணில் குட்டிகளை வீட்டுக்குக் கொண்டு வந்து இங்க் ஃபில்லரால் பாலூட்டி
ரகசியமாக வளர்ப்பதுமாகக் கதையோட்டம் சுவாரஸ்யமான நிகழ்வுகளால் விறுவிறுப்பாகக் கொண்டு
செல்லப்படுவதோடு குடும்ப அமைப்பின் அழகும் தேவையும் உறுதி செய்யப்படுகிறது. இந்தக்
காலத்திற்கும் தலைமுறைக்கும் நிச்சயமாக இது தேவைப்படுகின்ற படம் என்பதற்கு இதுவே பெரும்
சான்றாகும்.
குழந்தைகளின்
அற்புதமான உளவியல் உலகமும், இயற்கையிலேயே அவர்களுக்கு இருக்கின்ற முன்னுணர்வு ஆற்றலும்
கணேசன் பாத்திரம் வழியாக புலப்படுத்தப்படுவதோடு கதையை நகர்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திரைப்படத்திற்கே
உரிய திருப்புமுனைகள் பல இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன. தன் குடும்பத்தாரால் மட்டுமல்ல,
ஊர் மக்கள் அனைவராலும் நேசிக்கப்படும் சிவனேசன், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுவிட்டதாக
வரும் செய்தியும், ஊர் மக்கள் அதிர்ச்சியும் அழுகையுமாக இருக்க, செண்பகம், பரணி, கணேசன்,
முருகன் கையற்ற நிலையில் இருக்க, அவர் பக்கத்து ஊர் பிரச்சினையை சமாளித்துவிட்டு கம்பீரமாகத்
திரும்பி வருவதும் பரபரப்பானதும் பரவசமானதுமான காட்சியமைப்பாக இருக்க முடியும். அதே
போல, தாயையும், தந்தையையும், ஊரையும் துறந்து போன கருப்பண்ணன் வெட்டுப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்க, செண்பகமும் பரணியும் அவரைச் சந்திப்பதும், கதையின் அடுத்தத்
திருப்பு முனையாகவும், பரணியின் திருமணம் பற்றிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதாகவும்
கதைப் பின்னல் சுவாரஸ்யமாகச் செல்கிறது. திரைப்படத்திற்கேற்ற கதைக் களங்களும் கூட சூரியகாந்தி
வயல்களும், பச்சை பசேல் என்ற கொடிக் கால்களுமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.
உழைக்கும்
கிராமத்துப் பெண்களின் கதை முன்னிறுத்தப்பட்டுள்ளது. பரணி நாவலின் பெரிய சிறப்பு. அதுவே
இக்கதை திரைப்படமாக்கப்பட்டால் பெரும் பலமாகவும் அமையும்.
பதிப்பாசிரியர்
பதிவு:
‘நூற்றுக்கு
நூறு’ படத்தில் காட்டப்படும் அப்பழுக்கற்ற கல்லூரி பேராசிரியரை நினைவுபடுத்தும் கிராமத்து
ஆசிரியர் சிவனேசன் கதாபாத்திரமும், குடும்ப உறவுகளின் அழகை பெண்ணிய சிந்தனைகளோடு கலந்து
கொண்டு செல்லும் பாத்திர படைப்புகளும் வலுவான ஒரு திரைக்கதைக்கு பலமாக அமையும்.
*****