ரிக் வேதமும் அர்னாப் கோஸ்வாமியும்
10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பது பற்றிய சர்ச்சை, வழக்கு, விவகாரம் சமீபத்தில் Times Now தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டது. அதென்னமோ தெரியவில்லை. பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றாலே நடிகையரும், அரசியலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் மட்டுமே இதுபோன்ற விவாதங்களில் கலந்துகொள்ள தொலைக்காட்சிகள் இடம் தருகின்றன. விவாதத்தில் பங்கெடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு சபரிமலை தேவ ஸ்தானத்தின் சார்பாக பெண்கள் ஐயப்பன் சந்நிதானத்திற்குள் செல்லும் தடையை நியாயப்படுத்திப் பேசியவரிடம் உங்களைப் பெற்றது தாய்தானே, மனிதர்களைப் பெற்றெடுப்பதும் பெண்தானே, ஏன் அந்த சந்நிதானத்தில் இருக்கின்ற சாமியைப் பெற்றெடுப்பதும் பெண்தானே என்றெல்லாம் பழைய வழக்கினையே பேசிக்கொண்டிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், சுவாமி ஐயப்பன் மோகினியாக உருவெடுத்த திருமால் என்ற ஆண் கடவுளுக்கும், சிவன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தவர் என்பதுதான் ஐதீகம்.
பொதுவாகவே, கடவுள் அவதாரங்களின் பிறப்பு இயற்கையானது இல்லை என்பது வேறு விஷயம். நம்மூர் மதுரை மீனாட்சியம்மனே கருவறையில்லாமல் பிறந்தவர் என்பதுதான் நம்பிக்கை. கிறிஸ்தவ கடவுளான இயேசுவின் பிறப்பு கூட இயற்கைக்கு அப்பாற்பட்டதாகவே விவிலியத்தில் சொல்லப்படுகிறது. எனவே, கடவுள் அவதாரங்களின் தாய்மார்கள் பற்றி தர்க்கம் அபத்தமானதுதான். இது ஒருபுறம் இருக்கட்டும்.
தேவ ஸ்தானத்தைச் சேர்ந்தவரும் இன்னும் ஒரு பண்டிட்டும், சுவாமி ஐயப்பன் பிரம்மச்சர்ய கடவுள் என்பதால் பெண்களுக்கு அங்கு அனுமதி இல்லை என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க, எதிர் வழக்காடிய பெண்களோ, மாதவிடாய் பிரச்சினைதானே அதற்கு முன் வைக்கிறீர்கள். அதனால் பெண்கள் தூய்மையற்றவர்களாய்ப் போகிறார்களா எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்து மதத்தில் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் எந்தக் கோவிலுக்குமே பெண்கள் செல்வதில்லை என்பது எழுதப்படாத சட்டமாக எவ்வளவோ தலைமுறைகள் இருந்து வருவது இவர்களுக்குத் தெரியாதா?
இந்து மதத்தில் மட்டுமல்ல. கிறிஸ்தவ மதத்திலும் கூட அந்தக் காரணத்தினாலேயே பெண்கள் குருக்களாக நியமிக்கப்படுவதில்லை என்பதுவும், அதனைப் பல பெண் எழுத்தாளர்கள் கடுமையாக விமரிசனம் செய்து இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதையும் காண முடிகிறது.
Gabriele Dietrich என்ற ஆங்கில கவிஞர், கத்தோலிக்க பாதிரிகளுக்கு இவ்வாறு அறைகூவல் விடுக்கிறார்:
I am a woman
and the blood
of my sacrifices
cries out to the sky
which you call heaven.
I am sick of you priests
who have never bled
and yet say:
This is my body
given up for you
and my blood
shed for you
drink it.
Whose blood
has been shed
for life
since eternity?
I am sick of you priests…
எனவே, பெண்ணின் மாதவிடாய் அவளைத் தீண்டத்தகாதவளாக கோவில்களிலும் தேவாலயங்களிலும் ஒதுக்கி வைக்கிறது, கிறிஸ்தவ மதத்திலும் கூட.
என்னுடைய கேள்வி இதுதான். ஒரு குறிப்பிட்டக் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதால் மட்டும் பெண்களுக்கு சமமான உரிமை கிடைத்துவிடுகிறதா? Times Now விவாதத்தின்பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக இருக்க, கோவிலுக்குள் மட்டும் பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.
ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் HumHindu.Com-ன் பண்டிட்ஜியைப் பார்த்து ரிக் வேதம் ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கிறதே. நீங்கள் ரிக் வேதத்தைவிட மேலானவரா என்று அர்ணாப் கோஸ்வாமி ரிக் வேதத்திலிருந்து சில பகுதிகளை உருவி உச்ச ஸ்தாயியில் முழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய வாதம்தான் என்ன? ரிக் வேதம்தான் இந்திய மக்களின், ஆண், பெண் வாழ்வியலைத் தீர்மானிக்கும் மேலான சக்தி என்கிறாரா. ரிக் வேதத்திற்குப் பிற்பட்ட சாம அதர்வண வேதங்கள், கைம்மை, குழந்தைத் திருமணம் - இவற்றையெல்லாம் ஆதரிக்கிறதே... அவையும் மேலானவை என அவர் சொல்வாரா?
சமீபத்தில் பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் இந்தியாவை ஒற்றைப் பண்பாடு, ஒற்றைப் பெருமதம் நோக்கி வெகு சிலர் காய்கள் நகர்த்துவதாக தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள், பழங்குடியினர் அவர்தம் வழிபாடு நம்பிக்கைகள் - இவற்றைப் புறந்தள்ளி ஒற்றைப் புள்ளியை நோக்கி நகர்த்தும் அந்த ஆபத்தான முயற்சியின் வெளிப்பாடாகவே ரிக் வேதத்தைவிட நீங்கள் மேலானவரா என்ற அர்ணாப் கோஸ்வாமியின் கேள்வியை அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஜீவாதாரத்திற்கு வழியில்லாமல் உழைப்பு உறிஞ்சப்பட்டு பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் அடித்தட்டுப் பெண்களுக்கு இந்தப் பெருங் கோவில்களுக்குள் செல்வது பற்றிய எந்த அக்கறையும் இருக்கப்போவதுமில்லை, அது அவர்களுக்குத் தேவையுமில்லை. தொலைக்காட்சிகளின் விவாத மேடையில் சாதாரண உழைக்கும் பெண்கள் எப்பொழுது குரல் கொடுக்க அனுமதிக்கப்படுகிறார்களோ, அதுதான் உண்மையான பெண்ணியமாகவும், கருத்துச் சுதந்திரமாகவும் அமையும்.
2001-ஆம் ஆண்டில் நான் எழுதிய பரணி என்ற நாவலில் மாதவிடாய் சமயங்களில் கோவில்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படாது விசித்திரத் தீண்டாமைக்குப் பழக்கப்படுத்தப்படுகின்ற மேல்சாதிப் பெண்களைக் காட்டிலும், எப்பொழுதுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத தலித் பெண்களின் நிலை மேலானது என்ற வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமாதவிடாய் நேரங்களில் பெண்களை ஒதுக்கி வைப்பது சரியில்லை..
பதிலளிநீக்குமாதவிடாய் நேரங்களில் பெண்களை ஒதுக்கி வைப்பது சரியில்லை..
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது முற்றிலும் சரியே ! வரவேற்கத்தக்கதும் கூட ! மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது எனும் கருத்து பழங்குடி மக்களின் நம்பிக்கையிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் .குஹ்யகர்கள் எனப்படும் குள்ள வடிவமான குலக் குழுவினர் இரத்த வாடையினை விரும்பி வருவர் என்றும் அவர்களின் தலைவனான முருகன் அப் பெண்களை ஈர்த்து மனநோய்க்கு ஆளாக்கி விடுவான் என்றும் பழங்குடி மக்கள் பயந்தனராம். அதனால் தான் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .புறநானூற்றின் 299 ஆம் பாடல் முருகன் கோவிலுக்குள் மாதவிடாய் காலத்துப் பெண்கள் சென்றால் சுருண்டு விழுந்து விடுவர் எனக் கூறுகிறது
நீக்குமிக சரியாக குறுகிய நேரத்தில் அரிய பல செய்திகளை தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்கு