திங்கள், 18 ஜனவரி, 2016

ஒரு கிராமத்து நதி

ஒரு கிராமத்து நதி 

அடிப்படையில் வரலாற்று மாணவி நான் .இங்கிலாந்து வரலாறும் பிரெஞ்சு தேசத்து வரலாறும் பிடித்தமானவை .அதனாலேயே 2006 ஆம் ஆண்டு பாரீஸ் நகருக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்த போது வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம் .நம்ம பூலோக கற்பக விருட்சமான பனை மரத்தைப் பேணுவதற்காக மாணவருடன் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தின் சில கிராமங்களில் செயல் படுத்திய திட்டம் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததால் 40 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட போட்டியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தோம்.முதல் இரு நாட்கள் சுற்றிப் பார்க்க நேரம் கிடைத்தது .ஈபிள் கோபுரத்தின் கம்பீரம் இன்னும் கூட நெஞ்சில் நிமிர்ந்து நிற்கிறது .அங்கும் கூட நம்மூரைப் போலவே சிலர் குறிப்பாகப் பெண்கள் அச்சடிக்கப் பட்ட காகிதத்தைக் கையில் கொடுத்து வேறு நாட்டிலிருந்து வந்தோம்  திரும்பிச் செல்ல பணம் இல்லை உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். உலகம் பல விஷயங்களில் உருண்டைதான் போலும் !

நெப்போலியன் ஆரம்பித்து வைத்து அவன் எல்பா சிறையில் மாண்டு பல வருடங்களுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்ட' வெற்றி வளைவு' போரில் மடிந்து போன  ' பல்லாயிரக்கணக்கான வீரர்களின் வீரத்திற்கு மட்டும் அல்லாமல் நெப்போலியனின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் கூட சான்றாக நிற்கிறது . அந்த நகரத்தில் என்னை அதிகம் கவர்ந்தது பாரீஸ்  நகரைச் சுற்றிப் பாம்பு போல வளைந்தோடும் ஸீன்  நதிதான் .புனிதம் என்ற பொருள் கொண்ட அந்த நதி  மாசற்ற குழந்தையின் முகம் போல உயிர் தொடும் தூய்மையுடன் ததும்பிச் செல்கிறது .அதில் படகுச் சவாரி செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை .நதியின்  அழகைப் பார்த்தபடி நின்றிருந்த அந்த  அற்புதக் கணத்தில் உடன் நின்றிருந்த மாணவி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்  அவர்களின் 'ஒரு கிராமத்து நதி' கவிதைத் தொகுப்பு பற்றிப் பேசத் தொடங்கினாள். 

என்னிடம் படித்த மாணவ மாணவியரில் கவிதை எழுதும் திறன் கொண்டவர்களின் ஆற்றலை வெளிக் கொணர, அவர்கள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இறங்கிய போது தமிழின் முக்கியமான கவி ஆளுமைகளின் கவிதைத் தொகுப்புகளைப் படிக்கச்  செய்தேன் .வகுப்புகளில் திறனாய்வு செய்யவும் வைத்தேன் .அப்போது அதிகமாக வாசிக்கப் பட்டதும் விவாதிக்கப் பட்டதும் 'ஒரு கிராமத்து நதி' .வானம்பாடி இயக்கத்தின் மிக முக்கிய முன்னோடியான சிற்பி அவர்களின் பொது உடைமைச் சித்தாந்தக் கவிதைகளிலிருந்து இத் தொகுப்பு வித்தியாசப் பட்டிருப்பதாக நானும் உணர்ந்திருக்கிறேன் .படிமங்கள் பல பயின்று வந்திருக்கும்  'ஒரு கிராமத்து நதி ' வாசிக்க வாசிக்க வேறு வேறு தளங்களுக்குள் நம்மை இட்டுச் செல்பவை .அதனால்தான் 'கனல் மணக்கும் பூக்கள்' என்ற தலைப்பில் மாணவர்களின் கவிதைத் தொகுப்பு வெளி வந்த பிறகும் 'ஒரு கிராமத்து நதி 'யின் கவியொலி எங்கள் மனதில் நீங்காதிருந்தது .

ஸீன் நதியின் தூய்மையில்,மனிதர்களின் பேராசையாலும் அலட்சியத்தாலும் மொட்டையக்கப் பட்டு மூளியாகிப் போன  நம்  தமிழ் நாட்டுக் கிராமத்து நதிகளின் கையறு நிலையும் கலங்கலாகத் தெரிந்தது .வெகு நேரம் கழித்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்லும் போது வழி தவறி ரயில் நிலையத்தில் அலை மோதினோம்.பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் திருமூலரும் தெரிதாவும் பற்றி முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த என் சகோதரர் நிஷாந்த் இருதயதாசன் விடுமுறைக்காக அப்போது லண்டன் சென்றிருந்தார் .அடிப்படையில் பிரெஞ்ச்சுக்காரர்கள் மனித நேயம் மிகுந்தவர்கள் .ஆனால் அப்போது லண்டனில் liquid bomb மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடை பெற்றிருந்ததால் நட்பு பாராட்டுதலோ உதவியோ அவர்களிடமிருந்து எதிர் பார்க்க முடியாது என்று சொல்லியிருந்ததுடன்  அங்கிருந்த தமிழ் நாட்டு நண்பர்கள் சிலரையும் அறிமுகம் செய்திருந்தார் .ரோமிங் வசதி பெறாததால் அவர்களை எங்களிடமிருந்த கைப் பேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.வேற்று கிரக வாசிகள் போலத் திகைத்து நின்ற போதுதான் அந்த மாணவி 'ஒரு கிராமத்து நதி 'என்று கத்தினாள்.பயத்தில் மூளை குழம்பி விட்டதோ என்று நான் மிரண்டுதான் போனேன் .  அவள் சுட்டு விரல் நீண்ட திசையில் ஒரு மனிதர் முகத்தில் தமிழர் என்ற அடையாளம் .அவர் கையில் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின்  'ஒரு கிராமத்து நதி '!

அவருக்கு அருகில் நம்ம ஊர் செவ்வந்திப் பூ சூடியிருந்த அவர் மனைவி .
பக்கத்தில் சென்று பேசுவதறியாது நின்ற வேளையில் என் மாணவிதான் ஆரம்பித்தாள்  .சார் ...இந்தக் கிராமத்து நதி ..என்று .அவர் உற்சாகமாகி விட்டார் .அவர் காரைக்காலைச் சேர்ந்தவர் என்றும் ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு கிராமத்து நதியினை வாங்கி வந்ததாகவும் வாசிக்கும் தோறும் மண் வாசனையில் மகிழ்வதாகவும் சிலாகித்தார் .பேச்சின் ஊடாக எங்கள் நிலையறிந்தவர் உடனே அவர் கை பேசியில் தேவையான எண்களைத் தொடர்பு கொண்டு  பேசச் செய்தார் .லண்டனிலிருந்த என் சகோதரரரிடமும் என்னைப் பேச  வைத்து எனக்கு உற்சாகமூட்டினார் .மொத்தத்தில் திசை தெரியாது தவித்துக் கொண்டிருந்த எங்களைக் கரை சேர்த்தது அன்று சிற்பி அவர்களின் கிராமத்து நதிதான்.

பரந்து விரிந்த உலகத்தில் தேசம் கடந்தும் மனிதர்களை இலக்கியம் இணைக்க முடியும் என்று  நாங்கள் உணர்ந்த தருணம்அது. உலக அளவில் 1500 பல்கலைக்கழகங்களில் மூன்றாம் இடத்தை  வென்று இந்தியாவுக்குத் திரும்பியதும் நான் என் அம்மாவுடன் சென்றது முத்தாலங்குறிச்சி ஊருக்குத்தான். .தாமிரபரணிக் கரையோரம் அமைந்திருந்த அந்தச் சிற்றூரில்தான் என் குழந்தைப் பருவம் விசித்திரக்  கனவுகளில், கட்டற்ற விளையாட்டில்  கனிந்தது .ஒரு ஆசிரியர் தன்னிடம் பயிலும் ஒவ்வொரு மாணவரையும் சொந்தக் குழந்தையாகவே எண்ணி அறிவிலும் பண்பிலும் வளர்க்க வேண்டும் என்பதை ஆசிரியர்களாயிருந்த என்  அப்பாவும் அம்மாவும் அந்த ஊரில்தான் வாழ்ந்து காட்டினார்கள் .ஊரை வளைத்துச் சென்ற அந்த தாமிரபரணியில்தான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு மறு ஜென்மம் எடுத்தேன்.

நதிக்கரையில்தான் நாகரிகம் வளர்ந்ததாகப் படிக்கிறோம் .ஒவ்வொரு பொங்கலின்  போதும் மாட்டுப் பொங்கல் அன்று மாலையில் பனங்கிழங்கு,கரும்பு போன்றவற்றை எடுத்துக் கொண்டு  முத்தாலங்குறிச்சி ஆற்றங்கரையில்,ஊர் காவலாய் வீற்றிருக்கும் அம்மன் கோவில் அருகில்  விழுதுகளும் கிளைகளும் பரப்பி உயர்ந்து நிற்கும் ஆலமரத்தினடியில், பறவைகளின் சங்கீதம் கேட்டபடி, ஊர் மொத்தமும் பகிர்ந்து உண்டு சிரித்து மகிழ்ந்ததில் பங்கெடுத்த நினைவுகள் இன்றும் பசுமையாய்!ஆற்றில் நீர் வற்றும் காலங்களில் மணலில் ஊற்று தோண்டி சின்னச் செப்புக் குடத்தில் தேங்காய்ச் சிரட்டையால் நீர் மொண்டு  ஊற்றி உடுத்தியிருந்த துணி தண்ணீராலும் மண்ணாலும் நிறைந்திருக்க நட்பு வட்டத்துடன் கதை பேசிச் சென்றதும்  அதே ஆற்றங் கரையோரம் குலை குலையா  முந்திரிக்காய் விளையாடியதும் மீண்டும் மீண்டும் அந்தக் கணங்களில் இன்றும் வாழ முடிகிறது .இன்று வரை என்னோடு பயணிக்கின்ற  அந்தத் தவிர்க்க முடியாத நினைவுகளினால்தான் என்னுடைய நாவல்கள் பரணி, சங்கவை   இரண்டிலும் நான் முத்தாலங்குறிச்சி என்ற ஊர் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறேன் .

அகன்று ஓடிய அந்த அழகான துய்மையான குடிநீராகவும் விவசாயிகளின் பயிருக்குப்  பசுமை நீராகவும் பயன் தந்த அந்த நதி நான் பிரான்சிலிருந்து திரும்பி வந்ததும்  சிற்பியின் கவிதை கிளர்ந்து விட்ட நினைவுகளால் அங்கு சென்று பார்த்த போது முது மக்கள் தாழியில் குறுகிப் போன ஜீவனற்ற உடம்பு போலத்  தோன்றியது .லாரியில் யார் யாரோ மணல் அள்ளிக் கொண்டிருந்தார்கள் .வெற்றிலைக் கொடிக் காலும் நெற்கதிர் கழனியும் தொலைந்து போன கனவுகளாய் ,செங்கல் சூளைக்காக வெட்டப்பட்ட பனை மரங்களின் சுவடு கூட இல்லாமல் ,இயற்கை அந்த ஊரிலிருந்து ரொம்ப தூரம் காணாமல் போயிருந்தது .

நதிகளை இழந்தால் நாகரிகம் ,பண்பாடு ,மனிதம் என்று எல்லாவற்றையும் இழந்து விடுவோம் .பொங்கல் நாளிலும் சிற்பியின் 'ஒரு கிராமத்து நதி 'தான் என் நினைவில் ,முத்தாலங் குறிச்சி ஆற்றினைப் பற்றிய ஆற்றாமையுடன்!

வெள்ளி, 15 ஜனவரி, 2016

சபரிமலையும் பெண்களும்

ரிக் வேதமும் அர்னாப் கோஸ்வாமியும் 



10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பது பற்றிய சர்ச்சை, வழக்கு, விவகாரம் சமீபத்தில் Times Now தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டது. அதென்னமோ தெரியவில்லை. பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றாலே நடிகையரும், அரசியலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் மட்டுமே இதுபோன்ற விவாதங்களில் கலந்துகொள்ள தொலைக்காட்சிகள் இடம் தருகின்றன. விவாதத்தில் பங்கெடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு சபரிமலை தேவ ஸ்தானத்தின் சார்பாக பெண்கள் ஐயப்பன் சந்நிதானத்திற்குள் செல்லும் தடையை நியாயப்படுத்திப் பேசியவரிடம் உங்களைப் பெற்றது தாய்தானே, மனிதர்களைப் பெற்றெடுப்பதும் பெண்தானே, ஏன் அந்த சந்நிதானத்தில் இருக்கின்ற சாமியைப் பெற்றெடுப்பதும் பெண்தானே என்றெல்லாம் பழைய வழக்கினையே பேசிக்கொண்டிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், சுவாமி ஐயப்பன் மோகினியாக உருவெடுத்த திருமால் என்ற ஆண் கடவுளுக்கும், சிவன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தவர் என்பதுதான் ஐதீகம்.


பொதுவாகவே, கடவுள் அவதாரங்களின் பிறப்பு இயற்கையானது இல்லை என்பது வேறு விஷயம். நம்மூர் மதுரை மீனாட்சியம்மனே கருவறையில்லாமல் பிறந்தவர் என்பதுதான் நம்பிக்கை. கிறிஸ்தவ கடவுளான இயேசுவின் பிறப்பு கூட இயற்கைக்கு அப்பாற்பட்டதாகவே விவிலியத்தில் சொல்லப்படுகிறது. எனவே, கடவுள் அவதாரங்களின் தாய்மார்கள் பற்றி தர்க்கம் அபத்தமானதுதான். இது ஒருபுறம் இருக்கட்டும்.

தேவ ஸ்தானத்தைச் சேர்ந்தவரும் இன்னும் ஒரு பண்டிட்டும், சுவாமி ஐயப்பன் பிரம்மச்சர்ய கடவுள் என்பதால் பெண்களுக்கு அங்கு அனுமதி இல்லை என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க, எதிர் வழக்காடிய பெண்களோ, மாதவிடாய் பிரச்சினைதானே அதற்கு முன் வைக்கிறீர்கள். அதனால் பெண்கள் தூய்மையற்றவர்களாய்ப் போகிறார்களா எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்து மதத்தில் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் எந்தக் கோவிலுக்குமே பெண்கள் செல்வதில்லை என்பது எழுதப்படாத சட்டமாக எவ்வளவோ தலைமுறைகள் இருந்து வருவது இவர்களுக்குத் தெரியாதா?

இந்து மதத்தில் மட்டுமல்ல. கிறிஸ்தவ மதத்திலும் கூட அந்தக் காரணத்தினாலேயே பெண்கள் குருக்களாக நியமிக்கப்படுவதில்லை என்பதுவும், அதனைப் பல பெண் எழுத்தாளர்கள் கடுமையாக விமரிசனம் செய்து இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதையும் காண முடிகிறது.

Gabriele Dietrich என்ற ஆங்கில கவிஞர், கத்தோலிக்க பாதிரிகளுக்கு இவ்வாறு அறைகூவல் விடுக்கிறார்:

I am a woman
and the blood
of my sacrifices
cries out to the sky
which you call heaven.
I am sick of you priests
who have never bled
and yet say:
This is my body
given up for you
and my blood
shed for you
drink it.
Whose blood
has been shed
for life
since eternity?
I am sick of you priests…

எனவே, பெண்ணின் மாதவிடாய் அவளைத் தீண்டத்தகாதவளாக கோவில்களிலும் தேவாலயங்களிலும் ஒதுக்கி வைக்கிறது, கிறிஸ்தவ மதத்திலும் கூட.

என்னுடைய கேள்வி இதுதான். ஒரு குறிப்பிட்டக் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதால் மட்டும் பெண்களுக்கு சமமான உரிமை கிடைத்துவிடுகிறதா? Times Now விவாதத்தின்பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக இருக்க, கோவிலுக்குள் மட்டும் பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.

ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் HumHindu.Com-ன் பண்டிட்ஜியைப் பார்த்து ரிக் வேதம் ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கிறதே. நீங்கள் ரிக் வேதத்தைவிட மேலானவரா என்று அர்ணாப் கோஸ்வாமி ரிக் வேதத்திலிருந்து சில பகுதிகளை உருவி உச்ச ஸ்தாயியில் முழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய வாதம்தான் என்ன? ரிக் வேதம்தான் இந்திய மக்களின், ஆண், பெண் வாழ்வியலைத் தீர்மானிக்கும் மேலான சக்தி என்கிறாரா. ரிக் வேதத்திற்குப் பிற்பட்ட சாம அதர்வண வேதங்கள், கைம்மை, குழந்தைத் திருமணம் - இவற்றையெல்லாம் ஆதரிக்கிறதே... அவையும் மேலானவை என அவர் சொல்வாரா?

சமீபத்தில் பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் இந்தியாவை ஒற்றைப் பண்பாடு, ஒற்றைப் பெருமதம் நோக்கி வெகு சிலர் காய்கள் நகர்த்துவதாக தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள், பழங்குடியினர் அவர்தம் வழிபாடு நம்பிக்கைகள் - இவற்றைப் புறந்தள்ளி ஒற்றைப் புள்ளியை நோக்கி நகர்த்தும் அந்த ஆபத்தான முயற்சியின் வெளிப்பாடாகவே ரிக் வேதத்தைவிட நீங்கள் மேலானவரா என்ற அர்ணாப் கோஸ்வாமியின் கேள்வியை அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஜீவாதாரத்திற்கு வழியில்லாமல் உழைப்பு உறிஞ்சப்பட்டு பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் அடித்தட்டுப் பெண்களுக்கு இந்தப் பெருங் கோவில்களுக்குள் செல்வது பற்றிய எந்த அக்கறையும் இருக்கப்போவதுமில்லை, அது அவர்களுக்குத் தேவையுமில்லை. தொலைக்காட்சிகளின் விவாத மேடையில் சாதாரண உழைக்கும் பெண்கள் எப்பொழுது குரல் கொடுக்க அனுமதிக்கப்படுகிறார்களோ, அதுதான் உண்மையான பெண்ணியமாகவும், கருத்துச் சுதந்திரமாகவும் அமையும்.

2001-ஆம் ஆண்டில் நான் எழுதிய பரணி என்ற நாவலில் மாதவிடாய் சமயங்களில் கோவில்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படாது விசித்திரத் தீண்டாமைக்குப் பழக்கப்படுத்தப்படுகின்ற மேல்சாதிப் பெண்களைக் காட்டிலும், எப்பொழுதுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத தலித் பெண்களின் நிலை மேலானது என்ற வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன்.