புதன், 23 செப்டம்பர், 2015

'யாதுமாகி ' பெண் எனும் ஆளுமையின் நாவல்



பேராசிரியை எம்.ஏ.சுசீலா அவர்களின் யாதுமாகி என்ற நாவலைப்  படித்து [வாசிக்கவில்லை, படித்தேன்.] முடித்த போது  மனம் கனமானதொரு ஆழ்ந்த நிசப்தத்தில் ஆழ்ந்து போனது .குழந்தை மணமும்  பால் மணம்  மாறாத சிறுமியரின் கையறு கைம்பெண் நிலையும் சரித்திரப்  புத்தகத்தின் நீண்ட பக்கங்களில் வந்து கடந்து போன சில வரிகளாகவே பலருக்கும் நினைவிருக்கும் .அல்லது தேர்வுக்குப் படித்து, பரீட்சையோடு மறந்து போன பழைய செய்தியாகவும் இருக்கும் . ஆனால் 'யாதுமாகி' அன்று பால்ய விவாகத்தில் வாழ்க்கையினைத் தொலைத்து தனித்த அடர் இருட்டில் அமிழ்ந்து போன பெண்களின் அவலக் குரலால் நெஞ்சில் ஓங்கி அறைகிறது.

தமிழ் நாவல்களின் முன்னோடிகளான அ.மாதவையா எழுதிய ‘கிளாரிந்தா’ என்ற நாவல், உடன்கட்டை ஏறுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட இளம் கைம்பெண்ணின் மறு பிறவி போல் அமைந்த புதிய வாழ்வுக்  கதையை, கலை நுணுக்கத்துடன் சொல்லிய நாவல்.



வரலாற்று ஆதாரங்களைத் தேடும்போது சில ஆவணங்களில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் பத்மாவதி என்றும், வேறு சில இடங்களில் கோகிலா என்றும் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண நேரிடுகிறது. பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ வேதம் பரப்பும் பணியை முதன்முதலில் முன்னெடுத்துச் சென்ற அந்தப் பெண்ணைப் பற்றிய செய்திகளும் கூட முழுமையாக தென்னிந்திய திருச்சபை ஆவணங்களில் இடம்பெறவில்லை. ‘சதி’ என்ற கொடும் நெருப்புப் பசிக்கு ஆளாக இருந்த தன்னைக் காப்பாற்றிய ஆங்கிலேய அதிகாரியுடன் சேர்ந்து வாழுகின்ற அந்தப் பெண் நீண்ட பயணம் மேற்கொண்டு தஞ்சாவூர் சென்று கிறிஸ்தவ போதகரிடம் (missionary) தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்கிறார்.

முறையான திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கை நடத்தும் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு கிறிஸ்தவச்  சட்டத்தில் இடமில்லை என்று மறுக்கப்படுகிறது. அதே போதகர் சில வருடங்களுக்குப் பிறகு பாளையங்கோட்டை சென்ற வேளையில் அப்பிராமணப் பெண் மீண்டும் அவரிடம் தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி மன்றாடுகிறாள். எந்த மறுப்பும் இல்லாமல் அவரது விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. ஏனென்றால், ஆங்கில அதிகாரி இறந்துவிட்ட நிலையில் இப்போது அந்தப் பெண் ஒரு கைம்பெண்!

மிகக் குறைவான முக்கியத்துவத்துடன், தென்னிந்திய திருச்சபை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த கிளாரிந்தாவின் வாழ்க்கையை, அவள் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தேடி திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இலக்கிய நயத்துடன் நாவல் வடிவில் தந்திருக்கிறார் அ.மாதவையா.


எம்.ஏ.சுசீலா அவர்களின் ‘யாதுமாகி’ நாவலைப் பற்றி எழுதத் தொடங்கிவிட்டு, அ.மாதவையாவின் கிளாரிந்தாவைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன என்று வாசிப்பவர்கள் யோசிக்கக் கூடும். அந்தக் காலகட்டத்தில் பெண்கள், குறிப்பாக பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பால்ய விவாகம் செய்து கொடுக்கப்படுவதும், விவரம் புரியும் முன்பே சரியாக முகம் பார்த்திராத விளையாட்டுக்  கணவனின் மரணத்தால் விதவையாகிப் போவதும், வீட்டின் இருட்டறையில் முடங்கிப் போய் தன் குழந்தமையை, இளமையை, வாழ்வின் இன்பங்களை, ஏன்? தன்னையே தொலைத்துவிடுவதுமாய் அவலத்திற்கு ஆளாகிப் போவது மிகச் சாதாரணமாக நடந்துள்ளது! இந்த அகோரம் அரசாங்கத்தின் புள்ளி விவரக் கணக்குகளில் உணர்ச்சிகளற்ற வெறும் எண்ணிக்கையாய் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

‘யாதுமாகி’ நாவலில் இடம்பெறும் தேவி, குழந்தை மணம் செய்து கொடுக்கப்பட்டு கடல் அலைகளுக்குப் பலியான கணவனின் மனதில் பதியாத முகம் பற்றியோ, எண்ணங்கள் பற்றியோ, சூட்டப்பட்டு பிறகு பறிக்கப்பட்ட மாலை பற்றியோ எந்த சிந்தனையும் அற்றவளாய், அல்லது அதைப் பற்றி எதுவும் தெரிந்திராத அபலைக் குழந்தையாய் எதிர்காலக் கேள்விக்குறியில் சுருண்டு போனாலும் தவித்துப்போனாலும், கல்வி கற்க வேண்டும் என்ற தீராத தாகத்தில் மீண்டும் எழுந்துகொள்கிறாள்.

தன் தாயுடைய நிர்ப்பந்தத்திற்காக, படிப்பில் பிரகாசமாய் விளங்கிய தன் சின்னஞ்சிறு மகளை பால்ய விவாகத்தில் கைம்பெண் ஆக்கிய சாம்பசிவம், பிராயச்சித்தமாக தன் பெண்ணைப்  படிக்க வைக்கிறார். கடந்துபோன நெருப்புச் சுவடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னே மட்டும் பார்வையைப் பதித்து கல்வியைத்  துடுப்பாய் பற்றிக்கொண்டு தொடர்ந்து பயணம் செய்யும் தேவி தன் வாழ்வில் இடையறாது எதிர்கொள்ளும் இன்னல்கள், பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், அத்தனையையும் சமாளித்துக் கரையேறுவதுடன், பல தளங்களில் வாழும் பெண்களுக்கும் கலங்கரைவிளக்கமாய் உயர்ந்து நிற்கிறாள்.

கிளாரிந்தா புதினத்திற்கும் யாதுமாகிக்கும் இடையே ஒரு சிறு தொடர்பு வந்துபோகிறது. மாதவையாவின் நாவலிலும் பிராமணக் குடும்பத்து கைம்பெண்ணே நாயகி ஆகிறாள். யாதுமாகியிலும் அதே பிராமணக் குடும்பத்துப் பெண்தான் கதையின் நாயகி. முன்னவரது படைப்பில் திருமணம் பற்றிய புரிதல் கொண்ட இளம் பெண் கைம்பெண் ஆகிறாள். இங்கோ, குழந்தைத்  திருமணத்தில் அது பற்றிய எந்தப் புரிதலுமற்ற  சிறுமி விதவையாகிறாள். எதிர்பாராத விதமாக உடன்கட்டை ஏறுவதிலிருந்து ஆங்கிலேய அதிகாரியால் காப்பாற்றப்படுகின்ற கிளாரிந்தா, அந்த அதிகாரியின் உதவியால் ஆங்கிலக்  கல்வி கற்பதுடன் கிறிஸ்தவ மதம் பற்றியும் அறிந்துகொண்டு அந்த மதத்தின் வழியாகவே சமூகத்திற்குப் பணியாற்ற விரும்புகிறாள். முதலில் மறுக்கப்பட்டு மீண்டும் உறவாக இருந்த ஆங்கில அதிகாரியின் மரணத்திற்குப் பிறகு தன்னை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவத்திற்குள் ஐக்கியமாகி மதம் பரப்பும் பணியோடு சமூகப் பணியும் செய்கிறாள்.

'யாதுமாகி'யில் கல்வி கற்று ஆசிரியப் பணிக்குச் செல்லும் தேவி, ஒரு கட்டத்தில் தன்னை விலக்கி வைக்கும் அல்லது தன்னிடமிருந்து விலகிச் செல்லும் உறவுகளால் வாழ்வில் வெறுப்புற்று தான் தனியாக்கப்பட்டதாய் வேதனையுறுகிறாள். அவ்வேளையில் தானும் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து கன்னியாஸ்திரியாக மாறி கல்விப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையினைத் தான் பணியாற்றும் கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக இருக்கும் கன்னியாஸ்திரியிடம் தெரிவிக்கிறாள். அவரோ அதைச் சற்றும் கண்டுகொள்ளாமல் தேவியையும், அவளது தோழி சில்வியாவையும் காரைக்குடியில் இருக்கும் வேறொரு பள்ளிக்குச் சென்று பணியாற்றுமாறு அனுப்பி வைக்கிறார்.

வழக்கமாக, கண்ணில் தட்டுப் படும் ஆறு ,எரி, குளம் குட்டை  என்று நீர்நிலை எங்கும் மீன் பிடிக்க அலையும் மீன்காரர் போல கிறிஸ்தவ மதத்திற்குள் ஆட்களை இழுக்கவும் கிறிஸ்தவ மதமே மோட்சத்தின் மார்க்கம் பிற மதங்களும் கடவுளர்களும் சாத்தானின்  பிறப்பிடங்கள் அல்லது உறைவிடங்கள் {சாத்தான் என்று இவர்கள் எதனைச் சொல்கிறார்கள் என்று பல வருடங்களாக மண்டைக்குள் குடைச்சல் .கான்வென்டில் படித்த போது இந்துக் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் படைக்கப் பட்ட சர்க்கரைப் பொங்கல் ,கொழுக்கட்டை மாவிளக்கு போன்றவற்றை வாயில் வைத்து விட்டாலே நரகம் என்று பயமுறுத்தித் தவிக்கச் செய்த வெள்ளை அங்கி கன்னியாஸ்திரிகளும் சாத்தான் பற்றிச் சொன்ன கட்டிலடங்காக் கதைகள் எந்த யூகத்தையும் தரவில்லை} என்று பிரச்சாரம் செய்வதற்கு  ஆண் பெண் போதகர்களைக் கண்டு பிடிக்கவும் பேயாய் அலையும் கிறிஸ்தவம், அந்த ஒப்பற்ற? பணிக்குத் தன்னை அர்ப்பணிக்க வரும் ஒரு இளம் பெண்ணை நிராகரிப்பது முதல் வாசிப்பில் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது .தேவியின் தோழி சில்வியாவும் இதே கேள்வியினை எழுப்பும் போது பல வலுவான ஐயங்களைத் தோற்றுவிக்கிறது இங்குதான் அ.மாதவையாவின் கிளாரிந்தாவுடன் யாதுமாகி நாவலின் தேவியினை ஒப்பிட்டு நோக்க முடிகிறது.

கிறிஸ்தவ மதத்திற்கென்று பிரத்தியேக குணமுண்டு ..கால் பரப்பிச் செல்லும் திசையெங்கும் வேரூன்றத் தடையாயிருக்கும் அந்த மண் சார்ந்த எந்த நல்ல அம்சத்தையும் தயங்காது தடயமின்றி அழித்து விடும் .அதுவே ஒரு சமூகத்தின் மிகப் பெரும் தீமையென்றாலும்  தான் நிலை பெற உதவும் என்றால் ஆரத் தழுவிக் கொள்ளும் ..உயர் குடியினர் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக் கொண்டாலோ போதகர்களாக உருமாறினாலோ. அதனையே கூவிக் கூவி விளம்பரம் செய்யும் கிறிஸ்தவம் பிராமணப் பெண்ணான கிளாரிந்தாவையும் தொடக்கத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு தென்னிந்திய திருச்சபைக்காக  அதன் வளர்ச்சிக்காக அரும் பாடு பட்டதையும் கணக்கில் கொள்ளவில்லை. ஆவணங்களில் கிளாரிந்தா பற்றிய பதிவுகளும் பெரிதளவில் இடம் பெறவில்லை .யாதுமாகி தேவி கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப் படுத்தியதுமே  உயர் குடிப் பெண்ணல்லவா என்று வளைத்துப் போடாமல் அசட்டை செய்வதன் நோக்கம் தான் என்ன? இரண்டு பேருமே அன்றைய சமூகத்தின் விளிம்பு நிலையினர் புறக்கணிக்கப் பட்ட கைம்பெண்கள்!

தேவி இளம் விதவைக்கான மையத்தில் தங்கிப் படித்தவள் என்பதைத் தெரிந்து கொண்டதும் சாருவின் கணவன் எப்படி இளக்காரமாகப் பார்க்கிறானோ  அதே பார்வைதான்!     தொழில் ரீதியான இனக்குழுக்களாக வாழ்ந்த சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் மேட்டுக்குடிப் பெண்களை விட உப்பு விற்ற உமணப் பெண்ணும் பருத்திப் பெண்டிரும் பாடினி குலத்தைக் சேர்ந்த பெண்களும் சுதந்திரமாக வாழ்ந்திருப்பதை இலக்கியங்களில் காண முடிகிறது. சாதீயப் பாகுபாடு மிகுந்த பிற்காலத் தமிழ்ச் சமூகத்திலும் பிறப்பால் உயர்குடிப் பெண்ணாக இருந்தோர்  சாஸ்திரங்களின் பெயரால் முதுகில் பொதி சுமந்திருக்கிறார்கள்  .வாழ்விக்க வந்ததாய் சொல்லிக் கொள்ளும் இறக்குமதி செய்யப் பட்ட கிறிஸ்தவ மதமும் அந்த நியதிகளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது என்ற உண்மையினை இந்த இரு நாவல்களிலும் காண முடிகிறது .

ஆசிரியர் எம் .ஏ .சுசீலா அவர் தம் நாவலில் விவரிக்கப் பட்டிருக்கும், இரவில் மலர்ந்து தன் நறுமணத்தின் மூலமாகவே தன் இருப்பையும் அதன் அழகையும் வெளிப்படுத்தும் நைட் குயின் பூக்கள் போலவே மிகப் பெரும் சோக நிகழ்வுகளையும் எந்த பிரச்சார நெடியும் இன்றி வெகு அனாயாசமாகச் சொல்லிச் செல்கிறார். "யாதுமாகி" பெண்களின்  ஆளுமையின் அற்புத வெளிப்பாடு அது .துயரங்களையும், எதிர் பாராது வாழ்வில் குறுக்கிடும் அதிர்ச்சிகளையும் இலாவகமாகக் கடந்து செல்லும் தேவியும் சாருவும் பெண்கள் உணர்ச்சிகளின் உருவானவர்கள், ஆண்கள் அறிவின் அடையாளங்கள் போன்ற அசட்டுத்தனமான பொதுப் புத்தியினைப் பொய்யாக்கி அயராது நிமிர்ந்து நிற்கும் ஆளுமைகள்.

மதத்தின் பெயரால் நிறுவப்பட்ட மூட நம்பிக்கைகள் பெண்களுக்குப் பூட்டி விடும் கட்புலனாகாத விலங்குகளையும் அதிர்ந்து பேசாத மொழியில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதே நேரத்தில் தேவியின் மறுமணம் போராட்டங்கள் அற்றதாய் சுலபமான நிகழ்வாகச்  சொல்லப் பட்டிருக்கிறது. சாரு மற்றும் தேவி அப்பிரச்சினைகளை இயல்பாக எதிர்கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குள் அல்லது கடமைக்குள் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள் .இது மற்ற பெண்களுக்கு விடுக்கப்படும் அறைகூவல் .காலத்தையும் கதையினையும் முன்னும் பின்னுமாக நகர்த்தி இருப்பதுடன் தெளிவான கதைப் போக்கில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

பெண் எழுத்து என்பது அவள் உடல் பற்றியும் அதன் பாலியல் வேட்கை பற்றியும் பேசுவது என்று சில பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதி வரும் நிலையில் அந்த மாய பிம்பத்தை நொறுக்கிப் போட்டிருக்கும் இந்த நாவலின் பெண்கள் தங்களை இறுக்கி மூச்சுத் திணற வைக்கும் சமூக, மத நம்பிக்கைகளை. அதன் ஆவேச முகத்தை மோதி விட்டு வெற்றிக் கொடியினைப்  பற்றி எழுந்து நிற்கிறார்கள் .

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடுவது போல "யாதுமாகி" எம்.ஏ.சுசீலா அவர்கள் தம் அம்மாவுக்கு எழுப்பியிருக்கும் நினைவுச் சின்னம். ஏனென்றால் நினைவுச் சின்னங்கள் தனி மனிதரின் வாழ்க்கை, சாதனையின் அடையாளம் மட்டும் அல்ல. மற்றவர்களுக்குத் தூண்டுகோலாகும் திகழும் ஆவணம் ஆகும்.

பாளையங்கோட்டையில் கிளாரிந்தா ஆலயம் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களுக்கு உத்வேகம் தருவது போல யாதுமாகி உத்வேகம் தந்து பாதையும் காட்டுகிறது.


.

2 கருத்துகள்: