கத்தோலிக்கத்
திருச்சபையின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால்... ஆராயவே வேண்டியதில்லை, மேலோட்டமாகப்
படித்தாலே அதன் ஊழல் படிந்த
கோர முகமும் அறிவியலுக்கு எதிரான
வறட்டு ஆன்மீகத்தின் கொலை முகமும் நமக்கு
பட்டவர்த்தனமாக விளங்கும். நிறுவன மயமாக்கப்பட்ட கத்தோலிக்கத்
திருச்சபையில்தான் பணம் கொடுத்தால் பாவ
மன்னிப்பு உண்டு என்றும் போப்
அவர்களின் முடி அல்லது நகத்தை
விலை கொடுத்து வாங்கினாலே சொர்க்கத்துக்குப் போய்விடலாம் என்ற வியாபாரமும் நடைபெற்றது.
இன்று ரோமாபுரியில் கன கம்பீரமாக எழுந்து
நிற்கும் செயின்ட் பீட்டர்ஸ் கதீட்ரலை கட்டுவதற்காக ஒரு போப் போனிஃபஸின்
தலை முடி கத்தரித்து விற்கப்பட்டதில்
அவர் மொட்டையாகிப் போன கதையும் ஐரோப்பிய
வரலாற்றில் உண்டு. Pope is both spiritual
and temporal head என்று மேற்கு உலக நாடுகளின்
மன்னர்களே தாள்பணிந்து நின்ற ராசாதி ராச
ராச கம்பீர போப் ஆண்டவர்கள்
ஆற்றிய அளப்பரிய செயல்கள் புல்லரிக்கச் செய்பவை.
ஒரே
நேரத்தில் மூன்று போப்புகள் இருந்ததாகவும்,
இறந்து மண்ணுக்குள் சென்ற ஒரு போப்பின்
உடலை வெளியே எடுத்து அவருக்குப்
பின்னே வந்த போப், 'I excommunicate you', அதாவது உன்னைத் திருச்சபையிலிருந்து
விலக்கி வைக்கிறேன் என்று சபித்ததாகவும் வரலாறுகள்
உண்டு.
ஆனால்,
இந்த அலங்கோலங்களினால் கத்தோலிக்கத் திருச்சபையின் உலகளாவிய அதிகாரம் ஒடுக்கப்பட்டதும் நல்லதே. கத்தோலிக்கத் திருச்சபையிலும்
பெரும் அறிவு ஜீவிகள் என்று
பெருமை பாராட்டும் இயேசு சபையினரும் ஒரு
குறிப்பிட்ட காலத்தில் முடக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், மீண்டும் செயல்பட
அனுமதிக்கப்பட்டு அதையும் இப்பொழுது கொண்டாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
விஷயம்
அதுவல்ல. அது முக்கியத்துவம் வாய்ந்ததும்
அல்ல. அந்த சபையைச் சேர்ந்த
தற்போதைய போப் ஃபிரான்சிஸ், சமீபத்தில்
செய்த அமெரிக்க விஜயம் பற்றியது.
இதற்கு
முன்பு இரண்டாம் ஜான் பால் பல
நாடுகளுக்கும் பயணம் செய்தபோது அமைதிப்
புறாவாகவே பார்க்கப்பட்டார். போற்றவும்பட்டார். முந்தைய காலங்களில் உலகம்
உருண்டை என்று சொன்ன கலிலேயோவை
எரித்ததற்காகவும் யூதர்கள் கொத்து கொத்தாக கொன்று
குவிக்கப்பட்டபோது முகம் திருப்பிக் கொண்டதற்காகவும்
கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் பகிரங்க மன்னிப்புக் கேட்டார்
அவர்.
ஆனால்,
இயேசு சபை 'எங்கள் குரு'
என்று பெருமைபட்டுக் கொள்ளும் தற்போதைய போப் ஃபிரான்சிஸ், நியூயார்க்,
ஃபிலடெல்ஃபியா போன்ற ஊர்களுக்குப் பயணம்
சென்றிருந்தபோது 1980களில் கத்தோலிக்கத் திருச்சபையின்
பாதிரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட
ஆண், பெண், குறிப்பாக சிறுவர்
சிறுமிகளைச் சந்தித்தபோது கூறிய வார்த்தைகள் கடும்
கண்டனத்திற்குரியவை.
அவர்களிடம்,
'கடவுள் உங்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்' என்று
சொல்லிய போப், பொதுவான கூட்டத்தில் அவர்களைச்
சந்திக்காமல், தனியாக சந்தித்ததில் தங்களுக்கு
உடன்பாடு இல்லை என அமெரிக்காவில்
பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
மோசமான
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தைகளைப் பார்த்து
'கடவுள் உங்களுக்காக கண்ணீர் சிந்துகிறார்' என்று
மனசாட்சியே இல்லாமல் சொல்லப்பட்ட வார்த்தைகளில் தெரியும் பசப்புத் தன்மை எரிச்சலைத் தருகிறது. அவர்கள்
அந்த கொடுமைக்கு உள்ளான காலத்தில் அதற்குக்
காரணமான பாதிரிகளை பணியிட மாற்றம் செய்து
அதுதான் தண்டனை எனப் பரைசாற்றிக்கொண்டது.
ஆனால், அமெரிக்க அரசாங்கமோ அவர்களை சிறைக்கு அனுப்பி
நேர்மையாய் நடந்துகொண்டது. ஏறக்குறைய ஒரு லட்சம் குழந்தைகள் கத்தோலிக்க தேவாலய பாதிரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பிறகு, அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ளிய பிறகு இனியும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை ஒளித்து வைக்கத் தேவையில்லை என்று ஒப்புக்குச் சொல்லியிருக்கும் போப் ஃபிரான்சிஸ் இதற்கு முன்னால் காப்பாற்றப்பட்ட பாதிரிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவதில் தீவிரம் காட்டுவாரா?
பாதிப்பிற்குள்ளான
குழந்தைகளிடம் ஆறுதல்
கூறுகிறேன் என்ற பெயரில் இதைவிட மோசமாக யாரும்
பேச முடியாது. குற்றவாளிக்குத் தண்டனை தராத கடவுள்
கண்ணீர் விடுவதால் என்ன பயன்? பாதிக்கப்பட்டவனுக்குக்
கிடைக்கும் நிவாரணம்தான் என்ன? கடவுளின் நீதி
என்பது இதுவல்லவே!
இரண்டாம்
ஜான் பாலிடம் வெளிப்பட்ட அந்த
நேசம் நிறைந்த நேர்மை இயேசு
சபையைச் சேர்ந்த போப் ஃபிரான்சிசுக்கு
இல்லாமல் போனது ஏன்?
இந்தியாவிலும்
கூட இப்போது கிறிஸ்தவத்திற்கு எதிரான
பரப்புரைகள் பல நடந்துவருகின்றன. ஆனால்
அவ்வாறு செய்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் தாக்க
வேண்டியதும், தரை மட்டமாக்க வேண்டியதும்
பெரும் வணிகமயமாகிவிட்ட நிறுவனங்கள் (கல்வி நிறுவனங்கள் உட்பட)
நடத்துபவர்களும், எளியவர்களுக்கு எந்த வகையிலும் ஆதரவாகவும்
ஆறுதலாகவும் இல்லாத, சாதியத்தையும், இன
வெறியையும் தூக்கிப் பிடிக்கும் சில கத்தோலிக்க சபைகளையே
என்பதை ஏனோ அவர்கள் கணக்கில்
கொள்ளவில்லை.
இயேசு
ஒருவரே வழி என்று முச்சந்தியில்
நின்று அறைகூவினாலும், பல பெந்தேகோஸ்தே சபைகள்
வணிக நோக்கில் செயல்படுவதில்லை. மிக மிக எளிய
பின்புலத்தில் இருந்து செல்லும் மக்கள்
இந்த ஆலயங்களுக்குச் செல்லும்பொழுது ஏதோ ஒரு விதத்தில்
மன ஆறுதலும் நிறைவும் அடைகிறார்கள். பாவம் செய்வது தவறு என்று நல்வழியாவது திரும்பத் திரும்ப அங்கு கற்பிக்கப்படுகிறது.
காலம்
காலமாக வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பைபிள் இதுபோன்ற பெந்தேகோஸ்தே
சபைகளில் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அர்த்தம் செய்துகொள்ளப்பட்டு வேத வாக்காகப் பறைசாற்றப்படுகின்றன
என்ற குறை இருந்தாலும் தன்னை
நாடி வரும் எளிய மக்களின்
மேல் ஏறி மிதித்து தலைக்கனம்
கொண்டு திரிவதில்லை அச்சபையினர்.
அடிப்படைத்
தேவைகளான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை
அதிகார கூடங்களாகக் கையில் வைத்திருக்கும் சில
கத்தோலிக்க சபைகள் இயேசு அன்று
எடுத்த சாட்டையால் அடித்துத் துவைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களே தங்கள் நிறுவனங்களில்
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல கொடுமைகளையும் நிகழ்த்திவிட்டு
கடவுள் உங்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறார். குற்றவாளியைக்
காப்பாற்றியே தீருவோம் என கயமைத்தனத்தின் உச்சமாகத்
திகழ்பவர்கள். இப்படிப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கு தன்னையே காப்பாற்றிக் கொள்ள
முடியாதவர் என்று பரிகாசம் செய்யப்பட்ட
சிலுவையில் தொங்கும் இயேசு கையறு நிலைக்
கடவுளாகப் போய்விட்டார் என்றால் கையில் சுதர்சனச்
சக்கரம் ஏந்திய கிருஷ்ணனே இன்றைய
தேவை.
பாவம்
இயேசு கிறிஸ்து! பகைவனுக்கு அருள்வாய் நன்னஞ்சே என்ற தமிழரின் மகத்தான
உணர்வை மண்ணுக்குள் விதைத்த மகான் அவர்.
ஆனால் அதிகார மமதையில் எளியவரைப்
பார்த்து கடவுள் உங்களுக்காக கண்ணீர்
வடிக்கிறார் என்று சொல்லும் பாசாங்குக்காரர்களிடம்
மாட்டிக்கொண்டு தவிக்கிறார். மீட்பரே தன்னை இவர்களிடமிருந்து
மீட்டுக்கொள்வது எப்போதோ?