செவ்வாய், 29 டிசம்பர், 2015
எழுத்தாளர் இ.ஜோ.ஜெயசாந்தி எழுதிய சங்கவை நாவலுக்கு ரங்கம்மாள் விருது - தி இந்து
முழுமையான செய்தியை இங்கே படிக்கலாம்: எழுத்தாளர் இ.ஜோ.ஜெயசாந்தி எழுதிய சங்கவை நாவலுக்கு ரங்கம்மாள் விருது - தி இந்து
திங்கள், 2 நவம்பர், 2015
சாரு நிவேதிதாவின் அகம்பாவ அறிவீனம்
எழுத்தாளர் சாரு நிவேதிதா 'நிலவு தேயாத தேசம்' என்ற தலைப்பில் அந்திமழை இதழில் தனது துருக்கிப் பயணம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். பள்ளிக் காலத்திலிருந்தே வரலாறு எனக்கு மிக மிக விருப்பமான பாடம். பாளையம்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்த போது அமெரிக்க வரலாறு, இந்திய வரலாறு, இங்கிலாந்து வரலாறு, முக்கியமாக பிரஞ்சு தேசத்தின் வரலாறு போன்றவை ஆர்வத்தை ஏற்படுத்தியவை. மேலும் மேலும் படிக்கத் தூண்டியவை. ஆனால் சீனா, துருக்கி ஆகிய இரண்டு நாட்டு வரலாறுகளும் ஏனோ கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை; தேர்வுக்காகப் படித்ததுடன் சரி. எனவே இந்தப் பயணக் கட்டுரையினைப் படிக்கலாமே என வாசிக்கத் தொடங்கினேன். இதை நான் ஏன் குறிப்பாகச் சொல்கிறேன் என்றால் சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் எனக்கு ஆர்வமில்லை. தமிழகத்தில் பாலியல் வறட்சி எனச் சொல்லிக் கொண்டு அந்த வறட்சியில் அல்லல்படுபவர்களக் கடைத்தேற்ற வந்தவன் தான் என்பது போல எழுதப் படும் அவரது எழுத்து எனக்குப் பெரிய ஒவ்வாமையே. ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றியது அல்ல. எனக்கு ஏன் அவரது எழுத்து பிடிக்கவில்லை என்று சொல்வதற்காக இப் பதிவினை நான் எழுதவில்லை. அது தேவையற்றது.
துருக்கிப் பயணம் பற்றிய தனது பதிவின் ஊடாக சங்க காலத்து ஔவையாரைப் பற்றிப் போகிற போக்கில் முரணான, சரியாகச் சொல்வதென்றால் பொய்யான தகவலைச் சொல்லிச் சென்றிருக்கிறார். எழுத்தாளன் என்றாலே ஏழைதான் எனச் சொல்லும் அவர் அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் ஔவையார் கூட, தனக்குத் தானம் தராத மன்னனைக் கன்னா பின்னாவென்று ஏசிச் செல்வதாகவும் அதுவும் மன்னனின் முகத்துக்கு நேரே ஏசினால் சிறைச்சாலை என்பதால் வாயில் காப்போனிடம் வசை பாடிச் செல்வதாகவும் எழுதியிருக்கிறார். அந்த மன்னன் யார் என்ற குறிப்பு அதில் இல்லை. வெளிநாட்டுக்குச் சென்று வந்து பயணக் கட்டுரை எழுதுவதற்கும், தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கும் பணம் கொடுங்கள் என்று இணையத்தில் தனது வங்கிக் கணக்கினை #சாருநிவேதிதா கொடுப்பதும் அவரது எழுத்துக்களால் உலகம் அல்லது குறைந்த பட்சம் தமிழ்ச் சமூகம் பெரும் பேறு பெற்று விடும் என நம்பி வாசகர்கள் பணம் கொடுப்பதும் அவர்களுடைய விருப்பம் அல்லது உரிமை.
தன்னுடைய செயலையோ நிலைப் பாட்டினையோ நியாயப் படுத்திக் கொள்வதற்காக சங்க இலக்கியத்தின் பெரும் ஆளுமையான ஔவையாரை ஏன் சாரு நிவேதிதா கொச்சைப் படுத்த வேண்டும்? அதியமானைச் சந்தித்துப் பரிசில் பெற வரும் ஒளவையாரை அவனது அரண்மனையில் அமைச்சர் உள்ளிட்ட பலரும் நன்கு உபசரிக்கின்றனர். ஆனால் அதியமான் அவளைச் சந்திக்காமல் காலம் தாழ்த்துகிறான். அவளைப் பார்த்துப் பரிசில் வழங்கி விட்டால் அங்கிருந்து சென்று விடுவாள்: மேலும் சில காலம் அவள் தன் அரண்மனையில் தங்க வேண்டும் என்பதனாலேயே அவன் அவ்வாறு செய்கிறான். அறிவுச் செருக்கும் துணிவும் கொண்ட ஔவையாரோ தன்னை நேரில் சந்தித்து, தன் பாடலில் மகிழ்ந்து, தனக்குப் பரிசில் தராத மன்னனின் அரண்மனையில் தங்குவது தனது தன் மானத்துக்கு இழுக்கு என எண்ணுகிறாள். அவ்வேளையில்தான் வாயில் காப்போனிடம் அவள் பாடுகின்ற பாடலைத்தான் சாரு நிவேதிதா குறிப்பிடுகிறார். புறநானூற்றில் 206வது பாடலாக இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அப்பாடலின்,
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
என்ற வரிகளில் அதியமான் தன்னுடைய தரம் அறியாதவனா அல்லது என்னுடைய தரம் அறியாதவனா எனக் கேள்வி எழுப்பும் அவர் தான் வெறும் சோற்றுக்காக அங்கு வந்து தங்கவில்லை என்றும் மன்னன் தன்னைச் சந்திக்காமல் காலம் கடத்துவது தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால் செல்வதாகவும், கற்றறிந்த புலவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு.
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே
எனக் கூறுகிறாள். அதன் பிறகே அதியமான் உடனே அவளை நேரில் சந்தித்து வரவேற்று உபசரிப்பது மற்றும் நெல்லிக்கனி கொடுப்பது, அவனுக்காக அவள் தொண்டைமானிடம் போர் வேண்டாம் என தூது செல்வது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அதியமான்-ஔவையார் நட்பு தமிழைக் கற்றறிந்த அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்று. அவன் இறந்த பிறகு அவள் பாடும் கையறு நிலை பாடல் அந்த நட்பின் மகத்துவத்திற்குச் சான்றாகப் போற்றப்படுகிறது.
அதியமானின் மகன் பொருட்டெழினிக்குக் கூட ஔவையார் அறிவுரை கூறும் பாடல்களும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த உண்மைகளையெல்லாம் ஒருவேளை சாரு நிவேதிதா தமிழ் இலக்கியத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ளாததினால் அறியாமல் இருக்கலாம். தமக்குத் தெரியாததினாலேயே வாய்க்கு வந்ததைத் தாறுமாறாக எழுதி ஞானச் செருக்கு மிக்க ஔவையாரையும் அதியமானின் கொடைத் தன்மையையும் புலவர்களிடம் அவன் கொண்ட பேரன்பையும் அவமதித்துள்ளார்.
பொதுவாகவே, அரிதாக சில மன்னர்கள் தவிர மற்ற மன்னர்கள் சிற்றரசர்கள், புலவர், பாணன், பாடினி, பொருநர், என அனைவரையும் மதித்துப் போற்றியுள்ளனர். கரிகால் பெருவளத்தான் பரிசிலும் கொடுத்து ஏழடி புலவர் பின்னே சென்று அவர்களை வழியனுப்பி வைத்ததாக சங்க இலக்கியத்தின் வழி அறிகிறோம்.
தம்மை நேரில் பார்க்காது யாரேனும் ஒரு மன்னன் பரிசளித்தால் அதை வாங்க மறுத்துள்ளனர் புலவர்கள். புறநானூற்றின் 208வது பாடல், நேரில் தன்னைச் சந்தித்து மனமுவந்து கொடுக்காத பரிசிலை ஏற்றுக்கொள்வதற்குத் தான் ஒன்றும் வாணிகப் பரிசிலன் அல்லேன் என பெருஞ்சித்திரனார் மறுப்பதாகச் சொல்கிறது.
எந்த பழந்தமிழ் மன்னனும் புலவரை, பொருநரை சிறையில் அடைத்ததாகவும் பாடல்கள் சொல்லவில்லை. புலவர்கள் சொல்லும் அறிவுரைகளைக் கூட ஏற்று அதன் வழி மன்னர்கள் நடந்ததாகப் பல பாடல்கள் பதிவு செய்துள்ளன. சங்கப் பாடல்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதற்கு வெவ்வேறு கோணங்களில் பொருள் கொள்ள முடியும். ஆனால், அடிப்படைப் பொருளையே மாற்றி தவறான ஒரு செய்தியைப் பரப்புவதற்குக் காரணம் சாரு நிவேதிதாவின் அறிவீனமா அல்லது தனக்கு எல்லாம் தெரியும், தான் என்ன சொன்னாலும் மற்றவர்கள் நம்பிவிடுவார்கள், அல்லது நம்பியே ஆகவேண்டும் என்ற அகம்பாவமா? இந்த இலட்சணத்தில் இவர் இன்றைய தலைமுறையினர் தமிழை வளர்க்க வேண்டும் என்றும் தமது கட்டுரைகளில் கூப்பாடு போடுகிறார். இப்படித் தவறான, பொய்யான தகவல்களை எழுதினால் இளம் தலைமுறை எப்படித் தமிழை வளர்க்கும்?
#அந்திமழை என்ற இதழை பல கல்லூரிகளில் கூட வாங்குகிறார்கள். சாரு நிவேதிதாவின் கட்டுரைகளை வெளியிடும்போது அதில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் நீக்கிவிட்டுப் பிரசுரித்தால் நல்லது. சாரு நிவேதிதாவும் தனக்குத் தெரியாததை மாற்றியும், திரித்தும் எழுதுவதை நிறுத்திக் கொண்டால் தமிழுக்கு நல்லது.
லேபிள்கள்:
ஔவையார்,
சங்க இலக்கியம்,
சாரு நிவேதிதா
வியாழன், 1 அக்டோபர், 2015
பெரியாரின் பெண்ணிய வெங்காயம்
வலம்புரி ஜான் என்ற பெயர் தமிழ் நாட்டில் பரவலாக அறியப்பட்ட ஒன்று. அரசியல்வாதி, மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சியில் உடல் நலக் குறிப்புக்கள் வழங்கிப் புகழ்பெற்றவர் என அவரைப் பற்றி ஏராளமாகச் சொல்லலாம். 1980களில் பல மேடைகளில் அவர் சொல்லும் வித்தியாசமான சின்னச் சின்ன கவிதைகள் கை தட்டலை அள்ளிச் செல்லும். காந்தி பற்றி ஒரு மாணவன் எழுதியதாய் அவர் சொன்ன கவிதை இன்றும் என் நினைவில் உள்ளது.
“வெங்காயமே, வெங்காயமே
நீயும் ஒரு காந்தியவாதிதான்
உரிக்க உரிக்கச் சும்மா இருந்துவிட்டு
உரித்த பின்பு உரித்தவனையே
அழ வைத்துவிடுகிறாயே!"
காந்தியின் அஹிம்சை வழிப் போராட்டத்தில் எதிரிகளே சோர்ந்துபோய் பின்வாங்கி விடுவார்கள் என்ற பொருளில் கூறப்பட்ட கவிதை இது. (இது கவிதையே இல்லை என்று யாரேனும் இலக்கியச் சண்டைக்குள் செல்ல விரும்பினால், அது அவரவர் விருப்பம்).
பெரியார் மிகப்பெரும் சீர்திருத்தவாதி, வைக்கம் வீரர், ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட இயக்கம் கண்டவர், சிந்தனையாளர், மிகப்பெரும் பெண்ணியவாதி என்றெல்லாம் போற்றப்படுபவர். குறிப்பாக பெண்ணிய சிந்தனை பேசும் திராவிட இயக்கப் பின்னணியில் வந்த சில பெண் கவிஞர்களும் சிந்தனாவாதிகளும் தங்களுக்குப் புதிய தரிசனம் கிடைத்தது 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற அவருடைய புத்தகத்தில்தான் எனப் பெருமை பேசுவதைக் கவனித்திருக்கிறோம். ஆனால், பெண்ணை அடிமையாகவே சிந்திப்பதும், வெறும் உடலாகவும், ஆண் அனுபவிக்கக் கூடிய உடைமைப் பொருளாகவும் அல்லது போகப் பொருளாகவும் சிந்திக்கின்ற வழக்கமான ஆண் மனது பெரியாருக்கும் கூட இருந்திருக்கிறது என்பதை அவரது கட்டுரைகளில் நாம் காண முடிகிறது.
பெண்ணுக்குச் சொத்துரிமை உண்டு. பெண்ணுக்குக் கற்பு தேவையில்லை. பாலுறவில் அவளுக்கு சுதந்திரம் வேண்டும். அவளை அடிமைப் படுத்துகின்ற கர்ப்பப் பையை அவள் அகற்றிவிடலாம் என்ற பெரியாரின் போதனைகள் பெண்ணிய சிந்தனையில் ஒரு பெரிய புரட்சி என்று அவர் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர் பலரும் பேசுகிறார்கள். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பெண்ணின் உள்ளாடைகளை எரித்து எங்களுக்கு விடுதலை வேண்டும் எனப் பெண்கள் போராடி ஆண்களை அதிர்ச்சியடையச் செய்தது போன்ற ஓர் அதிர்ச்சி வைத்தியம் போலதான் பெரியாரின் பெண்ணிய முழக்கமும். உள்ளாடை எரிப்பு என்பது ஒரு அடையாளமேயன்றி ஆண்-பெண் சமத்துவத்தில் அதற்கான வழிமுறைகளில் என்ன பங்கு வகிக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டதும் உண்டு.
பெண்ணியம் என்பது ஒரு பெண் ஆணாக மாறுவது அல்ல. பெண், தனக்குரிய இயல்பான சுதந்திரத்தோடு ஆணுக்குத் துணையாக மட்டுமல்லாமல், இணையாக வாழ்வது. பெண்கள் வெறும் உடலாகவும், உயிரை உற்பத்தி செய்யும் கருப்பையாக மட்டுமே பொதுவாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், கருப்பையை வெட்டி எடுப்பதால் மட்டும் சுதந்திரமும் உரிமைகளும் கிடைத்துவிடுமா? இது ஆணாதிக்கம் புரையோடிப்போன சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சி வைத்தியம். அதாவது இந்து மதத்தின் சில ஒவ்வாத சடங்குகளை, சம்பிரதாயங்களை, சாதியப் பாகுபாடுகளை எதிர்ப்பதற்காக அம்மதத்தின் கடவுள் சிலைகளையே செருப்பால் அடித்து, செருப்பு மாலை போட்டு, “இதோ பார், எனது கடவுள் மறுப்பு கொள்கையை!” என்ற பெரியாரின் நாத்திகச் சிந்தனை போன்றதுதான் அவருடைய பெண்ணியமும்.
அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே என்று வாதிட்டாலும், அவரே அதில் முரண்பட்டு நிற்கிறார் எனும்போது, அவர் உரக்கச் சொல்லிய கொள்கைகளில் நேர்மையும் சத்தியமும் இல்லை என்றுதானே பொருள்?”
கடவுள் மறுப்புக் கொள்கை பேசும்போது ஆரியக் கடவுள் என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களையும், இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான இராமாயண, மகாபாரதத்தையும் வகை தொகை இல்லாமல் வசை பாடுகிறார்!
ஒரு காவியம் அல்லது இலக்கியம் எழுதப்பட்ட காலச் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே ஆராயப்பட வேண்டும். அதிலும் மகா காவியங்களான இராமாயணமும் மகாபாரதமும் வெவ்வேறு காலகட்டத்தில் இந்தியாவிற்குள்ளும் இந்தியாவைக் கடந்தும் பேசப்பட்டு அந்தந்த ஊர் மக்களின் வாழ்வுச் சூழல், கலாச்சார, பண்பாடு, விழுமியங்கள் ஆகியவற்றை ஏற்று கலந்து பல்வேறு பரிமாணங்களைப் பெற்று இன்றளவும் காலத்தைக் கடந்து ஏற்றம் பெற்று நிற்கின்றன.
ஒரு கத்தோலிக்க கிறித்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதிலும் எங்கள் தந்தையால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பஞ்ச பாண்டவர் கதைகள், வாழ்வில் நீதியையும் நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்ற நியதியைக் கற்றுக் கொடுத்தன.
கம்பராமாயணம், பேரிலக்கியத்தின் தமிழ்ச் சுவையோடு சகோதரத்துவத்தையும், மனிதனாகும் கடவுளின் தத்துவத்தையும் சிவபக்தன் இராவணன் பிறன் மனை நோக்கியதால் பேராண்மை இழந்த இழிவையும் இளம் வயதில் நெஞ்சில் பதிய வைத்தது.
பதின்ம பருவம் கடந்து மார்க்சியத்தையும், பொதுவுடைமைத் தத்துவங்களையும் நீட்சேயையும் படித்தாலும் அவற்றின் சாராம்சங்களின் பின்னணியில் இந்த இரு பெரும் இதிகாசங்களை ஆராய்ந்தால் ஆய்வுக்குரிய, சர்ச்சைக்குரிய விஷயங்கள் மனதில் எழுந்தாலும் அதற்குரிய விடைகளும் இந்தக் காவியங்களிலேயே நாம் காணப் பெறுவோம்.
பெண்ணியம் பேசும் பலர் (குறிப்பாக இலக்கியவாதிகள்), சீதையை இராமன் அக்கினிப் பிரவேசம் செய்ய வைத்தான் என்றும் திரௌபதி ஐந்து கணவர்களோடு வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டாள்; இது தகுமா? என்றும் கேள்விகள் எழுப்புவது வழக்கம். அந்த இதிகாசங்கள் முழுமையையும் ஆழ்ந்து படிக்காமல் மானுட உணர்வுகளை மனப் போராட்டங்களை, அவலங்களை, அந்தச் சமூக சூழலின் பின்னணியோடு இணைத்துப் பார்க்காமல் முன் வைக்கப்படும் இந்த வறட்டு வாதங்களைக் கூட கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிடலாம். ஆனால், பெண்ணுக்குக் கற்பு தேவையில்லை என்று பேசிய அதே பெரியார், சீதை கற்போடு இருந்தாளா? எனவும், ஐந்து கணவர்களோடு வாழ்ந்த திரௌபதி பத்தினியாக முடியுமா? எனவும் மலிவான கேள்விகளை முன் வைத்ததும், இவர்கள் ஆண்களால் 'அனுபவிக்கப்பட்டார்கள்' என்று இழிவான சொற்களால் ஏளனப்படுத்துவதும், பெண்ணிய சிந்தனைவாதி எனப் பாராட்டப்படும் ஒருவரின் பகுத்தறிவுத் தளத்திலிருந்து எண்ணத்திலிருந்து உருவான அலங்கோல மலினம் அல்லாமல் வேறென்ன?
ஒரு சிறு உதாரணம்: சித்திர புத்திரன் என்ற பெயரில் குடியரசு இதழில் 08-03-1936-இல் பெரியார் எழுதிய கட்டுரை பெண்ணைப் பற்றி ஆபாச சிந்தனைகளை விதைக்கும் ஒரு மஞ்சள் பத்திரிகை அளவுக்கு மலினமான வார்த்தைகளாலும் கருத்துகளாலும் பரப்பப்பட்டிருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அம்மதம் தொடர்பான கதைகளில் இடம்பெறும் பெண்களை, இவள் கற்பிழந்தவள், சீதை இராமனுடன் விரும்பிச் சென்றாள் என்று எழுதுவதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. சீதை கற்பு நெறி தவறியவள் என்பதைத் தான் நிறுவியே ஆகவேண்டும் என்பதற்காக ஒரு படி மேலே போய், “சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையை கற்பிப்பதற்கு ஆக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள். இந்தப் பெருமையைப் பற்றியும் கதையில் வால்மீகி ஜாடை மாடையாய் காட்டி இருப்பதுபற்றியும் நமக்கு இப்போது தகறார் இல்லை. ஆனால் கதையின் தத்துவப்படி மூலகாரணப்படி சீதை கற்புடையவளாக இருந்திருக்க முடியுமா என்பதுதான் கேள்வியாகும்.” என வாதிடுகிறார்!
பெண்ணுரிமை பேண விரும்பும் எவரும் இப்படி எழுதுவதற்கோ, பேசுவதற்கோ வாய்ப்பில்லை. ஒரு உக்கிரமான போரில் வெற்றி பெற்ற பிறகு தோல்வியுற்றவர்களின் பெண்களை வேட்டையாடும் வெற்றி பெற்றவர்கள் போல ஒரு தாக்குதலை பெரியார் சீதை மேல் நிகழ்த்துகிறார். கடவுளை நம்புவதும், ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் அவரவர் விருப்பம். கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் அநியாயங்கள் இழைக்கப்பட்டால் அவை கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டுமே தவிர, அம்மதம் தெய்வங்களாகக் கொண்டாடும் பெண்களை குறைந்த பட்சம் நாகரீகம் கூட இல்லாமல் தாக்குவது பெண்ணியத்தின் ஒரு அங்கம் ஆகுமா?
பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம் என்று மார் தட்டிக்கொள்ளும் சிலரும் இந்த மலினமான வேலையைச் செய்கிறார்கள். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தின்போது ஃபிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழச்சி என்ற சகோதரி, தனது முகநூலில் எழுதியிருந்த பதிவு பலரைப் பதறச் செய்தது, சிலரை முகம் சுளிக்கச் செய்தது. கன்னி மரியாள் என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் மரியாள் வீதியில் நடந்துசென்றபோது இராணுவ வீரன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதன் விளைவாகவே இயேசு பிறந்ததாகவும் வெகு ஏளனமான மொழிநடையில் பதிவிட்டிருந்தார். அதற்குச் சில நூல் ஆதாரங்களையும் குறிப்பிட்டிருந்தார். யூதர்களின் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களை அறிவதற்கும் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை அறிந்துகொள்வதற்கும் உதவியாக இருக்கும் பைபிள், கிறித்தவ மக்களால் புனித நூலாகக் கருதப்படுகிறது. ஆனால், பலரால் எழுதப்பட்ட ஏடுகளில் கிடைக்கப்பெற்ற சில ஏடுகளிலும் கிறித்தவம் ஆராய்ந்து பார்த்து வெகு சிலவற்றை ஏற்றுக்கொண்டு மற்றவற்றைப் புறந்தள்ளிவிட்டது. அப்படிச் சில ஏடுகளை எடுத்துக்கொண்டு ஆதாரமின்றி அம்மதத்தின் போற்றப்படும் பெண்ணை மட்டும், அதிலும் அவள் கற்பு நெறி தவறியவள் என்று சேற்றை வாரி இறைப்பதுதான் பெரியார் வழிப் பெண்ணிய சிந்தனையா?
நான் முதுகலை முதலாம் ஆண்டு படித்தபோது, உடன் பயின்ற மாணவர் திருமந்திரம் நடத்திக்கொண்டிருந்த பாதிரியாரிடம் திடீரென்று ஒரு கேள்வி எழுப்பினார். பைபிளில் கிறிஸ்து பிறக்கும் வரை அவர் (அதாவது இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஜோசப்) அவளை (அதாவது இயேசுவின் தாய் மரியாள்) அறியாதிருந்தார் என்று எழுதப்பட்டுள்ளதே. அப்படியென்றால் அதன் பிறகு என்ன நடந்தது? எனக் கேட்டார். பல மொழி புலமை கொண்ட பாதிரியார் பொறுமையாகப் பதிலளித்தார்.
கிரேக்க மொழியில் வாக்கிய அமைப்பு இவ்வாறே இருக்கும். அது அந்த மொழியின் தனித்தன்மையே அன்றி அதுவரையில் அறியாதிருந்தார் என்றால் அதன் பிறகு அறிந்தார் என்பது பொருளல்ல என்ற விளக்கம் அறிவு பூர்வமானதாக இருந்ததோடு எந்த இலக்கியமோ, மதமோ, மதம் தொடர்பான புத்தகங்களோ, எழுதப்பட்ட மொழியின் இலக்கணத் தன்மையோடு வாசித்து அறியப்பட வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தியது.
பைபிளில் சில இடங்களில் திடீரென்று இயேசு பெத்தானியாவிற்குச் சென்றார் எனச் சொல்லப்படும். பெத்தானியா என்ற ஊருக்குள் ஒருவன் பிரவேசித்துவிட்டால் அவன் அங்கிருந்து வெளியேறும் வரையில் கைது செய்யப்படக் கூடாது என்ற நடைமுறை அன்றைய யூதர் காலத்தில் இருந்துள்ளது. இந்தப் பின்புலம் தெரிந்தால் மட்டுமே அக்குறிப்பிட்ட நேரத்தில் இயேசு பெத்தானியாவிற்கு ஏன் சென்றார் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
எனவே, ஒரு இலக்கியமோ, மதம் சார்ந்த இதிகாசமோ படிக்கப்படும்பொழுது, அது எழுதப்பட்ட மொழி, அதன் இலக்கணம், எழுதப்பட்ட காலம், அப்பொழுது நிலவிய அரசியல் பண்பாட்டுச் சூழல் போன்ற அம்சங்களைக் கணக்கில் கொண்டே வாசிக்கவும் ஆராயவும் வேண்டும். அதைவிடுத்து மேம்போக்காக தான் உருவாக்கிக் கொண்ட ஒரு பிம்பத்திற்கு உண்மை உருவம் கொடுப்பதும்ஆங்காங்கே தகவல்களையும், வார்த்தைகளையும் உருவி எடுத்துப் பொருள் கொள்ளுவதும் பெண்ணிய சிந்தனாவாதியாகப் பேசிவிட்டு பெண்களையே, அதுவும் தானே ஏற்றுக்கொள்ளாத கற்பு நெறி சார்ந்து தாக்குவதும் எந்த வகையில் நியாயம் ஆகும்?
பெரியார் பல சமூக சீர்திருத்தங்களை தான் வாழ்ந்த காலத்தில் முன்னெடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவர் எழுதிய இதுபோன்ற கட்டுரைகள் அவர் உதிர்த்த பெண்ணிய கருத்துகளுக்கு முரணானவை மட்டுமல்ல, எதிரிடையானவை. உரிக்க உரிக்கச் சும்மா இருந்துவிட்டு உரித்த பின்பு உரித்தவனையே அழ விடும் வெங்காயம் போல, பெரியாரின் பெண்ணிய வெங்காயம் உரித்து, உரித்துப் பார்த்தாலும், இது தானா பெரியாரின் பெண்ணியம் என்று கடைசியில் நெஞ்சிலும் கண்ணிலும் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.
~~~~~
புதன், 30 செப்டம்பர், 2015
தேவை கண்ணீர் சிந்தும் கடவுள் அல்ல! சுதர்சனச் சக்கரம் ஏந்தும் கிருஷ்ணனே!
கத்தோலிக்கத்
திருச்சபையின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால்... ஆராயவே வேண்டியதில்லை, மேலோட்டமாகப்
படித்தாலே அதன் ஊழல் படிந்த
கோர முகமும் அறிவியலுக்கு எதிரான
வறட்டு ஆன்மீகத்தின் கொலை முகமும் நமக்கு
பட்டவர்த்தனமாக விளங்கும். நிறுவன மயமாக்கப்பட்ட கத்தோலிக்கத்
திருச்சபையில்தான் பணம் கொடுத்தால் பாவ
மன்னிப்பு உண்டு என்றும் போப்
அவர்களின் முடி அல்லது நகத்தை
விலை கொடுத்து வாங்கினாலே சொர்க்கத்துக்குப் போய்விடலாம் என்ற வியாபாரமும் நடைபெற்றது.
இன்று ரோமாபுரியில் கன கம்பீரமாக எழுந்து
நிற்கும் செயின்ட் பீட்டர்ஸ் கதீட்ரலை கட்டுவதற்காக ஒரு போப் போனிஃபஸின்
தலை முடி கத்தரித்து விற்கப்பட்டதில்
அவர் மொட்டையாகிப் போன கதையும் ஐரோப்பிய
வரலாற்றில் உண்டு. Pope is both spiritual
and temporal head என்று மேற்கு உலக நாடுகளின்
மன்னர்களே தாள்பணிந்து நின்ற ராசாதி ராச
ராச கம்பீர போப் ஆண்டவர்கள்
ஆற்றிய அளப்பரிய செயல்கள் புல்லரிக்கச் செய்பவை.
ஒரே
நேரத்தில் மூன்று போப்புகள் இருந்ததாகவும்,
இறந்து மண்ணுக்குள் சென்ற ஒரு போப்பின்
உடலை வெளியே எடுத்து அவருக்குப்
பின்னே வந்த போப், 'I excommunicate you', அதாவது உன்னைத் திருச்சபையிலிருந்து
விலக்கி வைக்கிறேன் என்று சபித்ததாகவும் வரலாறுகள்
உண்டு.
ஆனால்,
இந்த அலங்கோலங்களினால் கத்தோலிக்கத் திருச்சபையின் உலகளாவிய அதிகாரம் ஒடுக்கப்பட்டதும் நல்லதே. கத்தோலிக்கத் திருச்சபையிலும்
பெரும் அறிவு ஜீவிகள் என்று
பெருமை பாராட்டும் இயேசு சபையினரும் ஒரு
குறிப்பிட்ட காலத்தில் முடக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், மீண்டும் செயல்பட
அனுமதிக்கப்பட்டு அதையும் இப்பொழுது கொண்டாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
விஷயம்
அதுவல்ல. அது முக்கியத்துவம் வாய்ந்ததும்
அல்ல. அந்த சபையைச் சேர்ந்த
தற்போதைய போப் ஃபிரான்சிஸ், சமீபத்தில்
செய்த அமெரிக்க விஜயம் பற்றியது.
இதற்கு
முன்பு இரண்டாம் ஜான் பால் பல
நாடுகளுக்கும் பயணம் செய்தபோது அமைதிப்
புறாவாகவே பார்க்கப்பட்டார். போற்றவும்பட்டார். முந்தைய காலங்களில் உலகம்
உருண்டை என்று சொன்ன கலிலேயோவை
எரித்ததற்காகவும் யூதர்கள் கொத்து கொத்தாக கொன்று
குவிக்கப்பட்டபோது முகம் திருப்பிக் கொண்டதற்காகவும்
கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் பகிரங்க மன்னிப்புக் கேட்டார்
அவர்.
ஆனால்,
இயேசு சபை 'எங்கள் குரு'
என்று பெருமைபட்டுக் கொள்ளும் தற்போதைய போப் ஃபிரான்சிஸ், நியூயார்க்,
ஃபிலடெல்ஃபியா போன்ற ஊர்களுக்குப் பயணம்
சென்றிருந்தபோது 1980களில் கத்தோலிக்கத் திருச்சபையின்
பாதிரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட
ஆண், பெண், குறிப்பாக சிறுவர்
சிறுமிகளைச் சந்தித்தபோது கூறிய வார்த்தைகள் கடும்
கண்டனத்திற்குரியவை.
அவர்களிடம்,
'கடவுள் உங்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்' என்று
சொல்லிய போப், பொதுவான கூட்டத்தில் அவர்களைச்
சந்திக்காமல், தனியாக சந்தித்ததில் தங்களுக்கு
உடன்பாடு இல்லை என அமெரிக்காவில்
பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
மோசமான
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தைகளைப் பார்த்து
'கடவுள் உங்களுக்காக கண்ணீர் சிந்துகிறார்' என்று
மனசாட்சியே இல்லாமல் சொல்லப்பட்ட வார்த்தைகளில் தெரியும் பசப்புத் தன்மை எரிச்சலைத் தருகிறது. அவர்கள்
அந்த கொடுமைக்கு உள்ளான காலத்தில் அதற்குக்
காரணமான பாதிரிகளை பணியிட மாற்றம் செய்து
அதுதான் தண்டனை எனப் பரைசாற்றிக்கொண்டது.
ஆனால், அமெரிக்க அரசாங்கமோ அவர்களை சிறைக்கு அனுப்பி
நேர்மையாய் நடந்துகொண்டது. ஏறக்குறைய ஒரு லட்சம் குழந்தைகள் கத்தோலிக்க தேவாலய பாதிரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பிறகு, அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ளிய பிறகு இனியும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை ஒளித்து வைக்கத் தேவையில்லை என்று ஒப்புக்குச் சொல்லியிருக்கும் போப் ஃபிரான்சிஸ் இதற்கு முன்னால் காப்பாற்றப்பட்ட பாதிரிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவதில் தீவிரம் காட்டுவாரா?
பாதிப்பிற்குள்ளான
குழந்தைகளிடம் ஆறுதல்
கூறுகிறேன் என்ற பெயரில் இதைவிட மோசமாக யாரும்
பேச முடியாது. குற்றவாளிக்குத் தண்டனை தராத கடவுள்
கண்ணீர் விடுவதால் என்ன பயன்? பாதிக்கப்பட்டவனுக்குக்
கிடைக்கும் நிவாரணம்தான் என்ன? கடவுளின் நீதி
என்பது இதுவல்லவே!
இரண்டாம்
ஜான் பாலிடம் வெளிப்பட்ட அந்த
நேசம் நிறைந்த நேர்மை இயேசு
சபையைச் சேர்ந்த போப் ஃபிரான்சிசுக்கு
இல்லாமல் போனது ஏன்?
இந்தியாவிலும்
கூட இப்போது கிறிஸ்தவத்திற்கு எதிரான
பரப்புரைகள் பல நடந்துவருகின்றன. ஆனால்
அவ்வாறு செய்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் தாக்க
வேண்டியதும், தரை மட்டமாக்க வேண்டியதும்
பெரும் வணிகமயமாகிவிட்ட நிறுவனங்கள் (கல்வி நிறுவனங்கள் உட்பட)
நடத்துபவர்களும், எளியவர்களுக்கு எந்த வகையிலும் ஆதரவாகவும்
ஆறுதலாகவும் இல்லாத, சாதியத்தையும், இன
வெறியையும் தூக்கிப் பிடிக்கும் சில கத்தோலிக்க சபைகளையே
என்பதை ஏனோ அவர்கள் கணக்கில்
கொள்ளவில்லை.
இயேசு
ஒருவரே வழி என்று முச்சந்தியில்
நின்று அறைகூவினாலும், பல பெந்தேகோஸ்தே சபைகள்
வணிக நோக்கில் செயல்படுவதில்லை. மிக மிக எளிய
பின்புலத்தில் இருந்து செல்லும் மக்கள்
இந்த ஆலயங்களுக்குச் செல்லும்பொழுது ஏதோ ஒரு விதத்தில்
மன ஆறுதலும் நிறைவும் அடைகிறார்கள். பாவம் செய்வது தவறு என்று நல்வழியாவது திரும்பத் திரும்ப அங்கு கற்பிக்கப்படுகிறது.
காலம்
காலமாக வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பைபிள் இதுபோன்ற பெந்தேகோஸ்தே
சபைகளில் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அர்த்தம் செய்துகொள்ளப்பட்டு வேத வாக்காகப் பறைசாற்றப்படுகின்றன
என்ற குறை இருந்தாலும் தன்னை
நாடி வரும் எளிய மக்களின்
மேல் ஏறி மிதித்து தலைக்கனம்
கொண்டு திரிவதில்லை அச்சபையினர்.
அடிப்படைத்
தேவைகளான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை
அதிகார கூடங்களாகக் கையில் வைத்திருக்கும் சில
கத்தோலிக்க சபைகள் இயேசு அன்று
எடுத்த சாட்டையால் அடித்துத் துவைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களே தங்கள் நிறுவனங்களில்
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல கொடுமைகளையும் நிகழ்த்திவிட்டு
கடவுள் உங்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறார். குற்றவாளியைக்
காப்பாற்றியே தீருவோம் என கயமைத்தனத்தின் உச்சமாகத்
திகழ்பவர்கள். இப்படிப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கு தன்னையே காப்பாற்றிக் கொள்ள
முடியாதவர் என்று பரிகாசம் செய்யப்பட்ட
சிலுவையில் தொங்கும் இயேசு கையறு நிலைக்
கடவுளாகப் போய்விட்டார் என்றால் கையில் சுதர்சனச்
சக்கரம் ஏந்திய கிருஷ்ணனே இன்றைய
தேவை.
பாவம்
இயேசு கிறிஸ்து! பகைவனுக்கு அருள்வாய் நன்னஞ்சே என்ற தமிழரின் மகத்தான
உணர்வை மண்ணுக்குள் விதைத்த மகான் அவர்.
ஆனால் அதிகார மமதையில் எளியவரைப்
பார்த்து கடவுள் உங்களுக்காக கண்ணீர்
வடிக்கிறார் என்று சொல்லும் பாசாங்குக்காரர்களிடம்
மாட்டிக்கொண்டு தவிக்கிறார். மீட்பரே தன்னை இவர்களிடமிருந்து
மீட்டுக்கொள்வது எப்போதோ?
புதன், 23 செப்டம்பர், 2015
'யாதுமாகி ' பெண் எனும் ஆளுமையின் நாவல்
பேராசிரியை எம்.ஏ.சுசீலா அவர்களின் யாதுமாகி என்ற நாவலைப் படித்து [வாசிக்கவில்லை, படித்தேன்.] முடித்த போது மனம் கனமானதொரு ஆழ்ந்த நிசப்தத்தில் ஆழ்ந்து போனது .குழந்தை மணமும் பால் மணம் மாறாத சிறுமியரின் கையறு கைம்பெண் நிலையும் சரித்திரப் புத்தகத்தின் நீண்ட பக்கங்களில் வந்து கடந்து போன சில வரிகளாகவே பலருக்கும் நினைவிருக்கும் .அல்லது தேர்வுக்குப் படித்து, பரீட்சையோடு மறந்து போன பழைய செய்தியாகவும் இருக்கும் . ஆனால் 'யாதுமாகி' அன்று பால்ய விவாகத்தில் வாழ்க்கையினைத் தொலைத்து தனித்த அடர் இருட்டில் அமிழ்ந்து போன பெண்களின் அவலக் குரலால் நெஞ்சில் ஓங்கி அறைகிறது.
தமிழ் நாவல்களின் முன்னோடிகளான அ.மாதவையா எழுதிய ‘கிளாரிந்தா’ என்ற நாவல், உடன்கட்டை ஏறுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட இளம் கைம்பெண்ணின் மறு பிறவி போல் அமைந்த புதிய வாழ்வுக் கதையை, கலை நுணுக்கத்துடன் சொல்லிய நாவல்.
வரலாற்று ஆதாரங்களைத் தேடும்போது சில ஆவணங்களில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் பத்மாவதி என்றும், வேறு சில இடங்களில் கோகிலா என்றும் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண நேரிடுகிறது. பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ வேதம் பரப்பும் பணியை முதன்முதலில் முன்னெடுத்துச் சென்ற அந்தப் பெண்ணைப் பற்றிய செய்திகளும் கூட முழுமையாக தென்னிந்திய திருச்சபை ஆவணங்களில் இடம்பெறவில்லை. ‘சதி’ என்ற கொடும் நெருப்புப் பசிக்கு ஆளாக இருந்த தன்னைக் காப்பாற்றிய ஆங்கிலேய அதிகாரியுடன் சேர்ந்து வாழுகின்ற அந்தப் பெண் நீண்ட பயணம் மேற்கொண்டு தஞ்சாவூர் சென்று கிறிஸ்தவ போதகரிடம் (missionary) தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்கிறார்.
முறையான திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கை நடத்தும் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு கிறிஸ்தவச் சட்டத்தில் இடமில்லை என்று மறுக்கப்படுகிறது. அதே போதகர் சில வருடங்களுக்குப் பிறகு பாளையங்கோட்டை சென்ற வேளையில் அப்பிராமணப் பெண் மீண்டும் அவரிடம் தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி மன்றாடுகிறாள். எந்த மறுப்பும் இல்லாமல் அவரது விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. ஏனென்றால், ஆங்கில அதிகாரி இறந்துவிட்ட நிலையில் இப்போது அந்தப் பெண் ஒரு கைம்பெண்!
மிகக் குறைவான முக்கியத்துவத்துடன், தென்னிந்திய திருச்சபை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த கிளாரிந்தாவின் வாழ்க்கையை, அவள் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தேடி திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இலக்கிய நயத்துடன் நாவல் வடிவில் தந்திருக்கிறார் அ.மாதவையா.
எம்.ஏ.சுசீலா அவர்களின் ‘யாதுமாகி’ நாவலைப் பற்றி எழுதத் தொடங்கிவிட்டு, அ.மாதவையாவின் கிளாரிந்தாவைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன என்று வாசிப்பவர்கள் யோசிக்கக் கூடும். அந்தக் காலகட்டத்தில் பெண்கள், குறிப்பாக பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பால்ய விவாகம் செய்து கொடுக்கப்படுவதும், விவரம் புரியும் முன்பே சரியாக முகம் பார்த்திராத விளையாட்டுக் கணவனின் மரணத்தால் விதவையாகிப் போவதும், வீட்டின் இருட்டறையில் முடங்கிப் போய் தன் குழந்தமையை, இளமையை, வாழ்வின் இன்பங்களை, ஏன்? தன்னையே தொலைத்துவிடுவதுமாய் அவலத்திற்கு ஆளாகிப் போவது மிகச் சாதாரணமாக நடந்துள்ளது! இந்த அகோரம் அரசாங்கத்தின் புள்ளி விவரக் கணக்குகளில் உணர்ச்சிகளற்ற வெறும் எண்ணிக்கையாய் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
‘யாதுமாகி’ நாவலில் இடம்பெறும் தேவி, குழந்தை மணம் செய்து கொடுக்கப்பட்டு கடல் அலைகளுக்குப் பலியான கணவனின் மனதில் பதியாத முகம் பற்றியோ, எண்ணங்கள் பற்றியோ, சூட்டப்பட்டு பிறகு பறிக்கப்பட்ட மாலை பற்றியோ எந்த சிந்தனையும் அற்றவளாய், அல்லது அதைப் பற்றி எதுவும் தெரிந்திராத அபலைக் குழந்தையாய் எதிர்காலக் கேள்விக்குறியில் சுருண்டு போனாலும் தவித்துப்போனாலும், கல்வி கற்க வேண்டும் என்ற தீராத தாகத்தில் மீண்டும் எழுந்துகொள்கிறாள்.
தன் தாயுடைய நிர்ப்பந்தத்திற்காக, படிப்பில் பிரகாசமாய் விளங்கிய தன் சின்னஞ்சிறு மகளை பால்ய விவாகத்தில் கைம்பெண் ஆக்கிய சாம்பசிவம், பிராயச்சித்தமாக தன் பெண்ணைப் படிக்க வைக்கிறார். கடந்துபோன நெருப்புச் சுவடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னே மட்டும் பார்வையைப் பதித்து கல்வியைத் துடுப்பாய் பற்றிக்கொண்டு தொடர்ந்து பயணம் செய்யும் தேவி தன் வாழ்வில் இடையறாது எதிர்கொள்ளும் இன்னல்கள், பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், அத்தனையையும் சமாளித்துக் கரையேறுவதுடன், பல தளங்களில் வாழும் பெண்களுக்கும் கலங்கரைவிளக்கமாய் உயர்ந்து நிற்கிறாள்.
கிளாரிந்தா புதினத்திற்கும் யாதுமாகிக்கும் இடையே ஒரு சிறு தொடர்பு வந்துபோகிறது. மாதவையாவின் நாவலிலும் பிராமணக் குடும்பத்து கைம்பெண்ணே நாயகி ஆகிறாள். யாதுமாகியிலும் அதே பிராமணக் குடும்பத்துப் பெண்தான் கதையின் நாயகி. முன்னவரது படைப்பில் திருமணம் பற்றிய புரிதல் கொண்ட இளம் பெண் கைம்பெண் ஆகிறாள். இங்கோ, குழந்தைத் திருமணத்தில் அது பற்றிய எந்தப் புரிதலுமற்ற சிறுமி விதவையாகிறாள். எதிர்பாராத விதமாக உடன்கட்டை ஏறுவதிலிருந்து ஆங்கிலேய அதிகாரியால் காப்பாற்றப்படுகின்ற கிளாரிந்தா, அந்த அதிகாரியின் உதவியால் ஆங்கிலக் கல்வி கற்பதுடன் கிறிஸ்தவ மதம் பற்றியும் அறிந்துகொண்டு அந்த மதத்தின் வழியாகவே சமூகத்திற்குப் பணியாற்ற விரும்புகிறாள். முதலில் மறுக்கப்பட்டு மீண்டும் உறவாக இருந்த ஆங்கில அதிகாரியின் மரணத்திற்குப் பிறகு தன்னை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவத்திற்குள் ஐக்கியமாகி மதம் பரப்பும் பணியோடு சமூகப் பணியும் செய்கிறாள்.
'யாதுமாகி'யில் கல்வி கற்று ஆசிரியப் பணிக்குச் செல்லும் தேவி, ஒரு கட்டத்தில் தன்னை விலக்கி வைக்கும் அல்லது தன்னிடமிருந்து விலகிச் செல்லும் உறவுகளால் வாழ்வில் வெறுப்புற்று தான் தனியாக்கப்பட்டதாய் வேதனையுறுகிறாள். அவ்வேளையில் தானும் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து கன்னியாஸ்திரியாக மாறி கல்விப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையினைத் தான் பணியாற்றும் கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக இருக்கும் கன்னியாஸ்திரியிடம் தெரிவிக்கிறாள். அவரோ அதைச் சற்றும் கண்டுகொள்ளாமல் தேவியையும், அவளது தோழி சில்வியாவையும் காரைக்குடியில் இருக்கும் வேறொரு பள்ளிக்குச் சென்று பணியாற்றுமாறு அனுப்பி வைக்கிறார்.
வழக்கமாக, கண்ணில் தட்டுப் படும் ஆறு ,எரி, குளம் குட்டை என்று நீர்நிலை எங்கும் மீன் பிடிக்க அலையும் மீன்காரர் போல கிறிஸ்தவ மதத்திற்குள் ஆட்களை இழுக்கவும் கிறிஸ்தவ மதமே மோட்சத்தின் மார்க்கம் பிற மதங்களும் கடவுளர்களும் சாத்தானின் பிறப்பிடங்கள் அல்லது உறைவிடங்கள் {சாத்தான் என்று இவர்கள் எதனைச் சொல்கிறார்கள் என்று பல வருடங்களாக மண்டைக்குள் குடைச்சல் .கான்வென்டில் படித்த போது இந்துக் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் படைக்கப் பட்ட சர்க்கரைப் பொங்கல் ,கொழுக்கட்டை மாவிளக்கு போன்றவற்றை வாயில் வைத்து விட்டாலே நரகம் என்று பயமுறுத்தித் தவிக்கச் செய்த வெள்ளை அங்கி கன்னியாஸ்திரிகளும் சாத்தான் பற்றிச் சொன்ன கட்டிலடங்காக் கதைகள் எந்த யூகத்தையும் தரவில்லை} என்று பிரச்சாரம் செய்வதற்கு ஆண் பெண் போதகர்களைக் கண்டு பிடிக்கவும் பேயாய் அலையும் கிறிஸ்தவம், அந்த ஒப்பற்ற? பணிக்குத் தன்னை அர்ப்பணிக்க வரும் ஒரு இளம் பெண்ணை நிராகரிப்பது முதல் வாசிப்பில் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது .தேவியின் தோழி சில்வியாவும் இதே கேள்வியினை எழுப்பும் போது பல வலுவான ஐயங்களைத் தோற்றுவிக்கிறது இங்குதான் அ.மாதவையாவின் கிளாரிந்தாவுடன் யாதுமாகி நாவலின் தேவியினை ஒப்பிட்டு நோக்க முடிகிறது.
கிறிஸ்தவ மதத்திற்கென்று பிரத்தியேக குணமுண்டு ..கால் பரப்பிச் செல்லும் திசையெங்கும் வேரூன்றத் தடையாயிருக்கும் அந்த மண் சார்ந்த எந்த நல்ல அம்சத்தையும் தயங்காது தடயமின்றி அழித்து விடும் .அதுவே ஒரு சமூகத்தின் மிகப் பெரும் தீமையென்றாலும் தான் நிலை பெற உதவும் என்றால் ஆரத் தழுவிக் கொள்ளும் ..உயர் குடியினர் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக் கொண்டாலோ போதகர்களாக உருமாறினாலோ. அதனையே கூவிக் கூவி விளம்பரம் செய்யும் கிறிஸ்தவம் பிராமணப் பெண்ணான கிளாரிந்தாவையும் தொடக்கத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு தென்னிந்திய திருச்சபைக்காக அதன் வளர்ச்சிக்காக அரும் பாடு பட்டதையும் கணக்கில் கொள்ளவில்லை. ஆவணங்களில் கிளாரிந்தா பற்றிய பதிவுகளும் பெரிதளவில் இடம் பெறவில்லை .யாதுமாகி தேவி கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப் படுத்தியதுமே உயர் குடிப் பெண்ணல்லவா என்று வளைத்துப் போடாமல் அசட்டை செய்வதன் நோக்கம் தான் என்ன? இரண்டு பேருமே அன்றைய சமூகத்தின் விளிம்பு நிலையினர் புறக்கணிக்கப் பட்ட கைம்பெண்கள்!
தேவி இளம் விதவைக்கான மையத்தில் தங்கிப் படித்தவள் என்பதைத் தெரிந்து கொண்டதும் சாருவின் கணவன் எப்படி இளக்காரமாகப் பார்க்கிறானோ அதே பார்வைதான்! தொழில் ரீதியான இனக்குழுக்களாக வாழ்ந்த சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் மேட்டுக்குடிப் பெண்களை விட உப்பு விற்ற உமணப் பெண்ணும் பருத்திப் பெண்டிரும் பாடினி குலத்தைக் சேர்ந்த பெண்களும் சுதந்திரமாக வாழ்ந்திருப்பதை இலக்கியங்களில் காண முடிகிறது. சாதீயப் பாகுபாடு மிகுந்த பிற்காலத் தமிழ்ச் சமூகத்திலும் பிறப்பால் உயர்குடிப் பெண்ணாக இருந்தோர் சாஸ்திரங்களின் பெயரால் முதுகில் பொதி சுமந்திருக்கிறார்கள் .வாழ்விக்க வந்ததாய் சொல்லிக் கொள்ளும் இறக்குமதி செய்யப் பட்ட கிறிஸ்தவ மதமும் அந்த நியதிகளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது என்ற உண்மையினை இந்த இரு நாவல்களிலும் காண முடிகிறது .
ஆசிரியர் எம் .ஏ .சுசீலா அவர் தம் நாவலில் விவரிக்கப் பட்டிருக்கும், இரவில் மலர்ந்து தன் நறுமணத்தின் மூலமாகவே தன் இருப்பையும் அதன் அழகையும் வெளிப்படுத்தும் நைட் குயின் பூக்கள் போலவே மிகப் பெரும் சோக நிகழ்வுகளையும் எந்த பிரச்சார நெடியும் இன்றி வெகு அனாயாசமாகச் சொல்லிச் செல்கிறார். "யாதுமாகி" பெண்களின் ஆளுமையின் அற்புத வெளிப்பாடு அது .துயரங்களையும், எதிர் பாராது வாழ்வில் குறுக்கிடும் அதிர்ச்சிகளையும் இலாவகமாகக் கடந்து செல்லும் தேவியும் சாருவும் பெண்கள் உணர்ச்சிகளின் உருவானவர்கள், ஆண்கள் அறிவின் அடையாளங்கள் போன்ற அசட்டுத்தனமான பொதுப் புத்தியினைப் பொய்யாக்கி அயராது நிமிர்ந்து நிற்கும் ஆளுமைகள்.
மதத்தின் பெயரால் நிறுவப்பட்ட மூட நம்பிக்கைகள் பெண்களுக்குப் பூட்டி விடும் கட்புலனாகாத விலங்குகளையும் அதிர்ந்து பேசாத மொழியில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதே நேரத்தில் தேவியின் மறுமணம் போராட்டங்கள் அற்றதாய் சுலபமான நிகழ்வாகச் சொல்லப் பட்டிருக்கிறது. சாரு மற்றும் தேவி அப்பிரச்சினைகளை இயல்பாக எதிர்கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குள் அல்லது கடமைக்குள் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள் .இது மற்ற பெண்களுக்கு விடுக்கப்படும் அறைகூவல் .காலத்தையும் கதையினையும் முன்னும் பின்னுமாக நகர்த்தி இருப்பதுடன் தெளிவான கதைப் போக்கில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
பெண் எழுத்து என்பது அவள் உடல் பற்றியும் அதன் பாலியல் வேட்கை பற்றியும் பேசுவது என்று சில பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதி வரும் நிலையில் அந்த மாய பிம்பத்தை நொறுக்கிப் போட்டிருக்கும் இந்த நாவலின் பெண்கள் தங்களை இறுக்கி மூச்சுத் திணற வைக்கும் சமூக, மத நம்பிக்கைகளை. அதன் ஆவேச முகத்தை மோதி விட்டு வெற்றிக் கொடியினைப் பற்றி எழுந்து நிற்கிறார்கள் .
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடுவது போல "யாதுமாகி" எம்.ஏ.சுசீலா அவர்கள் தம் அம்மாவுக்கு எழுப்பியிருக்கும் நினைவுச் சின்னம். ஏனென்றால் நினைவுச் சின்னங்கள் தனி மனிதரின் வாழ்க்கை, சாதனையின் அடையாளம் மட்டும் அல்ல. மற்றவர்களுக்குத் தூண்டுகோலாகும் திகழும் ஆவணம் ஆகும்.
பாளையங்கோட்டையில் கிளாரிந்தா ஆலயம் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களுக்கு உத்வேகம் தருவது போல யாதுமாகி உத்வேகம் தந்து பாதையும் காட்டுகிறது.

.
லேபிள்கள்:
எம் .ஏ சுசீலா,
கிளாரிந்தா,
யாதுமாகி,
ஜெயமோகன்
புதன், 29 ஜூலை, 2015
சங்கவை: சங்கவைக்குப் பரிசு!
சங்கவை: சங்கவைக்குப் பரிசு!: கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் நடத்தும் திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசுப் போட்டியில் பரிசுக்குரிய நாவலாக சங்கவை தேர்வு. ரூ.30,000 பரிசு...
வியாழன், 16 ஜூலை, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)