வியாழன், 30 அக்டோபர், 2014

என்றென்றும் ராஜம் கிருஷ்ணன்

மரணிக்காத எழுத்தும் இலக்கியமும் படைத்து தமிழுக்கும் பெண்மைக்கும் பெருமை சேர்த்த ராஜம் கிருஷ்ணன் மரணம் என்ற செய்தி ஏற்படுத்தியிருக்கும் கையறு நிலை, கண்ணீருக்குப் பதிலாக வெறுமையையும் நெஞ்சில் விதைக்கிறது. கற்பனையில் சஞ்சரித்துக் காதல், குடும்பம், உறவுகள், பிரிவுகள் என ஒரு சிறு வட்டத்திற்குள் புனை கதைகளைப் புனைந்து சொன்னவர் மத்தியில் சமூகத்தின் பல்வேறு அடித்தட்டு மக்களைப் பாத்திரங்களாக வார்த்து அவர்தம் வாழ்வையும் சூழலையும், அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் தம் இலகுவான மொழிநடையில் பதிவு செய்தவர் ராஜம் கிருஷ்ணன்.


நெய்தல் நில மக்களின் உப்புக்கரிக்கும் கண்ணீர் வாழ்க்கையை 'அலைவாய்க் கரையில்...' என்ற தம்முடைய நாவலில் அப்பரதவ மக்களின் மொழியிலேயே படைத்தவர்.

2013-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜோ டி குரூஸ் எழுதிய கொற்கை நாவல் அவரது முந்தைய நாவலான ஆழி சூழ் உலகு - இவை இரண்டும் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகளை அலைவாய்க் கரையில்... நாவலை விட்டுவிட்டு யோசிக்கமுடியாது.  இயற்கையின் மாபெரும் கொடையான கடலோடு அதன் அகன்ற திசைகளோடும் தம்மைப் பிணைத்துக்கொண்டு வாழும் கடற்புரத்து மக்களை, கிறிஸ்தவம், குறிப்பாக கத்தோலிக்க மதம் இயற்கையிலிருந்தும் அவர்தம் நிலத்துக்கே உரிய வழி வழியான தெய்வங்களிடமிருந்தும் துண்டித்ததோடு அவர்களது உழைப்பையும் சுரண்டிக் குப்புறத் தள்ளிவிட்டது என்ற உண்மையை அலைவாய்க் கரையில்... நாவலில் அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளார் ராஜம் கிருஷ்ணன்.

கடல் எனும் தாய் மடியில் கண்ணுறங்காது இன்னல்கள் பல கடந்து அலைகளின் துணைகொண்டே அலைகளை மீறிச் சென்று மீன் இனங்களை வாரி வரும் பரதவ இன மக்கள் இயல்பிலேயே சூது தெரியாதவர்கள். அதனால்தான் மீன்களிலிருந்து கிடைக்கும் துவி என்ற கழிவுப் பொருள் வெளிநாட்டில் எக்கச்சக்க விலைக்கு வாங்கப்படும் என்ற உண்மை அறியாது தேவாலயத்திற்கே அதனைக் கொடுத்துவிடுகிறார்கள். அதனை அங்கிருக்கும் கத்தோலிக்கச் சாமியார் ஏற்றுமதி செய்து கொழுத்த லாபம் சம்பாதிக்கிறார். இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை எதிர்விளைவுகள் பற்றிச் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாக, அதே நேரத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

குறிப்பிட்ட நாவலில் வரும் பரதவர் குலப் பெண்களின் உணர்வு, உறவுச் சிக்கல்கள், அவற்றைக் கடந்து வாழ்வை எதார்த்தமாக எதிர்கொள்ளும் அவர்களது மன முதிர்ச்சி மற்றும் சுதந்திரமான எண்ணங்கள் ஆகியவற்றையும் அவர்களுக்கிடையேயான உரையாடலின் துணை கொண்டு லாவகமாகச் சொல்லிச் செல்கிறார். கள ஆய்வு எழுத்தாளர் என்று பெயர் பெற்ற ராஜம் கிருஷ்ணன் பாத்திரங்களின் உரையாடலில் அந்தந்த நிலத்திற்கே உரிய பேச்சு வழக்கினைச் சர்வ சாதாரணமாகக் கையாண்டுள்ளார்.

பல்வேறு சமூகங்களை, குறிப்பாக விளிம்புநிலை, அடித்தட்டு மக்களை நேரடியாகச் சந்தித்து அம்மக்களுடனேயே அந்தந்த ஊர்களில் தங்கி, உரையாடி அவர்தம் பிரச்சினைகளை உள்வாங்கி உணர்வளவில் தாமே அவற்றை அனுபவித்து எழுதியதால்தான் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நாவல்கள் தனித்துவமும் பெரும் சிறப்பும் பெறுகின்றன.

உப்பளத்தில் வேகும் மக்களைப் பற்றிய வேருக்கு நீர், படகர் வாழ்வை மையமாகக் கொண்ட குறிஞ்சித் தேன், மற்றும் வளைக்கரம், கரிப்பு மணிகள் என அவரது படைப்புக்கள் அத்தனையும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடுவது போல சூரிய சந்திரர் காண உழைத்தாலும் விளைச்சல் நிலத்துக் களைகளாகவே சமுதாயத்தில் ஓரங்கட்டப்படும் விவசாயிகளின் வேதனையை சேற்றில் மனிதர்கள் புதினத்தில் கண் முன் கொண்டு வந்துள்ளார். உயிரோட்டமுள்ள அவரது எழுத்தில் இலங்கையின் மாணிக்க கங்கையும் இடம்பெறத் தவறவில்லை. சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள் பற்றி எழுதுவதற்காக அக்கொள்ளையர்களின் தலைவனையே சென்று சந்தித்துப் பேசி ஆராய்ந்து எழுதிய ராஜம் கிருஷ்ணனின் உளவியலைத் துணிச்சல் என்று சொல்வதா அல்லது புனைந்து சொல்லும் கதையில் கூட உண்மையான வாழ்வை அது கையாளும் நிஜக் கதாப்பாத்திரங்களோடு அவர்களின் போராட்டங்களோடும், கண்ணீரோடும், சிரிப்போடும் கடந்து செல்லும் பாதையை படம் வரைந்து காட்டுவதுபோல் எழுதும் ‘realistic writer’ என வியப்பதா?

பொதுவுடைமைச் சிந்தனையும் பெண்ணியமும் மேலோங்கி இருக்கும் ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்கள் பிரச்சார நெடியின்றி இலக்கியங்களுக்கே உரிய அழகியல் உணர்வு கொண்டு இலங்குவதோடு அற்புதமான வாசிப்பு இன்பத்தைத் தருகின்றன.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்றபோது பாடத்திட்டங்களில் வைக்கப்பட்டிருந்த புதினங்களில் ராஜம் கிருஷ்ணனின் நாவல் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் எங்கள் பேராசிரியர்கள் ‘syllabus-ஐ cover பண்ணுகிறோம்’ என்று குறுகிய வட்டத்திற்குள் நின்றுகொண்டு ஒருபோதும் எங்களுக்கு வகுப்பெடுத்ததில்லை. மாறாக எவ்வளவு தூரம் இலக்கியங்களை, அந்த வாசிப்பு அனுபவத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்தினார்கள். அந்த வகையில்தான் ராஜம் கிருஷ்ணனையும் அவர்தம் எழுத்துகக்களையும், மானுடத்தை மையமாகக் கொண்ட அதன் உன்னதத்தையும் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள். இதற்காக இத்தருணத்தில் என்னுடைய பேராசியர்களை நன்றியுடன் நான் எண்ணிப் பார்க்கிறேன்.

கடந்த ஆண்டு லொயோலா கல்லூரியின் முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கான ஆய்வேட்டுத் தலைப்புக்களைத் தேர்ந்தெடுக்கையில் ராஜம் கிருஷ்ணனின் படைப்புக்களை எடுத்துக்கொள்ளலாம் என்ற எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்ட மாணவி ராமசுதா அலைவாய்க் கரையில்... புதினத்தை ஆய்வுப் பொருளாகத் தேர்வு செய்தாள். கிறிஸ்தவர்களின் (குறிப்பாக கடலோர பரதவ கிறிஸ்தவர்களின்) வாழ்வை, அவர்தம் கலாச்சாரத்தைப் பற்றிய படைப்பினை முதன் முதலாக வாசித்ததாலோ என்னவோ புரிந்துகொள்வது கடினமாக இருப்பதாகவும், ஒருவித அந்நியத் தன்மை தெரிவதாகவும் அவள் சொல்லிக்கொண்டே இருந்தாள். இறக்குமதி செய்யப்பட்ட கிறிஸ்தவ மதத்தைப் போல அதைப் பின்பற்றுவதால் தங்களின் வழி வழியான பண்பாட்டுத் தளங்களிலிருந்தும் அந்நியப்பட்டு நிற்கும் மக்களின் வாழ்க்கையை வாசிப்பதில் அந்நியத்தனம் தெரிவதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஆனாலும், ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்கள் அலைவாய்க் கரையில்... அலையில் மாணவியை ஓரேயடியாக அள்ளிச் சென்றதுதான் உண்மை. பழைய நாவலை ஆய்வுக்காக எடுக்க வேண்டுமா என்று தமிழ்த்துறைத் தலைவரே கூட தயக்கம் காட்டினாலும் வேறொரு மாணவனும் வேருக்கு நீர் நாவலை எடுத்து ஆய்வு செய்தான்.

நாவலாசிரியரைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று ராமசுதா போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தன்னந்தனியராய் விடப்பட்டிருந்த ராஜம் கிருஷ்ணனைச் சந்தித்து அலைவாய்க் கரையில்... நாவலை அவர்களிடம் காட்டியதும் அதை வாங்கித் தன் மார்போடு அணைத்துக் கொண்டு உரத்தக் குரலில் அவர்கள் கதறியதை எங்களுடன் பகிர்ந்து கொள்கையில் அவள் மட்டுமல்லாமல் நாங்களுமே கண்ணீருக்கு அணைபோட முடியாமல் நெஞ்சுக்குள் கதறினோம்.

சமீபத்தில் இலங்கை மாணவன் ரகுநாத்திடம் உரையாடுகையில் மாணிக்க கங்கை பற்றி நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருந்தான். அந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் எழுந்த ராஜம் கிருஷ்ணனின் நினைவுகள் கங்கைக் கரையில் அதன் நீரலை தொட்டு நிற்கும் சிலிர்ப்பையும் அதே நேரத்தில் மொழிக்குள் சிக்காத தீராத தவிப்பையும் தாகத்தையும் ஏற்படுத்தியது.

மரணம் அந்த மாபெரும் எழுத்தாளரின் உடலுக்குத்தானே அன்றி எழுத்துக்களுக்கு இல்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக