புதன், 30 ஜூலை, 2014

ஜெயமோகனின் 'வெண்முரசு': ஆய்வுக்கான தளங்கள்

ஜெயமோகனின் பெண்ணியம்: வெண்முரசை முன்வைத்துஎன்ற தலைப்பில் என்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் விவாதங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையைப் பதிவு செய்கிறேன். பெண் எழுத்தாளர்களுக்கு எதிராகப் பேசும் ஜெயமோகனின் எழுத்துக்களை ஆதரித்து எழுதுவது தகுமா? நியாயமா? என்று தொடுக்கப்பட்ட அர்த்தமற்றக் கேள்விகளை ஒதுக்கிவிட்டு (அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரம் விரயம் என்றாலும் அதைத் தனியாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்) ஆய்வு நோக்கில் வெண்முரசு புதினத்தை அணுகுவதற்கான பெரும் தளம் பற்றியே இந்தப் பதிவு அமைகிறது.

சங்க இலக்கியம், தொல்காப்பியம் என பழம்பெரும் இலக்கியஇலக்கணங்களைக் குறித்த ஆய்வுகள் அதிகமாக ஒரு காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. முதுகலைப் பட்டத்திற்கான ஆய்விலிருந்து முனைவர் பட்டத்திற்கான ஆய்வு வரை சங்க இலக்கியத்தின் அகமும் புறமும், அவற்றை எடுத்தோதும் தொல்காப்பிய மரபும் ஆய்வுப் பொருள்களாக அமைந்திருந்தன. 1980களுக்குப் பிறகு தமிழ் இலக்கிய ஆய்வு நோக்கில் கல்வித் தளங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நவீன இலக்கியங்கள், குறிப்பாகப் புதினம், புதுக் கவிதை எனவும், அதன் பிறகு பின் நவீனத்துவ இலக்கியங்களும் ஆய்வுகளின் அடிப்படையாக மாற்றம் பெற்றன.

சமீப காலங்களில் மீண்டும் தொன்மையான இலக்கியஇலக்கணங்கள் ஆய்வுக்கட்டுரைகளுக்காகவும், ஆய்வுப் பட்ட மேற்படிப்பிற்காகவும் பெருமளவில் எடுத்தாளப்படும் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்ற பிறகு இந்த வேகமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. செவ்வியல் இலக்கியங்கள் ஆய்வுப் பொருட்களாக மேற்கொள்ளப்படுமானால் நிதி நல்கை கிடைக்கும் என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதைக் கடந்தும் ‘back to Sangam’ என்று பழைமையை நோக்கி ஆர்வத்துடன் கல்வியாளர்களும் மாணவர்களும் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளும் நிலையையும் காண முடிகிறது. சமீபத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் வாங்கிய மற்றும் எம்.ஃபில். ஆய்வு பட்டம் நிறைவு செய்யும் நிலையில் இருக்கும் என்னுடைய மாணவ மாணவியர் சிலர், ‘ஜெயமோகனின் பெண்ணியம்: வெண்முரசை முன்வைத்துஎன்ற கட்டுரையை வாசித்துவிட்டு வெண்முரசு என்ற புதினத்தை ஆய்வுப் படிப்புக்காக எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் என்னென்ன என்று விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியங்களிலோ தொல்காப்பியத்திலோ ஆய்வு மேற்கொள்ளலாம் என்ற தங்கள் கருத்தினை மாற்றிக்கொள்ளலாமா என்ற எண்ணமும் தங்களுக்கு எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்கள்.

பட்டத்திற்காக மட்டுமல்லாமல், செய்யப்படும் ஆய்வு தங்கள் கல்வித் தளத்தில் அறிவை விரிவாக்குவதில் தொன்மையையும் புதுமையையும் இணைத்து புரிந்துகொள்வதில் பயனுள்ளதாக இந்த ஆய்வு அமையும் என்றால் அதற்கான ஆய்வுத் தளங்கள் வெண்முரசில் எவையெல்லாம் இருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்கள். புதினங்களை ஆய்வுப்பொருளாகக் கையாள்வது அருகிவரும் இக்காலக்கட்டத்தில் இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்து எழுதப்படவிருக்கின்ற வெண்முரசு ஆய்வுக்கான தளமாக எந்தெந்த வகைகளில் அமைய முடியும் என்ற பல மாணவர்களது ஆர்வமிக்க கேள்விகளுக்குத் தனித்தனியாக நான் கூறிய பதில்களின் தொகுப்புதான் இக்கட்டுரையின் உள்ளடக்கம்.

இதுவரையிலும் முதற்கணல், மழைப்பாடல், வண்ணக்கடல், என்ற தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் வெண்முரசின் முதல் மூன்று புதினங்களிலிருந்து ஆய்வுக்கான தலைப்பு தெரிந்துகொள்வதற்கான சில வழிகாட்டுதல்கள்:

1. பண்பாடும் மரபும் – இவற்றின் கலப்பும்
மகாபாரதம் என்னும் இதிகாசத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் அல்லது மரபிற்குமான தொடர்பைக் கருதுகோளாக எடுத்து ஆய்வு செய்யலாம். ‘மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்என்ற சின்னமனோர் செப்பேடுகள் மகாபாரதக் கதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைச் சொல்லும் குறுஞ்செய்தி.

இராமாயணக் கதைகள் கலித்தொகையில் காணக்கிடக்கின்றன. பிற்காலத்தில் கம்பரது கைவண்ணத்தில் அது ஒரு அற்புதமான தமிழ்க் காப்பியமாக மலர்கிறது. ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்குருக்ஷேத்திரப் போரில் போரிட்ட பாண்டவப் படை வீரர்களுக்கும் கௌரவரது படை வீரர்களுக்கும் உணவளளித்தான் என்று படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் பெருஞ்சோறு என்பது பிண்டம் வைத்தல். அதற்கும் உதியன் சேரலாதனுக்கும் மகாபாரதப் போருக்கும் தொடர்பில்லை என்ற விவாதப் பொருளும் கல்வியாளர்களால் முன் வைக்கப்பட்டு அதுவும் ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பாபிலோனுக்கு மயிலிறகை ஏற்றுமதி செய்த பழந்தமிழர்களின் சங்கக் கவிதையும் கூட அங்கு கொண்டு செல்லப்பட்டு கிறிஸ்தவர்களின் புனித நூலாகக் கருதப்படும் விவிலியத்தின் உன்னத சங்கீதம் சங்கப் பாடல்களின் அகக் கோட்பாட்டு மரபை தாங்கியிருக்கிறது என்று ஆய்வுகள் நிகழ்த்தப்படும்பொழுது ஒரே தேசத்தில் இலக்கிய பண்பாட்டு மரபு கலப்புகள் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்றுதானே சிந்திக்க முடியும்?

வெண்முரசு புதினத்தில் வடக்கிற்கும் தெற்கிற்குமான இணைப்பும் பிணைப்பும் பேசப்படுகிறது. தமிழ் மன்னர்கள் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. சௌப நாட்டு மன்னன் சால்வனுக்குத் துணையாக வந்த பத்து மன்னர்களில் சோழனும் பாண்டியனும் அடக்கம் என்ற செய்தியையும் காண்கிறோம்.

சேர, சோழ, பாண்டியர்களின் பூர்வீகம் பாரதத்தின் வடக்குப் பகுதியே என்பதையும் வெண்முரசில் வாசிக்கிறோம். தொல் திராவிடர்கள் வட இந்தியாவில் வாழ்ந்தார்கள். பின்பு அங்கிருந்து ஈரான், பலுசிஸ்தான் மற்றும் பாரத பூமியின் தெற்குப் பகுதி நோக்கி நகர்ந்தார்கள் என்ற மொழி அறிஞர்களின் கூற்று இங்கு எண்ணத்தக்கது.

சினம் கொண்டு எழுந்து அக்கினிப் பிழம்பாக அலைபாய்ந்த அம்பை, சிறு கடம்பவனத்தில் தமிழ்க் கடவுளாம் கரிய முருகனின் சிலையின் முன் முழந்தாளிட்டு மார்போடு அணைத்து அவள் இதயம் கனிந்துபோகும் நெகிழ்ச்சியான இடமும் சிந்தனைக்குரியது.

தென்மதுரை மூதூர் சித்திரன் மைந்தன் பெருஞ்சாத்தன் முதுகுருகு, தண்குறிஞ்சி என்னும் இரு நூல்களை யாத்துள்ளதாகத் தன்னை வியாசரிடம் அறிமுகப்படுத்திக்கொள்வதும், அவரது நூலின் தொடக்கத்தை எழுத அவர் தென்னகம் செல்லவேண்டியிருக்கும் எனக் கூறுவதும், இரு பெரும் தொன்மைகளின் சந்திப்பு என நம்மைச் சிந்திக்கச் செய்கிறது.

கொற்கையின் முத்துக்களை வியாசர் விதந்தோதும்போது அக்கொற்கையின் ஆழத்தில் அமிழ்ந்துகிடக்கும் ஆறுகள், தம் முன்னோர்கள் பற்றிப் பெருஞ்சாத்தன் கூறுவதை வாசிக்கையில் நம் மரபின் பழைமை நம் கண் முன் விரிகிறது.

பீஷ்மர் செல்கின்ற தேவபாலபுரம் என்ற துறைமுகம் பற்றிய விவரங்களுடனேயே யவணர் மற்றும் தென் தமிழ் மக்கள், அவர்தம் வணிகம், அவர்களது மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பற்றிய செய்திகளும் வெகு நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

நொறுங்கிப்போகும் கர்ணனும் தென்னகம் நோக்கியே செல்கிறான். கர்ணன் பற்றிய செய்தியில் நோய், மூப்பு – இவற்றைக் காட்டிலும் இழிவானதும் வேதனைக்குரியதும், அவமதிப்பு என்ற செய்தியில் வடக்கிருத்தலுக்குக் காரணங்களாக மூப்பு, பிணி மற்றும் மானக்கேட்டினைச் சொல்லும் பழைய தமிழ் இலக்கிய மரபும் இயைந்து வருகிறது.

பாரதம் முழுக்க பயணம் செய்யும் இளநாகன் என்ற தமிழ்ப் பாணன் வழியாககவே கதை நகர்த்தப்பட்டுச் சொல்லப்படுவதையும் காண்கிறோம். காவிரி பூம்பட்டிணத்து இந்திர விழா பற்றிய செய்தியும் இடம்பெறுகிறது. வேறுபட்ட சூழலில் மக்கள் வாழ்ந்தாலும் கலாச்சாரத் தளங்கள் ஒன்றுபட்டிருப்பதை அது நமக்குச் சொல்கிறது. கதைப் போக்கிலேயே மலை வேடர்கள், பழங்குடி மக்கள் அவர்தம் வாழ்வும் நம்பிக்கைகளும், மரபுகளும் என கொடுக்கப்பட்டிருக்கும் ஏராளமான தகவல்கள் பல்வேறு ஆய்வுக் கூறுகளாக அமைந்துள்ளன.

வெவ்வேறு மரபுகள் ஒன்றையொன்று எதிர்கொண்டு ஒன்றிலொன்று தாக்கத்தை ஏற்படுத்தி உள்வாங்கி, புதிய செழுமையான பண்பாட்டுக் கலப்பை ஏற்படுத்துவதன் ஒரு குறியீடாகவே வெண்முரசின் இதுபோன்ற கருத்துக் களங்களைக் கொள்ள முடியும். இப்புள்ளியிலிருந்து ஆய்வினைத் தொடங்க முடியும்.

2. பெண்ணியம்
பெண்ணியக் கோட்பாடுகள் 1960க்குப் பிறகே தமிழ் இலக்கிய உலகில் ஆழமாகக் காலூன்றத் தொடங்குகின்றன. ஆண்களின் பார்வையில் பெண்கள் பற்றிய சித்தரிப்புக்கள், பெண்களே தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் விதத்திலிருந்து வித்தியாசப்படும் நிலைமையினைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகளின் தளமாக பல்வேறு புதினங்கள் எடுத்தாளப்பட்டன.

பெண்ணிய எழுத்து என்பது பெண்களை அவரவர் கோணத்திலிருந்து ஆளுமை மற்றும் சமூகச் சூழலிலிருந்து சிந்தித்து எழுதுவது. அந்த வகையில் தன்னுடைய தாய்வழிச் சமூக அமைப்பின் உரிமைகளைப் பேசும் குந்தி தேவியும், அவளுடைய பார்வையில்பாவம் பழங்குடிப் பெண்கள்’ என நோக்கப்படும் காந்தாரி மற்றும் அவளது தங்கையரின் சமூகச் சூழலும் மீனவப் பெண்தானே என சகுனி போன்றவர்களால் நிந்தனைக்காளானலும் பாரத வருஷத்தின் நீண்ட எதிர்காலத்தைச் சிருஷ்டிக்கும் தொலைநோக்குச் சிந்தனையும் அபரிமிதமான ஆளுமைத் திறனும் கொண்டவள் என்று கங்கை மைந்தராலேயே வியந்து போற்றப்படும் சத்தியவதி மற்றும் சீர்மொழி மரபு பேசும் சிவை, பிறகு, சுவரோவியமாகவே உறைந்துபோகும் தருணம் என பெண்ணியச் சிந்தனைகளை எழுப்பும் இடங்கள் ஏராளம்.

சந்தனு தன்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. மாறாக தன் மேல் அவர் வரைந்திருந்த சித்திரங்களை மட்டுமே அறிந்திருந்தார் என்ற சத்தியவதியின் சொற்களின் ஆழம் ஜெயமோகனின் பெண்ணியப் பார்வைக்குப் பெரும் சான்று.

“நடக்கும் அனைத்துக்கும் நாமறியாத இலக்குகள் உண்டு என்று தாங்கள் அறியாததா?” என்று வியாசரிடமே ஞானத்துடன் பேசும் சூதர் குலத்துப் பெண் சிவை, அவள் மகனைப் பெற்றப் பிறகு, அவன் பேசப் பேச, இவள் பேசா மடந்தையாகிப் போனாள் – எனவும், - அசையும் திரைச்சீலையாகக் கூட இல்லாமல், சுவரோவியமாகவே மாறிப்போனாள் - என்றும் விவரிக்கும் இடத்தில் நாடு பிடித்து எல்லைகளை விரிவாக்கும் ஆசை கொண்ட ஆண்களின் அரசியல் சொக்கட்டான்களுக்குப் பலியாகும் பெண்களின் அவல நிலையை இதைவிடத் துல்லியமாக உணர வைக்க முடியுமா என்ற மலைப்பை நமக்குள் ஏற்படுத்துகிறது.

சுதந்திரமாகவும் இயல்பாகவும் வாழும் மீனவப் பெண்கள், உழத்திப் பெண்கள் பற்றி விசித்திர வீரியனிடம் ஏக்கத்துடன் விவரிக்கும் அம்பிகையின் சொற்களில் தமிழ்ச் சமூகத்திலும் போருக்குச் சென்றிருக்கும் தலைவனுக்காகக் காத்திருக்கும் மேட்டுக்குடிப் பெண்கள், அதற்கு நேரெதிராக வாழ்ந்த உமணப் பெண்டிர், எயினப் பெண்கள், உழத்தியர், பருத்திப் பெண்டிர் – போன்றோரின் சுதந்திரமான வாழ்நிலையும் நம் நினைவில் வந்து நிற்கிறது. இந்த வகையில் பழம் சமூகத்தில் எல்லாத் திசைகளிலுமே மேட்டுக்குடி மற்றும் சாதாரணப் பெண்களின் வாழ்வு நிலையில் நிலவிய பெரும் முரண்பாட்டினை ஆய்வு செய்ய முடியும்.

3. சமூகவியல்
மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதுதான் சமூகவியல் படிப்போரின் அரிச்சுவடிப் பாடம். ஒன்றின் வாழ்விற்காகவே மற்றொன்று படைக்கப்பட்டிருக்கின்றது. ஒன்றை அழித்தே மற்றொன்று உயிர்வாழ முடியும். அந்த நெறியில் பிழையில்லை. காலம் என்ற பெரு வெளியில் ஒன்றைச் சார்ந்து அல்லது ஒன்றிற்காக வாழ்வது, ஒன்றின் உயர்வுக்காக மற்றொன்று அழிந்துபோவது என்ற சமூக அறத்தைச் சொல்லுந்தோறும் படிமங்களும் குறியீடுகளும் வெண்முரசில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகக் காசி நாட்டு இளவரசிகளை பீஷ்மர் சிறைப்பிடிக்கச் செல்லும் தருணத்திலும், பிறகு வியாசரின் மூலம் இளவரசிகளில் வம்ச விருத்தியை உருவாக்கும் நேரத்திலும் இந்தக் குறியீடுகள் சமூக நடைமுறையின் அடையாளங்களாக சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிதகர்ணி என்ற சிம்மமும், அதனால் கொல்லப்படும் பசுவும், சிங்கத்தைக் கொல்லும் கழுதைப் புலியும்- என ஒன்றின் அழிவில் மற்றொன்று வாழும் சமூகவியல் நமக்குப் பாடமாக விரிகிறது.

4. அறிவியல்
இயற்கை, சிறு பூச்சிகள், பிறகு சிறகு முளைக்கும் பறவைகள், விலங்குகள் – இவற்றின் குணாதிசயங்கள் என்ற விவரிப்பில் டார்வினின் பரிணாமக் கொள்கையும், மற்றும், வெவ்வேறு அறிவியல் செய்திகள் பல இடங்களில் பரிமளிக்கின்றன.

5. நாட்டுப்புறவியல்
பல்வேறு விதமாகப் பாடப்பட்டு, கதைகள் பெருக்கப்பட்டு உருவாகும் சூதர் பாடல்கள் கதையெங்கும் சேர்ந்து செல்கிறது. பொதுவாக நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பாடல்களில், மேட்டுக்குடியினரால் சில பல காரணங்களுக்காக மேல்நிலையாக்கம் என்ற கோட்பாடு கடைபிடிக்கப்படுவதைப் பார்க்கிறோம். பல தமிழ் நாட்டுப்புறப் பாடல்களிலும் கதைகளிலும் இந்த நிலையை நாம் காண முடியும். அரண்மனைச் சேடிப் பெண்களான சிவை – கிருபை உரையாடலில் சத்தியவதியின் பிறப்பு பற்றி பிராமணர்கள் ஏற்றிச் சொன்னக் கதை வெகு இயல்பாக இடம்பெறுகிறது.

உபரிசிரவசு என்ற சேதி நாட்டு மன்னனால் மீன் வயிற்றிலிருந்து பிறந்தவள் சத்தியவதி என்று பிராமணர்கள் கட்டிவிட்டக் கதைக்குக் காரணமாக “அவர்கள் மச்சக் குலப் பெண்களிடம் தானம் வாங்கவேண்டும் அல்லவா?” என்று கிருபை கேலியாகப் பேசுகிறாள். பலரது சாதாரண ஜனனங்கள் இவ்வாறு ஏற்றிச் சொல்லப்படும் எதார்த்தத்தை நம்ம ஊர் முத்துப்பட்டன் கதையிலும் காண முடியும்.

6. உளவியல்:
பாத்திரப் படைப்புகள் முதன்மைப் பாத்திரங்கள், துணைப் பாத்திரங்கள் என ஒவ்வொரு பாத்திரமும் கவனமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் அசைவுகள், சிந்தனை, சொல், செயல் என எல்லாவற்றையுமே உளவியல் ரீதியாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

சிக்மண்ட் ஃப்ராய்ட் கோட்பாடு முதல் நவீன உளவியல் கோட்பாடுகள் என எல்லாவற்றையுமே ஒவ்வொரு பாத்திரத்தின் உளவியல் பின்னணியிலும் பொருத்திப் பார்க்க முடியும்.

ஒரு புதினத்தை எப்படி வாசிக்க வேண்டும் எனப் பேராசிரியை எம்.ஏ.சுசீலா அவர்கள் ‘காவல் கோட்டம்’ நாவல் பற்றிய தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களுடைய கருத்துக்கள், விமரிசனங்கள் – இவற்றை வாசிப்பதற்கு முன்னால் நாமே அதைப் படித்துவிடவேண்டும். இல்லையென்றால் மற்றவர்களது கருத்துக்களும் விமரிசனங்களுமே நம்மில் பதிந்து சுய சிந்தனைக்குத் தடை போட்டுவிடும் அபாயம் உண்டு எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், வெ்ணமுரசு என்ற புதினத்தை ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் எந்தெந்த நோக்கில் அதை அணுக முடியும் என்பதற்கான சில யோசனைகள் அவர்களிடம் ஏற்கனவே விவாதித்ததன் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.


பாரதக் கதையைப் போலவே வெண்முரசு எழுப்பும் சிந்தனைகளும் ஆய்வு நோக்கில் நம் முன் வைக்கும் கேள்விகளும் பரந்துபட்டவை. அவற்றில் சிறு புள்ளியை மட்டுமே தொடக்கமாக இங்கு பதிவு செய்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக