புதன், 30 ஜூலை, 2014

ஜெயமோகனின் 'வெண்முரசு': ஆய்வுக்கான தளங்கள்

ஜெயமோகனின் பெண்ணியம்: வெண்முரசை முன்வைத்துஎன்ற தலைப்பில் என்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் விவாதங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையைப் பதிவு செய்கிறேன். பெண் எழுத்தாளர்களுக்கு எதிராகப் பேசும் ஜெயமோகனின் எழுத்துக்களை ஆதரித்து எழுதுவது தகுமா? நியாயமா? என்று தொடுக்கப்பட்ட அர்த்தமற்றக் கேள்விகளை ஒதுக்கிவிட்டு (அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரம் விரயம் என்றாலும் அதைத் தனியாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்) ஆய்வு நோக்கில் வெண்முரசு புதினத்தை அணுகுவதற்கான பெரும் தளம் பற்றியே இந்தப் பதிவு அமைகிறது.

சங்க இலக்கியம், தொல்காப்பியம் என பழம்பெரும் இலக்கியஇலக்கணங்களைக் குறித்த ஆய்வுகள் அதிகமாக ஒரு காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. முதுகலைப் பட்டத்திற்கான ஆய்விலிருந்து முனைவர் பட்டத்திற்கான ஆய்வு வரை சங்க இலக்கியத்தின் அகமும் புறமும், அவற்றை எடுத்தோதும் தொல்காப்பிய மரபும் ஆய்வுப் பொருள்களாக அமைந்திருந்தன. 1980களுக்குப் பிறகு தமிழ் இலக்கிய ஆய்வு நோக்கில் கல்வித் தளங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நவீன இலக்கியங்கள், குறிப்பாகப் புதினம், புதுக் கவிதை எனவும், அதன் பிறகு பின் நவீனத்துவ இலக்கியங்களும் ஆய்வுகளின் அடிப்படையாக மாற்றம் பெற்றன.

சமீப காலங்களில் மீண்டும் தொன்மையான இலக்கியஇலக்கணங்கள் ஆய்வுக்கட்டுரைகளுக்காகவும், ஆய்வுப் பட்ட மேற்படிப்பிற்காகவும் பெருமளவில் எடுத்தாளப்படும் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்ற பிறகு இந்த வேகமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. செவ்வியல் இலக்கியங்கள் ஆய்வுப் பொருட்களாக மேற்கொள்ளப்படுமானால் நிதி நல்கை கிடைக்கும் என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதைக் கடந்தும் ‘back to Sangam’ என்று பழைமையை நோக்கி ஆர்வத்துடன் கல்வியாளர்களும் மாணவர்களும் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளும் நிலையையும் காண முடிகிறது. சமீபத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் வாங்கிய மற்றும் எம்.ஃபில். ஆய்வு பட்டம் நிறைவு செய்யும் நிலையில் இருக்கும் என்னுடைய மாணவ மாணவியர் சிலர், ‘ஜெயமோகனின் பெண்ணியம்: வெண்முரசை முன்வைத்துஎன்ற கட்டுரையை வாசித்துவிட்டு வெண்முரசு என்ற புதினத்தை ஆய்வுப் படிப்புக்காக எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் என்னென்ன என்று விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியங்களிலோ தொல்காப்பியத்திலோ ஆய்வு மேற்கொள்ளலாம் என்ற தங்கள் கருத்தினை மாற்றிக்கொள்ளலாமா என்ற எண்ணமும் தங்களுக்கு எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்கள்.

பட்டத்திற்காக மட்டுமல்லாமல், செய்யப்படும் ஆய்வு தங்கள் கல்வித் தளத்தில் அறிவை விரிவாக்குவதில் தொன்மையையும் புதுமையையும் இணைத்து புரிந்துகொள்வதில் பயனுள்ளதாக இந்த ஆய்வு அமையும் என்றால் அதற்கான ஆய்வுத் தளங்கள் வெண்முரசில் எவையெல்லாம் இருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்கள். புதினங்களை ஆய்வுப்பொருளாகக் கையாள்வது அருகிவரும் இக்காலக்கட்டத்தில் இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்து எழுதப்படவிருக்கின்ற வெண்முரசு ஆய்வுக்கான தளமாக எந்தெந்த வகைகளில் அமைய முடியும் என்ற பல மாணவர்களது ஆர்வமிக்க கேள்விகளுக்குத் தனித்தனியாக நான் கூறிய பதில்களின் தொகுப்புதான் இக்கட்டுரையின் உள்ளடக்கம்.

இதுவரையிலும் முதற்கணல், மழைப்பாடல், வண்ணக்கடல், என்ற தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் வெண்முரசின் முதல் மூன்று புதினங்களிலிருந்து ஆய்வுக்கான தலைப்பு தெரிந்துகொள்வதற்கான சில வழிகாட்டுதல்கள்:

1. பண்பாடும் மரபும் – இவற்றின் கலப்பும்
மகாபாரதம் என்னும் இதிகாசத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் அல்லது மரபிற்குமான தொடர்பைக் கருதுகோளாக எடுத்து ஆய்வு செய்யலாம். ‘மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்என்ற சின்னமனோர் செப்பேடுகள் மகாபாரதக் கதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைச் சொல்லும் குறுஞ்செய்தி.

இராமாயணக் கதைகள் கலித்தொகையில் காணக்கிடக்கின்றன. பிற்காலத்தில் கம்பரது கைவண்ணத்தில் அது ஒரு அற்புதமான தமிழ்க் காப்பியமாக மலர்கிறது. ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்குருக்ஷேத்திரப் போரில் போரிட்ட பாண்டவப் படை வீரர்களுக்கும் கௌரவரது படை வீரர்களுக்கும் உணவளளித்தான் என்று படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மத்தியில் பெருஞ்சோறு என்பது பிண்டம் வைத்தல். அதற்கும் உதியன் சேரலாதனுக்கும் மகாபாரதப் போருக்கும் தொடர்பில்லை என்ற விவாதப் பொருளும் கல்வியாளர்களால் முன் வைக்கப்பட்டு அதுவும் ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பாபிலோனுக்கு மயிலிறகை ஏற்றுமதி செய்த பழந்தமிழர்களின் சங்கக் கவிதையும் கூட அங்கு கொண்டு செல்லப்பட்டு கிறிஸ்தவர்களின் புனித நூலாகக் கருதப்படும் விவிலியத்தின் உன்னத சங்கீதம் சங்கப் பாடல்களின் அகக் கோட்பாட்டு மரபை தாங்கியிருக்கிறது என்று ஆய்வுகள் நிகழ்த்தப்படும்பொழுது ஒரே தேசத்தில் இலக்கிய பண்பாட்டு மரபு கலப்புகள் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்றுதானே சிந்திக்க முடியும்?

வெண்முரசு புதினத்தில் வடக்கிற்கும் தெற்கிற்குமான இணைப்பும் பிணைப்பும் பேசப்படுகிறது. தமிழ் மன்னர்கள் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. சௌப நாட்டு மன்னன் சால்வனுக்குத் துணையாக வந்த பத்து மன்னர்களில் சோழனும் பாண்டியனும் அடக்கம் என்ற செய்தியையும் காண்கிறோம்.

சேர, சோழ, பாண்டியர்களின் பூர்வீகம் பாரதத்தின் வடக்குப் பகுதியே என்பதையும் வெண்முரசில் வாசிக்கிறோம். தொல் திராவிடர்கள் வட இந்தியாவில் வாழ்ந்தார்கள். பின்பு அங்கிருந்து ஈரான், பலுசிஸ்தான் மற்றும் பாரத பூமியின் தெற்குப் பகுதி நோக்கி நகர்ந்தார்கள் என்ற மொழி அறிஞர்களின் கூற்று இங்கு எண்ணத்தக்கது.

சினம் கொண்டு எழுந்து அக்கினிப் பிழம்பாக அலைபாய்ந்த அம்பை, சிறு கடம்பவனத்தில் தமிழ்க் கடவுளாம் கரிய முருகனின் சிலையின் முன் முழந்தாளிட்டு மார்போடு அணைத்து அவள் இதயம் கனிந்துபோகும் நெகிழ்ச்சியான இடமும் சிந்தனைக்குரியது.

தென்மதுரை மூதூர் சித்திரன் மைந்தன் பெருஞ்சாத்தன் முதுகுருகு, தண்குறிஞ்சி என்னும் இரு நூல்களை யாத்துள்ளதாகத் தன்னை வியாசரிடம் அறிமுகப்படுத்திக்கொள்வதும், அவரது நூலின் தொடக்கத்தை எழுத அவர் தென்னகம் செல்லவேண்டியிருக்கும் எனக் கூறுவதும், இரு பெரும் தொன்மைகளின் சந்திப்பு என நம்மைச் சிந்திக்கச் செய்கிறது.

கொற்கையின் முத்துக்களை வியாசர் விதந்தோதும்போது அக்கொற்கையின் ஆழத்தில் அமிழ்ந்துகிடக்கும் ஆறுகள், தம் முன்னோர்கள் பற்றிப் பெருஞ்சாத்தன் கூறுவதை வாசிக்கையில் நம் மரபின் பழைமை நம் கண் முன் விரிகிறது.

பீஷ்மர் செல்கின்ற தேவபாலபுரம் என்ற துறைமுகம் பற்றிய விவரங்களுடனேயே யவணர் மற்றும் தென் தமிழ் மக்கள், அவர்தம் வணிகம், அவர்களது மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பற்றிய செய்திகளும் வெகு நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

நொறுங்கிப்போகும் கர்ணனும் தென்னகம் நோக்கியே செல்கிறான். கர்ணன் பற்றிய செய்தியில் நோய், மூப்பு – இவற்றைக் காட்டிலும் இழிவானதும் வேதனைக்குரியதும், அவமதிப்பு என்ற செய்தியில் வடக்கிருத்தலுக்குக் காரணங்களாக மூப்பு, பிணி மற்றும் மானக்கேட்டினைச் சொல்லும் பழைய தமிழ் இலக்கிய மரபும் இயைந்து வருகிறது.

பாரதம் முழுக்க பயணம் செய்யும் இளநாகன் என்ற தமிழ்ப் பாணன் வழியாககவே கதை நகர்த்தப்பட்டுச் சொல்லப்படுவதையும் காண்கிறோம். காவிரி பூம்பட்டிணத்து இந்திர விழா பற்றிய செய்தியும் இடம்பெறுகிறது. வேறுபட்ட சூழலில் மக்கள் வாழ்ந்தாலும் கலாச்சாரத் தளங்கள் ஒன்றுபட்டிருப்பதை அது நமக்குச் சொல்கிறது. கதைப் போக்கிலேயே மலை வேடர்கள், பழங்குடி மக்கள் அவர்தம் வாழ்வும் நம்பிக்கைகளும், மரபுகளும் என கொடுக்கப்பட்டிருக்கும் ஏராளமான தகவல்கள் பல்வேறு ஆய்வுக் கூறுகளாக அமைந்துள்ளன.

வெவ்வேறு மரபுகள் ஒன்றையொன்று எதிர்கொண்டு ஒன்றிலொன்று தாக்கத்தை ஏற்படுத்தி உள்வாங்கி, புதிய செழுமையான பண்பாட்டுக் கலப்பை ஏற்படுத்துவதன் ஒரு குறியீடாகவே வெண்முரசின் இதுபோன்ற கருத்துக் களங்களைக் கொள்ள முடியும். இப்புள்ளியிலிருந்து ஆய்வினைத் தொடங்க முடியும்.

2. பெண்ணியம்
பெண்ணியக் கோட்பாடுகள் 1960க்குப் பிறகே தமிழ் இலக்கிய உலகில் ஆழமாகக் காலூன்றத் தொடங்குகின்றன. ஆண்களின் பார்வையில் பெண்கள் பற்றிய சித்தரிப்புக்கள், பெண்களே தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் விதத்திலிருந்து வித்தியாசப்படும் நிலைமையினைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகளின் தளமாக பல்வேறு புதினங்கள் எடுத்தாளப்பட்டன.

பெண்ணிய எழுத்து என்பது பெண்களை அவரவர் கோணத்திலிருந்து ஆளுமை மற்றும் சமூகச் சூழலிலிருந்து சிந்தித்து எழுதுவது. அந்த வகையில் தன்னுடைய தாய்வழிச் சமூக அமைப்பின் உரிமைகளைப் பேசும் குந்தி தேவியும், அவளுடைய பார்வையில்பாவம் பழங்குடிப் பெண்கள்’ என நோக்கப்படும் காந்தாரி மற்றும் அவளது தங்கையரின் சமூகச் சூழலும் மீனவப் பெண்தானே என சகுனி போன்றவர்களால் நிந்தனைக்காளானலும் பாரத வருஷத்தின் நீண்ட எதிர்காலத்தைச் சிருஷ்டிக்கும் தொலைநோக்குச் சிந்தனையும் அபரிமிதமான ஆளுமைத் திறனும் கொண்டவள் என்று கங்கை மைந்தராலேயே வியந்து போற்றப்படும் சத்தியவதி மற்றும் சீர்மொழி மரபு பேசும் சிவை, பிறகு, சுவரோவியமாகவே உறைந்துபோகும் தருணம் என பெண்ணியச் சிந்தனைகளை எழுப்பும் இடங்கள் ஏராளம்.

சந்தனு தன்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. மாறாக தன் மேல் அவர் வரைந்திருந்த சித்திரங்களை மட்டுமே அறிந்திருந்தார் என்ற சத்தியவதியின் சொற்களின் ஆழம் ஜெயமோகனின் பெண்ணியப் பார்வைக்குப் பெரும் சான்று.

“நடக்கும் அனைத்துக்கும் நாமறியாத இலக்குகள் உண்டு என்று தாங்கள் அறியாததா?” என்று வியாசரிடமே ஞானத்துடன் பேசும் சூதர் குலத்துப் பெண் சிவை, அவள் மகனைப் பெற்றப் பிறகு, அவன் பேசப் பேச, இவள் பேசா மடந்தையாகிப் போனாள் – எனவும், - அசையும் திரைச்சீலையாகக் கூட இல்லாமல், சுவரோவியமாகவே மாறிப்போனாள் - என்றும் விவரிக்கும் இடத்தில் நாடு பிடித்து எல்லைகளை விரிவாக்கும் ஆசை கொண்ட ஆண்களின் அரசியல் சொக்கட்டான்களுக்குப் பலியாகும் பெண்களின் அவல நிலையை இதைவிடத் துல்லியமாக உணர வைக்க முடியுமா என்ற மலைப்பை நமக்குள் ஏற்படுத்துகிறது.

சுதந்திரமாகவும் இயல்பாகவும் வாழும் மீனவப் பெண்கள், உழத்திப் பெண்கள் பற்றி விசித்திர வீரியனிடம் ஏக்கத்துடன் விவரிக்கும் அம்பிகையின் சொற்களில் தமிழ்ச் சமூகத்திலும் போருக்குச் சென்றிருக்கும் தலைவனுக்காகக் காத்திருக்கும் மேட்டுக்குடிப் பெண்கள், அதற்கு நேரெதிராக வாழ்ந்த உமணப் பெண்டிர், எயினப் பெண்கள், உழத்தியர், பருத்திப் பெண்டிர் – போன்றோரின் சுதந்திரமான வாழ்நிலையும் நம் நினைவில் வந்து நிற்கிறது. இந்த வகையில் பழம் சமூகத்தில் எல்லாத் திசைகளிலுமே மேட்டுக்குடி மற்றும் சாதாரணப் பெண்களின் வாழ்வு நிலையில் நிலவிய பெரும் முரண்பாட்டினை ஆய்வு செய்ய முடியும்.

3. சமூகவியல்
மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதுதான் சமூகவியல் படிப்போரின் அரிச்சுவடிப் பாடம். ஒன்றின் வாழ்விற்காகவே மற்றொன்று படைக்கப்பட்டிருக்கின்றது. ஒன்றை அழித்தே மற்றொன்று உயிர்வாழ முடியும். அந்த நெறியில் பிழையில்லை. காலம் என்ற பெரு வெளியில் ஒன்றைச் சார்ந்து அல்லது ஒன்றிற்காக வாழ்வது, ஒன்றின் உயர்வுக்காக மற்றொன்று அழிந்துபோவது என்ற சமூக அறத்தைச் சொல்லுந்தோறும் படிமங்களும் குறியீடுகளும் வெண்முரசில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகக் காசி நாட்டு இளவரசிகளை பீஷ்மர் சிறைப்பிடிக்கச் செல்லும் தருணத்திலும், பிறகு வியாசரின் மூலம் இளவரசிகளில் வம்ச விருத்தியை உருவாக்கும் நேரத்திலும் இந்தக் குறியீடுகள் சமூக நடைமுறையின் அடையாளங்களாக சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிதகர்ணி என்ற சிம்மமும், அதனால் கொல்லப்படும் பசுவும், சிங்கத்தைக் கொல்லும் கழுதைப் புலியும்- என ஒன்றின் அழிவில் மற்றொன்று வாழும் சமூகவியல் நமக்குப் பாடமாக விரிகிறது.

4. அறிவியல்
இயற்கை, சிறு பூச்சிகள், பிறகு சிறகு முளைக்கும் பறவைகள், விலங்குகள் – இவற்றின் குணாதிசயங்கள் என்ற விவரிப்பில் டார்வினின் பரிணாமக் கொள்கையும், மற்றும், வெவ்வேறு அறிவியல் செய்திகள் பல இடங்களில் பரிமளிக்கின்றன.

5. நாட்டுப்புறவியல்
பல்வேறு விதமாகப் பாடப்பட்டு, கதைகள் பெருக்கப்பட்டு உருவாகும் சூதர் பாடல்கள் கதையெங்கும் சேர்ந்து செல்கிறது. பொதுவாக நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பாடல்களில், மேட்டுக்குடியினரால் சில பல காரணங்களுக்காக மேல்நிலையாக்கம் என்ற கோட்பாடு கடைபிடிக்கப்படுவதைப் பார்க்கிறோம். பல தமிழ் நாட்டுப்புறப் பாடல்களிலும் கதைகளிலும் இந்த நிலையை நாம் காண முடியும். அரண்மனைச் சேடிப் பெண்களான சிவை – கிருபை உரையாடலில் சத்தியவதியின் பிறப்பு பற்றி பிராமணர்கள் ஏற்றிச் சொன்னக் கதை வெகு இயல்பாக இடம்பெறுகிறது.

உபரிசிரவசு என்ற சேதி நாட்டு மன்னனால் மீன் வயிற்றிலிருந்து பிறந்தவள் சத்தியவதி என்று பிராமணர்கள் கட்டிவிட்டக் கதைக்குக் காரணமாக “அவர்கள் மச்சக் குலப் பெண்களிடம் தானம் வாங்கவேண்டும் அல்லவா?” என்று கிருபை கேலியாகப் பேசுகிறாள். பலரது சாதாரண ஜனனங்கள் இவ்வாறு ஏற்றிச் சொல்லப்படும் எதார்த்தத்தை நம்ம ஊர் முத்துப்பட்டன் கதையிலும் காண முடியும்.

6. உளவியல்:
பாத்திரப் படைப்புகள் முதன்மைப் பாத்திரங்கள், துணைப் பாத்திரங்கள் என ஒவ்வொரு பாத்திரமும் கவனமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் அசைவுகள், சிந்தனை, சொல், செயல் என எல்லாவற்றையுமே உளவியல் ரீதியாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

சிக்மண்ட் ஃப்ராய்ட் கோட்பாடு முதல் நவீன உளவியல் கோட்பாடுகள் என எல்லாவற்றையுமே ஒவ்வொரு பாத்திரத்தின் உளவியல் பின்னணியிலும் பொருத்திப் பார்க்க முடியும்.

ஒரு புதினத்தை எப்படி வாசிக்க வேண்டும் எனப் பேராசிரியை எம்.ஏ.சுசீலா அவர்கள் ‘காவல் கோட்டம்’ நாவல் பற்றிய தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களுடைய கருத்துக்கள், விமரிசனங்கள் – இவற்றை வாசிப்பதற்கு முன்னால் நாமே அதைப் படித்துவிடவேண்டும். இல்லையென்றால் மற்றவர்களது கருத்துக்களும் விமரிசனங்களுமே நம்மில் பதிந்து சுய சிந்தனைக்குத் தடை போட்டுவிடும் அபாயம் உண்டு எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், வெ்ணமுரசு என்ற புதினத்தை ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் எந்தெந்த நோக்கில் அதை அணுக முடியும் என்பதற்கான சில யோசனைகள் அவர்களிடம் ஏற்கனவே விவாதித்ததன் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.


பாரதக் கதையைப் போலவே வெண்முரசு எழுப்பும் சிந்தனைகளும் ஆய்வு நோக்கில் நம் முன் வைக்கும் கேள்விகளும் பரந்துபட்டவை. அவற்றில் சிறு புள்ளியை மட்டுமே தொடக்கமாக இங்கு பதிவு செய்துள்ளேன்.

வியாழன், 3 ஜூலை, 2014

ஜெயமோகனின் பெண்ணியம்: வெண்முரசை முன்வைத்து

மகாபாரதம் இந்தியாவின் பழமையை, பெருமையைப் பறைசாற்றும் இதிகாசங்களில் ஒன்று. சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் நிலா முற்றத்து நார்க் கட்டிலில் அமர்ந்தபடி ஒவ்வொரு நாளும் அப்பா அந்த கதைகளைச் சொல்லும்போது சந்தோஷமாகவும் வியப்பாகவும், அதே நேரத்தில் வாழ்க்கையின் பல்வேறு நெறிகளைப் புகட்டுவதாகவும் உணர்ந்திருக்கிறோம். கதையின் ஊடாக பாத்திரங்களின் பண்புகள், உறவின் விழுமியங்கள், உணர்வுகளின் வெளிப்பாடுகள் என சுவாரஸ்யமாகவும், அனைத்து மெய்ப்பாடுகளையும் எங்களுக்குள் எழுப்புவதாகவும் அந்த அற்புதமான அனுபவம் அமைந்திருந்தது.

மின்னூடகங்களின் வருகைக்கும் பெரும் தாக்கத்திற்கும் முந்தைய காலகட்டத்தில் தாத்தா பாட்டி உறவுகளைப் பழைய பொருட்களைப் பரணில் வீசி எறிவது போல் நம்மிலிருந்து வெட்டிவிடாத அந்தக் காலங்களில் வளர்ந்த குழந்தைகள் பலருக்கும் இந்த நேர்த்தியான அனுபவமும், அதிலிருந்து கைவரப்பெற்ற பாடங்களும் வாய்க்கப்பெற்றிருக்கும்.

ஜெயமோகனின் ‘வெண்முரசு’ தொடரைப் பாராட்டியிருக்கும் பேரா.முனைவர்.அ.ராமசாமி அவர்களும் தம் பாலிய பருவத்தில் மகாபாரதத்தோடு தனக்கு ஏற்பட்ட தொடர்பை, உள்ளார்ந்த நெருக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவு பலரது இளமைக் கால வாழ்வின் நினைவூட்டல்களாகவே அவரவர் உள்ளத்தில் புதிய உணர்வை ஏற்படுத்துகின்றது.

நேரடியாகச் சொல்வதென்றால், ஜெயமோகன் அவர்களின் பிற படைப்புகள் வாசகர்களை வசீகரித்திருப்பதைக் காட்டிலும், அதிகமான வாசிப்பு இன்பத்தைத் தருவதாக ‘வெண்முரசு’ வாசிப்பவர்களோடு சேர்ந்து நடைபோடுகிறது. பல்வேறு புராணங்களிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கும் கதைகள் நேர்த்தியாகப் பின்னப்பட்டு கதையோட்டத்தில் செறிவான நடையில் நம்மை மீள முடியாத அமிழ்த சாகரத்திற்குள் இழுத்துச் செல்கிறது.

மகாபாரதக் கதை மீண்டும், மீண்டும் ஆயிரக்கணக்கான வருடங்கள் சொல்லப்பட்டு, புதிய புதிய விஷயங்கள் அதிலிருந்து உணரப்பட்டு வந்தாலும், வெண்முரசு தரும் முற்றிலும் புதிய அனுபவம் வாசகனை வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கச் செய்கிறது. இதைப் பற்றி எழுதுவதற்குப் பல்வேறு விஷயங்கள் இருப்பினும், சமீபத்திய சர்ச்சையையொட்டி எழுந்த சிக்கலின் பின்னணியில் சில கருத்துக்களைப் பதிவு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பாரதக் கதையில் முக்கியமான பெண் பாத்திரமாக அடையாளம் காணப்படும் திரௌபதி மகாகவி பாரதியாராலும் கூட பாரத சக்தியின் குறியீடாக, படிமமாக பாஞ்சாலி சபதத்தில் படைக்கப்பட்டிருக்கிறாள். தன்னை அடிமையாக்கிய பிறகு என்னிடத்தில் யதிஷ்ட்ரனுக்கு (தர்மன்) எந்த உரிமையும் இல்லை என்ற அவளது ஆவேசப் பெண்ணியக் குரல் ஆணாதிக்க சிந்தனையில் ஆணி அடிக்கிறது.

அம்பை என்ற பாத்திரம் காலம் காலமாக பல்வேறு புனைவுகளில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டிருந்தாலும், வெண்முரசில், கதை சொல்லும் போக்கில் அவளுக்கும் பீஷ்மருக்குமான உரையாடல் மற்றும் வாழ்வைத் தேடி அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படும் அப்பெண்ணின் ஆற்றாமையும் சினமுமாக ஜெயமோகனின் எழுத்துக்களில் அவள் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதத்தில் பெண்ணின் உள்ளத்திலிருந்து அவள் விழிகளின் வழியாகவே வாழ்வையும் உலகத்தையும் பார்த்து அவர் பதிவு செய்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெண்ணின் பிரச்சினைகளைப் பெண் மட்டுமே எழுத முடியும் என்ற குரலும் வாதமும் இங்கு அடிபட்டுப் போகிறது.

பீஷ்மருடன் விவாதிக்கையில் தன் விருப்பப்படித்தான் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்று அவள் உறுதியாகச் சொல்வதும், அப்படிப் பேசுகின்ற ஒரு பெண்ணை தான் அதுவரை பார்த்ததில்லை என்று பீஷ்மர் எண்ணுவதும், சால்வன், பிறகு தன் தாய்நாடு என்று அலைக்கழிக்கப்பட்டு பெற்ற அன்னையின் மடியில் கண்ணீர் சிந்தக்கூட உரிமையற்றவள் என்ற கழிவிரக்கத்துடன் அலைபாயும் அம்பை பீஷ்மரிடம் காதலையும் தனக்கான வாழ்வையும் கேட்பதையும், மறுக்கப்பட்டதும் படிப்படியாக மூண்ட சினத்தில் முற்றிலும் உருமாறிப் போவதுமாக... கூர்மையான எழுத்துக்களை பெண்ணின் உணர்வுகளிலே தோய்த்து வடிவமைத்திருக்கிறார் ஜெயமோகன். 

காதலும் கூட அரசியல் சார்ந்தது என்ற வெளிப்பாடு சால்வனின் வார்த்தைகளில் தெறிக்கிறது. அதே நேரத்தில் ஒரு ஆணும் பெண்மையை யோசிக்க முடியும் என்பதை “பெண்களின் மனதைத் திறக்காமல் அவர்கள் வயிற்றைத் திறக்க முடியாது” என்ற பிரம்மச்சரிய பீஷ்மரின் சொற்களில் கொண்டுவரும் லாவகம் ஜெயமோகன் பெண்மையையும், பெண்ணியத்தையும் ஆழமாக உணர்ந்திருப்பவர் என்பதை வெளிப்படுத்துகிறது.

சமீபத்தில் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் அறிக்கை பெரும் சர்ச்சையையும், அவரை நோக்கிய கண்டனக் கணைகளையும் கிளப்பிவிட்டிருக்கிறது. தன்னுடைய எழுத்துக்களை முழுமையாகப் படிக்காதவர்களின் சில்லரை உலகத்தில் தான் இல்லை என்று அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் அவர். ஆழமாக யோசித்துப் பார்த்தால் இன்று பிரபலமாக ஊடகங்களில் பேசப்படும் பெண் எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் பெண்ணியம் குறித்த பதிவுகள் உண்மையில் பெரும் அயர்ச்சியையே தருகின்றன. இலக்கியம் படித்தவள், அதை மாணவர்களுக்குச் சொல்லித் தருகின்றவள் என்ற முறையில் ராஜம் கிருஷ்ணன், அம்பை போன்றவர்களின் படைப்புக்களை வாசித்துப் பெற்ற அனுபவங்கள், புரிதல்கள் - இவற்றைத் தாண்டி இன்றைய பல பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் நம் சமூகத்திற்கு ஒவ்வாததாக அல்லது அந்நியப்பட்டு நிற்பதாகவே என்னால் எண்ண முடிகிறது.

ஹெப்சிபா ஜேசுதாசன், பாமா, சிவகாமி (சிலரது பெயர் விடுபட்டுப் போயிருக்கலாம்) - இவர்களின் எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கும் சமூகம் விளிம்பு நிலை மக்கள் பற்றிய வெளிப்பாடுகள் நம் மக்களை, அவர்களின் வாழ்வை கண் முன் கொண்டு வந்து கேள்விகளை முன் வைக்கிறது. சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகள் பல்வேறு சமூகக் காரணிகளால் அடிமைபடுத்தப்பட்டு குடும்பங்களிலும் சமூக வெளியிலும் ஒடுக்கப்படும் பெண்களின் உலகை எதார்த்தத்தோடு பதிவு செய்கிறது. இன்றும் நம் சமூகத்தின் நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்வின் இருத்தலுக்கான போராட்டத்திலும் தன் மீது ஏவப்படும் பொருளாதார மற்றும் பாலியல் சுரண்டல்களிலிருந்து விடுபடுவதற்காக ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் இன்றைய பல பெண் எழுத்தாளர்களின் கவனத்திற்குள் இல்லை என்பதுதான் உண்மை.

சில பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து பெண்களின் உடல்கள், உடல் மொழி, பாலியல் உறவில் தங்கள் சுயம் என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் உறவில் பெண்களுக்கு இன்பம் கிடைப்பதில்லை அதைவிட சுய இன்பத்தில் அதிகம் சுகம் காண்கிறார்கள் என்பதுபோன்ற எழுத்துக்கள் எந்த அளவிற்கு இப்போதைய உடனடித் தேவை, அதனால் யார் பயன்பெறப் போகிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேற்கத்திய நாடுகளிலிருந்து இரவல் பெற்ற கோட்பாடுகளை பெண்ணிய சிந்தனை என்ற பெயரில் எழுதுவது முற்றிலும் வேறுபட்ட நம் சமூகத்திற்கு எந்த அளவிற்குப் பொருந்தும் என்பது புரியவில்லை. பழந்தமிழ் இலக்கியங்களிலும் கூட பெண்கள் தங்கள் உடல் அழகைத் தாங்களே வியந்துகொள்ளக் கூடாது, காமத்தை வெளிப்படுத்தக்கூடாது என்ற தொல்காப்பிய இலக்கணத்தை மீறி பாடல்கள் பாடிய பெண்பாற் புலவர்கள் பலர் உண்டு. அவர்கள் எந்த மேற்கத்தியக் கோட்பாடுகளையும் கடன் பெற்று இலக்கியம் எழுதவில்லை. பெண்ணின் வாழ்வோடு, உணர்வுகளோடு இயைந்த எதார்த்தத்தை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகளுக்கே வழியின்றி வர்க்கப் போராட்டத்தில் சுழன்று கணவனாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுகின்ற உழைக்கும் பெண்கள் தங்கள் வேதனையோடு குழந்தைகளையும் விடாமல் சுமந்துகொண்டு இருத்தலுக்கான பெரும் போராட்டத்தில் இருக்கும்போது பாலியல் உறவு இன்பம் பற்றி எங்கிருந்து சிந்திக்கத் தோன்றும்? 

சித்தாள் முதல் உயர்ந்த பதவியில் இருக்கும் பெண்கள் வரை சந்திக்கும் பாலியல் வன்கொடுமைகள் பெருகிவரும் இந்நாளில் தங்கள் உடலை கீழானதாக்கிக் கொள்ளாமல் வன்கொடுமைக்கு எதிராக அன்றாடம் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் பெண்கள், அதிலிருந்து விடுதலை பெற இதுபோன்ற எழுத்துக்கள் எந்த வகையில் உதவ முடியும்? 

பெண்கள் சுமாகவும், கௌரவமாகவும், முழுமையான உரிமைகளுடனும் வாழ்வதற்கு வழியில்லாத ஒரு சமூகத்தில் பாலியல் உறவும் இன்பமும் பற்றிய சிந்தனையில் எத்தனைப் பெண்கள் அதுதான் தங்கள் முக்கியமான உரிமை என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்?

அஸ்திவாரமே அமைக்கப்படாதக் கட்டிடத்தில் மேல் தளத்தை எழுப்புவது போன்ற முயற்சிதான் இதுபோன்ற எழுத்துக்கள். 

வெகுஜன ஊடகங்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் stereotype பெண்களை சித்தரித்து, அவர்கள் விளம்பரங்களில் பெண்களைச் சந்தைப்படுத்துகின்ற வேலையை வெகு சாதாரணமாகச் செய்து வருகின்றன. அதே ஊடகங்கள் முரண்பாடாக தாங்கள் பெண்ணியத்தின் பெரும் ஆதரவாளர்கள் என்ற போலியான சித்தரிப்புக்காக இப்படி எழுதும் சில பெண் எழுத்தாளர்களைத் தங்கள் நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றனர். குடும்பம், அதன் உறவுகள் - இவற்றில் இருக்கும் போலித்தனங்களைக் கேள்வி கேட்டுக்கொண்டே, அதே நேரத்தில் தங்கள் சுயத்தை இழந்துவிடாமல் வாழந்துவருகின்ற பெண்கள் அணியும் ஆடைகள், அவர்களின் வாழ்க்கை முறை எனப் பல விஷயங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இந்தப் பெண் எழுத்தாளர்களைக் கொண்டே கேலிக்குள்ளாக்கப்படுகின்றன. 

உதாரணத்திற்கு, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் பெண்கள் ஏன் பட்டுப்புடவையும் தலையில் பூவுமாக வரவேண்டுமென்று ஒரு பெண்ணிய எழுத்தாளர் ஒரு முறை கேள்வி எழுப்பினார். விரும்பிய உடை அணிவதற்கும், விருப்பப்படி தன்னை அலங்கரித்துக்கொள்வதற்கும் அவரவர்க்கு உரிமை உள்ளது. புடவை, சுடிதார், ஜீன்ஸ் - எதுவாக இருப்பினும், அதை அணிகின்ற பெண்ணின் விருப்பத்தையும் தேவையையும் பொருத்தது. வெளி அடையாளங்களில் பெண்ணியம் நிர்ணயிக்கப்படுகிறது என்று மற்றவர்களைக் கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தான் செய்வது சரி, மற்றவர்கள் செய்வது தவறு என்ற ஆதிக்க மனோபாவத்தையல்லவா அது காட்டுகிறது? ஒருபுறம் பெண்களை எதார்த்தத்திலிருந்து முரண்பட்டு செயற்கையாக மெகா-மகா சீரியல்களில் சித்தரித்தபடி விளம்பரங்களில் சந்தைப் பொருளாக்கிவிட்டு மறுபுறம் தாங்கள் பெண்ணியத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் என்ற பாவனையை ஏற்படுத்தும் வெகுஜன ஊடகங்களின் போக்கிற்கு இதுபோன்ற பெண் எழுத்தாளர்கள் பலியாகிறார்கள் என்பதே உண்மை.

மகாபாரதக் கதைகள் உண்மையா இல்லையா என்ற சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், அவை உறவுகளை, உணர்வுகளை, பல விழுமியங்களை நம்மில் புதுப்பிப்பவை. அதன் தொன்மங்களும் படிமங்களும் பல்வேறு சிந்தனைகளை இன்றைய சமூகத் தளத்திலும் எழுப்புபவை என்பதை மறுப்பதற்கில்லை.

அம்பை, சத்தியவதி பாத்திரப்படைப்புகளில் நுண்மையான பெண்ணிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஜெயமோகனின் எழுத்துக்கள் பெரும் வீச்சை எழுப்பியிருக்கின்றன. சில்லரை உலகத்தில் தான் இல்லை என்ற அவரது அறிக்கையை அவை மெய்ப்பிக்கின்றன.