சனி, 2 நவம்பர், 2013

மருந்துக் குழம்பு


தமிழ்ச் சமூகத்தில் நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டார்கள். செயற்கை சிறிதும் கலக்காத இயற்கையான வாழ்க்கை முறையில் உணவும் இயற்கையானதாகவே இருந்ததால் ஆரோக்கியமும் ஆயுள் பலமும் அபரிதமாகப் பெற்றிருந்தார்கள். பல உணவு முறைகள் மறக்கப்பட்டு மறைந்தும் போய்க் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அந்தக் காலத்தில் புட்டிப் பாலோ, பால் பவுடரோ இல்லாமல், தாய்ப்பாலே சிறந்த உணவாகக் குழந்தைக்குக் கொடுக்கப்பட்டபோது, குழந்தையைப் பெற்ற தாயின் உடல் பலத்தை, நலத்தைப் பேணவும், குழந்தைக்கு நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் விதத்தில், பால் சுரப்பை அதிகப்படுத்தவும் ஏற்ற வகையில் சிறப்பான உணவு தயாரித்துக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் மூன்று வயது வரையும், சில நேரங்களில் ஐந்து வயது வரையிலும் கூட குழந்தைகள் சிலர் தாய்ப்பால் பருகி ஆரோக்கியமாக வாழ்ந்த கதையை இன்றும் நம் ஊர்களில் கேட்க முடிகிறது. இப்போதோ பொருளாதார தேவைக்காக பல்வேறு பணிகளுக்குச் செல்லும் பெண்கள், சரியான உணவில்லாமல் உடல் பலமின்றி குழந்தை பெற்றுக்கொள்ளும் காலத்தில் அவஸ்தை படுகிறதை பார்க்க முடிகிறது. தாய்ப்பால் இல்லாமல் புட்டிப் பாலிலேயே குழந்தைகள் வளர்வதும் வெகு சாதாரணமான ஒன்றாகிவிட்டது. குழந்தைப் பேறு காலத்தில் தாயின் உடல் நலத்தைப் பேணவும் அதிக தாய்ப்பால் சுரக்கவும் வழி, வழியாக நம் முன்னோர்கள் சில உணவுகளை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். சில ஊர்களில் இன்றும் அது நடைமுறையில் இருக்கிறது. ‘மருந்துக் குழம்பு’ என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. என் பாட்டியும், அம்மாவும், பெரியம்மாவும், சித்தியும், எங்கள் ஊரில் இருக்கும் பல பெண்களும் இந்த ஸ்பெஷல் குழம்பை, குழந்தை பிறந்த மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாளிலிருந்து தாய்க்குக் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். என் பாட்டிக்கு 11 குழந்தைகள் என்பதால், மகளோ, மருமகளோ, யாருக்கேனும் என் ஸ்டெல்லா சித்தி இந்த மருந்துக் குழம்பை பிரசவத்திற்குப் பிறகு தயாரித்துக் கொடுத்து அதில் நிபுணியாகவே மாறிவிட்டார்கள். எல்லா காலத்திற்கும், குறிப்பாக உடலில் பலம் இழந்து போய் புரத சத்து மிகுந்த தாய்ப்பாலுக்காக ஏங்கும் குழந்தைக்கு, புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்காக இந்த குழம்பு தயாரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், சித்தியிடம் கேட்டு அந்தக் குழம்பு செய்முறை குறிப்பினை தந்துள்ளேன்.

தேவையான பொருட்கள்:
ஓமம் – 25 கிராம்
கடுகு - 25 கிராம்
மிளகு - 4 அல்லது 6
திப்பிலி - 4
நறுக்குமூலம் - 7 அல்லது 8
சுக்கு – 3 துண்டுகள்
நீள மஞ்சள் - 2
பூண்டு - ஒரு கை நிறைய
நல்லெண்ணெய் - 100 கிராம்
தக்காளி – 1
கருவாடு – 3 அல்லது 4 துண்டுகள் (சுவைக்காக)

செய்முறை:
ஓமம், கடுகு, மிளகு, திப்பிலி, நறுக்குமூலம் – இவற்றை சேர்த்து அம்மியில் வைத்து (கண்டிப்பாக மிக்ஸியில் அரைக்கக் கூடாது) நன்றாக மசிய அரைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தனியே எடுத்து வைத்துவிட வேண்டும். பிறகு, சுக்கையும், மஞ்சளையும் அம்மியில் அதேபோல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு எல்லாவற்றையும் கலந்து, பூண்டையும் தக்காளியையும் சேர்த்து, பாத்திரத்தை (மண் சட்டியாக இருந்தால் நல்லது) அடுப்பில் வைக்க வேண்டும். ஓரளவு சூடேறியதும் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். கூடவே மூன்று அல்லது நான்கு கருவாட்டுத் துண்டுகளைப் சேர்க்க வேண்டும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் கரண்டியால் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஓரளவு கெட்டிப் பதத்திற்கு வந்த பிறகு இறக்கிவிட வேண்டும்.

உண்ணும் முறை:
குழந்தை பெற்ற தாய்மார்கள் வெந்நீரில் காலையில் குளித்துவிட்டு குழைய வெந்த சாதத்தில் இந்த மருந்துக் குழம்பைக் கலந்து சாப்பிட வேண்டும். (டிபன் சாப்பிடுவதற்கு பதிலாக இதைச் சாப்பிடுவது நல்லது). இதே குழம்பை இரவும் சூடான, குழைந்த சாதத்தில் கலந்து சாப்பிடலாம். பேறு காலத்திற்குப் பின் பலவீனமான உடம்பை பலப்படுத்தவும், குடல் புண்ணை ஆற்றவும் பயன்படுவதோடு, முக்கியமாக தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்கிறது. இயற்கையான முறையில் குழந்தை பெற்றிருந்தால், குழந்தை பிறந்த மூன்றாவது அல்லது ஐந்தாவது நாளில் இந்த உணவினை சாப்பிடலாம். சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்றிருந்தால், தையல் பிரிக்கப்பட்டு அந்தப் புண் ஆறிய பிறகு இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக