எழுத்தாளர் சாரு நிவேதிதா 'நிலவு தேயாத தேசம்' என்ற தலைப்பில் அந்திமழை இதழில் தனது துருக்கிப் பயணம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். பள்ளிக் காலத்திலிருந்தே வரலாறு எனக்கு மிக மிக விருப்பமான பாடம். பாளையம்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்த போது அமெரிக்க வரலாறு, இந்திய வரலாறு, இங்கிலாந்து வரலாறு, முக்கியமாக பிரஞ்சு தேசத்தின் வரலாறு போன்றவை ஆர்வத்தை ஏற்படுத்தியவை. மேலும் மேலும் படிக்கத் தூண்டியவை. ஆனால் சீனா, துருக்கி ஆகிய இரண்டு நாட்டு வரலாறுகளும் ஏனோ கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை; தேர்வுக்காகப் படித்ததுடன் சரி. எனவே இந்தப் பயணக் கட்டுரையினைப் படிக்கலாமே என வாசிக்கத் தொடங்கினேன். இதை நான் ஏன் குறிப்பாகச் சொல்கிறேன் என்றால் சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் எனக்கு ஆர்வமில்லை. தமிழகத்தில் பாலியல் வறட்சி எனச் சொல்லிக் கொண்டு அந்த வறட்சியில் அல்லல்படுபவர்களக் கடைத்தேற்ற வந்தவன் தான் என்பது போல எழுதப் படும் அவரது எழுத்து எனக்குப் பெரிய ஒவ்வாமையே. ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றியது அல்ல. எனக்கு ஏன் அவரது எழுத்து பிடிக்கவில்லை என்று சொல்வதற்காக இப் பதிவினை நான் எழுதவில்லை. அது தேவையற்றது.
துருக்கிப் பயணம் பற்றிய தனது பதிவின் ஊடாக சங்க காலத்து ஔவையாரைப் பற்றிப் போகிற போக்கில் முரணான, சரியாகச் சொல்வதென்றால் பொய்யான தகவலைச் சொல்லிச் சென்றிருக்கிறார். எழுத்தாளன் என்றாலே ஏழைதான் எனச் சொல்லும் அவர் அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் ஔவையார் கூட, தனக்குத் தானம் தராத மன்னனைக் கன்னா பின்னாவென்று ஏசிச் செல்வதாகவும் அதுவும் மன்னனின் முகத்துக்கு நேரே ஏசினால் சிறைச்சாலை என்பதால் வாயில் காப்போனிடம் வசை பாடிச் செல்வதாகவும் எழுதியிருக்கிறார். அந்த மன்னன் யார் என்ற குறிப்பு அதில் இல்லை. வெளிநாட்டுக்குச் சென்று வந்து பயணக் கட்டுரை எழுதுவதற்கும், தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கும் பணம் கொடுங்கள் என்று இணையத்தில் தனது வங்கிக் கணக்கினை #சாருநிவேதிதா கொடுப்பதும் அவரது எழுத்துக்களால் உலகம் அல்லது குறைந்த பட்சம் தமிழ்ச் சமூகம் பெரும் பேறு பெற்று விடும் என நம்பி வாசகர்கள் பணம் கொடுப்பதும் அவர்களுடைய விருப்பம் அல்லது உரிமை.
தன்னுடைய செயலையோ நிலைப் பாட்டினையோ நியாயப் படுத்திக் கொள்வதற்காக சங்க இலக்கியத்தின் பெரும் ஆளுமையான ஔவையாரை ஏன் சாரு நிவேதிதா கொச்சைப் படுத்த வேண்டும்? அதியமானைச் சந்தித்துப் பரிசில் பெற வரும் ஒளவையாரை அவனது அரண்மனையில் அமைச்சர் உள்ளிட்ட பலரும் நன்கு உபசரிக்கின்றனர். ஆனால் அதியமான் அவளைச் சந்திக்காமல் காலம் தாழ்த்துகிறான். அவளைப் பார்த்துப் பரிசில் வழங்கி விட்டால் அங்கிருந்து சென்று விடுவாள்: மேலும் சில காலம் அவள் தன் அரண்மனையில் தங்க வேண்டும் என்பதனாலேயே அவன் அவ்வாறு செய்கிறான். அறிவுச் செருக்கும் துணிவும் கொண்ட ஔவையாரோ தன்னை நேரில் சந்தித்து, தன் பாடலில் மகிழ்ந்து, தனக்குப் பரிசில் தராத மன்னனின் அரண்மனையில் தங்குவது தனது தன் மானத்துக்கு இழுக்கு என எண்ணுகிறாள். அவ்வேளையில்தான் வாயில் காப்போனிடம் அவள் பாடுகின்ற பாடலைத்தான் சாரு நிவேதிதா குறிப்பிடுகிறார். புறநானூற்றில் 206வது பாடலாக இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அப்பாடலின்,
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
என்ற வரிகளில் அதியமான் தன்னுடைய தரம் அறியாதவனா அல்லது என்னுடைய தரம் அறியாதவனா எனக் கேள்வி எழுப்பும் அவர் தான் வெறும் சோற்றுக்காக அங்கு வந்து தங்கவில்லை என்றும் மன்னன் தன்னைச் சந்திக்காமல் காலம் கடத்துவது தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால் செல்வதாகவும், கற்றறிந்த புலவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு.
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே
எனக் கூறுகிறாள். அதன் பிறகே அதியமான் உடனே அவளை நேரில் சந்தித்து வரவேற்று உபசரிப்பது மற்றும் நெல்லிக்கனி கொடுப்பது, அவனுக்காக அவள் தொண்டைமானிடம் போர் வேண்டாம் என தூது செல்வது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அதியமான்-ஔவையார் நட்பு தமிழைக் கற்றறிந்த அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்று. அவன் இறந்த பிறகு அவள் பாடும் கையறு நிலை பாடல் அந்த நட்பின் மகத்துவத்திற்குச் சான்றாகப் போற்றப்படுகிறது.
அதியமானின் மகன் பொருட்டெழினிக்குக் கூட ஔவையார் அறிவுரை கூறும் பாடல்களும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த உண்மைகளையெல்லாம் ஒருவேளை சாரு நிவேதிதா தமிழ் இலக்கியத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ளாததினால் அறியாமல் இருக்கலாம். தமக்குத் தெரியாததினாலேயே வாய்க்கு வந்ததைத் தாறுமாறாக எழுதி ஞானச் செருக்கு மிக்க ஔவையாரையும் அதியமானின் கொடைத் தன்மையையும் புலவர்களிடம் அவன் கொண்ட பேரன்பையும் அவமதித்துள்ளார்.
பொதுவாகவே, அரிதாக சில மன்னர்கள் தவிர மற்ற மன்னர்கள் சிற்றரசர்கள், புலவர், பாணன், பாடினி, பொருநர், என அனைவரையும் மதித்துப் போற்றியுள்ளனர். கரிகால் பெருவளத்தான் பரிசிலும் கொடுத்து ஏழடி புலவர் பின்னே சென்று அவர்களை வழியனுப்பி வைத்ததாக சங்க இலக்கியத்தின் வழி அறிகிறோம்.
தம்மை நேரில் பார்க்காது யாரேனும் ஒரு மன்னன் பரிசளித்தால் அதை வாங்க மறுத்துள்ளனர் புலவர்கள். புறநானூற்றின் 208வது பாடல், நேரில் தன்னைச் சந்தித்து மனமுவந்து கொடுக்காத பரிசிலை ஏற்றுக்கொள்வதற்குத் தான் ஒன்றும் வாணிகப் பரிசிலன் அல்லேன் என பெருஞ்சித்திரனார் மறுப்பதாகச் சொல்கிறது.
எந்த பழந்தமிழ் மன்னனும் புலவரை, பொருநரை சிறையில் அடைத்ததாகவும் பாடல்கள் சொல்லவில்லை. புலவர்கள் சொல்லும் அறிவுரைகளைக் கூட ஏற்று அதன் வழி மன்னர்கள் நடந்ததாகப் பல பாடல்கள் பதிவு செய்துள்ளன. சங்கப் பாடல்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதற்கு வெவ்வேறு கோணங்களில் பொருள் கொள்ள முடியும். ஆனால், அடிப்படைப் பொருளையே மாற்றி தவறான ஒரு செய்தியைப் பரப்புவதற்குக் காரணம் சாரு நிவேதிதாவின் அறிவீனமா அல்லது தனக்கு எல்லாம் தெரியும், தான் என்ன சொன்னாலும் மற்றவர்கள் நம்பிவிடுவார்கள், அல்லது நம்பியே ஆகவேண்டும் என்ற அகம்பாவமா? இந்த இலட்சணத்தில் இவர் இன்றைய தலைமுறையினர் தமிழை வளர்க்க வேண்டும் என்றும் தமது கட்டுரைகளில் கூப்பாடு போடுகிறார். இப்படித் தவறான, பொய்யான தகவல்களை எழுதினால் இளம் தலைமுறை எப்படித் தமிழை வளர்க்கும்?
#அந்திமழை என்ற இதழை பல கல்லூரிகளில் கூட வாங்குகிறார்கள். சாரு நிவேதிதாவின் கட்டுரைகளை வெளியிடும்போது அதில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் நீக்கிவிட்டுப் பிரசுரித்தால் நல்லது. சாரு நிவேதிதாவும் தனக்குத் தெரியாததை மாற்றியும், திரித்தும் எழுதுவதை நிறுத்திக் கொண்டால் தமிழுக்கு நல்லது.