வியாழன், 1 அக்டோபர், 2015

பெரியாரின் பெண்ணிய வெங்காயம்

வலம்புரி ஜான் என்ற பெயர் தமிழ் நாட்டில் பரவலாக அறியப்பட்ட ஒன்று. அரசியல்வாதி, மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சியில் உடல் நலக் குறிப்புக்கள் வழங்கிப் புகழ்பெற்றவர் என அவரைப் பற்றி ஏராளமாகச் சொல்லலாம். 1980களில் பல மேடைகளில் அவர் சொல்லும் வித்தியாசமான சின்னச் சின்ன கவிதைகள் கை தட்டலை அள்ளிச் செல்லும். காந்தி பற்றி ஒரு மாணவன் எழுதியதாய் அவர் சொன்ன கவிதை இன்றும் என் நினைவில் உள்ளது.

“வெங்காயமே, வெங்காயமே
நீயும் ஒரு காந்தியவாதிதான்
உரிக்க உரிக்கச் சும்மா இருந்துவிட்டு
உரித்த பின்பு உரித்தவனையே
அழ வைத்துவிடுகிறாயே!"

காந்தியின் அஹிம்சை வழிப் போராட்டத்தில் எதிரிகளே சோர்ந்துபோய் பின்வாங்கி விடுவார்கள் என்ற பொருளில் கூறப்பட்ட கவிதை இது. (இது கவிதையே இல்லை என்று யாரேனும் இலக்கியச் சண்டைக்குள் செல்ல விரும்பினால், அது அவரவர் விருப்பம்).


பெரியார் மிகப்பெரும் சீர்திருத்தவாதி, வைக்கம் வீரர், ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட இயக்கம் கண்டவர், சிந்தனையாளர், மிகப்பெரும் பெண்ணியவாதி என்றெல்லாம் போற்றப்படுபவர். குறிப்பாக பெண்ணிய சிந்தனை பேசும் திராவிட இயக்கப் பின்னணியில் வந்த சில பெண் கவிஞர்களும் சிந்தனாவாதிகளும் தங்களுக்குப் புதிய தரிசனம் கிடைத்தது 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற அவருடைய புத்தகத்தில்தான் எனப் பெருமை பேசுவதைக் கவனித்திருக்கிறோம். ஆனால், பெண்ணை அடிமையாகவே சிந்திப்பதும், வெறும் உடலாகவும், ஆண் அனுபவிக்கக் கூடிய உடைமைப் பொருளாகவும் அல்லது போகப் பொருளாகவும் சிந்திக்கின்ற வழக்கமான ஆண் மனது பெரியாருக்கும் கூட இருந்திருக்கிறது என்பதை அவரது கட்டுரைகளில் நாம் காண முடிகிறது.

பெண்ணுக்குச் சொத்துரிமை உண்டு. பெண்ணுக்குக் கற்பு தேவையில்லை. பாலுறவில் அவளுக்கு சுதந்திரம் வேண்டும். அவளை அடிமைப் படுத்துகின்ற கர்ப்பப் பையை அவள் அகற்றிவிடலாம் என்ற பெரியாரின் போதனைகள் பெண்ணிய சிந்தனையில் ஒரு பெரிய புரட்சி என்று அவர் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர் பலரும் பேசுகிறார்கள். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பெண்ணின் உள்ளாடைகளை எரித்து எங்களுக்கு விடுதலை வேண்டும் எனப் பெண்கள் போராடி ஆண்களை அதிர்ச்சியடையச் செய்தது போன்ற ஓர் அதிர்ச்சி வைத்தியம் போலதான் பெரியாரின் பெண்ணிய முழக்கமும். உள்ளாடை எரிப்பு என்பது ஒரு அடையாளமேயன்றி ஆண்-பெண் சமத்துவத்தில் அதற்கான வழிமுறைகளில் என்ன பங்கு வகிக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டதும் உண்டு.

பெண்ணியம் என்பது ஒரு பெண் ஆணாக மாறுவது அல்ல. பெண், தனக்குரிய இயல்பான சுதந்திரத்தோடு ஆணுக்குத் துணையாக மட்டுமல்லாமல், இணையாக வாழ்வது. பெண்கள் வெறும் உடலாகவும், உயிரை உற்பத்தி செய்யும் கருப்பையாக மட்டுமே பொதுவாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், கருப்பையை வெட்டி எடுப்பதால் மட்டும் சுதந்திரமும் உரிமைகளும் கிடைத்துவிடுமா? இது ஆணாதிக்கம் புரையோடிப்போன சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சி வைத்தியம். அதாவது இந்து மதத்தின் சில ஒவ்வாத சடங்குகளை, சம்பிரதாயங்களை, சாதியப் பாகுபாடுகளை எதிர்ப்பதற்காக அம்மதத்தின் கடவுள் சிலைகளையே செருப்பால் அடித்து, செருப்பு மாலை போட்டு, “இதோ பார், எனது கடவுள் மறுப்பு கொள்கையை!” என்ற பெரியாரின் நாத்திகச் சிந்தனை போன்றதுதான் அவருடைய பெண்ணியமும்.

அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே என்று வாதிட்டாலும், அவரே அதில் முரண்பட்டு நிற்கிறார் எனும்போது, அவர் உரக்கச் சொல்லிய கொள்கைகளில் நேர்மையும் சத்தியமும் இல்லை என்றுதானே பொருள்?”

கடவுள் மறுப்புக் கொள்கை பேசும்போது ஆரியக் கடவுள் என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களையும், இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான இராமாயண, மகாபாரதத்தையும் வகை தொகை இல்லாமல் வசை பாடுகிறார்!

ஒரு காவியம் அல்லது இலக்கியம் எழுதப்பட்ட காலச் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே ஆராயப்பட வேண்டும். அதிலும் மகா காவியங்களான இராமாயணமும் மகாபாரதமும் வெவ்வேறு காலகட்டத்தில் இந்தியாவிற்குள்ளும் இந்தியாவைக் கடந்தும் பேசப்பட்டு அந்தந்த ஊர் மக்களின் வாழ்வுச் சூழல், கலாச்சார, பண்பாடு, விழுமியங்கள் ஆகியவற்றை ஏற்று கலந்து பல்வேறு பரிமாணங்களைப் பெற்று இன்றளவும் காலத்தைக் கடந்து ஏற்றம் பெற்று நிற்கின்றன.

ஒரு கத்தோலிக்க கிறித்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதிலும் எங்கள் தந்தையால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பஞ்ச பாண்டவர் கதைகள், வாழ்வில் நீதியையும் நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்ற நியதியைக் கற்றுக் கொடுத்தன.

கம்பராமாயணம், பேரிலக்கியத்தின் தமிழ்ச் சுவையோடு சகோதரத்துவத்தையும், மனிதனாகும் கடவுளின் தத்துவத்தையும் சிவபக்தன் இராவணன் பிறன் மனை நோக்கியதால் பேராண்மை இழந்த இழிவையும் இளம் வயதில் நெஞ்சில் பதிய வைத்தது.

பதின்ம பருவம் கடந்து மார்க்சியத்தையும், பொதுவுடைமைத் தத்துவங்களையும் நீட்சேயையும் படித்தாலும் அவற்றின் சாராம்சங்களின் பின்னணியில் இந்த இரு பெரும் இதிகாசங்களை ஆராய்ந்தால் ஆய்வுக்குரிய, சர்ச்சைக்குரிய விஷயங்கள் மனதில் எழுந்தாலும் அதற்குரிய விடைகளும் இந்தக் காவியங்களிலேயே நாம் காணப் பெறுவோம்.

பெண்ணியம் பேசும் பலர் (குறிப்பாக இலக்கியவாதிகள்), சீதையை இராமன் அக்கினிப் பிரவேசம் செய்ய வைத்தான் என்றும் திரௌபதி ஐந்து கணவர்களோடு வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டாள்; இது தகுமா? என்றும் கேள்விகள் எழுப்புவது வழக்கம். அந்த இதிகாசங்கள் முழுமையையும் ஆழ்ந்து படிக்காமல் மானுட உணர்வுகளை மனப் போராட்டங்களை, அவலங்களை, அந்தச் சமூக சூழலின் பின்னணியோடு இணைத்துப் பார்க்காமல் முன் வைக்கப்படும் இந்த வறட்டு வாதங்களைக் கூட கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிடலாம். ஆனால், பெண்ணுக்குக் கற்பு தேவையில்லை என்று பேசிய அதே பெரியார், சீதை கற்போடு இருந்தாளா? எனவும், ஐந்து கணவர்களோடு வாழ்ந்த திரௌபதி பத்தினியாக முடியுமா? எனவும் மலிவான கேள்விகளை முன் வைத்ததும், இவர்கள் ஆண்களால் 'அனுபவிக்கப்பட்டார்கள்' என்று இழிவான சொற்களால் ஏளனப்படுத்துவதும், பெண்ணிய சிந்தனைவாதி எனப் பாராட்டப்படும் ஒருவரின் பகுத்தறிவுத் தளத்திலிருந்து எண்ணத்திலிருந்து உருவான அலங்கோல மலினம் அல்லாமல் வேறென்ன?

ஒரு சிறு உதாரணம்: சித்திர புத்திரன் என்ற பெயரில் குடியரசு இதழில் 08-03-1936-இல் பெரியார் எழுதிய கட்டுரை பெண்ணைப் பற்றி ஆபாச சிந்தனைகளை விதைக்கும் ஒரு மஞ்சள் பத்திரிகை அளவுக்கு மலினமான வார்த்தைகளாலும் கருத்துகளாலும் பரப்பப்பட்டிருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அம்மதம் தொடர்பான கதைகளில் இடம்பெறும் பெண்களை, இவள் கற்பிழந்தவள், சீதை இராமனுடன் விரும்பிச் சென்றாள் என்று எழுதுவதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. சீதை கற்பு நெறி தவறியவள் என்பதைத் தான் நிறுவியே ஆகவேண்டும் என்பதற்காக ஒரு படி மேலே போய், “சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையை கற்பிப்பதற்கு ஆக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள். இந்தப் பெருமையைப் பற்றியும் கதையில் வால்மீகி ஜாடை மாடையாய் காட்டி இருப்பதுபற்றியும் நமக்கு இப்போது தகறார் இல்லை. ஆனால் கதையின் தத்துவப்படி மூலகாரணப்படி சீதை கற்புடையவளாக இருந்திருக்க முடியுமா என்பதுதான் கேள்வியாகும்.” என வாதிடுகிறார்!

பெண்ணுரிமை பேண விரும்பும் எவரும் இப்படி எழுதுவதற்கோ, பேசுவதற்கோ வாய்ப்பில்லை. ஒரு உக்கிரமான போரில் வெற்றி பெற்ற பிறகு தோல்வியுற்றவர்களின் பெண்களை வேட்டையாடும் வெற்றி பெற்றவர்கள் போல ஒரு தாக்குதலை பெரியார் சீதை மேல் நிகழ்த்துகிறார். கடவுளை நம்புவதும், ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் அவரவர் விருப்பம். கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் அநியாயங்கள் இழைக்கப்பட்டால் அவை கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டுமே தவிர, அம்மதம் தெய்வங்களாகக் கொண்டாடும் பெண்களை குறைந்த பட்சம் நாகரீகம் கூட இல்லாமல் தாக்குவது பெண்ணியத்தின் ஒரு அங்கம் ஆகுமா?

பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம் என்று மார் தட்டிக்கொள்ளும் சிலரும் இந்த மலினமான வேலையைச் செய்கிறார்கள். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தின்போது ஃபிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழச்சி என்ற சகோதரி, தனது முகநூலில் எழுதியிருந்த பதிவு பலரைப் பதறச் செய்தது, சிலரை முகம் சுளிக்கச் செய்தது. கன்னி மரியாள் என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் மரியாள் வீதியில் நடந்துசென்றபோது இராணுவ வீரன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதன் விளைவாகவே இயேசு பிறந்ததாகவும் வெகு ஏளனமான மொழிநடையில் பதிவிட்டிருந்தார். அதற்குச் சில நூல் ஆதாரங்களையும் குறிப்பிட்டிருந்தார். யூதர்களின் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களை அறிவதற்கும் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை அறிந்துகொள்வதற்கும் உதவியாக இருக்கும் பைபிள், கிறித்தவ மக்களால் புனித நூலாகக் கருதப்படுகிறது. ஆனால், பலரால் எழுதப்பட்ட ஏடுகளில் கிடைக்கப்பெற்ற சில ஏடுகளிலும் கிறித்தவம் ஆராய்ந்து பார்த்து வெகு சிலவற்றை ஏற்றுக்கொண்டு மற்றவற்றைப் புறந்தள்ளிவிட்டது. அப்படிச் சில ஏடுகளை எடுத்துக்கொண்டு ஆதாரமின்றி அம்மதத்தின் போற்றப்படும் பெண்ணை மட்டும், அதிலும் அவள் கற்பு நெறி தவறியவள் என்று சேற்றை வாரி இறைப்பதுதான் பெரியார் வழிப் பெண்ணிய சிந்தனையா?

நான் முதுகலை முதலாம் ஆண்டு படித்தபோது, உடன் பயின்ற மாணவர் திருமந்திரம் நடத்திக்கொண்டிருந்த பாதிரியாரிடம் திடீரென்று ஒரு கேள்வி எழுப்பினார். பைபிளில் கிறிஸ்து பிறக்கும் வரை அவர் (அதாவது இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஜோசப்) அவளை (அதாவது இயேசுவின் தாய் மரியாள்) அறியாதிருந்தார் என்று எழுதப்பட்டுள்ளதே. அப்படியென்றால் அதன் பிறகு என்ன நடந்தது? எனக் கேட்டார்.  பல மொழி புலமை கொண்ட பாதிரியார் பொறுமையாகப் பதிலளித்தார்.

கிரேக்க மொழியில் வாக்கிய அமைப்பு இவ்வாறே இருக்கும். அது அந்த மொழியின் தனித்தன்மையே அன்றி அதுவரையில் அறியாதிருந்தார் என்றால் அதன் பிறகு அறிந்தார் என்பது பொருளல்ல என்ற விளக்கம் அறிவு பூர்வமானதாக இருந்ததோடு எந்த இலக்கியமோ, மதமோ, மதம் தொடர்பான புத்தகங்களோ, எழுதப்பட்ட மொழியின் இலக்கணத் தன்மையோடு வாசித்து அறியப்பட வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தியது.

பைபிளில் சில இடங்களில் திடீரென்று இயேசு பெத்தானியாவிற்குச் சென்றார் எனச் சொல்லப்படும். பெத்தானியா என்ற ஊருக்குள் ஒருவன் பிரவேசித்துவிட்டால் அவன் அங்கிருந்து வெளியேறும் வரையில் கைது செய்யப்படக் கூடாது என்ற நடைமுறை அன்றைய யூதர் காலத்தில் இருந்துள்ளது. இந்தப் பின்புலம் தெரிந்தால் மட்டுமே அக்குறிப்பிட்ட நேரத்தில் இயேசு பெத்தானியாவிற்கு ஏன் சென்றார் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

எனவே, ஒரு இலக்கியமோ, மதம் சார்ந்த இதிகாசமோ படிக்கப்படும்பொழுது, அது எழுதப்பட்ட மொழி, அதன் இலக்கணம், எழுதப்பட்ட காலம், அப்பொழுது நிலவிய அரசியல் பண்பாட்டுச் சூழல் போன்ற அம்சங்களைக் கணக்கில் கொண்டே வாசிக்கவும் ஆராயவும் வேண்டும். அதைவிடுத்து மேம்போக்காக தான் உருவாக்கிக் கொண்ட ஒரு பிம்பத்திற்கு உண்மை உருவம் கொடுப்பதும்ஆங்காங்கே தகவல்களையும், வார்த்தைகளையும் உருவி எடுத்துப் பொருள் கொள்ளுவதும் பெண்ணிய சிந்தனாவாதியாகப் பேசிவிட்டு பெண்களையே, அதுவும் தானே ஏற்றுக்கொள்ளாத கற்பு நெறி சார்ந்து தாக்குவதும் எந்த வகையில் நியாயம் ஆகும்?

பெரியார் பல சமூக சீர்திருத்தங்களை தான் வாழ்ந்த காலத்தில் முன்னெடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவர் எழுதிய இதுபோன்ற கட்டுரைகள் அவர் உதிர்த்த பெண்ணிய கருத்துகளுக்கு முரணானவை மட்டுமல்ல, எதிரிடையானவை. உரிக்க உரிக்கச் சும்மா இருந்துவிட்டு உரித்த பின்பு உரித்தவனையே அழ விடும் வெங்காயம் போல, பெரியாரின் பெண்ணிய வெங்காயம் உரித்து, உரித்துப் பார்த்தாலும், இது தானா பெரியாரின் பெண்ணியம் என்று கடைசியில் நெஞ்சிலும் கண்ணிலும் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.


~~~~~