வெரசலா கிளம்பிருக்கலாமோ ? ஜன்னலோர சீட்டில் அமர்ந்து மடியிலிருந்த மஞ்சள் பையை இறுகப் பற்றியபடி வெளியில் கவிழ்ந்திருந்த இருளைத் துழாவிய சின்னத்தாய் மறுகினாள் .
என்ன செய்றது ? திருநெல்வேலியிலிருந்து பஸ் ஏற்றி விடும் போது வண்டியேறி சொன்னதால் தானே திருவண்ணமலையில் இறங்க வேண்டியதாப் போச்சு !
ஆத்தா "பட்டணத்துக்கு தனியாப் போவாதே ,அரசம்பட்டியில இருக்க ஒன்னோட அண்ணன் மவனைக் கூட்டிகிட்டுப் போ; அவியளுக்கு சென்னையில மூல முடுக்கெல்லாம் தெரியும் .பூத்தொரை காலேஜில சேரும் போது கூட வந்து வெவரம் சொல்லி சேர்த்து விட்டது அவியதானே" என்று சொன்னதுடன் திருவண்ணமலையில் இறங்கி அரசம் பட்டிக்கு எப்படிப் போகணும் என்பதையும் விளக்கமாச் சொல்லியிருந்தான் .
அவன் சொன்னது சரிதான். டவுன் என்றால் சின்னத்தாயிக்கு ஆலங்குளம் பஸ்-ஸ்டாண்டும், செல்வராணி ஸ்டோர்ஸ்-ம், கணேசன் செட்டியார் எண்ணெய் கடை இன்னும் சில பழக் கடைகளும், கூடவே பூத்தொரைக்கு பிடிச்ச சுத்துமிட்டாய் விக்கிற ராசாத்தி ஸ்வீட் ஸ்டாலும்தான். பஸ் வசதி இல்லாத சொக்கநாதபட்டி கிராமத்தில், யாருக்காவது உடம்பு ரொம்ப முடியாம போயி, பாளையங்கோட்டை ஹை-க்ரவுண்டு ஆஸ்பத்திரியில சேர்த்தா மட்டும் எல்லாரோட சேர்ந்து போய் பார்ப்பது வழக்கம். அப்பகூட திருநெல்வேலி பஸ்-ஸ்டாண்டும், மருந்து வாடை வீசற ஹை-க்ரவுண்டு பஸ் ஸ்டாண்டையும் தவிர வேறு எதையும் அவள் பார்த்ததில்லை. அதனால்தான் விக்கிரமசிங்கபுரத்தில் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு சென்னையின் மிகப் பெரிய கல்லூரியில் படிக்கவேண்டும் என்று அவன் பிடிவாதம் பிடித்தபோது, திக்கு தெரியாமல் திகைத்துப் போனாள் சின்னத்தாயி.
"பணம் ரொம்ப கட்டவேண்டியிருக்காது. சாமியாருங்க நடத்தற காலேஜ்தான். ஆனா, அவ்ளோ தூரம் பையனை அனுப்பிட்டு எப்படி இருப்பே?" என்று நாலாங்கட்டளை பள்ளிகூடத்து சார்வாள் கூறியதும்," இல்லை சார்வாள் , அங்க படிச்சாதான் பையன் பெரிய ஆளா வரமுடியுமாம். அவன் ஆசைப்படியே படிக்கட்டும். எம்புட்டு தூரம் போனாலும், அவன் எம்புள்ளதானுங்களே என்று உறுதியாக நின்றாள் சின்னத்தாயி.
"அந்த காலேஜ்ல சீட்டு கெடைக்கிறது, குதிரைக் கொம்பாம், நான் பாளையங்கோட்டை பெரிய ஃபாதர் கிட்டெல்லாம் பேசி பாத்துட்டேன். வேணும்னா இங்க சேவியர்ஸ் காலெஜ்லயே சேத்துவிடலாம்னு சொல்லுறாங்க." என்று சார்வாள் தெரிவித்ததும் வெண்டைக்காய் பறித்ததால் நமநமத்துக்கொண்டிருந்த கையை சேலை முந்தியில் அவசரமாக துடைத்துக்கொண்டு அவர் காலில் விழுந்துவிட்டாள் சின்னத்தாயி. சார்வாள் யோசித்தார். அவருக்கு ஒரே ஒரு வழிதான் புலப்பட்டது. ஆலங்குளத்தில் நிலபுலங்களுடன் சுற்றுவட்டாரத்தில் பெரிய செல்வாக்கும் பெற்றிருந்த கிறிஸ்தவ குடும்பமான அடைக்கலசாமி வீட்டிற்கு பூத்துரையை அழைத்துச் சென்றார். கூடவே சென்ற சின்னத்தாயும் கையெடுத்து கும்பிட்டு மன்றாடினாள். அடைக்கலசாமி முதலில் தயங்கினாலும், பூத்துரையின் மதிப்பெண் பட்டியலையும், சின்னத்தாயின் களைத்த முகத்தில் இருந்த ஏக்கத்தையும் கவனித்துவிட்டு, யார் யாருக்கோ ஃபோன் பண்ணினார். பிறகு, "இரண்டு மணி நேரம் கழித்து வாருங்கள், தகவல் தருவதாக சொல்லியிருக்கிறார்கள்." என்றார். சார்வாள், நல்லூரில் இருக்கும் தன் தங்கையை பார்த்துவிட்டு வருவதாகக் கிளம்ப, அடைக்கலசாமி வீட்டுப் பின்னால் அமர்ந்து பருத்தியை பிரித்துப் போட்டுக் கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து மளமளவென வேலையில் ஈடுபட்டாள் சின்னத்தாயி.
வெளிநாட்டில் படித்துவிட்டு கையோடு அங்கே தன்னுடன் படித்த பெண்ணை திருமணம் செய்து அழைத்து வந்திருந்த அடைக்கலசாமியின் மகன், அருள்ராஜா, பூத்துரையின் எதிர்கால திட்டங்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் தனக்கிருக்கும் ஈடுபாடு பற்றி ஆர்வத்துடன் விவரித்துக்கொண்டிருந்தான் பூத்துரை.
"சம்திங் ராங், இட்ஸ் நாட் வர்க்கிங்" என்று கையில் வெள்ளை நிறத்தில் பளபளத்த லேப்டாப்பை தூக்கிக் கொண்டுவந்தாள் அருள்ராஜின் மனைவி நிர்மலா. அதை வாங்கி இருக்கின்ற எல்லா பட்டன்களையும் அழுத்தி என்னென்னவோ செய்துபார்த்த பிறகும், "பெரிய மிஸ்டேக்கா இருக்கும்போல தெரியுது. நாளைக்கு திருநெல்வேலிக்கு எடுத்திட்டு போய் சரி பண்ணலாம்" என்று அவளிடமே அவன் திரும்பக் கொடுத்தான். "இப்படி குடுங்க அக்கா" என்று லேப்டாப்பை வாங்கிக் கொண்ட பூத்துரை, பத்தே நிமிடத்தில் சரி செய்து "இப்ப வேல செய்து பாருங்க!" என்று கொடுப்பதை பருத்தி பிரித்து போட்டுவிட்டு அங்கு வந்த சின்னத்தாயும் பெருமை தாளாது கண்கலங்க பார்த்தாள்.
"பரவால்லியே மா, நீங்க கம்ப்யூட்டர் சம்பந்தமா கோர்ஸ் எல்லாம் படிக்க வச்சிருக்கீங்க போல தெரியுது" என்று நிர்மலா கூறியதும், "கஷ்ட ஜீவனத்துல ஆத்தாவுக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம்னு லீவ்ல எம்புள்ள திருநெல்வேலில கொஞ்ச நாள் நீ கைல வச்சிருக்கிறியே தாயி.., அந்த பொட்டி ரிப்பேர் பண்ற கடையில வேலை செஞ்சான்." என்றாள் சின்னத்தாயி.
அதன் பிறகு, உள்ளே சென்று அருள்ராஜும் நிர்மலாவும் அடைக்கலசாமியிடம் ஏதோ பேசினார்கள். கொஞ்ச நேரத்தில், "உம் மகனுக்கு சென்னை காலேஜ்ல மட்டுமில்ல, ஹாஸ்டல்லயும் இடம் வாங்கியாச்சு. புறப்படுறதுக்கு ஏற்பாடு பண்ணு." என்று அடைக்கலசாமி கூறியதும்,
"அய்யாசாமி நீங்க நல்லா இருக்கணும்யா" என்று கையை தலைக்கு மேலே உயர்த்தி கும்பிட்டாள் சின்னத்தாயி. வாயடைத்து நின்றிருந்த பூத்துரையை தட்டிக்கொடுத்த அருள்ராஜாவையும், அடைக்கலசாமியையும் வணங்கிய பூத்துரை, அம்மாவை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது, நிர்மலா வந்து அவன் கையில் கொஞ்சம் பணத்தை வைத்து அழுத்திவிட்டு, படிப்பு செலவுக்கு வைத்துக்கொள் என்றாள். தாயும் மகனும் மறுத்தாலும், குடும்பமே வற்புறுத்தியதால் வாங்கிக் கொண்டார்கள்.
ஒன்றரை வயது குழந்தையுடன் நிர்க்கதியாக சின்னத்தாயை அவள் புருஷன் விட்டுச்சென்ற பிறகு, எந்த சந்தர்ப்பத்திலும், எதற்காகவும், யாரிடமும் அவள் கையேந்தியதில்லை. வயக்காட்டில், மழையிலும், வெயிலிலும் பாரபட்சம் இல்லாமல், ஊரில் எல்லா வயலிலும் உழைப்பை விதைத்திருந்த அவள், அதில் கிடைத்த கூலியை மட்டுமே தன் மகனுக்காக பயன்படுத்துவதை பழக்கமாக வைத்திருந்தாள். அதனால்தானோ என்னவோ, பூத்துரை சென்னைக்கு படிக்கச் சென்றபிறகு, வயல் வேலை இல்லாத நாட்களில், ஆலங்குளம் வந்து அடைக்கலசாமி வீட்டில் இருக்கின்ற வேலைகளை எதுவாக இருந்தாலும் இழுத்து போட்டுக்கொண்டு ஒரு பைசா வாங்காமல் செய்து கொண்டிருந்தாள்.
இப்போதும் கூட, ஊரில் ஆளாளுக்கு "உம் புள்ளைய டீவியில காட்டுறாங்க. சாப்பாடு சாப்பிடாம கிடந்து போராட்டம் பண்றானாம்! அப்பன் மாதிரியே சண்டைகாரானாதான் இருக்கான். என்னன்னு விசாரி. பிரச்சனையில மாட்டிக்கப் போறான்" என்று அவளுக்கு எச்சரிக்கையாகவும் இளக்காரமாகவும் கூறியபோது, சார்வாளிடம் ஓடினாள்.
"அது வேற ஒண்ணுமில்ல தாயி, கவலைபடாத. நம்ம பக்கத்து நாடு, இலங்கையில பிரச்சனை. அதுல உம் மகன் போராட்டத்தில சேர்ந்திருக்கான். என்று அவர் விளக்க முயன்றார்.
"அப்படின்னா எம்புள்ள மிலிட்டரியில சேர்ந்துட்டான்னு சொல்றீயளா ஐயா" என்று அப்பாவியாக முகத்தில் படிந்திருந்த வியர்வையை துடைத்தபடி அவள் கேட்டபோது, சார்வாளும் பதில் சொல்ல முடியாது விக்கித்து நின்றார்.
பீடிக்கடையில் கணக்கெழுதும் அப்பாதுரை அங்கு வரவே, அவனிடம் விசாரிக்கத் தொடங்கினாள் சின்னத்தாயி. கம்யூனிஸ்டுகாரன் விவரமானவன், ஆனா வில்லங்கமானவன் என்று பெயரெடுத்திருந்த அப்பாதுரை, அவளுக்கு தெளிவாக சொல்லி விளங்க வைக்க மாட்டானா என்ற ஆதங்கம் சின்னத்தாயிக்கு. "உன் மகன் வீரன் சின்னத்தாயி. இலங்கை தமிழர் பிரச்சனையில அவங்களுக்கு நியாயம் கிடைக்கணும்னு உண்ணாவிரதம் இருக்கானாம்! நீ பெருமைபடணும்" என்றான் அப்பாதுரை. அங்கே விளக்குமாத்துடன் வந்த அவன் மனைவி பச்சைக்கிளி, "சும்மா வெட்டி நியாயம் பேசி ஊரை கெடுக்கிறது பத்தாதா? அவளையும் போட்டு ஏன்யா பதறவைக்கிற? அவ புருசனையும் இப்படித்தான் பறிகொடுத்தா. ஊர்ல எல்லாருக்கும் கூலிய ஒசத்தி கேக்குறேன், ஒசத்தி கேக்குறேன்னு சண்டைபோட்டு, பக்கத்து ஊரு ஜனங்களுக்கும் உதவி செய்யறன்னு போயி, கடைசியில வயல்ல செத்துகிடந்தான் அந்த மனுஷன். பாம்பு கடிச்சிட்டுன்னு சொன்னாங்க, பேயடிச்சிதின்னும் சொன்னாங்க. யார் கடிச்சது? யார் அடிச்சதுன்னு யாருக்குத் தெரியும். இந்த மனுஷன் சொல்றதெல்லாம் கேட்காத சின்னத்தாயி" என்றாள். பிறகு, "இதுக்குத்தான் பட்டணத்துக்கெல்லாம் படிக்க அனுப்பாதன்னு நான் சொன்னேன். இப்பவும் ஒண்ணும் கவலைப்படாத. பட்டணத்துக்குப் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடு" என்று அவளை தேற்றிய பச்சைகிளி, "தனியா போகாத, கூட துணைக்கு வண்டியேறியும் அழைச்சுட்டுப் போ." என்றாள்.
ஊரில் யாருக்கு உபகாரம் என்றாலும் ஓடிவந்து நிற்பவன் வண்டியேறி. குறிப்பாக எல்லா வயது பெண்களும் உரிமையுடன் அவனிடம் உதவி கேட்பார்கள். எங்கிருந்தோ பிழைக்க வந்தவன், அவர்களில் ஒருவனாகி போயிருந்தான். ஆனால், கிளம்பும் நேரத்தில் வண்டியேறி வரவேண்டாம் என்றும் தான் தனியாகவே போவதாகவும் தடுத்துவிட்டாள் சின்னத்தாயி. ஆலங்குளம் வந்து திருநெல்வேலிக்கு பஸ் ஏறியபோது அடைக்கலசாமி குடும்பத்தாரை பார்க்க நேரிட்டது.
"எவ்வளவு கஷ்டப்பட்டு சீட்டு வாங்கினேன். படிக்கிறத விட்டுட்டு ஏதேதோ பண்றானே உம் மகன்" என்று அலுத்துக்கொண்டார் அடைக்கலசாமி. ஆனால், அவர் மகனும் மருமகளும், அவன் எந்த தவறான காரியத்திலும் ஈடுபடவில்லையென்றும், உண்மையில் அவனுடைய சமூக அக்கறைக்காக அவனை ஊக்குவிக்கவேண்டும் என்றும் சொல்லி தேற்றினார்கள். ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வதும், ஒருவர் தவறு என்பதும், ஒருவர் அதையே மிகச்சரியான காரியம் என்று சொல்வதும், சின்னத்தாயிக்கு மிகக் குழப்பமாக இருந்தது. அவள் புருஷன் சாவைவிட அது பெரிய புதிராக இருந்தது.
செலவுக்கு பணம் ஏதாவது வேண்டுமா என்று கேட்டாள் நிர்மலா. வேண்டாம் என்று அவசரமாக மறுத்த சின்னத்தாயி, "மேலை வீட்டு அமாவாசியிடம் வயலில் வந்து வேலை செய்து கழிப்பதாக சொல்லி கடன் வாங்கி வைத்திருந்த பணம் பத்திரமாக இருக்கிறதா என்று மஞ்ச பைக்குள் கைவிட்டு ஒரு முறை பார்த்துக்கொண்டாள்.
வண்டியேறி சொன்னபடியே திருவண்ணாமலையில் இறங்கி அரசம்பட்டியிலிருக்கிற அண்ணன் வீட்டுக்கு சென்று அண்ணன் மகனை துணைக்கு அழைத்தாள். அவனோ, சீசன் என்பதால் பாண்டிச்சேரிக்கு பணையேற போயிருப்பதாக தெரிவித்த அண்ணன் "எனக்கு ஒண்ணும் புரியலமா, உம்புள்ள எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம் செய்றான்னு. டி.வி.யில காட்டுறப்ப பதறுதுமா. சாப்பிடாம கெடக்கானாம்" என்று தொலைக்காட்சி பெட்டியில் அவளையும் பார்க்க வைத்தார். அவளுக்கும் கூட ஒரு டி.வி. இலவசமாக கிடைத்ததுதான். ஆனால், இலவசமாகக் கிடைக்கிறதே என்று அதில் உட்கார்ந்திருந்தால், "சோத்துக்கு என்ன பண்றது" என்று அவள் அதை பார்க்க விரும்பியதில்லை. இப்பொழுது, சோறு தண்ணியில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு கிடக்கும் தன் மகனை திரையில் பார்த்ததும் ஒழுங்காக பார்க்க முடியாமல் கண்ணீர் திரையிட்டது. "கூடவே இன்னும் கொஞ்சம் பிள்ளைங்களும் கிடக்குறாங்களே. எனக்கு ஒண்ணும் புரியலையே, ஈரக்கொல பதறுதே" என்று அழுதாள் சின்னத்தாயி. தான் வேண்டுமானால் துணைக்கு வரட்டுமா என்று அண்ணன் கேட்டபோது, வேண்டாமென்று அவள் சொல்லிவிட்டதால், அவர் திருவண்ணாமலை வந்து பஸ் ஏற்றிவிட்டார். "வெரசலா போய் பார்த்துட்டு, ராவுக்குள்ள வந்திருதாயி." என்று சொன்ன அண்ணனிடம், தான் வரவில்லையென்றால் பயப்பட வேண்டாமென்றும், அங்கிருந்து, முடிந்தால் நேராக ஊருக்குப் போய்விடுவதாகவும் தெரிவித்துவிட்டு பஸ் ஏறியிருந்தாள் சின்னத்தாயி.
பஸ் போய்க் கொண்டிருந்தது. எந்த விவரமும் பிடிபடாததால் அந்த பயணம் அவளுக்கு மிக நீண்டதாய் தெரிந்தது. காலம் முழுவதும் கல்லையும் முள்ளையும் தவிர அவள் மனசு எதிலும் பயணப்பட்டதில்லை. வெளியிலிருந்து வந்த குளிர்ந்த காற்றில் பிடித்தமான வாசனையொன்று மிதந்து வந்தது. பூத்துரைக்கு பிடிக்குமே என்று பச்சைக்கிளி அவளிடம் காகிதத்தில் பொதிந்து கொடுத்திருந்த தங்காரபானை கருப்பட்டியின் வாசம் என்று விளங்கிற்று அவளுக்கு.
"அவனே பச்சை தண்ணி பல்லுல படாம கெடக்கிறானாம். இத மட்டும் சாப்பிட்டுறுவானா" என்று அப்பாதுரை கேட்டபோது "மத்தவங்கள தூண்டி, தூண்டி பட்டினி கிடக்க வச்சிட்டு, நீங்கல்லாம் திண்ணுட்டு கெடக்கிறதுதானயா உங்க வேலை." என்று அடக்கினாள் பச்சைக்கிளி. இந்த உரையாடல் கூட சின்னத்தாயிக்கு விளங்கவில்லை. அவளுக்கு காங்கிரஸ்காரனும், கம்யூனிஸ்டுகாரனும் ஒரே மாதிரி எப்பொழுதாவது ஓட்டு கேட்க வருவார்கள். அவ்வளவுதான். அதற்கு மேல், விதைப்பதையும் அறுப்பதையும், அதைக் கொண்டு பையனை படிக்க வைப்பதையும் தவிர, வேறெதையும் அவள் சிந்தித்ததும் இல்லை, அதற்கு நேரமும் இருந்ததில்லை. வெளியில் லேசாக தலையை நீட்டி வானத்தை பார்த்தாள். வெள்ளி முளைத்திருந்தது. தன்னுடைய சின்ன வயதில் தன் கண்கள் இப்படித்தான் இருந்ததாக அவள் பாட்டியும் அம்மாவும் சொல்ல கேட்டிருக்கிறாள். ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டாள்.
சற்று நேரத்தில், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு வந்துவிட்டதாக இறங்கச் சொன்னார்கள். ஊரில் ஓடைக்கு பக்கத்தில் குவிந்திருக்கும் மணல் போல மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. மூச்சுத் திணற வைக்கும் இந்தக் கூட்டத்தைக் கடந்து அல்லது பிளந்து கொண்டு எப்படிச் செல்ல முடியும் என்று மலைத்துப் போய் நின்றிருந்தாள் . அதே நேரத்தில் யாரோ வருகிறார்கள் என்று கூட்டம் சற்று விலகி வழிவிட்டது. கண்களை சுருக்கிக் கொண்டு சின்னத்தாயும் பார்த்தாள். தோளில் கருப்பு துண்டு போட்டுக்கொண்டு வந்த அந்த மனிதரை பார்த்ததும் எங்கோ பார்த்தது போல் தோன்றியது.
"யாவம் வரலியே" என்று யோசித்தாள். அடைக்கலசாமி அய்யா வீட்ல டி.வி. பொட்டிய துடைச்சு வைக்கும்போது, இந்த மனிதர் ஆவேசமாக பேசுவதை பார்த்த ஞாபகம் வந்தது அவளுக்கு. அப்பொழுது, "அப்பா, நம்ம ஆளுங்க இங்லீஷ் பேசும்போது ஏன் இப்படி முக்கிகிட்டு கடிச்சு துப்புற மாதிரி கத்துறாங்க" என்று அருள்ராஜா தன் அய்யாவிடம் கேட்டதும் நினைவு வந்தது. இங்கேயும் ஆவேசமா பேசப்போறாரோ என்று அவள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே, சற்று குட்டையாக இருந்த ஒருவர் முன்வந்து அவரிடம் கை குலுக்கி, "நான் தான் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த ப்ரொஃபஸர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். கஷ்டப்பட்டு உடம்பை குறுக்கி, ஒடுக்கி கூட்டத்திற்குள் முந்தியடித்து நுழைந்து பூத்துரையும், மற்ற மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குள் வந்துவிட்டாள். சுற்றிலும் ஏராளமான மாணவர்கள். சோர்ந்து படுத்திருந்த எட்டு பிள்ளைகளுக்கு நடுவில் மகனைத் தேடினாள். கண்கள் பாதியாக சிறுத்துப்போயிருந்தன. ஆனால், பாம்பு கடித்து செத்துப் போயிருந்த நேரத்தில் கூட தன் புருஷன் முகத்தில் தெரிந்த வைராக்கியத்தை பிள்ளை முகத்திலும் பார்த்தாள் சின்னத்தாயி. கருப்பு துண்டு போட்டிருந்தவர் போலவே, வேறு , வேறு கலரில் துண்டு போட்டிருந்த பல பெரியவர்களும் அங்கிருந்த மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தள்ளுமுள்ளுவில் சிக்கிக்கொண்டிருந்த இவள், தன் மகன் தன்னை ஒருமுறை பார்த்துவிட மாட்டானா என்று தடுமாறினாள். ஆனால், பெருந்தலைகள் இவளை அவள் மகன் பார்வையில் இருந்து ஓரங்கட்டின. திடீரென்று ஒரு மாணவன், நீங்க யார பார்க்கணும் என்று இளகிய குரலில் வந்து கேட்டான். அவன் கண்கள் கோழி முட்டை சைஸில் வீங்கியிருந்தன. பேச்சு வராமல் நின்றிருந்த சின்னத்தாயி, "உன் கண்ணு ஏம்பா இப்படி வீங்கிக் கெடக்கு?" என்று கேட்டாள். "மூணு நாளா தூங்கலம்மா.. வேற ஒண்ணும் இல்ல." என்ற அவனிடம், "பூத்தொரைய பார்க்க வந்தேம்பா" என்ற சின்னத்தாயி திடீரென்று எதோ நினைத்துக்கொண்டவள்போல், "பார்க்கவேண்டாம்பா" என்று சொல்லிவிட்டு பையில் இருந்த தங்காரபான கருப்பட்டியை வெளியில் எடுத்தாள். அதில் அவள் பாசத்தின் வாசம் வீசியிருக்க வேண்டும். கண் வீங்கிய பையனும் சற்று கலங்கினான்.
"எப்படினாலும் சாப்பிட முடியாதேமா" என்றான்.
"சரி, மத்த பிள்ளைங்க சாப்பிடட்டும்பா" என்று சொன்னவள், திருநெல்வேலி பஸ் பிடிக்க எங்க போகணும் என்று விசாரித்து நடக்க ஆரம்பித்தாள்.
'சென்னை வருவதற்கு மேல வீட்டு அமாவாசியிடம் வாங்கிய துட்டுக்கு இரண்டு நாளாவது வேலை செய்யணும். தீர்த்தாரப்பபுரத்திலும் கள பறிக்க கூப்பிட்டிருக்காங்க. அங்கயும் போனாத்தான் பூத்துரைக்கு அடுத்த மாசம் சாப்பாட்டு பணம் அனுப்ப முடியும்' என்று எண்ணியபடியே பஸ் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில், போலீஸ் வருதாம்பா என்று சிலர் பேசியது இவள் காதில் விழவில்லை. எத்தனைபேர் கூட இருக்காங்க, தான் பிள்ளைக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை சின்னத்தாயின் மனதில் வேரூன்றியிருந்தது.
"என்ன இவ்ளோ வெரசலா நடந்துபோற? தெரியுமா சின்னத்தாயி. சென்னையில பத்தவச்ச தீ தமிழ்நாடு முழுக்க பத்திக்கிட்டு எரியுது." என்று மேலவீட்டு அமாவாசி வயலுக்கு வேலைக்கு தூரத்தில் போய்கொண்டிருந்த
சின்னத்தாயி காதில் விழுவதுபோல் உரக்கக் கூறினான் அப்பாதுரை. அவளோ, அதைக் கேட்காதவளாக, 'சீக்கிரமா இந்த வயல்ல வேலைய முடிச்சிட்டா, சரோசா வீட்ல போயி பருத்தி பிரிச்சுபோட்டு கொஞ்சம் காசு சம்பாதிக்கலாம்' என்று தனக்குள் பேசிக்கொண்டு எட்டாத தூரத்தில் நடந்துகொண்டிருந்தாள்! ~-~-~-~-~