உச்சத்தில் பிறப்பு
மலை மகள்
கர்ப்பக்கிரகத்திலிருந்து
மண் மாதா மடியில்
பாயும் பரவசம்.
கல்லோடும் முள்ளோடும்
இழைந்து சென்றாலும்
பூக்களையும் போர்த்திப்
புன்னகைப்பவள் நான் .
பொதிகையின் பரணி
தரணியின் தாகம்
தீர்க்க வந்த தாமிரபரணி
தமிழின் தீர்த்தம்
கழனிகளில் கலந்தோடி
கதிர்களோடு உறவாடி
கிராமத்துக் காற்றில்
கலைகளை சுவாசித்து
களைப்பின்றிப் பயணம்.
ஆலமரங்கள் சூழ்ந்திருக்கும்
முத்தாலன்குறிச்சி
பள்ளிக்குழந்தைகள்
பூவரசம் பூக்களை
வியந்தபடி
வேப்பமர நிழலில்
உரக்கச் சொல்லும்
ஓரிரண்டு ரெண்டு
வாய்ப்பாட்டில்
ஊர்க்கணக்கும்
விளங்கியது
இங்கு
மனிதர்களும் மரங்களும்
சம அளவில் சமமாக
கூடவே உறவு கொண்டாடும்
கிளிகளும் குருவிகளும்!
மருதாணிக் கைகளில்
மஞ்சள் மணமணக்க
மாரியம்மா நீராடுகையில்
குப்பென்று கிளம்பும்
அவித்த நெல் வாசம்.
தாவணிப் பருவங்களின்
கெண்டைக் கால்களை
கெண்டை மீன்கள்
கவ்வும் காதலில்
கலந்து வரும்
கொலுசு சப்தம்
என் உயிர் சுண்டும்
சங்கீதம்!
தூக்கு நிறைய
செக்கெண்ணெய்
கொண்டு வரும்
மணக்கரை செட்டியார்
மாலைப் பதநீர்
குடித்த கலயத்தின்
பனை வாசம்
பனங்காட்டு விடுலிக்குள்
காய்ச்சப்படும் கருப்பட்டிப்
பாகின் சுகந்தம்
ஆலமரக் கிளைகள் தோறும்
கொத்துக் கொத்தாய்க்
கனல் துண்டுகள்!
கொத்தும் கிளிகளோடு
குலவும் காக்கை குருவிகள்
காக்கா முள்ளில்
காத்தாடி செய்து
காற்றுக்கு
எதிர்த் திசையில்
ஓடி வரும்
குழந்தைகளின் கூச்சல்
என்னில் குளிர்ந்து
வைகறை சூரியனில்
காய்ந்து
பைக்கட்டில் பதுக்கிய
நயினார் தோட்டத்து
புளியம் பழங்களோடு
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளைகள்
மதியமும் மாலையும்
குருத்து மண்ணை
அளைந்தபடி பேசும்
கதைகளில்
எனக்குப்
புரிந்து போகும்
பூகோள சரித்திரம்
தைப் பொங்கல்
திருநாளில்
தாய் வீட்டுச்
சீர் சுமந்த
பனை ஓலை
வண்ணப் பெட்டியில்
சர்க்கரைப் பொங்கல்
கரும்போடு
அவித்த பனங்கிழங்கும்
ஆற்று மணலில்
ஊர் கூடி உண்கையில்
பகிர்ந்து கொள்ளும்
பாசத்தின் பசுமையில்
கனவுகளின் வண்ணங்களில்
பண்பாடும் இயற்கையும்
இணைந்து
கை கொட்டும்
இப்போதோ
இவையெல்லாமே
வறண்டு போன
நிகழ் காலத்தின்
கடந்த கால
ஈர நினைவுகள் .
பிழைப்பு தேடி
என் கரை கடந்து
பெயர்ந்து சென்ற
உறவுகளின் கண்ணீரில்
உப்புக் கரிக்கிறேன்
ஓங்கி அடிக்கும்
வேஷ்டியில்
புருஷனையும் சேர்த்துத்
துவைக்கும்
பெண்களின்
ஆரவார ரகசியங்களும்
கருக்கலில்
பேய் உலவுவதாய்
புரளி கிளப்பி விட்டு
ஏகாந்த நிசப்தத்தில்
நீரில் தெரியும்
நிலவு சாட்சியாய்
காதலியர் காதில்
காளையர் கிசுகிசுக்கும்
கதைகளும்
மலங்காட்டு விருவை
சுட்டுத் தின்ற பின்
விடிய விடிய
வேட்டை சாகசங்கள்
பேசும் பெருசுகளின்
வீர மொழிகளும்
இப்போது
எதுவுமே இல்லை .
கோடையில்
நான் இளைத்துப்
போகையில்
ஊற்று தோண்டி
தேங்காய் சிரட்டையில்
மொண்டு
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததாம்
பாடி வந்து
அன்னை எனக்கே
அமுது ஊற்றிய
பிள்ளைகளின்
குலை குலையாய்
முந்திரிக்கா குதூகலமும்
எதுவுமே இல்லை .
எப்போதும் லாரி
நிற்கிறது ,
மணல்
மாயமாகிறது
பனைகளின்
சமாதியில்
செங்கல் சூளைகள் !
குருவிகளின்
நெல்கொறிப்பும்
ஆலமரக் கிளிகளின்
ஆசை மொழிகளும்
அற்றுப் போயின !
பாறைகளும் ,
பாய் தொழில்
முடங்கியதால்
கேட்பாரற்றுப் போன
கோரைகளும் மட்டுமே
என்னோடு!
என் மக்கள்
என் மரங்கள்
என் சொந்தங்கள்
யார் தருவார்கள்
மீட்டு ?
தவிப்பில் நிலைக்கும்
தாகம்
யார் தீர்ப்பார் ?
எழுதியவர்: ஜெயஷாந்தி