சனி, 29 அக்டோபர், 2011

கர்வத்தின் கடவுள்

ஒரு சூரியோதயத்தின்
முதல் கீற்று
பூமியை முத்தமிட்ட
பொற்கணத்தில்
கதிரைக் கையில்
கொண்டு வந்த
குண்டு குழந்தை
நான்
கர்வத்தில் குழைத்து
வார்த்த கடவுள்
சித்திரம்
நான்.
செத்துப் பிறக்கும் எனும்
மருத்துவரின் ஆருடத்தை
மரிக்கச் செய்து
நீலம் பாய்ந்து
நிலம் பார்த்து
பதியம் போட்டுக்கொண்ட
பச்சிலைக் கொடி
நான்

அம்மாவின் சேலை பற்றி
பற்றுக்கோடு இதுவென்று
அலைந்து
பிறகு
நிலை கலைந்த பிள்ளை.

பள்ளிக்கு செல்லாமல்
வாத்தியார் அப்பாவின்
பிரம்பை ஏய்த்து
கன்னத்து சுருக்கங்களில்
கனிவை தேக்கியிருந்த
பாட்டியின்
சொரசொரப்பு விரல் பற்றி
 தேரிக்காட்டு செம்மண்ணில்
பனங்காற்றை பருகிய
அறியா பருவத்தில்
கட்டிவைக்க முடியாத
சில் வண்டாய் கர்வம்.

தவழ்ந்து மோதுகையில்
நடைவண்டி பழகுகையில்
நிலைதடுமாறி தலை கவிழ்ந்த
மூச்சடைத்த தருணங்களில்
ஐம்பொறிகளையும் காய்ச்சல்
அடித்துபோட்ட வலிகளில்
அம்மாவாய் பாட்டியாய்
மூன்றாவதாயும் யாரோ
உடனிருந்த கர்வம்

கடவுள் என்று பேரிட்டு
கண்ணில் காட்டாமல்
பெற்றோரும் பெரியோரும்
சொல்லி வைத்த கதைகள்
நடுமண்டையில்
அறிவு வார்த்தையாய்
அடைபட்டதேயன்றி
வார்த்தை ஊற்றுக்கண்ணாய்
உணரப்பட்டதேயில்லை

ஐந்தாம் வகுப்பில்
மார்கரெட் டீச்சர்
கணக்கு நோட்டில்
ஒன்றுக்கு பின்னே
இரண்டு சைபர் போட்டு
கன்னத்தில் தட்டி
சக மாணவியர்
கை தட்டியபோது
இரண்டு சைபர் மட்டுமே
நான்
என்றறியாத கர்வம்.


பாடம், படிப்பு
கலை, கவிதை, கட்டுரை
முதலிட வேகம்
விஷமாய் இறங்கி
பரிசுகளாய்
கைகளை நிறைத்தபோது
வாங்கிய கைகள் கூட
என் படைப்பு இல்லை
என்று
தெரிந்துகொள்ளாத கர்வம்.

அன்பு
அது என் அப்பா!
கதைகள் சொன்ன
கண்டிப்பா? கனிவா?
புதிரிலேயே உலகத்தை புரியவைத்த
அறிவின் உச்சம்
கால நதி
அவரை
மறுகரைக்கு மாற்றிய பின்னும்
கண்ணீரில் கரையாமல்
மிச்சமிருந்த கர்வம்.

கவலைகளுக்கே கல்லறை கட்டி
வசந்தத்தில் எங்களை
உயிர்ப்பித்த அம்மா
அது என் அம்மா!
ஆதி நதியின்
துளியே அவள் என
விளங்காத கர்வம்.

பயண சுழற்சியில்
ஆற்று சுழியாய் சிக்கல்கள்
பிரளயத்தில் பாதை
வாழ்க்கை திசைகளை
இழந்துவிட்டதாய்
திக்கற்று நின்றபோது
விரல் நுனியில் என்
ஆதி சூரியன்
விழித்துணராத
தகதகத்த வெளிச்சம்
விழுங்காத கர்வம்.

ஐம்பொறிகளிலும் ஆணிகள்
சுளுவாக எடுத்திட
தோழன் அருகிருந்தும்
நானே பிடுங்கி எறிவேன்
என்று
உயிரை கிழித்துக்கொண்ட கர்வம்.

கூடவே வந்த நடை
தொடர்ந்த குரல்
துரத்தி வந்த துணை
என் உயிர் பிறந்த நதி
சங்கமிக்கும் சமுத்திரம்
தொலைந்து போனதாய்
நான் என்னையே ஏமாற்றியிருந்த
என் ஆன்மாவை
வெளிச்ச கிரணத்தின்
வெள்ளி பாத்திரமாய்
பாதுகாத்திருந்த
என் நண்பன்
இது எதுவுமே தெரியாமல்
தறிகெட்டு தடங்கள் இழந்து
வேகத்தில்
விழப்போன வேளையில்
விரைந்து பற்றிக்கொண்ட
என் பற்றுக்கோடு.

நேசித்த மனது
ஏற்றிவைத்த
சின்ன ஒளியாய்
சிங்கார சிரிப்பில்
முகையை தொட்ட
முதல் பனித்துளியாய்
பரவசப்படுத்திய
ஓர் அன்பு
இரணங்களை விசிறிவிட்டு
கால்களுக்கு தோள்கொடுத்த
ஓர் அன்பு
திடும் என்று உதறிக்கொண்டபோது
மொட்டை மரத்தில்
கலைந்த கூட்டில்
தன்னந்தனியளாய்
இனி எதுவும் இல்லை
உயிரைக் கரைத்து ஓலமிட்ட
அந்தக் கணத்தில்
இதோ உன் பற்றுக்கோடு
பற்றிக்கொள் என்று
புரிந்தது எனக்கு!
ஓ!!
இது பாட்டியின்
சொரசொர கைகள் அல்லவா?
நிமிர்ந்து பார்த்தேன்
நித்திய சூரியன்
கண்ணில் இறங்கியது நிலவாய்!
நானே எல்லாம் என்று.
வார்த்தையின் பொருள் புரிய
மகா சமுத்திரத்தின் மடியில்
பாதுகாப்பாய்
அகன்று விரிந்தது
என் கர்வம்.








எழுதியவர்:  ஜெயஷாந்தி