புதன், 30 செப்டம்பர், 2015

தேவை கண்ணீர் சிந்தும் கடவுள் அல்ல! சுதர்சனச் சக்கரம் ஏந்தும் கிருஷ்ணனே!

கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால்... ஆராயவே வேண்டியதில்லை, மேலோட்டமாகப் படித்தாலே அதன் ஊழல் படிந்த கோர முகமும் அறிவியலுக்கு எதிரான வறட்டு ஆன்மீகத்தின் கொலை முகமும் நமக்கு பட்டவர்த்தனமாக விளங்கும். நிறுவன மயமாக்கப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையில்தான் பணம் கொடுத்தால் பாவ மன்னிப்பு உண்டு என்றும் போப் அவர்களின் முடி அல்லது நகத்தை விலை கொடுத்து வாங்கினாலே சொர்க்கத்துக்குப் போய்விடலாம் என்ற வியாபாரமும் நடைபெற்றது. இன்று ரோமாபுரியில் கன கம்பீரமாக எழுந்து நிற்கும் செயின்ட் பீட்டர்ஸ் கதீட்ரலை கட்டுவதற்காக ஒரு போப் போனிஃபஸின் தலை முடி கத்தரித்து விற்கப்பட்டதில் அவர் மொட்டையாகிப் போன கதையும் ஐரோப்பிய வரலாற்றில் உண்டு. Pope is both spiritual and temporal head என்று மேற்கு உலக நாடுகளின் மன்னர்களே தாள்பணிந்து நின்ற ராசாதி ராச ராச கம்பீர போப் ஆண்டவர்கள் ஆற்றிய அளப்பரிய செயல்கள் புல்லரிக்கச் செய்பவை.

ஒரே நேரத்தில் மூன்று போப்புகள் இருந்ததாகவும், இறந்து மண்ணுக்குள் சென்ற ஒரு போப்பின் உடலை வெளியே எடுத்து அவருக்குப் பின்னே வந்த போப், 'I excommunicate you', அதாவது உன்னைத் திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கிறேன் என்று சபித்ததாகவும் வரலாறுகள் உண்டு.

ஆனால், இந்த அலங்கோலங்களினால் கத்தோலிக்கத் திருச்சபையின் உலகளாவிய அதிகாரம் ஒடுக்கப்பட்டதும் நல்லதே. கத்தோலிக்கத் திருச்சபையிலும் பெரும் அறிவு ஜீவிகள் என்று பெருமை பாராட்டும் இயேசு சபையினரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டு அதையும் இப்பொழுது கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

விஷயம் அதுவல்ல. அது முக்கியத்துவம் வாய்ந்ததும் அல்ல. அந்த சபையைச் சேர்ந்த தற்போதைய போப் ஃபிரான்சிஸ், சமீபத்தில் செய்த அமெரிக்க விஜயம் பற்றியது.

இதற்கு முன்பு இரண்டாம் ஜான் பால் பல நாடுகளுக்கும் பயணம் செய்தபோது அமைதிப் புறாவாகவே பார்க்கப்பட்டார். போற்றவும்பட்டார். முந்தைய காலங்களில் உலகம் உருண்டை என்று சொன்ன கலிலேயோவை எரித்ததற்காகவும் யூதர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டபோது முகம் திருப்பிக் கொண்டதற்காகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் பகிரங்க மன்னிப்புக் கேட்டார் அவர்.

ஆனால், இயேசு சபை 'எங்கள் குரு' என்று பெருமைபட்டுக் கொள்ளும் தற்போதைய போப் ஃபிரான்சிஸ், நியூயார்க், ஃபிலடெல்ஃபியா போன்ற ஊர்களுக்குப் பயணம் சென்றிருந்தபோது 1980களில் கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஆண், பெண், குறிப்பாக சிறுவர் சிறுமிகளைச் சந்தித்தபோது கூறிய வார்த்தைகள் கடும் கண்டனத்திற்குரியவை.

அவர்களிடம், 'கடவுள் உங்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்' என்று சொல்லிய போப், பொதுவான கூட்டத்தில் அவர்களைச் சந்திக்காமல், தனியாக சந்தித்ததில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என அமெரிக்காவில் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மோசமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தைகளைப் பார்த்து 'கடவுள் உங்களுக்காக கண்ணீர் சிந்துகிறார்' என்று மனசாட்சியே இல்லாமல் சொல்லப்பட்ட வார்த்தைகளில் தெரியும் பசப்புத் தன்மை எரிச்சலைத் தருகிறதுஅவர்கள் அந்த கொடுமைக்கு உள்ளான காலத்தில் அதற்குக் காரணமான பாதிரிகளை பணியிட மாற்றம் செய்து அதுதான் தண்டனை எனப் பரைசாற்றிக்கொண்டது. ஆனால், அமெரிக்க அரசாங்கமோ அவர்களை சிறைக்கு அனுப்பி நேர்மையாய் நடந்துகொண்டது. ஏறக்குறைய ஒரு லட்சம் குழந்தைகள் கத்தோலிக்க தேவாலய பாதிரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பிறகு, அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ளிய பிறகு இனியும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை ஒளித்து வைக்கத் தேவையில்லை என்று ஒப்புக்குச் சொல்லியிருக்கும் போப் ஃபிரான்சிஸ் இதற்கு முன்னால் காப்பாற்றப்பட்ட பாதிரிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவதில் தீவிரம் காட்டுவாரா?

பாதிப்பிற்குள்ளான குழந்தைகளிடம் ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் இதைவிட மோசமாக யாரும் பேச முடியாது. குற்றவாளிக்குத் தண்டனை தராத கடவுள் கண்ணீர் விடுவதால் என்ன பயன்? பாதிக்கப்பட்டவனுக்குக் கிடைக்கும் நிவாரணம்தான் என்ன? கடவுளின் நீதி என்பது இதுவல்லவே!

இரண்டாம் ஜான் பாலிடம் வெளிப்பட்ட அந்த நேசம் நிறைந்த நேர்மை இயேசு சபையைச் சேர்ந்த போப் ஃபிரான்சிசுக்கு இல்லாமல் போனது ஏன்?

இந்தியாவிலும் கூட இப்போது கிறிஸ்தவத்திற்கு எதிரான பரப்புரைகள் பல நடந்துவருகின்றன. ஆனால் அவ்வாறு செய்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் தாக்க வேண்டியதும், தரை மட்டமாக்க வேண்டியதும் பெரும் வணிகமயமாகிவிட்ட நிறுவனங்கள் (கல்வி நிறுவனங்கள் உட்பட) நடத்துபவர்களும், எளியவர்களுக்கு எந்த வகையிலும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இல்லாத, சாதியத்தையும், இன வெறியையும் தூக்கிப் பிடிக்கும் சில கத்தோலிக்க சபைகளையே என்பதை ஏனோ அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.

இயேசு ஒருவரே வழி என்று முச்சந்தியில் நின்று அறைகூவினாலும், பல பெந்தேகோஸ்தே சபைகள் வணிக நோக்கில் செயல்படுவதில்லை. மிக மிக எளிய பின்புலத்தில் இருந்து செல்லும் மக்கள் இந்த ஆலயங்களுக்குச் செல்லும்பொழுது ஏதோ ஒரு விதத்தில் மன ஆறுதலும் நிறைவும் அடைகிறார்கள். பாவம் செய்வது தவறு என்று நல்வழியாவது திரும்பத் திரும்ப அங்கு கற்பிக்கப்படுகிறது.

காலம் காலமாக வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பைபிள் இதுபோன்ற பெந்தேகோஸ்தே சபைகளில் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அர்த்தம் செய்துகொள்ளப்பட்டு வேத வாக்காகப் பறைசாற்றப்படுகின்றன என்ற குறை இருந்தாலும் தன்னை நாடி வரும் எளிய மக்களின் மேல் ஏறி மிதித்து தலைக்கனம் கொண்டு திரிவதில்லை அச்சபையினர்.

அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை அதிகார கூடங்களாகக் கையில் வைத்திருக்கும் சில கத்தோலிக்க சபைகள் இயேசு அன்று எடுத்த சாட்டையால் அடித்துத் துவைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களே தங்கள் நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல கொடுமைகளையும் நிகழ்த்திவிட்டு கடவுள் உங்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறார். குற்றவாளியைக் காப்பாற்றியே தீருவோம் என கயமைத்தனத்தின் உச்சமாகத் திகழ்பவர்கள். இப்படிப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கு தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர் என்று பரிகாசம் செய்யப்பட்ட சிலுவையில் தொங்கும் இயேசு கையறு நிலைக் கடவுளாகப் போய்விட்டார் என்றால் கையில் சுதர்சனச் சக்கரம் ஏந்திய கிருஷ்ணனே இன்றைய தேவை.


பாவம் இயேசு கிறிஸ்து! பகைவனுக்கு அருள்வாய் நன்னஞ்சே என்ற தமிழரின் மகத்தான உணர்வை மண்ணுக்குள் விதைத்த மகான் அவர். ஆனால் அதிகார மமதையில் எளியவரைப் பார்த்து கடவுள் உங்களுக்காக கண்ணீர் வடிக்கிறார் என்று சொல்லும் பாசாங்குக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். மீட்பரே தன்னை இவர்களிடமிருந்து மீட்டுக்கொள்வது எப்போதோ?

புதன், 23 செப்டம்பர், 2015

'யாதுமாகி ' பெண் எனும் ஆளுமையின் நாவல்



பேராசிரியை எம்.ஏ.சுசீலா அவர்களின் யாதுமாகி என்ற நாவலைப்  படித்து [வாசிக்கவில்லை, படித்தேன்.] முடித்த போது  மனம் கனமானதொரு ஆழ்ந்த நிசப்தத்தில் ஆழ்ந்து போனது .குழந்தை மணமும்  பால் மணம்  மாறாத சிறுமியரின் கையறு கைம்பெண் நிலையும் சரித்திரப்  புத்தகத்தின் நீண்ட பக்கங்களில் வந்து கடந்து போன சில வரிகளாகவே பலருக்கும் நினைவிருக்கும் .அல்லது தேர்வுக்குப் படித்து, பரீட்சையோடு மறந்து போன பழைய செய்தியாகவும் இருக்கும் . ஆனால் 'யாதுமாகி' அன்று பால்ய விவாகத்தில் வாழ்க்கையினைத் தொலைத்து தனித்த அடர் இருட்டில் அமிழ்ந்து போன பெண்களின் அவலக் குரலால் நெஞ்சில் ஓங்கி அறைகிறது.

தமிழ் நாவல்களின் முன்னோடிகளான அ.மாதவையா எழுதிய ‘கிளாரிந்தா’ என்ற நாவல், உடன்கட்டை ஏறுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட இளம் கைம்பெண்ணின் மறு பிறவி போல் அமைந்த புதிய வாழ்வுக்  கதையை, கலை நுணுக்கத்துடன் சொல்லிய நாவல்.



வரலாற்று ஆதாரங்களைத் தேடும்போது சில ஆவணங்களில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் பத்மாவதி என்றும், வேறு சில இடங்களில் கோகிலா என்றும் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண நேரிடுகிறது. பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ வேதம் பரப்பும் பணியை முதன்முதலில் முன்னெடுத்துச் சென்ற அந்தப் பெண்ணைப் பற்றிய செய்திகளும் கூட முழுமையாக தென்னிந்திய திருச்சபை ஆவணங்களில் இடம்பெறவில்லை. ‘சதி’ என்ற கொடும் நெருப்புப் பசிக்கு ஆளாக இருந்த தன்னைக் காப்பாற்றிய ஆங்கிலேய அதிகாரியுடன் சேர்ந்து வாழுகின்ற அந்தப் பெண் நீண்ட பயணம் மேற்கொண்டு தஞ்சாவூர் சென்று கிறிஸ்தவ போதகரிடம் (missionary) தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கேட்கிறார்.

முறையான திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கை நடத்தும் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு கிறிஸ்தவச்  சட்டத்தில் இடமில்லை என்று மறுக்கப்படுகிறது. அதே போதகர் சில வருடங்களுக்குப் பிறகு பாளையங்கோட்டை சென்ற வேளையில் அப்பிராமணப் பெண் மீண்டும் அவரிடம் தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி மன்றாடுகிறாள். எந்த மறுப்பும் இல்லாமல் அவரது விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. ஏனென்றால், ஆங்கில அதிகாரி இறந்துவிட்ட நிலையில் இப்போது அந்தப் பெண் ஒரு கைம்பெண்!

மிகக் குறைவான முக்கியத்துவத்துடன், தென்னிந்திய திருச்சபை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த கிளாரிந்தாவின் வாழ்க்கையை, அவள் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தேடி திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இலக்கிய நயத்துடன் நாவல் வடிவில் தந்திருக்கிறார் அ.மாதவையா.


எம்.ஏ.சுசீலா அவர்களின் ‘யாதுமாகி’ நாவலைப் பற்றி எழுதத் தொடங்கிவிட்டு, அ.மாதவையாவின் கிளாரிந்தாவைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன என்று வாசிப்பவர்கள் யோசிக்கக் கூடும். அந்தக் காலகட்டத்தில் பெண்கள், குறிப்பாக பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பால்ய விவாகம் செய்து கொடுக்கப்படுவதும், விவரம் புரியும் முன்பே சரியாக முகம் பார்த்திராத விளையாட்டுக்  கணவனின் மரணத்தால் விதவையாகிப் போவதும், வீட்டின் இருட்டறையில் முடங்கிப் போய் தன் குழந்தமையை, இளமையை, வாழ்வின் இன்பங்களை, ஏன்? தன்னையே தொலைத்துவிடுவதுமாய் அவலத்திற்கு ஆளாகிப் போவது மிகச் சாதாரணமாக நடந்துள்ளது! இந்த அகோரம் அரசாங்கத்தின் புள்ளி விவரக் கணக்குகளில் உணர்ச்சிகளற்ற வெறும் எண்ணிக்கையாய் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

‘யாதுமாகி’ நாவலில் இடம்பெறும் தேவி, குழந்தை மணம் செய்து கொடுக்கப்பட்டு கடல் அலைகளுக்குப் பலியான கணவனின் மனதில் பதியாத முகம் பற்றியோ, எண்ணங்கள் பற்றியோ, சூட்டப்பட்டு பிறகு பறிக்கப்பட்ட மாலை பற்றியோ எந்த சிந்தனையும் அற்றவளாய், அல்லது அதைப் பற்றி எதுவும் தெரிந்திராத அபலைக் குழந்தையாய் எதிர்காலக் கேள்விக்குறியில் சுருண்டு போனாலும் தவித்துப்போனாலும், கல்வி கற்க வேண்டும் என்ற தீராத தாகத்தில் மீண்டும் எழுந்துகொள்கிறாள்.

தன் தாயுடைய நிர்ப்பந்தத்திற்காக, படிப்பில் பிரகாசமாய் விளங்கிய தன் சின்னஞ்சிறு மகளை பால்ய விவாகத்தில் கைம்பெண் ஆக்கிய சாம்பசிவம், பிராயச்சித்தமாக தன் பெண்ணைப்  படிக்க வைக்கிறார். கடந்துபோன நெருப்புச் சுவடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னே மட்டும் பார்வையைப் பதித்து கல்வியைத்  துடுப்பாய் பற்றிக்கொண்டு தொடர்ந்து பயணம் செய்யும் தேவி தன் வாழ்வில் இடையறாது எதிர்கொள்ளும் இன்னல்கள், பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், அத்தனையையும் சமாளித்துக் கரையேறுவதுடன், பல தளங்களில் வாழும் பெண்களுக்கும் கலங்கரைவிளக்கமாய் உயர்ந்து நிற்கிறாள்.

கிளாரிந்தா புதினத்திற்கும் யாதுமாகிக்கும் இடையே ஒரு சிறு தொடர்பு வந்துபோகிறது. மாதவையாவின் நாவலிலும் பிராமணக் குடும்பத்து கைம்பெண்ணே நாயகி ஆகிறாள். யாதுமாகியிலும் அதே பிராமணக் குடும்பத்துப் பெண்தான் கதையின் நாயகி. முன்னவரது படைப்பில் திருமணம் பற்றிய புரிதல் கொண்ட இளம் பெண் கைம்பெண் ஆகிறாள். இங்கோ, குழந்தைத்  திருமணத்தில் அது பற்றிய எந்தப் புரிதலுமற்ற  சிறுமி விதவையாகிறாள். எதிர்பாராத விதமாக உடன்கட்டை ஏறுவதிலிருந்து ஆங்கிலேய அதிகாரியால் காப்பாற்றப்படுகின்ற கிளாரிந்தா, அந்த அதிகாரியின் உதவியால் ஆங்கிலக்  கல்வி கற்பதுடன் கிறிஸ்தவ மதம் பற்றியும் அறிந்துகொண்டு அந்த மதத்தின் வழியாகவே சமூகத்திற்குப் பணியாற்ற விரும்புகிறாள். முதலில் மறுக்கப்பட்டு மீண்டும் உறவாக இருந்த ஆங்கில அதிகாரியின் மரணத்திற்குப் பிறகு தன்னை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவத்திற்குள் ஐக்கியமாகி மதம் பரப்பும் பணியோடு சமூகப் பணியும் செய்கிறாள்.

'யாதுமாகி'யில் கல்வி கற்று ஆசிரியப் பணிக்குச் செல்லும் தேவி, ஒரு கட்டத்தில் தன்னை விலக்கி வைக்கும் அல்லது தன்னிடமிருந்து விலகிச் செல்லும் உறவுகளால் வாழ்வில் வெறுப்புற்று தான் தனியாக்கப்பட்டதாய் வேதனையுறுகிறாள். அவ்வேளையில் தானும் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து கன்னியாஸ்திரியாக மாறி கல்விப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையினைத் தான் பணியாற்றும் கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக இருக்கும் கன்னியாஸ்திரியிடம் தெரிவிக்கிறாள். அவரோ அதைச் சற்றும் கண்டுகொள்ளாமல் தேவியையும், அவளது தோழி சில்வியாவையும் காரைக்குடியில் இருக்கும் வேறொரு பள்ளிக்குச் சென்று பணியாற்றுமாறு அனுப்பி வைக்கிறார்.

வழக்கமாக, கண்ணில் தட்டுப் படும் ஆறு ,எரி, குளம் குட்டை  என்று நீர்நிலை எங்கும் மீன் பிடிக்க அலையும் மீன்காரர் போல கிறிஸ்தவ மதத்திற்குள் ஆட்களை இழுக்கவும் கிறிஸ்தவ மதமே மோட்சத்தின் மார்க்கம் பிற மதங்களும் கடவுளர்களும் சாத்தானின்  பிறப்பிடங்கள் அல்லது உறைவிடங்கள் {சாத்தான் என்று இவர்கள் எதனைச் சொல்கிறார்கள் என்று பல வருடங்களாக மண்டைக்குள் குடைச்சல் .கான்வென்டில் படித்த போது இந்துக் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் படைக்கப் பட்ட சர்க்கரைப் பொங்கல் ,கொழுக்கட்டை மாவிளக்கு போன்றவற்றை வாயில் வைத்து விட்டாலே நரகம் என்று பயமுறுத்தித் தவிக்கச் செய்த வெள்ளை அங்கி கன்னியாஸ்திரிகளும் சாத்தான் பற்றிச் சொன்ன கட்டிலடங்காக் கதைகள் எந்த யூகத்தையும் தரவில்லை} என்று பிரச்சாரம் செய்வதற்கு  ஆண் பெண் போதகர்களைக் கண்டு பிடிக்கவும் பேயாய் அலையும் கிறிஸ்தவம், அந்த ஒப்பற்ற? பணிக்குத் தன்னை அர்ப்பணிக்க வரும் ஒரு இளம் பெண்ணை நிராகரிப்பது முதல் வாசிப்பில் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது .தேவியின் தோழி சில்வியாவும் இதே கேள்வியினை எழுப்பும் போது பல வலுவான ஐயங்களைத் தோற்றுவிக்கிறது இங்குதான் அ.மாதவையாவின் கிளாரிந்தாவுடன் யாதுமாகி நாவலின் தேவியினை ஒப்பிட்டு நோக்க முடிகிறது.

கிறிஸ்தவ மதத்திற்கென்று பிரத்தியேக குணமுண்டு ..கால் பரப்பிச் செல்லும் திசையெங்கும் வேரூன்றத் தடையாயிருக்கும் அந்த மண் சார்ந்த எந்த நல்ல அம்சத்தையும் தயங்காது தடயமின்றி அழித்து விடும் .அதுவே ஒரு சமூகத்தின் மிகப் பெரும் தீமையென்றாலும்  தான் நிலை பெற உதவும் என்றால் ஆரத் தழுவிக் கொள்ளும் ..உயர் குடியினர் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக் கொண்டாலோ போதகர்களாக உருமாறினாலோ. அதனையே கூவிக் கூவி விளம்பரம் செய்யும் கிறிஸ்தவம் பிராமணப் பெண்ணான கிளாரிந்தாவையும் தொடக்கத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு தென்னிந்திய திருச்சபைக்காக  அதன் வளர்ச்சிக்காக அரும் பாடு பட்டதையும் கணக்கில் கொள்ளவில்லை. ஆவணங்களில் கிளாரிந்தா பற்றிய பதிவுகளும் பெரிதளவில் இடம் பெறவில்லை .யாதுமாகி தேவி கன்னியாஸ்திரியாக வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப் படுத்தியதுமே  உயர் குடிப் பெண்ணல்லவா என்று வளைத்துப் போடாமல் அசட்டை செய்வதன் நோக்கம் தான் என்ன? இரண்டு பேருமே அன்றைய சமூகத்தின் விளிம்பு நிலையினர் புறக்கணிக்கப் பட்ட கைம்பெண்கள்!

தேவி இளம் விதவைக்கான மையத்தில் தங்கிப் படித்தவள் என்பதைத் தெரிந்து கொண்டதும் சாருவின் கணவன் எப்படி இளக்காரமாகப் பார்க்கிறானோ  அதே பார்வைதான்!     தொழில் ரீதியான இனக்குழுக்களாக வாழ்ந்த சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் மேட்டுக்குடிப் பெண்களை விட உப்பு விற்ற உமணப் பெண்ணும் பருத்திப் பெண்டிரும் பாடினி குலத்தைக் சேர்ந்த பெண்களும் சுதந்திரமாக வாழ்ந்திருப்பதை இலக்கியங்களில் காண முடிகிறது. சாதீயப் பாகுபாடு மிகுந்த பிற்காலத் தமிழ்ச் சமூகத்திலும் பிறப்பால் உயர்குடிப் பெண்ணாக இருந்தோர்  சாஸ்திரங்களின் பெயரால் முதுகில் பொதி சுமந்திருக்கிறார்கள்  .வாழ்விக்க வந்ததாய் சொல்லிக் கொள்ளும் இறக்குமதி செய்யப் பட்ட கிறிஸ்தவ மதமும் அந்த நியதிகளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது என்ற உண்மையினை இந்த இரு நாவல்களிலும் காண முடிகிறது .

ஆசிரியர் எம் .ஏ .சுசீலா அவர் தம் நாவலில் விவரிக்கப் பட்டிருக்கும், இரவில் மலர்ந்து தன் நறுமணத்தின் மூலமாகவே தன் இருப்பையும் அதன் அழகையும் வெளிப்படுத்தும் நைட் குயின் பூக்கள் போலவே மிகப் பெரும் சோக நிகழ்வுகளையும் எந்த பிரச்சார நெடியும் இன்றி வெகு அனாயாசமாகச் சொல்லிச் செல்கிறார். "யாதுமாகி" பெண்களின்  ஆளுமையின் அற்புத வெளிப்பாடு அது .துயரங்களையும், எதிர் பாராது வாழ்வில் குறுக்கிடும் அதிர்ச்சிகளையும் இலாவகமாகக் கடந்து செல்லும் தேவியும் சாருவும் பெண்கள் உணர்ச்சிகளின் உருவானவர்கள், ஆண்கள் அறிவின் அடையாளங்கள் போன்ற அசட்டுத்தனமான பொதுப் புத்தியினைப் பொய்யாக்கி அயராது நிமிர்ந்து நிற்கும் ஆளுமைகள்.

மதத்தின் பெயரால் நிறுவப்பட்ட மூட நம்பிக்கைகள் பெண்களுக்குப் பூட்டி விடும் கட்புலனாகாத விலங்குகளையும் அதிர்ந்து பேசாத மொழியில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதே நேரத்தில் தேவியின் மறுமணம் போராட்டங்கள் அற்றதாய் சுலபமான நிகழ்வாகச்  சொல்லப் பட்டிருக்கிறது. சாரு மற்றும் தேவி அப்பிரச்சினைகளை இயல்பாக எதிர்கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குள் அல்லது கடமைக்குள் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள் .இது மற்ற பெண்களுக்கு விடுக்கப்படும் அறைகூவல் .காலத்தையும் கதையினையும் முன்னும் பின்னுமாக நகர்த்தி இருப்பதுடன் தெளிவான கதைப் போக்கில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

பெண் எழுத்து என்பது அவள் உடல் பற்றியும் அதன் பாலியல் வேட்கை பற்றியும் பேசுவது என்று சில பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதி வரும் நிலையில் அந்த மாய பிம்பத்தை நொறுக்கிப் போட்டிருக்கும் இந்த நாவலின் பெண்கள் தங்களை இறுக்கி மூச்சுத் திணற வைக்கும் சமூக, மத நம்பிக்கைகளை. அதன் ஆவேச முகத்தை மோதி விட்டு வெற்றிக் கொடியினைப்  பற்றி எழுந்து நிற்கிறார்கள் .

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடுவது போல "யாதுமாகி" எம்.ஏ.சுசீலா அவர்கள் தம் அம்மாவுக்கு எழுப்பியிருக்கும் நினைவுச் சின்னம். ஏனென்றால் நினைவுச் சின்னங்கள் தனி மனிதரின் வாழ்க்கை, சாதனையின் அடையாளம் மட்டும் அல்ல. மற்றவர்களுக்குத் தூண்டுகோலாகும் திகழும் ஆவணம் ஆகும்.

பாளையங்கோட்டையில் கிளாரிந்தா ஆலயம் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களுக்கு உத்வேகம் தருவது போல யாதுமாகி உத்வேகம் தந்து பாதையும் காட்டுகிறது.


.

புதன், 29 ஜூலை, 2015

சங்கவை: சங்கவைக்குப் பரிசு!

சங்கவை: சங்கவைக்குப் பரிசு!: கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் நடத்தும் திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசுப் போட்டியில் பரிசுக்குரிய நாவலாக சங்கவை தேர்வு. ரூ.30,000 பரிசு...

செவ்வாய், 16 டிசம்பர், 2014

சங்கவை - என் அடுத்த புதினம்

விரைவில் வெளிவரவிருக்கும் 925 பக்கங்களைக் கொண்ட எனது புதிய நாவலின் அட்டைப் படம் இது. ஜனவரியில் நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வரவுள்ளது. அஞ்சல் மூலம் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் என்னுடைய மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கவும்.



முற்றிலும் புதிய கதை உள்ளடக்கம், கதை வடிவம் கொண்ட இந்த நாவல் வாசகர்களைப் பரவலாகச் சென்றடையும் என நம்புகிறேன்.

ஐந்து வயதில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டபோது தலை முடியை இழுத்துக் காப்பாற்றிய அம்மா, பாட்டி ஊரில் தாமரைகள் நிறைந்த குளத்தில் நீச்சல் கற்றுக் கொடுத்தார்கள். வாழ்க்கையில் எதிர்நீச்சலில் அவர்களே தோளில் தூக்கிக் கொண்டு நடந்ததால் அந்த அனுபவம் வாய்க்கவில்லை. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நெருப்பாற்றில் நீந்திக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது இலக்கிய வாசிப்பும், அதை எழுதுவதுமே கரை சேருவதற்குக் காரணியாகவும், கருவியாகவும் அமைந்தது. அம்மா தைரியம் கொடுத்தார்கள். இலக்கியத்தோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு கூடவே நான் கற்பித்த சில மாணவர்களும் சேர்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும், துன்பத்தில் துணை நின்ற சில சகோதரிகளுக்கும் இந்த நாவல் சமர்ப்பணம்.

வியாழன், 30 அக்டோபர், 2014

என்றென்றும் ராஜம் கிருஷ்ணன்

மரணிக்காத எழுத்தும் இலக்கியமும் படைத்து தமிழுக்கும் பெண்மைக்கும் பெருமை சேர்த்த ராஜம் கிருஷ்ணன் மரணம் என்ற செய்தி ஏற்படுத்தியிருக்கும் கையறு நிலை, கண்ணீருக்குப் பதிலாக வெறுமையையும் நெஞ்சில் விதைக்கிறது. கற்பனையில் சஞ்சரித்துக் காதல், குடும்பம், உறவுகள், பிரிவுகள் என ஒரு சிறு வட்டத்திற்குள் புனை கதைகளைப் புனைந்து சொன்னவர் மத்தியில் சமூகத்தின் பல்வேறு அடித்தட்டு மக்களைப் பாத்திரங்களாக வார்த்து அவர்தம் வாழ்வையும் சூழலையும், அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் தம் இலகுவான மொழிநடையில் பதிவு செய்தவர் ராஜம் கிருஷ்ணன்.


நெய்தல் நில மக்களின் உப்புக்கரிக்கும் கண்ணீர் வாழ்க்கையை 'அலைவாய்க் கரையில்...' என்ற தம்முடைய நாவலில் அப்பரதவ மக்களின் மொழியிலேயே படைத்தவர்.

2013-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜோ டி குரூஸ் எழுதிய கொற்கை நாவல் அவரது முந்தைய நாவலான ஆழி சூழ் உலகு - இவை இரண்டும் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகளை அலைவாய்க் கரையில்... நாவலை விட்டுவிட்டு யோசிக்கமுடியாது.  இயற்கையின் மாபெரும் கொடையான கடலோடு அதன் அகன்ற திசைகளோடும் தம்மைப் பிணைத்துக்கொண்டு வாழும் கடற்புரத்து மக்களை, கிறிஸ்தவம், குறிப்பாக கத்தோலிக்க மதம் இயற்கையிலிருந்தும் அவர்தம் நிலத்துக்கே உரிய வழி வழியான தெய்வங்களிடமிருந்தும் துண்டித்ததோடு அவர்களது உழைப்பையும் சுரண்டிக் குப்புறத் தள்ளிவிட்டது என்ற உண்மையை அலைவாய்க் கரையில்... நாவலில் அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளார் ராஜம் கிருஷ்ணன்.

கடல் எனும் தாய் மடியில் கண்ணுறங்காது இன்னல்கள் பல கடந்து அலைகளின் துணைகொண்டே அலைகளை மீறிச் சென்று மீன் இனங்களை வாரி வரும் பரதவ இன மக்கள் இயல்பிலேயே சூது தெரியாதவர்கள். அதனால்தான் மீன்களிலிருந்து கிடைக்கும் துவி என்ற கழிவுப் பொருள் வெளிநாட்டில் எக்கச்சக்க விலைக்கு வாங்கப்படும் என்ற உண்மை அறியாது தேவாலயத்திற்கே அதனைக் கொடுத்துவிடுகிறார்கள். அதனை அங்கிருக்கும் கத்தோலிக்கச் சாமியார் ஏற்றுமதி செய்து கொழுத்த லாபம் சம்பாதிக்கிறார். இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை எதிர்விளைவுகள் பற்றிச் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாக, அதே நேரத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

குறிப்பிட்ட நாவலில் வரும் பரதவர் குலப் பெண்களின் உணர்வு, உறவுச் சிக்கல்கள், அவற்றைக் கடந்து வாழ்வை எதார்த்தமாக எதிர்கொள்ளும் அவர்களது மன முதிர்ச்சி மற்றும் சுதந்திரமான எண்ணங்கள் ஆகியவற்றையும் அவர்களுக்கிடையேயான உரையாடலின் துணை கொண்டு லாவகமாகச் சொல்லிச் செல்கிறார். கள ஆய்வு எழுத்தாளர் என்று பெயர் பெற்ற ராஜம் கிருஷ்ணன் பாத்திரங்களின் உரையாடலில் அந்தந்த நிலத்திற்கே உரிய பேச்சு வழக்கினைச் சர்வ சாதாரணமாகக் கையாண்டுள்ளார்.

பல்வேறு சமூகங்களை, குறிப்பாக விளிம்புநிலை, அடித்தட்டு மக்களை நேரடியாகச் சந்தித்து அம்மக்களுடனேயே அந்தந்த ஊர்களில் தங்கி, உரையாடி அவர்தம் பிரச்சினைகளை உள்வாங்கி உணர்வளவில் தாமே அவற்றை அனுபவித்து எழுதியதால்தான் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நாவல்கள் தனித்துவமும் பெரும் சிறப்பும் பெறுகின்றன.

உப்பளத்தில் வேகும் மக்களைப் பற்றிய வேருக்கு நீர், படகர் வாழ்வை மையமாகக் கொண்ட குறிஞ்சித் தேன், மற்றும் வளைக்கரம், கரிப்பு மணிகள் என அவரது படைப்புக்கள் அத்தனையும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடுவது போல சூரிய சந்திரர் காண உழைத்தாலும் விளைச்சல் நிலத்துக் களைகளாகவே சமுதாயத்தில் ஓரங்கட்டப்படும் விவசாயிகளின் வேதனையை சேற்றில் மனிதர்கள் புதினத்தில் கண் முன் கொண்டு வந்துள்ளார். உயிரோட்டமுள்ள அவரது எழுத்தில் இலங்கையின் மாணிக்க கங்கையும் இடம்பெறத் தவறவில்லை. சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள் பற்றி எழுதுவதற்காக அக்கொள்ளையர்களின் தலைவனையே சென்று சந்தித்துப் பேசி ஆராய்ந்து எழுதிய ராஜம் கிருஷ்ணனின் உளவியலைத் துணிச்சல் என்று சொல்வதா அல்லது புனைந்து சொல்லும் கதையில் கூட உண்மையான வாழ்வை அது கையாளும் நிஜக் கதாப்பாத்திரங்களோடு அவர்களின் போராட்டங்களோடும், கண்ணீரோடும், சிரிப்போடும் கடந்து செல்லும் பாதையை படம் வரைந்து காட்டுவதுபோல் எழுதும் ‘realistic writer’ என வியப்பதா?

பொதுவுடைமைச் சிந்தனையும் பெண்ணியமும் மேலோங்கி இருக்கும் ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்கள் பிரச்சார நெடியின்றி இலக்கியங்களுக்கே உரிய அழகியல் உணர்வு கொண்டு இலங்குவதோடு அற்புதமான வாசிப்பு இன்பத்தைத் தருகின்றன.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்றபோது பாடத்திட்டங்களில் வைக்கப்பட்டிருந்த புதினங்களில் ராஜம் கிருஷ்ணனின் நாவல் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் எங்கள் பேராசிரியர்கள் ‘syllabus-ஐ cover பண்ணுகிறோம்’ என்று குறுகிய வட்டத்திற்குள் நின்றுகொண்டு ஒருபோதும் எங்களுக்கு வகுப்பெடுத்ததில்லை. மாறாக எவ்வளவு தூரம் இலக்கியங்களை, அந்த வாசிப்பு அனுபவத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்தினார்கள். அந்த வகையில்தான் ராஜம் கிருஷ்ணனையும் அவர்தம் எழுத்துகக்களையும், மானுடத்தை மையமாகக் கொண்ட அதன் உன்னதத்தையும் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள். இதற்காக இத்தருணத்தில் என்னுடைய பேராசியர்களை நன்றியுடன் நான் எண்ணிப் பார்க்கிறேன்.

கடந்த ஆண்டு லொயோலா கல்லூரியின் முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கான ஆய்வேட்டுத் தலைப்புக்களைத் தேர்ந்தெடுக்கையில் ராஜம் கிருஷ்ணனின் படைப்புக்களை எடுத்துக்கொள்ளலாம் என்ற எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்ட மாணவி ராமசுதா அலைவாய்க் கரையில்... புதினத்தை ஆய்வுப் பொருளாகத் தேர்வு செய்தாள். கிறிஸ்தவர்களின் (குறிப்பாக கடலோர பரதவ கிறிஸ்தவர்களின்) வாழ்வை, அவர்தம் கலாச்சாரத்தைப் பற்றிய படைப்பினை முதன் முதலாக வாசித்ததாலோ என்னவோ புரிந்துகொள்வது கடினமாக இருப்பதாகவும், ஒருவித அந்நியத் தன்மை தெரிவதாகவும் அவள் சொல்லிக்கொண்டே இருந்தாள். இறக்குமதி செய்யப்பட்ட கிறிஸ்தவ மதத்தைப் போல அதைப் பின்பற்றுவதால் தங்களின் வழி வழியான பண்பாட்டுத் தளங்களிலிருந்தும் அந்நியப்பட்டு நிற்கும் மக்களின் வாழ்க்கையை வாசிப்பதில் அந்நியத்தனம் தெரிவதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஆனாலும், ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்கள் அலைவாய்க் கரையில்... அலையில் மாணவியை ஓரேயடியாக அள்ளிச் சென்றதுதான் உண்மை. பழைய நாவலை ஆய்வுக்காக எடுக்க வேண்டுமா என்று தமிழ்த்துறைத் தலைவரே கூட தயக்கம் காட்டினாலும் வேறொரு மாணவனும் வேருக்கு நீர் நாவலை எடுத்து ஆய்வு செய்தான்.

நாவலாசிரியரைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று ராமசுதா போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தன்னந்தனியராய் விடப்பட்டிருந்த ராஜம் கிருஷ்ணனைச் சந்தித்து அலைவாய்க் கரையில்... நாவலை அவர்களிடம் காட்டியதும் அதை வாங்கித் தன் மார்போடு அணைத்துக் கொண்டு உரத்தக் குரலில் அவர்கள் கதறியதை எங்களுடன் பகிர்ந்து கொள்கையில் அவள் மட்டுமல்லாமல் நாங்களுமே கண்ணீருக்கு அணைபோட முடியாமல் நெஞ்சுக்குள் கதறினோம்.

சமீபத்தில் இலங்கை மாணவன் ரகுநாத்திடம் உரையாடுகையில் மாணிக்க கங்கை பற்றி நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருந்தான். அந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் எழுந்த ராஜம் கிருஷ்ணனின் நினைவுகள் கங்கைக் கரையில் அதன் நீரலை தொட்டு நிற்கும் சிலிர்ப்பையும் அதே நேரத்தில் மொழிக்குள் சிக்காத தீராத தவிப்பையும் தாகத்தையும் ஏற்படுத்தியது.

மரணம் அந்த மாபெரும் எழுத்தாளரின் உடலுக்குத்தானே அன்றி எழுத்துக்களுக்கு இல்லை. 

Expert Advice on UGC NET Exam Preparations - வெற்றிப் படிக்கட்டு (தந்தி TV)