சனி, 10 மார்ச், 2012
சனி, 25 பிப்ரவரி, 2012
தமிழ் சினிமாவில் தலித் கதைகள்?
தமிழ் சினிமா தொழில் நுட்பங்களில் வளர்ச்சி அடையாத தொடக்க காலங்களிலேயே நந்தனார் சரித்திரம் நான்கு முறை படமாக்கப்பட்டுள்ளது. தலித் மக்களைப் பற்றிய கதைகள் அந்தக் காலத்திலயே வெள்ளித் திரையில் இடம் பிடித்திருந்தது. ஆனால் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டுவிட்ட இன்றைய தமிழ் சினிமா தலித்துகளின் வாழ்க்கையை படமாக்குவதில் தயக்கம் காட்டுவது ஏன் அல்லது பாரா முகமாய் புறக்கணித்துச் செல்வது ஏன்? லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறை 25.02.2012 அன்று 21ஆம் நூற்றாண்டில் தமிழ் சினிமா என்ற தலைப்பில் நடத்திய மாநில கருத்தரங்கில் கட்டுரையாளர் முனைவர் திருவாசகம் மேற்கண்ட கேள்வியை எழுப்பியபோழுது மாணவர்கள் தலையாட்டி ஆமோதித்தனர். இந்தக் கருத்தரங்கில் தொடக்க உரை ஆற்றிய இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் நல்ல சினிமா என்பது எது என்ற வினாவை எழுப்பி விளக்கமும் அளித்தார். உங்களுக்குப் பயனுள்ள வகையில் எடுக்கப் பட்டுள்ளதா அது நல்ல சினிமா, உங்கள் வளர்ச்சிக்கு உதவுகிறதா அதுவும் நல்ல சினிமா, உங்கள் வாழ்க்கையை முன் வைக்கிறதா அது நல்ல சினிமா என்ற அவரது உள்ளார்ந்த பதிலில் திருவாசகத்தின் கேள்விக்கான பதிலைத் தேடினால் கிடைப்பதென்னவோ ஏமாற்றம் தான்.
கறுப்பின மக்கள் பற்றிய எழுத்துக்களும் கதைகளும் தீவிரம் அடைந்து வருவது போலவே தமிழில் தலித் மக்களைப் பற்றிய கதைகளும் கவிதைகளும் அவர்கள் வாழ்வையும் வாழ்வுக்கான போராட்டத்தையும் முன் வைத்து எழுதப்பட்டுவரினும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இவ்விஷயங்களைப் படமாக்க முன் வராமல் போனது ஏன் என்ற கேள்வி நியாயமானதுதான். முனைவர் திருவாசகம் தமது கட்டுரையில் அந்தக் காலத்திலாவது மதுரைவீரன் படத்தில் கூட அருந்ததிய இனத்தை சேர்ந்தவர்கள் எம்.ஜி.ஆரின் பெற்றோராகக் காண்பிக்கப்பட்டார்கள், இப்பொழுது அந்த அளவு கூட தலித் மக்களின் பிரதிநிதித்துதுவம் திரைப்படங்களில் இல்லை என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார். நான் இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் திரு எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களைத் தெய்வமாகவே உயர்த்திப் பார்க்க வைத்த மதுரை வீரன் திரைப்படம் அவரை ஒரு அருந்ததியர் இனத்து குடும்பத்தின் பிள்ளையாகக் காட்ட விரும்பவில்லை என்பது அவலமான உண்மை. வழக்கில் இருக்கும் கதைப்படி மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவன் தான். ஆனால் எம்.ஜி.ஆரை ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில் தாழ்த்தப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த மகனாக சித்தரிக்க வேண்டுமா என்று இரவு பகலாக தூங்காமல் சிந்தித்திருப்பார்கள் போலும்! அது எம்.ஜி.ஆரின் புகழுக்கும் உயர்ந்த தெய்வீக மனிதர் என்ற பிம்பத்திற்கும் களங்கம் கற்பிக்கும் என்று நம்பினார்களோ என்னவோ. மதுரை வீரன் ஜனன கதையே மாற்றப்பட்டு உண்மையில் அவர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் என்றும் அருந்ததியர் குடும்பத்தால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர் என்றும் எனவே மதுரை வீரன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் இல்லை என்றும் கதையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள். சமீப காலங்களில் தலித்துகள் பற்றி படங்களில் இடம் பெறுவதில்லை என்று யார் சொன்னது? புத்தியற்ற காமெடியன்களாகவும் கோமணம் மட்டுமே கட்டித் திரியும் கூலிக் காரர்களாகவும் கதாநாயகர்களுக்கு கால் பிடித்துவிடும் விசுவாச வேலைக்காரர்களாகவும் இவர்கள் தானே சித்தரிக்கப்படுகிறார்கள். சின்னக் கவுண்டர் என்ற படத்தில் 'வண்ணான் பயலுக்கு இவ்வளவு அறிவா அப்படின்னு பொறாம படராங்கடா' என்று கவுண்டமணி செந்திலிடம் கூறும் காட்சியில் ஆழமாகத் தெரிகிறதென்ன? இம்மக்கள் அறிவிலிகள் என்பதுதான் சமூகத்தின் பரவலான மதிப்பீடு என்பதுதானே.
வெள்ளித்திரையில் வெள்ளிவிழா கண்ட நாட்டாமை படத்தில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண்ணுக்கு நியாயம் வழங்குகின்ற நாட்டாமை 'அவங்களுக்கு படுக்குறதுக்கு நாம பாய் குடுக்கலாம். அதுல நாமளே போய் படுத்துக்கலாம்ங்கறது என்னடா நியாயம் என்று உச்ச ஸ்தாயியில் கர்ஜிப்பார். அந்த கர்ச்சனைக்குள் தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம் தூங்குவதற்கு பாய் கூட இவர்களிடம் தான் கையேந்திப் பெறவேண்டும் என்ற செய்திதானே ஒளிந்திருக்கிறது.
முனைவர் திருவாசகம் சகலகலா வல்லவன் கமலஹாசன் கூட தலித் மக்களை தசாவதாரத்தில் அவலட்சணமாகத்தானே காட்டினார் என குறைபட்டுக்கொண்டார். சந்தர்ப்பம் கிடைக்கும்போழுதேல்லாம் வைணவத்தையும் பிராமணத்தையும் தூக்கிப் பிடிக்கும் கமலஹாசன் போன்றவர்கள் தேவரின் மகனாக மட்டும் தான் நடிக்கவேண்டுமா, அருந்ததியர் மகனாக நடிக்கக் கூடாதா என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? பெரும் அறிவு ஜீவி என்ற போர்வைக்குள் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்ற தேவாரத்தின் அடி நாதத்தையே மாற்றிப் போடுவதுபோல தமிழ் மண்ணுக்கு உரியது சைவம் அல்ல வைணவம் தான் என்று வரலாற்றையே தசாவதாரத்தில் திரித்து கிராபிக்ஸ் கலை நுட்பத்தில் அதை மறைத்து இளைய தலைமுறையினருக்கு தவறான சரித்திரத்தைக் கூறிய கமலஹாசனிடம் தலித் மக்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்ற அக்கறையை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?
விவாத நேரத்தின் பொழுது பாலு மகேந்திரா போன்றவர்கள் கூட இது பற்றி சிந்திக்கவில்லை என்று திருவாசகம் அங்கிருந்த பாலு மகேந்திரா முன்னிலையிலேயே குறிப்பிட்ட பொழுது அவர் படங்கள் எடுத்த காலங்களிலும் தொலைக்காட்சியில் குறும்படங்கள் கொண்டுவந்த வேளையிலும் தலித் கதைகள் எழுதப்பட்டிருக்கவில்லை என்று குறுக்கீட்டாளர்கள் பாலு மகேந்திராவிற்காக பரிந்து பேசினார்கள். அந்த தகவல் தவறானது என்பதோடு அப்படியே தலித் கதைகள் எழுதப்பட்டிருக்காவிட்டாலும் சுற்றிலும் சேரியிலும் வயக்காட்டிலும் இருத்தலுக்காகப் போராடும் தலித் மக்களின் வாழ்வும் சூழலும் இச்சிறந்த இயக்குனரின் கலைக் கண்களுக்குத் தெரியாமல் போய் விட்டதா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. தலித் பெண்ணின் உடல் 'பொதுவானது', 'கீழானது'. அதன்மேல் யார் வேண்டுமென்றாலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற கேவலமான சிந்தனையை எத்தனை தமிழ்ப் படங்கள் போதித்திருக்கின்றன!
இந்த விவாதங்கள் மிக நீண்ட ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் லயோலா கல்லூரியின் காட்சி தகவலியல் துறை பேராசிரியர் சின்னப்பன் அவர்களின் அந்நியன் படம் பற்றிய அலசல் இயக்குனர் ஷங்கரின் எல்லாப் படங்களுமே மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்ற எண்ணத்தை வலுவாக சொன்னது. சினிமா என்ற அற்புதமான கலை ஒரு பொழுதுபோக்கு தான்; ஆனால் அதன் வீச்சு சமூகத்தின் எல்லாப் பக்கங்களையும் எளிதாகச் சென்று தாக்கக் கூடியது. எனவே இது போன்ற விழிப்புணர்வைத் தூண்டும் கருத்தரங்குகள் வரவேற்கப்படவேண்டியவை. அக்கருத்தரங்கில் இடம் பெற்ற அனைத்துக் கட்டுரைகளையும் வாசிக்க விரும்புவோர் லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையை தொடர்பு கொள்ளலாம்.
புதன், 7 டிசம்பர், 2011
கையற்ற காதல்
என் காதலுக்குக்
கண் இருந்தது
கைதான் இல்லை !
யாருக்குப் புரிகிறதோ
இல்லையோ
உனக்குப் புரியும் .
ஆகாயம் தொட்ட
பசுமையை
அண்ணாந்து அதிசயித்த வேளை
நீ என்றும்
என் நெஞ்சில்
பசும் பூ என்றாய் .
கொடைக்கானல் மலைக்காற்றில்
உன் நெருக்கத்தின் வாசம் .
மறைத்து வைத்த
மகிழம் பூவாய்!
ஒன்றரைக் கையுடன்
குழந்தை என்றதும்
முடத்தைப் பெற்ற
மூடக் கழுதை
வசவுகளில் வறுபட்டதில்
எனைத் தொலைவில்
வைத்து விட்டாள் தாயும் !
நீயோ தூக்கி வைத்துக்
கொண்டாடினாய் !
வீட்டு விசேஷம்
ஊர் விழாக்கள்
ஒதுக்கப்பட்டு மறக்கப்பட்டேன்
பிறகு நானே
புறக்கணித்தேன்
புறக்கடையில் நின்று
கொண்டு !
நீயோ
உன் வாழ்வின்
ஒரே விசேஷம்
நான் என்றாய்
தேரில் ஏறி வரும்
திருநாள் அம்மனாய்
அவதரித்தேன்
உன் வார்த்தைகளில்
வார இறுதியில்
மதுரையிலிருந்து
கொடைக்கானலுக்குப்
பேருந்து வருகிறதோ
இல்லையோ
நீ வந்தாய்
எனக்காகவே !
அனுதாபமா என்றேன்
அன்பு என்றாய்
கல்லூரியில் சொல்லாத
உலக வரலாறுகளை
நீ எனக்கென்றே
விவரித்த போது
ஆங்கில ஆசிரியை
வரலாற்று மாணவியாய்
மாறிய மாயம்
உன்னோடு நானும்
இரசித்தேன் .
இலக்கியமும் வரலாறும்
பிரிக்க இயலாதவை
உன்னையும் என்னையும் போல
என்றாய்
கண்ணோடு கண் நோக்கி
நீ பேசிய காவியத்தை
உயிரில் எழுதிக் காத்தேன்
எனக்குப் பிடித்த
சொடக்குத் தக்காளி
கை நிறையத் தந்து
காதல், வார்த்தைகளில்
இல்லை ,
காட்டும் அக்கறையில்
என்ற போது
ஆயிரம் சூரியன்களாய்
நீ அருகிருக்க
ஆலங்கட்டி
மழை கொட்டியது
நெஞ்சுக்குள்.
பரணில்
வீசப்பட்ட
பழைய பொருளாய்
கிடந்தேன்
நீ
என்
நினைவுகளை
சுவாசிப்பதாய்
சொன்னபோது
பொதிகையின்
புதிய
தென்றலாய்
புலர்ந்தேன்
என்
கண்கள்
மின்னலின்
பனிப் பொழிவு
என்றாய்
என்
மொழி
கலைகளின் அபிநயம்
என்றாய்
தேரிக் காட்டுச்
செம்மண்ணில்
படர்ந்திருக்கும்
செண்டுப்பூ
நான் என்றாய்
செவ்வரளி
இதழ்
சேவல் கொண்டைச்
சிவப்பில்
என்
பட்டுப் பாதங்கள்
என்றாய்
ஆவாரம் பூவையும்
அந்திச் சூரியனையும்
குழைத்து தீட்டிய
முகம்
என்றாய் !
புத்தகங்களில்
மூழ்கிக் கிடந்தவனை
கவிதை முத்தெடுக்கச்
செய்த
என் மகாராணி
நீ
என்று
மலைகளின் இளவரசி
சாட்சியாய்
சொன்ன
அந்தக் கணத்தில்
என்
ஒன்றரை கை
காணாமலே
போய் விட்டது .
கிளியோபட்ரா
சின்ட்ரெல்லா
எல்லாமே நானோ
இறுமாந்து கேட்டேன்
நான்
தேவதையா ?
இல்லை
தேவதைகளின்
தேவதை என்றாய் .
உன்
அறிவின் விசாலம்
நகம் தீண்டாத
நாகரீகம்
பாலையில்
புதிய மழையாய்
உன் அன்பு
நீயே
நானாய்
நினைவுகளில்
கலந்து கரைந்தேன்
என் வீட்டார்
நம்பவேயில்லை
இந்த ஊனத்தையும்
நேசிக்க ஒருவன்
என்பதை
பிறந்த நாள் முதல்
பார்த்திராத
நாணத்தை
பெண்மையின்
நெகிழ்வைக்
கண்களில் கண்டதும் ,
ஒரே முடிவாய்
வந்தார்கள் உன்னிடம்
திருமணத் தேதி குறிக்க!
பாவம் எனப் பரிவு
காட்டியது பாவமா ?
தன்னம்பிக்கை தர
நட்பு பாராட்டியதற்குத்
தண்டனையா?
பரிகாசச் சொற்களில்
நீ
அள்ளி வீசிய
அமிலத்தில்
அவர்கள்
துடித்துப் போனார்கள்
நானோ
மரித்தே போனேன்!
நட்புக்கும்
காதலுக்கும்
வித்தியாசம்
தெரியாதா
என்று
முகத்தில் அறைந்தாயாம்
ஏன் தெரியாது ?
உதடுகளோடு
சேர்ந்து சிரித்த
கண்களின்
கயமைதான்
தெரியாமல்
போய் விட்டது
ஆனால்
உனக்கு
நான் கண்டிப்பாக
நன்றி சொல்ல வேண்டும்
கண்ணீரில் கலைந்த
என்
கையறு நிலைப்
பாடல்களும்
எனை எள்ளி
நகையாட
இருட்டில்
நான் நத்தையாய்
என் முடத்தொடு
முடங்கிப் போன போது
வீழ்த்திய காதலின்
கட்டுக்கள் கத்தரித்து
துக்க முக்காடு களைந்து
எனை எழச்செய்தது
உன்
வரலாற்றுக் கதைகள்தான் !
உயர வைத்து
உயர்ந்த
பெண்களின்
சரித்திரம்
நீ
முறித்துப் போட்ட
என்
கனவுகளுக்குப்
பதியம் போட்டன .
என் தாய் கூட
அஞ்சினாள்
நான்
தற்கொலை
செய்து கொள்வேன் என்று
நானோ
உன்
வஞ்சனையில் செத்து
மீண்டும் பிறந்தேன்
மலைக் குறிஞ்சியாக
எழுதியவர்: ஜெயசாந்தி
ஞாயிறு, 27 நவம்பர், 2011
நதியின் தாகம்
உச்சத்தில் பிறப்பு
மலை மகள்
கர்ப்பக்கிரகத்திலிருந்து
மண் மாதா மடியில்
பாயும் பரவசம்.
கல்லோடும் முள்ளோடும்
இழைந்து சென்றாலும்
பூக்களையும் போர்த்திப்
புன்னகைப்பவள் நான் .
பொதிகையின் பரணி
தரணியின் தாகம்
தீர்க்க வந்த தாமிரபரணி
தமிழின் தீர்த்தம்
கழனிகளில் கலந்தோடி
கதிர்களோடு உறவாடி
கிராமத்துக் காற்றில்
கலைகளை சுவாசித்து
களைப்பின்றிப் பயணம்.
ஆலமரங்கள் சூழ்ந்திருக்கும்
முத்தாலன்குறிச்சி
பள்ளிக்குழந்தைகள்
பூவரசம் பூக்களை
வியந்தபடி
வேப்பமர நிழலில்
உரக்கச் சொல்லும்
ஓரிரண்டு ரெண்டு
வாய்ப்பாட்டில்
ஊர்க்கணக்கும்
விளங்கியது
இங்கு
மனிதர்களும் மரங்களும்
சம அளவில் சமமாக
கூடவே உறவு கொண்டாடும்
கிளிகளும் குருவிகளும்!
மருதாணிக் கைகளில்
மஞ்சள் மணமணக்க
மாரியம்மா நீராடுகையில்
குப்பென்று கிளம்பும்
அவித்த நெல் வாசம்.
தாவணிப் பருவங்களின்
கெண்டைக் கால்களை
கெண்டை மீன்கள்
கவ்வும் காதலில்
கலந்து வரும்
கொலுசு சப்தம்
என் உயிர் சுண்டும்
சங்கீதம்!
தூக்கு நிறைய
செக்கெண்ணெய்
கொண்டு வரும்
மணக்கரை செட்டியார்
மாலைப் பதநீர்
குடித்த கலயத்தின்
பனை வாசம்
பனங்காட்டு விடுலிக்குள்
காய்ச்சப்படும் கருப்பட்டிப்
பாகின் சுகந்தம்
ஆலமரக் கிளைகள் தோறும்
கொத்துக் கொத்தாய்க்
கனல் துண்டுகள்!
கொத்தும் கிளிகளோடு
குலவும் காக்கை குருவிகள்
காக்கா முள்ளில்
காத்தாடி செய்து
காற்றுக்கு
எதிர்த் திசையில்
ஓடி வரும்
குழந்தைகளின் கூச்சல்
என்னில் குளிர்ந்து
வைகறை சூரியனில்
காய்ந்து
பைக்கட்டில் பதுக்கிய
நயினார் தோட்டத்து
புளியம் பழங்களோடு
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளைகள்
மதியமும் மாலையும்
குருத்து மண்ணை
அளைந்தபடி பேசும்
கதைகளில்
எனக்குப்
புரிந்து போகும்
பூகோள சரித்திரம்
தைப் பொங்கல்
திருநாளில்
தாய் வீட்டுச்
சீர் சுமந்த
பனை ஓலை
வண்ணப் பெட்டியில்
சர்க்கரைப் பொங்கல்
கரும்போடு
அவித்த பனங்கிழங்கும்
ஆற்று மணலில்
ஊர் கூடி உண்கையில்
பகிர்ந்து கொள்ளும்
பாசத்தின் பசுமையில்
கனவுகளின் வண்ணங்களில்
பண்பாடும் இயற்கையும்
இணைந்து
கை கொட்டும்
இப்போதோ
இவையெல்லாமே
வறண்டு போன
நிகழ் காலத்தின்
கடந்த கால
ஈர நினைவுகள் .
பிழைப்பு தேடி
என் கரை கடந்து
பெயர்ந்து சென்ற
உறவுகளின் கண்ணீரில்
உப்புக் கரிக்கிறேன்
ஓங்கி அடிக்கும்
வேஷ்டியில்
புருஷனையும் சேர்த்துத்
துவைக்கும்
பெண்களின்
ஆரவார ரகசியங்களும்
கருக்கலில்
பேய் உலவுவதாய்
புரளி கிளப்பி விட்டு
ஏகாந்த நிசப்தத்தில்
நீரில் தெரியும்
நிலவு சாட்சியாய்
காதலியர் காதில்
காளையர் கிசுகிசுக்கும்
கதைகளும்
மலங்காட்டு விருவை
சுட்டுத் தின்ற பின்
விடிய விடிய
வேட்டை சாகசங்கள்
பேசும் பெருசுகளின்
வீர மொழிகளும்
இப்போது
எதுவுமே இல்லை .
கோடையில்
நான் இளைத்துப்
போகையில்
ஊற்று தோண்டி
தேங்காய் சிரட்டையில்
மொண்டு
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததாம்
பாடி வந்து
அன்னை எனக்கே
அமுது ஊற்றிய
பிள்ளைகளின்
குலை குலையாய்
முந்திரிக்கா குதூகலமும்
எதுவுமே இல்லை .
எப்போதும் லாரி
நிற்கிறது ,
மணல்
மாயமாகிறது
பனைகளின்
சமாதியில்
செங்கல் சூளைகள் !
குருவிகளின்
நெல்கொறிப்பும்
ஆலமரக் கிளிகளின்
ஆசை மொழிகளும்
அற்றுப் போயின !
பாறைகளும் ,பாய் தொழில்
முடங்கியதால்
கேட்பாரற்றுப் போன
கோரைகளும் மட்டுமே
என்னோடு!
என் மக்கள்
என் மரங்கள்
என் சொந்தங்கள்
யார் தருவார்கள்
மீட்டு ?
தவிப்பில் நிலைக்கும்
தாகம்
யார் தீர்ப்பார் ?
எழுதியவர்: ஜெயஷாந்தி
சனி, 29 அக்டோபர், 2011
கர்வத்தின் கடவுள்
ஒரு சூரியோதயத்தின்
முதல் கீற்று
பூமியை முத்தமிட்ட
பொற்கணத்தில்
கதிரைக் கையில்
கொண்டு வந்த
குண்டு குழந்தை
நான்
கர்வத்தில் குழைத்து
வார்த்த கடவுள்
சித்திரம்
நான்.
செத்துப் பிறக்கும் எனும்
மருத்துவரின் ஆருடத்தை
மரிக்கச் செய்து
நீலம் பாய்ந்து
நிலம் பார்த்து
பதியம் போட்டுக்கொண்ட
பச்சிலைக் கொடி
நான்
அம்மாவின் சேலை பற்றி
பற்றுக்கோடு இதுவென்று
அலைந்து
பிறகு
நிலை கலைந்த பிள்ளை.
பள்ளிக்கு செல்லாமல்
வாத்தியார் அப்பாவின்
பிரம்பை ஏய்த்து
கன்னத்து சுருக்கங்களில்
கனிவை தேக்கியிருந்த
பாட்டியின்
சொரசொரப்பு விரல் பற்றி
தேரிக்காட்டு செம்மண்ணில்
பனங்காற்றை பருகிய
அறியா பருவத்தில்
கட்டிவைக்க முடியாத
சில் வண்டாய் கர்வம்.
தவழ்ந்து மோதுகையில்
நடைவண்டி பழகுகையில்
நிலைதடுமாறி தலை கவிழ்ந்த
மூச்சடைத்த தருணங்களில்
ஐம்பொறிகளையும் காய்ச்சல்
அடித்துபோட்ட வலிகளில்
அம்மாவாய் பாட்டியாய்
மூன்றாவதாயும் யாரோ
உடனிருந்த கர்வம்
கடவுள் என்று பேரிட்டு
கண்ணில் காட்டாமல்
பெற்றோரும் பெரியோரும்
சொல்லி வைத்த கதைகள்
நடுமண்டையில்
அறிவு வார்த்தையாய்
அடைபட்டதேயன்றி
வார்த்தை ஊற்றுக்கண்ணாய்
உணரப்பட்டதேயில்லை
ஐந்தாம் வகுப்பில்
மார்கரெட் டீச்சர்
கணக்கு நோட்டில்
ஒன்றுக்கு பின்னே
இரண்டு சைபர் போட்டு
கன்னத்தில் தட்டி
சக மாணவியர்
கை தட்டியபோது
இரண்டு சைபர் மட்டுமே
நான்
என்றறியாத கர்வம்.
பாடம், படிப்பு
கலை, கவிதை, கட்டுரை
முதலிட வேகம்
விஷமாய் இறங்கி
பரிசுகளாய்
கைகளை நிறைத்தபோது
வாங்கிய கைகள் கூட
என் படைப்பு இல்லை
என்று
தெரிந்துகொள்ளாத கர்வம்.
அன்பு
அது என் அப்பா!
கதைகள் சொன்ன
கண்டிப்பா? கனிவா?
புதிரிலேயே உலகத்தை புரியவைத்த
அறிவின் உச்சம்
கால நதி
அவரை
மறுகரைக்கு மாற்றிய பின்னும்
கண்ணீரில் கரையாமல்
மிச்சமிருந்த கர்வம்.
கவலைகளுக்கே கல்லறை கட்டி
வசந்தத்தில் எங்களை
உயிர்ப்பித்த அம்மா
அது என் அம்மா!
ஆதி நதியின்
துளியே அவள் என
விளங்காத கர்வம்.
பயண சுழற்சியில்
ஆற்று சுழியாய் சிக்கல்கள்
பிரளயத்தில் பாதை
வாழ்க்கை திசைகளை
இழந்துவிட்டதாய்
திக்கற்று நின்றபோது
விரல் நுனியில் என்
ஆதி சூரியன்
விழித்துணராத
தகதகத்த வெளிச்சம்
விழுங்காத கர்வம்.
ஐம்பொறிகளிலும் ஆணிகள்
சுளுவாக எடுத்திட
தோழன் அருகிருந்தும்
நானே பிடுங்கி எறிவேன்
என்று
உயிரை கிழித்துக்கொண்ட கர்வம்.
கூடவே வந்த நடை
தொடர்ந்த குரல்
துரத்தி வந்த துணை
என் உயிர் பிறந்த நதி
சங்கமிக்கும் சமுத்திரம்
தொலைந்து போனதாய்
நான் என்னையே ஏமாற்றியிருந்த
என் ஆன்மாவை
வெளிச்ச கிரணத்தின்
வெள்ளி பாத்திரமாய்
பாதுகாத்திருந்த
என் நண்பன்
இது எதுவுமே தெரியாமல்
தறிகெட்டு தடங்கள் இழந்து
வேகத்தில்
விழப்போன வேளையில்
விரைந்து பற்றிக்கொண்ட
என் பற்றுக்கோடு.
நேசித்த மனது
ஏற்றிவைத்த
சின்ன ஒளியாய்
சிங்கார சிரிப்பில்
முகையை தொட்ட
முதல் பனித்துளியாய்
பரவசப்படுத்திய
ஓர் அன்பு
இரணங்களை விசிறிவிட்டு
கால்களுக்கு தோள்கொடுத்த
ஓர் அன்பு
திடும் என்று உதறிக்கொண்டபோது
மொட்டை மரத்தில்
கலைந்த கூட்டில்
தன்னந்தனியளாய்
இனி எதுவும் இல்லை
உயிரைக் கரைத்து ஓலமிட்ட
அந்தக் கணத்தில்
இதோ உன் பற்றுக்கோடு
பற்றிக்கொள் என்று
புரிந்தது எனக்கு!
ஓ!!
இது பாட்டியின்
சொரசொர கைகள் அல்லவா?
நிமிர்ந்து பார்த்தேன்
நித்திய சூரியன்
கண்ணில் இறங்கியது நிலவாய்!
நானே எல்லாம் என்று.
வார்த்தையின் பொருள் புரிய
மகா சமுத்திரத்தின் மடியில்
பாதுகாப்பாய்
அகன்று விரிந்தது
என் கர்வம்.
எழுதியவர்: ஜெயஷாந்தி
எழுதியவர்: ஜெயஷாந்தி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)