புதன், 22 ஜனவரி, 2014

நவீன ஊடகங்கள் நாட்டார் கலைகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்

நாட்டார் கலைகள் (folk arts) நாட்டார் வழக்காறுகள் மற்றும் இலக்கியங்கள் போலவே மண் சார்ந்து மக்களிடையே உருவாகி நாட்டுப்புற மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டவை. நாட்டார் என்ற சொல்லுக்கு விவசாய மக்கள், கிராமப்புற மக்கள் என்று பல்வேறு இலக்கணங்கள் கூறப்பட்டாலும் நகர்ப்புற வாழ்க்கையின் தாக்கம் இல்லாமல் ஆங்காங்கே இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள் என்ற விளக்கமே நாட்டுப்புறவியலில் வல்லுனரான தே.லூர்து போன்றவர்களால் முன் வைக்கப்படுகிறது. அவ்வாறு கிராமப்புறங்களில் தொழில் அடிப்படையில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மக்கள், விவசாயம் பிற தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அந்த மக்கள் தங்களுடைய களைப்பைப் போக்கிக் கொள்வதற்காகவே மாலை நேரங்களில் வில்லுப்பாட்டு, தெருக்கூத்துப் போன்ற கலைகளை நிகழ்த்தியதோடு, பழமொழி, விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றை தங்கள் வாழ்க்கையில் இயல்பாகவே பயன்படுத்தி வந்தார்கள். அதே போல திருவிழா காலங்களில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற மண் சார்ந்த நாட்டுப்புறக் கலைகளையும் நிகழ்த்தி கண்டுகளித்தார்கள்.

பழந்தமிழகத்தில் பாடப்பட்ட சங்கப் பாடல்கள் நாட்டுப்புற பாடல் அல்லது வாய்மொழிப் பாடல் ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. அதே காலகட்டத்தில் நாட்டுப்புறக் கலைகள் பாடினி ஒழுக்கத்தில் வாழ்ந்த விரலியரும், மேலும் கூத்தர், பொருநர் போன்றவர்களும், அக்கலைகளை வளர்த்த கலைக் குடும்பத்தினராகவே போற்றப்பட்டார்கள். பொருநர் என்ற சொல்லுக்கு, பிறரைப் போல் வேடமிட்டு நடிப்பவர் என்று பொருள். இதையெல்லாம் வைத்து சிந்திக்கின்றபோது, மரபு ரீதியாகவே நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டில் போற்றி பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது புலனாகிறது. தொழிற்புரட்சியின் காரணமாகவும், மறுமலர்ச்சி (Renaissance) காலகட்டம் ஏற்படுத்திய மாற்றங்களின் விளைவாகவும், அச்சு மற்றும் மின் ஊடகங்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை இலக்கியத்திற்கும் கலைகளுக்கும் புதிய பரிமாணங்களை கொடுக்கின்றன. உதாரணமாக, ஆசிரியர் இன்னார் என்று சொல்லப்பட முடியாமல் பலத் தலைமுறைகளாகப் பாடப்படும் வில்லுப்பாட்டு மற்றும் பிற நாட்டார் பாடல்கள், கலைகள் ஆகியவற்றிற்கும் நவீன ஊடகங்கள் உருவாக்கும் இலக்கியங்களுக்கும் கலைகளுக்கும் அடிப்படையிலேயே பெரும் வேறுபாடு காணப்படுகிறது. திட்டமிடப்படாமல் இயல்பாக எழுந்த நாட்டார் கலைகள் வழி, வழியாக மக்கள் வாழ்க்கையில் இடம்பெற இன்றைய நவீன ஊடகங்கள் மக்களின் இயந்திர கதியான வாழ்க்கையில் ஒரு சிலரால் திட்டமிட்டு குறிப்பிட்ட வரையறைகளுடன் படைக்கப்படுகின்றன. வாழ்வோடு இயைந்து வாழ்க்கையையே எடுத்து காட்டிவந்த நாட்டார் கலைகளும் மக்கள் வாழ்க்கையிலிருந்து எட்டியே நிற்கும் நவீன ஊடகக் கலைகளும் மாறுபட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், நவீன ஊடகங்கள், பழம் மரபு ரீதியான கலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதே உண்மை. உதாரணமாக, தமிழ் நாட்டில் திருவிழா காலங்களில், மாலை நேரங்களில் கோயில்களிலும், தெரு சந்திகளிலும் நடத்தப்படும் வில்லுப்பாட்டுக்கள் மக்களால் வணங்கப்படும் சிறு தெய்வங்களை மையமாக வைத்தே நிகழ்த்தப்படுகின்றன. அச்சிறு தெய்வங்கள் ஆண் அல்லது பெண், யாராக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், அதிலும் குறிப்பாக விளிம்பு நிலை சமூகத்தின் பிரதிநிதிகளாகவும் அம்மக்களின் வாழ்க்கைக்கு போராடியவர்களாகவுமே சிறு தெய்வக் கதைகள் சொல்லப்படுகின்றன. மதுரை வீரன், காத்தவராயன், முத்துப்பட்டன் கதை, தென் தமிழ்நாட்டில் சிறப்பு பெற்ற இசக்கி கதை, அண்ணன்-தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டான நல்லதங்காள் கதை ஆகியவை திரைப்படம் போன்ற நவீன ஊடகங்களில் பெரும்பாலும் எடுத்தாளப்படுவதில்லை. மதுரை வீரன் திரைப்படமாக்கப்பட்டிருந்தாலும், கதை நாயகனாக நடித்த எம்.ஜி.ஆர்-க்கு ஏற்றார்போல் மாற்றப்பட்டது. மேல்நிலையாக்கம் (Sanskritization) என்ற கோட்பாடு பின்பற்றப்பட்டு, தவறான செய்தியையும் மக்களுக்குக் கொண்டு செல்கிறது. அதேபோல் ‘துலாபாரம்’ படமாக உருவாக்கப்பட்ட நல்லதங்காள் கதையின் அடித்தளம் மாற்றியமைக்கப்பட்டது.

‘மதுரை வீரன்’ திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தின் விடுதலை வீரனாக போற்றப்பட்ட மதுரை வீரன் திரைப்படமாகும்பொழுது, மேல்தட்டு வர்க்கத்தின் வாரிசாக திரித்து சித்தரிக்கப்படுகிறான். இன்னும் நவீன ஊடகத்திற்குள் வராத முத்துப்பட்டன் கதையும் மதுரை வீரன் கதைப் போலவே தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்களை மேல் சாதிப் பெண்களாக மாற்றி சித்தரிக்கும் போக்கில் இன்று வில்லுப்பாட்டில் திரிக்கப்பட்டிருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இவ்வகையில் சிந்தித்தால் நவீன ஊடகங்கள் நாட்டர் கதைகளை திரித்துவிட்டன என்பதோடு அக்கதைப் பாடல்களின் தொடர் நிகழ்ச்சிகளையும் கூட பாதித்துவிட்டன என்றே சொல்ல வேண்டும்.

நீண்ட காலமாக மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிப்போன கதைப்பாடல்கள், கும்மி, கரகாட்டம், ஒயிலாட்டம், பழமொழிகள், விடுகதைகள் இன்றைய நவீன ஊடகங்களில் அவற்றிற்குரிய இடத்தைப் பெறவில்லை என்பதுடன் மக்களின் வாழ்வில் அந்நவீன ஊடகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால் அக்கலைகள் மக்களின் வாழ்விலிருந்தும் மறைந்து போய்க் கொண்டிருக்கின்றன.

*****

சனி, 2 நவம்பர், 2013

மருந்துக் குழம்பு


தமிழ்ச் சமூகத்தில் நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டார்கள். செயற்கை சிறிதும் கலக்காத இயற்கையான வாழ்க்கை முறையில் உணவும் இயற்கையானதாகவே இருந்ததால் ஆரோக்கியமும் ஆயுள் பலமும் அபரிதமாகப் பெற்றிருந்தார்கள். பல உணவு முறைகள் மறக்கப்பட்டு மறைந்தும் போய்க் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அந்தக் காலத்தில் புட்டிப் பாலோ, பால் பவுடரோ இல்லாமல், தாய்ப்பாலே சிறந்த உணவாகக் குழந்தைக்குக் கொடுக்கப்பட்டபோது, குழந்தையைப் பெற்ற தாயின் உடல் பலத்தை, நலத்தைப் பேணவும், குழந்தைக்கு நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் விதத்தில், பால் சுரப்பை அதிகப்படுத்தவும் ஏற்ற வகையில் சிறப்பான உணவு தயாரித்துக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் மூன்று வயது வரையும், சில நேரங்களில் ஐந்து வயது வரையிலும் கூட குழந்தைகள் சிலர் தாய்ப்பால் பருகி ஆரோக்கியமாக வாழ்ந்த கதையை இன்றும் நம் ஊர்களில் கேட்க முடிகிறது. இப்போதோ பொருளாதார தேவைக்காக பல்வேறு பணிகளுக்குச் செல்லும் பெண்கள், சரியான உணவில்லாமல் உடல் பலமின்றி குழந்தை பெற்றுக்கொள்ளும் காலத்தில் அவஸ்தை படுகிறதை பார்க்க முடிகிறது. தாய்ப்பால் இல்லாமல் புட்டிப் பாலிலேயே குழந்தைகள் வளர்வதும் வெகு சாதாரணமான ஒன்றாகிவிட்டது. குழந்தைப் பேறு காலத்தில் தாயின் உடல் நலத்தைப் பேணவும் அதிக தாய்ப்பால் சுரக்கவும் வழி, வழியாக நம் முன்னோர்கள் சில உணவுகளை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். சில ஊர்களில் இன்றும் அது நடைமுறையில் இருக்கிறது. ‘மருந்துக் குழம்பு’ என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. என் பாட்டியும், அம்மாவும், பெரியம்மாவும், சித்தியும், எங்கள் ஊரில் இருக்கும் பல பெண்களும் இந்த ஸ்பெஷல் குழம்பை, குழந்தை பிறந்த மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாளிலிருந்து தாய்க்குக் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். என் பாட்டிக்கு 11 குழந்தைகள் என்பதால், மகளோ, மருமகளோ, யாருக்கேனும் என் ஸ்டெல்லா சித்தி இந்த மருந்துக் குழம்பை பிரசவத்திற்குப் பிறகு தயாரித்துக் கொடுத்து அதில் நிபுணியாகவே மாறிவிட்டார்கள். எல்லா காலத்திற்கும், குறிப்பாக உடலில் பலம் இழந்து போய் புரத சத்து மிகுந்த தாய்ப்பாலுக்காக ஏங்கும் குழந்தைக்கு, புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்காக இந்த குழம்பு தயாரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், சித்தியிடம் கேட்டு அந்தக் குழம்பு செய்முறை குறிப்பினை தந்துள்ளேன்.

தேவையான பொருட்கள்:
ஓமம் – 25 கிராம்
கடுகு - 25 கிராம்
மிளகு - 4 அல்லது 6
திப்பிலி - 4
நறுக்குமூலம் - 7 அல்லது 8
சுக்கு – 3 துண்டுகள்
நீள மஞ்சள் - 2
பூண்டு - ஒரு கை நிறைய
நல்லெண்ணெய் - 100 கிராம்
தக்காளி – 1
கருவாடு – 3 அல்லது 4 துண்டுகள் (சுவைக்காக)

செய்முறை:
ஓமம், கடுகு, மிளகு, திப்பிலி, நறுக்குமூலம் – இவற்றை சேர்த்து அம்மியில் வைத்து (கண்டிப்பாக மிக்ஸியில் அரைக்கக் கூடாது) நன்றாக மசிய அரைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தனியே எடுத்து வைத்துவிட வேண்டும். பிறகு, சுக்கையும், மஞ்சளையும் அம்மியில் அதேபோல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு எல்லாவற்றையும் கலந்து, பூண்டையும் தக்காளியையும் சேர்த்து, பாத்திரத்தை (மண் சட்டியாக இருந்தால் நல்லது) அடுப்பில் வைக்க வேண்டும். ஓரளவு சூடேறியதும் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். கூடவே மூன்று அல்லது நான்கு கருவாட்டுத் துண்டுகளைப் சேர்க்க வேண்டும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் கரண்டியால் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஓரளவு கெட்டிப் பதத்திற்கு வந்த பிறகு இறக்கிவிட வேண்டும்.

உண்ணும் முறை:
குழந்தை பெற்ற தாய்மார்கள் வெந்நீரில் காலையில் குளித்துவிட்டு குழைய வெந்த சாதத்தில் இந்த மருந்துக் குழம்பைக் கலந்து சாப்பிட வேண்டும். (டிபன் சாப்பிடுவதற்கு பதிலாக இதைச் சாப்பிடுவது நல்லது). இதே குழம்பை இரவும் சூடான, குழைந்த சாதத்தில் கலந்து சாப்பிடலாம். பேறு காலத்திற்குப் பின் பலவீனமான உடம்பை பலப்படுத்தவும், குடல் புண்ணை ஆற்றவும் பயன்படுவதோடு, முக்கியமாக தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்கிறது. இயற்கையான முறையில் குழந்தை பெற்றிருந்தால், குழந்தை பிறந்த மூன்றாவது அல்லது ஐந்தாவது நாளில் இந்த உணவினை சாப்பிடலாம். சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்றிருந்தால், தையல் பிரிக்கப்பட்டு அந்தப் புண் ஆறிய பிறகு இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தமிழ் சினிமா வரலாற்றில் தொழில்நுட்பம்

ஒவ்வொரு திரைப்படத்தின் சிறப்பையும் வெற்றியையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அதில் இடம்பெற்றிருக்கும் நூதனமான அல்லது புதுமையான அம்சங்கள். கதை, திரைக்கதை அமைப்பு, காட்சிகளை வெளிப்படுத்தும் விதம் – இவை தவிர தொழில்நுட்ப அளவில் ஒளி-ஒலி நுட்பம் மற்றும் பல புதிய கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கிய புதுமையே திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது.
தமிழில் தொடக்க காலத்தில் வெளிவந்த படங்கள் புராண கதைகளை உள்ளடக்கமாகக் கொண்டிருந்ததால் அதற்கேற்ற கலை வடிவத்தில் பிரம்மாண்டங்களையும் சில இயற்கையை மீறிய (supernatural) ஜால வித்தைகளையும் காட்டுவதற்கு பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. கடவுளர்கள் மற்றும் அவதாரங்கள் பற்றிய அல்லது தெய்வ நம்பிக்கை கொண்ட பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் விசித்திரங்கள் மேலும் தொன்மக் கதைகளின் வீர சாகசங்கள் - இவற்றை வெளிப்படுத்த பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. தமிழின் முதல் படமான கீசகவதத்திலிருந்து அடுத்தடுத்து வெளிவந்த படங்களில் பரீட்சார்த்த ரீதியில் பயன்படுத்தப்பட்ட அந்த உத்திகள் மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்தன.
ஒரே காட்சியில் ஒருவர் இருவராகத் தோன்றும் ‘துருவா ’ (1935) படத்தில் சிவ பாக்கியம் ராணியாகவும், கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
புராண மரபிலிருந்து ஓரளவு விடுபட்டு 1950க்குப் பிறகு வெளிவந்த படங்கள், கதை அளவில் மாறுபட்ட போது கதைக்  களனை வெளிக்கொணர்ந்த வடிவங்களும் உத்திகளும் மாறுபட்டன. ஆனாலும், நீளமான காட்சிகளில் இடம் பெற்றிருந்த நீண்ட வசனங்கள், மெலோட்ராமா (melodrama) போன்ற பாணியில் அமைக்கப்பெற்ற நடிப்பு – இவற்றில் ஒளி-ஒலி நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அவ்வளவாகக் கொடுக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
1954ஆம் ஆண்டு வெளிவந்த ‘அந்த நாள்’ திரைப்படம், பழைய பாணியில் இருந்து மாறுபட்டு, ஜப்பானிய வகை திரைப்படம் போல பாடல் எதுவும் இடம் பெறாமல் கேமராவின் கோணத்திலேயே கதையை நகர்த்தி பெரும் புரட்சியைச்  செய்தது. இப்படத்தின் தொடக்க காட்சியே புதுமையான முறையில் அமைக்கப்பட்டிருந்தது., வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் அஹிர குரோசோவாவின் ‘ரஷ் ஓமன்’ எனும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவியே எடுக்கப்பட்டது. திரைக்கதையை வடிவமைத்த ஜாவர் சீதாராமன், துப்பறியும் அதிகாரியாக நடிக்க சிவாஜி கணேசனுடன் பண்டரி பாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுபம் என்ற முடிவை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு முதல் காட்சியிலேயே சிவாஜி கணேசன் சுடப்பட்டு இறக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தப் படம் முழுக்க பின்னோட்டம் (flashback) உத்தியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. கொலைக்கான காரணத்தை ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறு, வேறு விதமாகச் சித்தரிக்க, அதற்கு கையாளப்பட்ட கேமரா கோணங்களே உறுதுணையாக அமைந்தது. இறப்பதற்கு முன்பு சிவாஜி கணேசன் நாற்காலியில் அமர்ந்தபடி பண்டரி பாயிடம் பேசும் காட்சியில் அவர் கண்கள் பாயும் எல்லாத்  திசைகளிலும் கேமரா பாய்வதை உணர முடிந்த தொழில்நுட்பம் பெரும் அதிசயமாகப் பேசப்பட்டது. ஒரு காட்சியில் சிவாஜி கணேசன் சாவியைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும்போது கேமராவும் அந்தச்  சாவியுடன் மேலும் கீழும் செல்வதைப் பார்க்கையில் காட்சியமைப்பின் தத்ரூபம் புலப்பட்டது. இந்தப் படம் தொழில்நுட்பத்திற்கு மட்டுமல்லாது, கதையிலும், கதை நகர்த்தப்பட்ட விதத்திலும் புதுமைகளைக் கையாண்டிருந்தது. மேலும், தமிழ்த்  திரையுலகின் முதல் எதார்த்தப் படம் என்றும் இதைச் சொல்ல முடியும். தரமான, அதே நேரத்தில் வித்தியாசமான கதைக்கு உயிர் கொடுப்பதில் தேவையான தொழில்நுட்பங்கள், குறிப்பாக கேமரா கோணத்தில் கையாளப்பட்டன. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து கே.பாலச்சந்தரின் ‘இரு கோடுகள்’ என்ற படத்தில் ‘அந்த நாள் ’ படத்தில் கையாளப்பட்டிருந்த கேமரா கோணத்தை கலைக்டராக வரும்  சௌகார் ஜானகி மாநில முதலவரைச் சந்திப்பதாக வரும்    காட்சியில்  வெற்றிகரமாகக் கையாண்டிருந்தார் இயக்குநர். அதே 1954ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மலை கள்ளன்’ படத்தில் மலையிலிருந்து கயிறைப்  பிடித்துக் கொண்டு எம்.ஜி.ஆர். இறங்குவது போன்ற திகிலானக் காட்சியில் பயன்படுத்தப்பட்டிருந்த தொழில்நுட்பம் அப்படத்திற்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
அமெரிக்காவில், பெரிய ஸ்டுடியோ மரபிலிருந்து மாறுபட்ட திரைப்படங்களால் அமெரிக்க புதயி அலையை (American New Wave) 1960களுக்குப் பிறகு அமெரிக்க இயக்குநர்கள் உருவாக்கினார்கள். நிறைய வன்முறை காட்சிகள் இடம்பெற்ற ‘Bonnie & Clyde’ என்ற படம், நகைச்சுவை தொனியில் க்ராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பல படங்கள் அதே பாணியில் உருவாக்கப்பட்டன. அதன் முழு தொழில்நுட்பத்தையும் ‘அவதார்’ திரைப்படத்தில் நாம் காண முடியும். ஆனால் இந்த வேகமான வளர்ச்சியை நம் தமிழ் திரைப்பட உலகில் வரிசையான கால கட்டங்களில் காண முடியவில்லை.
தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை ‘அந்த நாள்’ திரைப்படத்திற்குப் பிறகு டி.ஆர்.சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் கதைக்குத் தகுந்தாற் போல காட்சியமைப்புகளில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணப் படமான ‘அலி பாபாவும் நாற்பது திருடர்களும்’ (1956) படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய ஒரு காட்சியில் நடிக்க முடியாமல் போனதால் வேறு ஒரு நடிகரை வைத்து படமாக்கியிருந்தார் டி.ஆர்.சுந்தரம். அது எம்.ஜி.ஆர். இல்லை. டூப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு தொழில்நுட்பத்தின் உதவியை கொண்டு அந்த காட்சியைப்  படமாக்கியிருந்தார்கள். அதனாலேயே அதன் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த எந்தப்  படத்திலும் எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட ‘சிவந்த மண்’ (1969), வண்ணப் படம் என்பதோடு ஒளியமைப்பில் பெரும் வெற்றியை பெற்றிருந்தது. அதனாலேயே அது மக்களால் பெரிதும் பேசப்பட்டது. Visual Feast என்று கொண்டாடப்படும் ‘சந்திரலேகா’ (1948) என்ற படம் ஒரு பாடல் காட்சியின் பிரம்மாண்டத்திற்காகவும் தத்ரூப காட்சி அமைப்பிற்காகவும் சிறப்பான தொழில்நுட்பங்களை சிறப்பான கேமரா கோணங்களில் கையாண்டு, படமும் பெரும் வெற்றி பெற்றது. ‘பறக்கும் பாவை’ என்ற படத்தில் மிகச் சிரமமான சில காட்சிகள் நேர்த்தியான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாக மறைந்த நடிகர் நம்பியார் சொல்லியிருப்பார்.
ஈஸ்ட்மென் கலர் பயன்பாட்டிற்குப் பிறகு பெரிதும் பேசப்பட்ட slow motion காட்சிகள், சிவாஜி கணேசனுக்கு மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘வசந்த மாளிகை’  திரைப்படத்தில் கையாளப்பட்டு, பாடல் காட்சியை, அக்காட்சியில் சொல்லப்பட்ட காதல் கதையை வெகு சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது.
கருப்பு-வெள்ளை படங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட வண்ணப் படங்கள் ஒவ்வொன்றிலும் புதிய, புதிய ஒளி-ஒலி நுட்பங்கள் கையாளப்பட்டன.  ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ என்ற 3D படம் இந்த வரிசையில் ஒரு மைல் கல் என்று சொல்ல வேண்டும். தற்கால தமிழ் சினிமா வரலாற்றில் graphics பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கமலஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தில் ஒப்பனையிலிருந்து காட்சியமைப்பு, கதை நகர்த்தப்பட்ட விதம் எல்லாவற்றையும் இந்த தொழில்நுட்ப சாதனையைக் காண முடியும். ‘எந்திரன்’ படத்திலும் தொழில்நுட்ப வித்தைகளின் புதிய வீச்சினைக் காண முடிந்தது.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன்முதலாக ஏரோ 3d தொழில்நுட்பம் கொண்ட படம் விஸ்வரூபம். Red Tales மற்றும் Rise of the Guardians ஆகிய இரண்டு அமெரிக்கத் திரைப்படங்களுக்குப் பிறகு உலகத் திரைப்பட வரலாற்றில் மூன்றாவதாக ஏரோ 3D தொழில்நுட்ப வடிவம் கொண்ட படம் இதுவே. விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் சந்தோஷ் சிவன் மிக முழுமையான மற்றும் சக்திவாய்ந்த டிஜிட்டல் படத்தை உருவாக்கும் புதிய வகை Arri Alexa டிஜிட்டல் மோஷன் கேமரா அமைப்பைப் பயன்படுத்தி படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டுகொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், அதனால் சில சாதகங்களும், சில பாதகங்களும் நேர்ந்துள்ளன. ஆரம்ப கால கருப்பு வெள்ளை படங்களிலும், அதற்குப் பிறகு வந்த வண்ணப் படங்களிலும் புராணமோ,  சமூகக் கதையோ, அல்லது நகைச்சுவை படமோ - எதுவாக இருந்தாலும், அழுத்தமான கதைப் பின்னலே  படத்தின் மையமாக இருந்தது. அந்தக் கதைகளை திரைக்கதை அமைப்பில் நேர்த்தியாக நகர்த்திச் செல்வதற்கு ஏற்ற வகையிலும் நுகர்வோரின் அழகியல் உணர்வுக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும் மட்டுமே தேவையான அளவுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால்தான் ‘தெய்வ மகன்’ (1969) என்ற சிவாஜி கணேசனின் படம் எகிப்தில் திரையிடப்பட்டபோது ஒரே காட்சியில் மூன்று நபர்களாக வரும் சிவாஜி கணேசன் ஒரே ஆள் என்பதை அங்கு நம்ப மறுத்தார்கள். அது ஒப்பனை மற்றும் அவரது நடிப்பிற்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்லாமல், கேமரா மற்றும் எடிட்டிங் உத்திகளுக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் அவர் அமெரிக்காவிலும் அன்றைய ஜனாதிபதியால் ஒரு நாள் கவர்னராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
வரலாற்றுத் தொடர்பான கதைகளைப் படமாக்கும் பொழுது அதற்கேற்றாற்  போல பிரம்மாண்டமான அரங்கங்களும், ஒப்பனைகளும், காட்சி அமைப்புகளும் தொழில்நுட்பங்களின் வாயிலாக செய்யப்பட்டாலும், சிறு குறை நேர்ந்தாலும் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. உதாரணமாக, ‘ராஜ ராஜ சோழன் ’ (1973) மிக நன்றாக எடுக்கப்பட்டிருந்த போதும் போர்ச்சுகீசியர்கள் காலத்தில்  தமிழ் நாட்டிற்கு அறிமுகமான ரோஜாப் பூ பதினோறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சரித்திரக் கதையில் எவ்வாறு கால வழுவாக இடம்பெற முடியும் என்ற கேள்வி பெரிதாக எழுப்பப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த தசாவதாரம் படத்தில், சைவ வைணவ மதம் தொடர்பான சர்ச்சையில் கதையும் வரலாறும் திரிக்கப்பட்டு கிராஃபிக்ஸ் கலையில் முழுவதுமாக உண்மை மறைக்கப்பட்டுவிட்டது. தொழில்நுட்பத்தினால் ஏற்படும் பாதகங்களில் ஒரு உதாரணமாக இதனைக் கொள்ள முடியும். கதைக்கேற்ற தொழில்நுட்பங்கள் என்பது போய், கதை இல்லாத வறட்டுப்  படங்களுக்கு வலு சேர்ப்பதற்காகவே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் ஆபத்தும் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.  
தமிழ் திரைப்பட இசையிலும் கூட தொழில்நுட்பத்தின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல முடியும். சூடான் நாட்டின் இசையில் நமது சுத்த தன்யாசி மற்றும் சுத்த சாவேரி ராகங்களின் சாயலை நாம் பார்க்க முடியும். ஆனால், பண்பாட்டை புலப்படுத்தும் நம் இசை வேர்களை விட்டுவிட்டு, புரியாத சொற்களும் புலப்படாத பொருளுமாக இசை தொழில்நுட்பத்தில் மண்ணோடு அந்நியப்பட்டு தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படுகிறது.

1950களில் வெளிவந்த ‘Film Noir’ பாணியில் எடுக்கபட்ட படங்கள், பிறகு, ‘Neo Noir’ படங்களாக அடுத்த கட்டத்திற்கு சென்ற பிறகும், கதையோடு இயைந்து கதாபாத்திரங்களின் நடிப்பிற்கு மெருகேற்றுவதாகவும், கதையை நகர்த்திச் செல்வதாகவும் மட்டுமே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று, வெறுமையான கதைக் களத்தில் நாயகனாக நிற்பதே தொழில்நுட்பம் என்னும் நிலை மாறி அந்த காலத்து ‘அந்த நாள்’ போன்ற வலுவானத் திரைப்படங்களை நினைவு கூறும் வகையில் எடுக்கப்பட்டால் தொழில்நுட்பம் திரைப்படத்தில் சாதகமான அம்சமாக அமைய முடியும்.

தமிழ் சினிமா 1950-ஐ சுற்றி...



‘திரைப்படம் ஊடாக ஒரு சமூகம்’ என அமெரிக்க அறிஞர் ஒருவர் குறிப்பிடுகிறார். திரைப்படம் என்பது சமூகத்தையும் மக்களையும் சென்றடையும், தாக்கத்தை ஏற்படுத்தும் வலுவான கலை ஆயுதம் என்பது தமிழ் திரைப்பட வரலாற்றில் 1950களுக்குப் பிறகு வந்த திரைப்படங்களின் பட்டியலை பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகின்ற நிதர்சனமான உண்மை. தொடக்கத்தில் ஹிந்தியில் எடுக்கப்பட்டதுபோலவே தமிழிலும் தொன்மக் கதைகளான புராண இதிகாச மரபில் வந்த பிரதானக் கதைகளும், கிளைக்கதைகளுமே திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. பழம்பெரும் இதிகாசங்களான ராமாயண, மகாபாரத நெடுங்கதைகளில் இருந்து ஹரிச்சந்திரன் கதை, அர்ஜுனன் கதை, கடவுளர்கள் பற்றிய கதை, அன்றைய காலகட்டத்திலிருந்த தொழில்நுட்ப உதவியுடன் அதற்கேற்ற இசைப் பரிமாணங்களுடன் வடிவமைக்கப்பட்டன. குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், உள்ளடக்கத்திற்கு ஏற்ப இலக்கியத்தில் அல்லது இலக்கியத்தின் நீட்சியான நாடகம் அல்லது திரைப்படங்களின் வடிவமும் மாறுபடும். ஆரம்ப காலத்தில் வட மொழி சார்ந்த தொன்மக் கதைகள் தமிழ் திரைப்படங்களாக உருவெடுத்தபோது பேசப்பட்ட மொழி நடை வட மொழி கலப்பு மிகுந்தே காணப்பட்டது. ‘சுவாமி', 'பிராண நாதா’ போன்ற சொற்கள் பரவலாக இடம்பெற்றன. மேலும் சாதாரண இயல்பான மக்களைப் பற்றிய கதைகளாக இல்லாமல் தெய்வங்கள், அல்லது தெய்வம் சார்ந்த கதைகள் கலை வடிவம் பெற்றதால் அப்படங்களில் இடம்பெற்ற வசனங்களும் நமது அன்றாட பேச்சு வழக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நின்றது. ஆனாலும், திரைப்படம் என்பது இயல்பான வாழ்க்கையின் பிரதிபலிப்பு அன்று. உயர்ந்த மனிதர்கள் பற்றிய கதை என்ற சித்தாந்தம் நிலவியதால் அந்த மொழிநடை மக்களால் ரசிக்கப்பட்டது.
இசையும் பாடலும் உரைநடையும் சேர்ந்த முத்தமிழ் கலையாக இருந்த திரைப்படத்தில், கதையை பெரும்பாலும் அதிக அளவில் இடம்பெற்றிருந்த பாடல்களே நகர்த்திச் சென்றன.
ஆனால், சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், தமிழ் திரைப்படத்தில் புராண சாயல் மாறி சமூகப் பிரக்ஞையும், தேச மற்றும் மொழி நலன் போற்றுகின்ற கதைகளும் கொண்ட படங்கள் தேசிய மற்றும் திராவிட இயக்கங்களின் முயற்சியால் வெளிவந்தன.
1930-ல் வெளிவந்த ‘காளிதாஸ்’ புராணப் படமாக இருந்தபோதிலும் காந்தியைப் பற்றிய ஒரு பாடல் அதில் இடம் பெற்று அரசியல் ஆயுதமாக திரைப்படம் பயன்படுத்தப்படலாம் என்ற முன்மாதிரியைத் தோற்றுவித்தது. அதன் பிறகு, தேசப் பற்றை விதைக்கும் முகமாக எடுக்கப்பட்ட கல்கியின் ‘தியாக பூமி’ “வெள்ளை கொக்கு பறக்குது பார், சுட்டுத் தள்ளு” என்று மேடை நாடகங்களில் வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் போராட்டமாக இருந்த கலை வடிவம் திரைப்படப் பரிமாணமாக உருவெடுத்ததற்கு சான்றாகத் திகழ்ந்தது. ஆனால், அந்தப் படம் பிரிட்டிஷ்காரர்களால் தடை செய்யப்பட்டது. ஏ.கே.செட்டியார் அவர்களின் ‘காந்தி ’ படமும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கது.
 “ஒரேயொரு திரைப்படத்தை சென்சார் பண்ணாம திரையிடுவதற்கு அனுமதியுங்கள். நாங்கள் ஆட்சியையே பிடித்துவிடுவோம்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்று உண்மையானது.
ஆரம்பத்தில் சுய மரியாதை இயக்கத்தின் தலைவரான பெரியார் திரைப்பட முயற்சிகள் தேவையில்லை என அறிவுறுத்தினார். ஆனால் அவர் தமது ரஷ்ய பயணத்திற்குப் பிறகு, இயக்கங்களின் பிரச்சாரத்திற்காக நாடகம் என்ற கலை வடிவத்தைப் பயன்படுத்தலாம் என கூறத் தொடங்கினார்.
இந்தியா குடியாட்சியான பிறகு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களாட்சியில் வெள்ளைக்காரர்களின் இடத்தை நிலப்பிரபுக்களும், முதலாளித்துவமும் பிடித்திருந்தன. ஜமீந்தார் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தாலும், சிற்றூர்களில் குறுநில மன்னர்கள் போல் திகழ்ந்த நிலப்பிரபுக்களும் ஆண்டான்-அடிமை முறையும் அப்பொழுதே தலை தூக்க ஆரம்பித்திருந்த சமூக சீர் கேடுகளும் மக்களை சோர்வுக்குள்ளாக்கின. இந்த ஏமாற்றத்தையும், மாறுதலுக்கான மக்களின் எதிர்பார்ப்பையும் மொழியின் ஆளுமையையும் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய திராவிட இயக்கங்கள், அதன் பலமான ஆயுதமாக திரைப்படத் துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். இதில் அந்த இயக்கம் சார்ந்தவர்கள் மூன்று அம்சங்களை பிரதானமாக முன் வைத்தார்கள்.
1. தமிழக மக்களின் வாழ்வு, மறுமலர்ச்சி
2. தமிழ் மொழியின் பெருமையைக் காப்பாற்றுதல்
3. மேற் சொன்ன இரண்டிற்கும் தடையாக இருப்பதாக அவர்கள் முன் வைத்த ஆரிய மாயையை அகற்றி தாங்கள் நிலவ விரும்பிய புதிய திராவிட நாடு என்ற கொள்கை.
தமிழக மக்களின் வாழ்வு, மறுமலர்ச்சி
தமிழ்நாட்டில் நிலவிய சீர்கேடுகளுக்கு வர்ணாஸ்ரம சாதிய அமைப்பும் அதன் பாதுகாவலாக இருந்ததாக அவர்கள் சொல்லிய கோயில்களும் தெய்வ வழிபாட்டை ஒட்டி எழுந்த மூட நம்பிக்கைகளும் களையப்பட வேண்டும் என்ற தங்கள் கொள்கையை மக்கள் முன் வைத்ததோடு, அதன் பிரச்சார வெளிப்பாடாக ‘பராசத்தி’ போன்ற படங்களை தயாரித்து வெளியிட்டார்கள்.
ஜமீந்தாரி முறை எதிர்ப்பு, அடித்தள மக்களின் உரிமை, சாதிய, மத, புராணிய பழமைவாத கருத்து பரப்பல்களுக்கு எதிரான பகுத்தறிவுவாத கருத்துக்களை தங்களின் படைப்புகளில் இடம்பெறச் செய்து அரசியல் தளத்தை விரிவுபடுத்தும் பணிகளில் திராவிட இயக்கத்தினர் ஈடுபட்டனர் என்பதை இரா.பாவேந்தன் தனது புத்தகத்தில் பல்வேறு உதாரணங்கள் மூலம் உறுதி செய்கிறார்.
இரா.கிருஷ்ணன், சா.பஞ்சு ஆகியோர் இயக்கி 1952ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பராசாக்தி ’ படத்தின் முதல் காட்சியே, ‘success’ என்ற நடிகர் சிவாஜி கணேசின் வசனத்தோடு ஆரம்பிக்கப்பட்டது திராவிட இயக்கங்களின் சமூக அறப்போருக்கான வெற்றியாகவும், அதற்கேற்ற வகையில் ஆட்சியை பிடிப்பதற்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டது. தமிழர்கள் கோயில்களின் பெயராலும் தெய்வங்களின் பெயராலும் மூட நம்பிக்கைகளில் உழல்வதிலிருந்து விடுபடவேண்டும் என்பதை பராசக்தி படத்தில் கயவனாக சித்தரக்கிப்பட்ட கோயில் பூசாரி கதாபாத்திரம் நன்கு வெளிப்படுத்தியிருந்தது. “கோயில் இருக்க வேண்டாம் என்பதில்லை கருத்து. அது கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது” போன்ற வசனங்கள் திராவிட இயக்கங்களின் பகுத்தறிவு சிந்தனையின் மொழியாக அமைந்தது.
‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் முழக்கம் அந்த படத்தில் இடம்பெற்ற பசி பட்டினி போராட்டத்தோடு வாழும் உயிரோட்டமான கதாபாத்திரங்களில் புலப்பட்டது. எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பாத்திரப் படைப்பு சமூக மறுமலர்ச்சிக்கு புரட்சி மட்டுமே பாதை அமைக்கும் என்ற திராவிட இயக்கங்களின் சித்தாந்தமாக வெளிப்பட்டது.
பெண்மையும், பெண்மை உயர்வும் போற்றப்பட வேண்டும் என்ற பாரதிதாசன் போன்ற இயக்கவாதிகளின் சிந்தனைக் களமாகவும் அப்படம் அமைந்திருந்தது.
மூட நம்பிக்கைகள் அகற்றப்பட்டால் மட்டுமே கடவுளின் பெயரால் புனிதப்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்ட சனாதன தர்மங்களும் பெண்களுக்கெதிரான அடக்கு முறைகளும் ஒழியும் சமுத்துவ சமுதாயத்தின் முதல் படியாக அமையும் என்று பராசத்தி படத்தின் கவனமாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களும், தமிழ் மொழிநடையும், திராவிட இயக்கங்களின் பிரச்சார கலை படைப்பாக இருந்தாலும், அதன் நயம் மக்கள் மத்தியில் மிகப் பெரும் வெற்றி பெற்றது. எம்.ஆர்.ராதாவின் நடிப்பில் வெளியான நொண்டி நாடக பாணியில் வெளிவந்த ரத்தக் கண்ணீர் திரைப்படம் தமிழ் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த மூட நம்பிக்கைகள் பலவற்றை கேள்விகளுக்கும் கேலிக்கும் உள்ளாக்கி சிந்திக்கச் செய்தது. உதாரணமாக, ஜோசியர் ஒருவர் “ராகுவும் சுக்கிரனும் ஒன்றாக வருகிறார்கள். இன்று நேரம் நல்லாயிருக்கு.” என்று சொல்ல, எம்.ஆர்.ராதா, “எனக்கு இன்று பல வேலை இருக்கு. அந்த ராகுவையும் சுக்கிரனையும் அடுத்த வாரம் வரச் சொல்லேன்” என்று பேசும் வசனம் இன்று வரை ஆழமான அர்த்தங்களை கொடுப்பதாகவும் தேவையற்ற மூட நம்பிக்கைகளுக்கு சவால் விடுவதாகவும் அமைந்துள்ளது.
புராண இதிகாச கதைகளிலிருந்து தமிழ் திரைக்களம் விடுபட்டு மக்களின் கடந்த கால அச்சம் நிகழ்கால பாதுகாப்பின்மை, எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் ஆகியவற்றை ஆராய்வதாகவும், அதற்குத் தீர்வு சொல்வதாகவும் அமைந்ததால், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பராசக்தி, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
பாடல்கள் குறைந்து மெருகேற்றப்பட்ட ஆழமான தமிழ் வசனங்கள், திராவிட இயக்கங்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களுக்கும் புது இரத்தம் பாய்ச்சியது. பேரறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு ’, ‘வேலைக்காரி ’ போன்ற படங்கள் மக்களை சுரண்டிய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அலங்கோலங்களை கேள்விக்குட்படுத்தியதோடு, உழைக்கும் வர்க்கத்தின், பாட்டாளி சமூகத்தின் பாதுகாப்பாக திராவிட இயக்கங்கள் எழுந்துள்ளன என்ற நம்பிக்கையை தோற்றுவிப்பதாக அமைந்தன.
கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா என்ற வரலாற்று ரீதியான திரைப்படம் ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்ற அவர்களது முழக்கத்தின் கலை படைப்பாக அந்த காலத்துக்கே உரிய தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டது. வில்லி கதாபாத்திரம் ஏற்ற பெண்மணிக்கு ‘ஆரிய மாலா’ என்ற பெயரே கொடுக்கப்பட்டிருந்தது. கல் தூணில் கயிறுகளால் பிணைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த நிலையில் கதாநாயகன் வீர முழக்கம் இடும் காட்சியில் வருகின்ற ‘சைபர் போலன் கணவாய் வழியாக வந்த குள்ள நரிக் கூட்டமே” என்ற வசனம் திராவிட இயக்கத்தின் ஆரிய மாயை என்ற பிரச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
தமிழ் மொழியும் திராவிட இயக்க சினிமாவும்
வட மொழி கலந்த தமிழ் நடையான மணிப்பிரவாள நடையிலேயே தமிழ் சினிமாவின் தொடக்க கால புராணப் படங்கள் அமைந்திருந்ததால் ஏராளமான சமஸ்கிருத சொற்களின் தாக்கத்தில் தமிழின் இலக்கணப் பழமையும் சிறப்பும் சீர் குலைந்ததாக எண்ணப்பட்டது. ஆனால் திராவிட இயக்கங்கள் நீண்ட வசனங்களை நல்ல தமிழில் எழுதி சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களின் குரலில் ஏற்ற இறக்கங்களுடன் பேச வைத்ததில் தமிழ் மக்களிடம் மங்கிக் கிடந்த மொழி உணர்வு தட்டி எழுப்பப்பட்டது என்றே கொள்ள வேண்டும். அதே போல பழம்பெரும் காப்பியக் கதைகள் திராவிட இயக்கத்தினரின் கை வண்ணத்தில் திரைப்படக் கலை வடிவம் பெற்று புத்துயிர் பெற்றன.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘குண்டலகேசி’ கதையில் இருந்து ஒரு சிறு பகுதியை ‘மந்திரி குமாரி’ என்ற பெயரில் 1950ஆம் ஆண்டு திரைப்படமாக்கி வெளியிட்டார்கள். எல்லிஸ் டங்கன், டி.ஆர்.சுந்தரம் – இருவரின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கலைஞர் கருணாநிதி வசனத்தில் தமிழ் நடை முற்றிலுமாக வட கலப்பிலிருந்து விடுபட்டிருந்தது.  இப்படத்தில் இடம்பெற்ற ‘சமரசம் உலாவும் இடமே’ என்ற பாடல், வாழ்க்கையின் தத்துவத்தை, ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைச் சித்தரித்திருந்தது. பழைய ‘கண்ணகி ’ படத்தையடுத்து கருணாநிதி அவர்களின் ‘பூம்புகார் ’ படம் சிலப்பதிகார காப்பியத்தை திரைப்பட வடிவில் கொண்டு வந்தது.
மேலே குறிப்பிட்டப் படங்கள் தேசிய மற்றும் திராவிட இயக்கங்களின் அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பு முனைகளாக அமைந்தன. ஆனால், இப்படங்களைப் பற்றி பெண்ணியலார் மற்றும் அறிஞர்கள் மாறுபட்ட கருத்துக்களை முன் வைக்கிறார்கள். பெரியார் பாரதிதாசன் போன்றவர்கள் பெண்மைக்கு உயர்வு கொடுத்து போற்றியிருந்தாலும், திராவிட இயக்கத்தின் பிரச்சார பீரங்கிகளாக வெளிவந்த இப்படங்கள் பெண்களை குடும்பத்திற்குள் சுருக்கி சமூக வெளியில் ஒரு ஆணின் பார்வை மூலமாகவே முன் வைப்பதாக அம்பை குறிப்பிடுகிறார். பெண்களின் சுதந்திரமும் பெருமையும், அவளுடைய கற்பு மற்றும் தாய்மை சார்ந்ததாக இப்படங்களில் முன் வைக்கப்படுகின்றன. இந்த ‘கற்பு’ மற்றும் ‘தாய்மை’ போன்ற கருத்தாக்கங்களில் இருந்து பெரியார் பெண்களை விடுதலை செய்ய முயற்சித்ததை இப்படங்கள் முன்னெடுத்துச் செல்லவில்லை என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு தன் நியாயத்தை நிலைநாட்ட சமூக வெளியில் இருந்த உரிமை, ‘பராசக்தி’யில் பெண் கதாபாத்திரத்திற்குக் கொடுக்கப்படவில்லை. தேசிய இயக்கத்திலும், சுய மரியாதை இயக்கத்திலும் உருவான ஒரு புதியப் பெண்ணின் தன்னிலையை இப்படங்கள் தனதாக்கிக் கொண்டு மரபான வரையறைக்குள்ளேயே அடைத்து வைத்துவிட்டன. பெரியார் முன் வைத்த கருத்தாக்கத்திற்கும், பராசக்தி முன் வைத்ததற்கும் உள்ள முரண்பாட்டையும் அதன் வரலாற்று அதிசயத்தையும், ‘The image trap: M.G.Ramachandran in Film and Politics’ என்ற தனது புத்தகத்தில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விவரித்துள்ளார்.
References:
‘The image trap: M.G.Ramachandran in Film and Politics’ - M.S.S.Pandiyan
இரா.பாவேந்தன்
‘The Face Behind the Mask: Women in Tamil Literature’ - C.S.Lakshmi (Ambai) Page 13
தமிழ் சினிமாவில் ஆண் மகனின் தன்னிலை - ஆசிரியர் ராமானுஜம்

சனி, 16 மார்ச், 2013

கதை: சின்னத்தாயும் சிங்களமும்!

வெரசலா கிளம்பிருக்கலாமோ ? ஜன்னலோர சீட்டில் அமர்ந்து மடியிலிருந்த மஞ்சள் பையை இறுகப் பற்றியபடி வெளியில் கவிழ்ந்திருந்த இருளைத் துழாவிய  சின்னத்தாய் மறுகினாள் .

என்ன செய்றது ? திருநெல்வேலியிலிருந்து  பஸ் ஏற்றி விடும் போது  வண்டியேறி சொன்னதால் தானே திருவண்ணமலையில் இறங்க வேண்டியதாப் போச்சு !

ஆத்தா "பட்டணத்துக்கு தனியாப் போவாதே ,அரசம்பட்டியில இருக்க ஒன்னோட அண்ணன் மவனைக் கூட்டிகிட்டுப் போ; அவியளுக்கு சென்னையில மூல முடுக்கெல்லாம் தெரியும் .பூத்தொரை காலேஜில சேரும்  போது கூட வந்து வெவரம் சொல்லி சேர்த்து விட்டது அவியதானே" என்று சொன்னதுடன் திருவண்ணமலையில் இறங்கி  அரசம் பட்டிக்கு எப்படிப் போகணும் என்பதையும் விளக்கமாச் சொல்லியிருந்தான் .

அவன் சொன்னது சரிதான்.  டவுன் என்றால் சின்னத்தாயிக்கு ஆலங்குளம் பஸ்-ஸ்டாண்டும், செல்வராணி ஸ்டோர்ஸ்-ம், கணேசன் செட்டியார் எண்ணெய் கடை  இன்னும் சில பழக் கடைகளும், கூடவே பூத்தொரைக்கு பிடிச்ச சுத்துமிட்டாய் விக்கிற ராசாத்தி ஸ்வீட் ஸ்டாலும்தான்.  பஸ் வசதி இல்லாத சொக்கநாதபட்டி கிராமத்தில், யாருக்காவது உடம்பு ரொம்ப முடியாம போயி, பாளையங்கோட்டை ஹை-க்ரவுண்டு ஆஸ்பத்திரியில சேர்த்தா மட்டும் எல்லாரோட சேர்ந்து போய் பார்ப்பது வழக்கம்.  அப்பகூட திருநெல்வேலி பஸ்-ஸ்டாண்டும், மருந்து வாடை வீசற ஹை-க்ரவுண்டு பஸ் ஸ்டாண்டையும் தவிர வேறு எதையும் அவள் பார்த்ததில்லை.  அதனால்தான் விக்கிரமசிங்கபுரத்தில் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு சென்னையின் மிகப் பெரிய கல்லூரியில் படிக்கவேண்டும் என்று அவன் பிடிவாதம் பிடித்தபோது, திக்கு தெரியாமல் திகைத்துப் போனாள் சின்னத்தாயி.

"பணம் ரொம்ப கட்டவேண்டியிருக்காது.  சாமியாருங்க நடத்தற காலேஜ்தான்.  ஆனா, அவ்ளோ தூரம் பையனை அனுப்பிட்டு எப்படி இருப்பே?" என்று நாலாங்கட்டளை பள்ளிகூடத்து சார்வாள் கூறியதும்," இல்லை சார்வாள் , அங்க படிச்சாதான் பையன் பெரிய ஆளா  வரமுடியுமாம்.  அவன் ஆசைப்படியே படிக்கட்டும்.  எம்புட்டு தூரம் போனாலும், அவன் எம்புள்ளதானுங்களே என்று உறுதியாக நின்றாள் சின்னத்தாயி.

"அந்த காலேஜ்ல சீட்டு கெடைக்கிறது, குதிரைக் கொம்பாம், நான் பாளையங்கோட்டை பெரிய ஃபாதர் கிட்டெல்லாம் பேசி பாத்துட்டேன்.  வேணும்னா இங்க சேவியர்ஸ் காலெஜ்லயே சேத்துவிடலாம்னு சொல்லுறாங்க." என்று சார்வாள் தெரிவித்ததும் வெண்டைக்காய் பறித்ததால் நமநமத்துக்கொண்டிருந்த கையை சேலை முந்தியில் அவசரமாக துடைத்துக்கொண்டு அவர் காலில் விழுந்துவிட்டாள் சின்னத்தாயி.  சார்வாள் யோசித்தார்.  அவருக்கு ஒரே ஒரு வழிதான் புலப்பட்டது.  ஆலங்குளத்தில் நிலபுலங்களுடன் சுற்றுவட்டாரத்தில் பெரிய செல்வாக்கும் பெற்றிருந்த கிறிஸ்தவ குடும்பமான அடைக்கலசாமி வீட்டிற்கு பூத்துரையை அழைத்துச் சென்றார்.  கூடவே சென்ற சின்னத்தாயும் கையெடுத்து கும்பிட்டு மன்றாடினாள்.  அடைக்கலசாமி முதலில் தயங்கினாலும், பூத்துரையின் மதிப்பெண் பட்டியலையும், சின்னத்தாயின் களைத்த முகத்தில் இருந்த ஏக்கத்தையும் கவனித்துவிட்டு, யார் யாருக்கோ ஃபோன் பண்ணினார்.  பிறகு, "இரண்டு மணி நேரம் கழித்து வாருங்கள், தகவல் தருவதாக சொல்லியிருக்கிறார்கள்." என்றார்.  சார்வாள், நல்லூரில் இருக்கும் தன் தங்கையை பார்த்துவிட்டு வருவதாகக் கிளம்ப, அடைக்கலசாமி வீட்டுப் பின்னால் அமர்ந்து பருத்தியை பிரித்துப் போட்டுக் கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து மளமளவென வேலையில் ஈடுபட்டாள் சின்னத்தாயி.

வெளிநாட்டில் படித்துவிட்டு கையோடு அங்கே தன்னுடன் படித்த பெண்ணை திருமணம் செய்து அழைத்து வந்திருந்த அடைக்கலசாமியின் மகன், அருள்ராஜா, பூத்துரையின் எதிர்கால திட்டங்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்.  கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் தனக்கிருக்கும் ஈடுபாடு பற்றி ஆர்வத்துடன் விவரித்துக்கொண்டிருந்தான் பூத்துரை.

"சம்திங் ராங், இட்ஸ் நாட் வர்க்கிங்" என்று கையில் வெள்ளை நிறத்தில் பளபளத்த லேப்டாப்பை தூக்கிக் கொண்டுவந்தாள் அருள்ராஜின் மனைவி நிர்மலா.  அதை வாங்கி இருக்கின்ற எல்லா பட்டன்களையும் அழுத்தி என்னென்னவோ செய்துபார்த்த பிறகும், "பெரிய மிஸ்டேக்கா இருக்கும்போல தெரியுது.  நாளைக்கு திருநெல்வேலிக்கு எடுத்திட்டு போய் சரி பண்ணலாம்" என்று அவளிடமே அவன் திரும்பக் கொடுத்தான்.  "இப்படி குடுங்க அக்கா" என்று லேப்டாப்பை வாங்கிக் கொண்ட பூத்துரை, பத்தே நிமிடத்தில் சரி செய்து "இப்ப வேல செய்து பாருங்க!" என்று கொடுப்பதை பருத்தி பிரித்து போட்டுவிட்டு அங்கு வந்த சின்னத்தாயும் பெருமை தாளாது கண்கலங்க பார்த்தாள்.

"பரவால்லியே மா, நீங்க கம்ப்யூட்டர் சம்பந்தமா கோர்ஸ் எல்லாம் படிக்க வச்சிருக்கீங்க போல தெரியுது" என்று நிர்மலா கூறியதும், "கஷ்ட ஜீவனத்துல ஆத்தாவுக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம்னு லீவ்ல எம்புள்ள திருநெல்வேலில கொஞ்ச நாள் நீ கைல வச்சிருக்கிறியே தாயி.., அந்த பொட்டி ரிப்பேர் பண்ற கடையில வேலை செஞ்சான்." என்றாள் சின்னத்தாயி.

அதன் பிறகு, உள்ளே சென்று அருள்ராஜும் நிர்மலாவும் அடைக்கலசாமியிடம் ஏதோ பேசினார்கள்.  கொஞ்ச நேரத்தில், "உம் மகனுக்கு சென்னை காலேஜ்ல மட்டுமில்ல, ஹாஸ்டல்லயும் இடம் வாங்கியாச்சு.  புறப்படுறதுக்கு ஏற்பாடு பண்ணு." என்று அடைக்கலசாமி கூறியதும்,

"அய்யாசாமி நீங்க நல்லா இருக்கணும்யா" என்று கையை தலைக்கு மேலே உயர்த்தி கும்பிட்டாள் சின்னத்தாயி.  வாயடைத்து நின்றிருந்த பூத்துரையை தட்டிக்கொடுத்த அருள்ராஜாவையும், அடைக்கலசாமியையும் வணங்கிய பூத்துரை, அம்மாவை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது, நிர்மலா வந்து அவன் கையில் கொஞ்சம் பணத்தை வைத்து அழுத்திவிட்டு, படிப்பு செலவுக்கு வைத்துக்கொள் என்றாள்.  தாயும் மகனும் மறுத்தாலும், குடும்பமே வற்புறுத்தியதால் வாங்கிக் கொண்டார்கள்.

ஒன்றரை வயது குழந்தையுடன் நிர்க்கதியாக சின்னத்தாயை அவள் புருஷன் விட்டுச்சென்ற பிறகு, எந்த சந்தர்ப்பத்திலும், எதற்காகவும், யாரிடமும் அவள் கையேந்தியதில்லை.  வயக்காட்டில், மழையிலும், வெயிலிலும் பாரபட்சம் இல்லாமல், ஊரில் எல்லா வயலிலும் உழைப்பை விதைத்திருந்த அவள், அதில் கிடைத்த கூலியை மட்டுமே தன் மகனுக்காக பயன்படுத்துவதை பழக்கமாக வைத்திருந்தாள்.  அதனால்தானோ என்னவோ, பூத்துரை சென்னைக்கு படிக்கச் சென்றபிறகு, வயல் வேலை இல்லாத நாட்களில், ஆலங்குளம் வந்து அடைக்கலசாமி வீட்டில் இருக்கின்ற வேலைகளை எதுவாக இருந்தாலும் இழுத்து போட்டுக்கொண்டு ஒரு பைசா வாங்காமல் செய்து கொண்டிருந்தாள்.

இப்போதும் கூட, ஊரில் ஆளாளுக்கு "உம் புள்ளைய டீவியில காட்டுறாங்க.  சாப்பாடு சாப்பிடாம கிடந்து போராட்டம் பண்றானாம்!  அப்பன் மாதிரியே சண்டைகாரானாதான் இருக்கான்.  என்னன்னு விசாரி.  பிரச்சனையில மாட்டிக்கப் போறான்" என்று அவளுக்கு எச்சரிக்கையாகவும் இளக்காரமாகவும் கூறியபோது, சார்வாளிடம் ஓடினாள்.

"அது வேற ஒண்ணுமில்ல தாயி, கவலைபடாத.  நம்ம பக்கத்து நாடு, இலங்கையில பிரச்சனை.  அதுல உம் மகன் போராட்டத்தில சேர்ந்திருக்கான். என்று அவர் விளக்க முயன்றார்.

"அப்படின்னா எம்புள்ள மிலிட்டரியில சேர்ந்துட்டான்னு சொல்றீயளா ஐயா" என்று அப்பாவியாக முகத்தில் படிந்திருந்த வியர்வையை துடைத்தபடி அவள் கேட்டபோது, சார்வாளும் பதில் சொல்ல முடியாது விக்கித்து நின்றார்.

பீடிக்கடையில் கணக்கெழுதும் அப்பாதுரை அங்கு வரவே, அவனிடம் விசாரிக்கத் தொடங்கினாள் சின்னத்தாயி.  கம்யூனிஸ்டுகாரன் விவரமானவன், ஆனா வில்லங்கமானவன் என்று பெயரெடுத்திருந்த அப்பாதுரை, அவளுக்கு தெளிவாக சொல்லி விளங்க வைக்க மாட்டானா என்ற ஆதங்கம் சின்னத்தாயிக்கு.  "உன் மகன் வீரன் சின்னத்தாயி.  இலங்கை தமிழர் பிரச்சனையில அவங்களுக்கு நியாயம் கிடைக்கணும்னு உண்ணாவிரதம் இருக்கானாம்!  நீ பெருமைபடணும்" என்றான் அப்பாதுரை.  அங்கே விளக்குமாத்துடன் வந்த அவன் மனைவி பச்சைக்கிளி, "சும்மா வெட்டி நியாயம் பேசி ஊரை கெடுக்கிறது பத்தாதா?  அவளையும் போட்டு ஏன்யா பதறவைக்கிற? அவ புருசனையும் இப்படித்தான் பறிகொடுத்தா.  ஊர்ல எல்லாருக்கும் கூலிய ஒசத்தி கேக்குறேன், ஒசத்தி கேக்குறேன்னு சண்டைபோட்டு, பக்கத்து ஊரு ஜனங்களுக்கும் உதவி செய்யறன்னு போயி, கடைசியில வயல்ல செத்துகிடந்தான் அந்த மனுஷன்.  பாம்பு கடிச்சிட்டுன்னு சொன்னாங்க, பேயடிச்சிதின்னும் சொன்னாங்க.  யார் கடிச்சது? யார் அடிச்சதுன்னு யாருக்குத் தெரியும்.  இந்த மனுஷன் சொல்றதெல்லாம் கேட்காத சின்னத்தாயி" என்றாள்.  பிறகு, "இதுக்குத்தான் பட்டணத்துக்கெல்லாம் படிக்க அனுப்பாதன்னு நான் சொன்னேன்.  இப்பவும் ஒண்ணும் கவலைப்படாத.  பட்டணத்துக்குப் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடு" என்று அவளை தேற்றிய பச்சைகிளி, "தனியா போகாத, கூட துணைக்கு வண்டியேறியும் அழைச்சுட்டுப் போ." என்றாள்.

ஊரில் யாருக்கு உபகாரம் என்றாலும் ஓடிவந்து நிற்பவன் வண்டியேறி.  குறிப்பாக எல்லா வயது பெண்களும் உரிமையுடன் அவனிடம் உதவி கேட்பார்கள்.  எங்கிருந்தோ பிழைக்க வந்தவன், அவர்களில் ஒருவனாகி போயிருந்தான்.  ஆனால், கிளம்பும் நேரத்தில் வண்டியேறி வரவேண்டாம் என்றும் தான் தனியாகவே போவதாகவும் தடுத்துவிட்டாள் சின்னத்தாயி.  ஆலங்குளம் வந்து திருநெல்வேலிக்கு பஸ் ஏறியபோது அடைக்கலசாமி குடும்பத்தாரை பார்க்க நேரிட்டது.

"எவ்வளவு கஷ்டப்பட்டு சீட்டு வாங்கினேன்.  படிக்கிறத விட்டுட்டு ஏதேதோ பண்றானே உம் மகன்" என்று அலுத்துக்கொண்டார் அடைக்கலசாமி.  ஆனால், அவர் மகனும் மருமகளும், அவன் எந்த தவறான காரியத்திலும் ஈடுபடவில்லையென்றும், உண்மையில் அவனுடைய சமூக அக்கறைக்காக அவனை ஊக்குவிக்கவேண்டும் என்றும் சொல்லி தேற்றினார்கள்.  ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வதும், ஒருவர் தவறு என்பதும், ஒருவர் அதையே மிகச்சரியான காரியம் என்று சொல்வதும், சின்னத்தாயிக்கு மிகக் குழப்பமாக இருந்தது.  அவள் புருஷன் சாவைவிட அது பெரிய புதிராக இருந்தது.

செலவுக்கு பணம் ஏதாவது வேண்டுமா என்று கேட்டாள் நிர்மலா.  வேண்டாம் என்று அவசரமாக மறுத்த சின்னத்தாயி, "மேலை வீட்டு அமாவாசியிடம் வயலில் வந்து வேலை செய்து கழிப்பதாக சொல்லி கடன் வாங்கி வைத்திருந்த பணம் பத்திரமாக இருக்கிறதா என்று மஞ்ச பைக்குள் கைவிட்டு ஒரு முறை பார்த்துக்கொண்டாள்.

வண்டியேறி சொன்னபடியே திருவண்ணாமலையில் இறங்கி அரசம்பட்டியிலிருக்கிற அண்ணன் வீட்டுக்கு சென்று அண்ணன் மகனை துணைக்கு அழைத்தாள். அவனோ, சீசன் என்பதால் பாண்டிச்சேரிக்கு பணையேற போயிருப்பதாக தெரிவித்த அண்ணன் "எனக்கு ஒண்ணும் புரியலமா, உம்புள்ள எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம் செய்றான்னு.  டி.வி.யில காட்டுறப்ப பதறுதுமா.  சாப்பிடாம கெடக்கானாம்" என்று தொலைக்காட்சி பெட்டியில் அவளையும் பார்க்க வைத்தார்.  அவளுக்கும் கூட ஒரு டி.வி. இலவசமாக கிடைத்ததுதான்.  ஆனால், இலவசமாகக் கிடைக்கிறதே என்று அதில் உட்கார்ந்திருந்தால், "சோத்துக்கு என்ன பண்றது" என்று அவள் அதை பார்க்க விரும்பியதில்லை.  இப்பொழுது, சோறு தண்ணியில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு கிடக்கும் தன் மகனை திரையில் பார்த்ததும் ஒழுங்காக பார்க்க முடியாமல் கண்ணீர் திரையிட்டது.  "கூடவே இன்னும் கொஞ்சம் பிள்ளைங்களும் கிடக்குறாங்களே.  எனக்கு ஒண்ணும் புரியலையே, ஈரக்கொல பதறுதே" என்று அழுதாள் சின்னத்தாயி.  தான் வேண்டுமானால் துணைக்கு வரட்டுமா என்று அண்ணன் கேட்டபோது, வேண்டாமென்று அவள் சொல்லிவிட்டதால், அவர் திருவண்ணாமலை வந்து பஸ் ஏற்றிவிட்டார்.  "வெரசலா போய் பார்த்துட்டு, ராவுக்குள்ள வந்திருதாயி." என்று சொன்ன அண்ணனிடம், தான் வரவில்லையென்றால் பயப்பட வேண்டாமென்றும், அங்கிருந்து, முடிந்தால் நேராக ஊருக்குப் போய்விடுவதாகவும் தெரிவித்துவிட்டு பஸ் ஏறியிருந்தாள் சின்னத்தாயி.

பஸ் போய்க் கொண்டிருந்தது.  எந்த விவரமும் பிடிபடாததால் அந்த பயணம் அவளுக்கு மிக நீண்டதாய் தெரிந்தது.  காலம் முழுவதும் கல்லையும் முள்ளையும் தவிர அவள் மனசு எதிலும் பயணப்பட்டதில்லை.  வெளியிலிருந்து வந்த குளிர்ந்த காற்றில் பிடித்தமான வாசனையொன்று மிதந்து வந்தது.  பூத்துரைக்கு பிடிக்குமே என்று பச்சைக்கிளி அவளிடம் காகிதத்தில் பொதிந்து கொடுத்திருந்த தங்காரபானை கருப்பட்டியின் வாசம் என்று விளங்கிற்று அவளுக்கு.

"அவனே பச்சை தண்ணி பல்லுல படாம கெடக்கிறானாம்.  இத மட்டும் சாப்பிட்டுறுவானா" என்று அப்பாதுரை கேட்டபோது "மத்தவங்கள தூண்டி, தூண்டி பட்டினி கிடக்க வச்சிட்டு, நீங்கல்லாம் திண்ணுட்டு கெடக்கிறதுதானயா உங்க வேலை." என்று அடக்கினாள் பச்சைக்கிளி.  இந்த உரையாடல் கூட சின்னத்தாயிக்கு விளங்கவில்லை.  அவளுக்கு காங்கிரஸ்காரனும், கம்யூனிஸ்டுகாரனும் ஒரே மாதிரி எப்பொழுதாவது ஓட்டு கேட்க வருவார்கள்.  அவ்வளவுதான்.  அதற்கு மேல், விதைப்பதையும் அறுப்பதையும், அதைக் கொண்டு பையனை படிக்க வைப்பதையும் தவிர, வேறெதையும் அவள் சிந்தித்ததும் இல்லை, அதற்கு நேரமும் இருந்ததில்லை.  வெளியில் லேசாக தலையை நீட்டி வானத்தை பார்த்தாள்.  வெள்ளி முளைத்திருந்தது.  தன்னுடைய சின்ன வயதில் தன் கண்கள் இப்படித்தான் இருந்ததாக அவள் பாட்டியும் அம்மாவும் சொல்ல கேட்டிருக்கிறாள்.  ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டாள்.

சற்று நேரத்தில், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு வந்துவிட்டதாக இறங்கச் சொன்னார்கள்.  ஊரில் ஓடைக்கு பக்கத்தில் குவிந்திருக்கும் மணல் போல மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.  மூச்சுத் திணற வைக்கும் இந்தக் கூட்டத்தைக்  கடந்து  அல்லது பிளந்து கொண்டு எப்படிச் செல்ல முடியும் என்று மலைத்துப் போய்  நின்றிருந்தாள் .  அதே நேரத்தில் யாரோ வருகிறார்கள் என்று கூட்டம் சற்று விலகி வழிவிட்டது.  கண்களை சுருக்கிக் கொண்டு சின்னத்தாயும் பார்த்தாள்.  தோளில் கருப்பு துண்டு போட்டுக்கொண்டு வந்த அந்த மனிதரை பார்த்ததும் எங்கோ பார்த்தது போல் தோன்றியது.

"யாவம் வரலியே" என்று யோசித்தாள்.  அடைக்கலசாமி அய்யா வீட்ல டி.வி. பொட்டிய துடைச்சு வைக்கும்போது, இந்த மனிதர் ஆவேசமாக பேசுவதை பார்த்த ஞாபகம் வந்தது அவளுக்கு.  அப்பொழுது, "அப்பா, நம்ம ஆளுங்க இங்லீஷ் பேசும்போது ஏன் இப்படி முக்கிகிட்டு கடிச்சு துப்புற மாதிரி கத்துறாங்க" என்று அருள்ராஜா தன் அய்யாவிடம் கேட்டதும் நினைவு வந்தது.  இங்கேயும் ஆவேசமா பேசப்போறாரோ என்று அவள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே, சற்று குட்டையாக இருந்த ஒருவர் முன்வந்து அவரிடம் கை குலுக்கி, "நான் தான் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த ப்ரொஃபஸர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்.  கஷ்டப்பட்டு உடம்பை குறுக்கி, ஒடுக்கி கூட்டத்திற்குள் முந்தியடித்து நுழைந்து பூத்துரையும், மற்ற மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குள் வந்துவிட்டாள். சுற்றிலும் ஏராளமான மாணவர்கள்.  சோர்ந்து படுத்திருந்த எட்டு பிள்ளைகளுக்கு நடுவில் மகனைத் தேடினாள்.  கண்கள் பாதியாக சிறுத்துப்போயிருந்தன.  ஆனால், பாம்பு கடித்து செத்துப் போயிருந்த நேரத்தில் கூட தன் புருஷன் முகத்தில் தெரிந்த வைராக்கியத்தை பிள்ளை முகத்திலும் பார்த்தாள் சின்னத்தாயி.  கருப்பு துண்டு போட்டிருந்தவர் போலவே, வேறு , வேறு கலரில் துண்டு போட்டிருந்த பல பெரியவர்களும் அங்கிருந்த மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தள்ளுமுள்ளுவில் சிக்கிக்கொண்டிருந்த இவள், தன் மகன் தன்னை ஒருமுறை பார்த்துவிட மாட்டானா என்று தடுமாறினாள்.  ஆனால், பெருந்தலைகள் இவளை அவள் மகன் பார்வையில் இருந்து ஓரங்கட்டின.  திடீரென்று ஒரு மாணவன், நீங்க யார பார்க்கணும் என்று இளகிய குரலில் வந்து கேட்டான்.  அவன் கண்கள் கோழி முட்டை சைஸில் வீங்கியிருந்தன.  பேச்சு வராமல் நின்றிருந்த சின்னத்தாயி, "உன் கண்ணு ஏம்பா இப்படி வீங்கிக் கெடக்கு?" என்று கேட்டாள். "மூணு நாளா தூங்கலம்மா.. வேற ஒண்ணும் இல்ல." என்ற அவனிடம், "பூத்தொரைய பார்க்க வந்தேம்பா" என்ற சின்னத்தாயி திடீரென்று எதோ நினைத்துக்கொண்டவள்போல், "பார்க்கவேண்டாம்பா" என்று சொல்லிவிட்டு பையில் இருந்த தங்காரபான கருப்பட்டியை வெளியில் எடுத்தாள்.  அதில் அவள் பாசத்தின் வாசம் வீசியிருக்க வேண்டும்.  கண் வீங்கிய பையனும் சற்று கலங்கினான்.

"எப்படினாலும் சாப்பிட முடியாதேமா" என்றான்.

"சரி, மத்த பிள்ளைங்க சாப்பிடட்டும்பா" என்று சொன்னவள், திருநெல்வேலி பஸ் பிடிக்க எங்க போகணும் என்று விசாரித்து நடக்க ஆரம்பித்தாள்.

'சென்னை வருவதற்கு மேல வீட்டு அமாவாசியிடம் வாங்கிய துட்டுக்கு இரண்டு நாளாவது வேலை செய்யணும்.  தீர்த்தாரப்பபுரத்திலும் கள பறிக்க கூப்பிட்டிருக்காங்க.  அங்கயும் போனாத்தான் பூத்துரைக்கு அடுத்த மாசம் சாப்பாட்டு பணம் அனுப்ப முடியும்' என்று எண்ணியபடியே பஸ் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தாள்.  அதே நேரத்தில், போலீஸ் வருதாம்பா என்று சிலர் பேசியது இவள் காதில் விழவில்லை.  எத்தனைபேர் கூட இருக்காங்க, தான் பிள்ளைக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை சின்னத்தாயின் மனதில் வேரூன்றியிருந்தது.

"என்ன இவ்ளோ வெரசலா நடந்துபோற?  தெரியுமா சின்னத்தாயி.  சென்னையில பத்தவச்ச தீ தமிழ்நாடு முழுக்க பத்திக்கிட்டு எரியுது." என்று மேலவீட்டு அமாவாசி வயலுக்கு வேலைக்கு தூரத்தில் போய்கொண்டிருந்த
சின்னத்தாயி காதில் விழுவதுபோல் உரக்கக் கூறினான் அப்பாதுரை.  அவளோ, அதைக் கேட்காதவளாக, 'சீக்கிரமா இந்த வயல்ல வேலைய முடிச்சிட்டா, சரோசா வீட்ல போயி பருத்தி பிரிச்சுபோட்டு கொஞ்சம் காசு சம்பாதிக்கலாம்' என்று தனக்குள் பேசிக்கொண்டு எட்டாத தூரத்தில் நடந்துகொண்டிருந்தாள்! ~-~-~-~-~

செவ்வாய், 13 நவம்பர், 2012

தந்தி தொலைக் காட்சியில் நெகிழ்ச்சியான தீபாவளி நிகழ்ச்சி !

தந்தி தொலைக் காட்சியில் நெகிழ்ச்சியான 

தீபாவளி நிகழ்ச்சி !

உள்ளத்தை கொள்ளை கொண்ட 360 உலகைச் சுற்றி !

                ஒளியின் திருநாள் என்று கொண்டாடப் படும் தீபாவளியில் மத்தாப்புக்களும் வாண  வேடிக்கைகளும் நான் சிரித்தால் தீபாவளி என்று வர்ண ஜாலம் காட்ட சுவாசத்தை இழுத்துப் பிடிக்கும் புகை மண்டலத்துக்குப் பயந்து தொலைக் காட்சியில் கண் பதித்துக் கிடந்த போது  சிந்தனைக்கு விருந்து வைத்தது புதிதாகத் தொடங்கப் பட்டிருக்கும் தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று .மாலை ஐந்தரை மணி முதல் 6 மணி வரை ஒளி பரப்பு செய்யப் பட்ட  360 உலகைச் சுற்றி என்ற நிகழ்ச்சி இன்றைய தீபாவளியின் விஷேசம் என்று சொல்லலாம் .பல்வேறு தொலைக் காட்சிகளிலும்  ஓடாத அல்லது தியேட்டரை விட்டு ஓடிய திரைப்படங்கள் , நடிக நடிகையர் பேட்டிகள் என்று ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு நடுவே  புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சி புதிய தகவல்கள் வியக்கச் செய்த சுவாரஸ்யங்கள் கலந்த கதம்பமாக நெஞ்சில் கலந்தது .

 
             உலகத்தின் பல்வேறு பகுதியிலும் கொண்டாடப் படும் வெவ்வேறு ஒளியின் திருநாள்கள் (festivals  of lights )தகவல்களை ^வரலாற்றுப் பின்னணியுடன் பாரம்பரியக் கதைகளும் சேர்த்து வழங்கினார்கள் . அறிவும் செல்வமும் பெருக , வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் மலர ,உற்சாகமாகஉலகெங்கும் சிறப்பிக்கப் படும் விதவிதமான ஒளியின்  திருநாள்கள் பற்றி விவரித்த போது  காட்சியும் கருத்தும் கண்களையும் சிந்தையினையும் சேர்த்துக் கவர்ந்தன ! மகுடத்தோடு மன்னனின் தலையினையும் உருட்டி விட நடந்த அரசியல் சதி முறியடிக்கப் பட்ட  நான்கு நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்தை ஒளியின் நாளாகக் கொண்டாடும் இங்கிலாந்தின் பழமை போற்றும் பாரம்பரியம் இன்றைக்கு கொண்டாடப் படும் கோலாகலம் கண் முன் கொண்டு வரப்பட்டது .ஆவிகளை விரட்டுவதற்காக பேய் நெருப்பினைப் பற்ற வைத்து ஜப்பானில் நடத்தப் படும் தீப்பந்தத் திருவிழாவின் மரபினையும் ரொம்ப சுவாரசியமாகக் காட்சிகளோடு விவரித்தார்கள் .பேய் ,ஆவி என்ற நம்முடைய நாட்டுப்புற நம்பிக்கைகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்தத் தகவல் உதவியாக இருக்கலாம் .

  ஈரானில் பேசப்படும் எலாமைட்டு என்ற மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகவும் இந்தியாவின் வட   பகுதியிலிருந்து ஈரானுக்கு இடம் பெயர்ந்து சென்ற தொல் திராவிடர்களின் கலப்பே இதற்குக் காரணம் என்றும் மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள் .ஈரானில்   பழங்குடி சமூகத்தினரின் மார்ச் மாதத்தில் தொடங்கும் புது வருட விழா கொண்டாட்டத்தில் போகிப் பண்டிகை போல நெருப்பைக் கொளுத்தி இருளையும் குளிரையும்  விரட்டி அடிக்கும் ஒளிக்கு மரியாதை செலுத்துவதாக 360 உலகைச்சுற்றி நிகழ்ச்சியில் வண்ணப் படக் காட்சிகளுடன்  விளக்கினார்கள் கலாச்சாரப் பரிமாற்றங்களும் பண்பாட்டுப் பரி வர்த்தனைகளும் மொழிக் கலப்புடன் நடந்துள்ளன என்பது நமக்குப் புரிந்தது.

        நம்முடைய அறுவடைத் திருநாளான பொங்கல் பெருநாளில் சூரியனுக்கு நன்றி செலுத்துவது நமது மரபு. ஜப்பானில்  கொண்டாடப்படும் கோஷோ ஹட்சு என்ற அறுவடைத் திருநாளும் தமிழர் மரபினை ஒட்டியே சிறப்பிக்கப் படுகின்ற பண்டிகை .இது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால் நம்முடைய மாட்டுப் பொங்கல் போல தாம் வளர்க்கும் மாடுகளுக்கான திருநாளாக தென்கொரியத் தீவு ஒன்றில் பழைய புல்லை எரித்து மாடுகளுக்கு புதிய புல்  வேண்டி நடைபெறும் ஒளித்திருநாள் பற்றிய செய்தியினை தந்தி தொலைக் காட்சியின் 360 உலகைச்சுற்றி நிகழ்ச்சி மூலம் அறிந்து  கொள்ள முடிந்தது .


 இன்னொரு முக்கியமான தகவல் Hanukkah என்ற யூதர்களின் ஒளித்திருநாள் பற்றியதுதான் .ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப் பட்ட எருசலேம் தேவாலயத்தினை ஆக்கிரமித்திருந்த கிரேக்கர்களைத் தோற்கடித்து துரத்திய பிறகு அத்  தேவாலயத்தை கடவுளுக்கு மீண்டும் அர்ப்பணம் செய்திட்ட யூதர்கள் எட்டு நாள்கள் எண்ணெய் விளக்குகள்  ஏற்றிக் கொண்டாடும்  சரித்திரத்தினை அதன் பாரம்பரியத்துடன் அதோடு சேர்ந்து வழங்கும் வாய் மொழிக் கதைகளுடன் இணைத்து சொன்னது சுவையாக இருந்தது . ஒரே ஒரு நாளுக்கான எண்ணெய்  மட்டுமே இருக்க  எட்டு நாள்கள் விளக்கு அணையாமல் சுடர் விட்டு எறிந்ததாகச்  சொல்லப் படும் அந்த இரண்டாம் நூற்றாண்டுக் கதை  இருக்கின்ற இயற்கை வளங்களை மற்றவர்களிடமிருந்து சுரண்டாமல் பங்கிட்டு பகிர்ந்து வாழலாம் என்ற  பாடத்தை அல்லவா நமக்குத் தருகிறது !

இறுதியில் நமது தீபாவளி செய்திகளைக் கண் கவர் விதத்தில் வழங்கினார்கள் பொன்னும் பொருளும் அருளும் திருமகள் இல்லங்களில் எழுந்தருள்வதற்காக ஏற்றப்படும் மண் விளக்குகள் பற்றிக் கூறினார்கள் ஆனால் சந்தையில் மண் விளக்குகள் விற்பனை சரிந்து சீன விளக்குகள் மவுசு பெற்றிருப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன திருமகள் வீற்றிருக்கும் செந்தாமரை மலர்களையும் காணவில்லை அவை மலர்ந்திருக்கும் நீர் நிலைகளையும் காணவில்லை . இப்படி இயற்கையினை மொட்டை அடித்தது போலவே நம் முன்னோர்கள் இயற்கையிலிருந்து உருவாக்கிய  பொருள்களையும் பரணில் போட்டு விட்டோம் அத்துடன் நமது பாரம்பரியத்தையும் சேர்த்தே  தலை முழுகி முகவரி இழந்து நிற்கிறோம் .அதன் ஒரு அடையாளம்தான் மண் விளக்குகளின் இடத்தை சீன விளக்குகள் பிடித்துக் கொண்டதும் ! waste  management  என்ற பெரிய பெரிய வார்த்தைகளை இன்று பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம்முடைய பாட்டிமார்கள் தயாரித்த விளக்குமார்களில்  கூட அந்த waste  management  னைக் காண முடிந்தது . பனை ஓலையிலிருந்து அற்புதமாக உருவாக்கப் பட்ட வண்ணச் சீர்ப் பெட்டிகளும் தென்னை  ஓலையிலிருந்து  உருவாக்கிய  விளக்குமார்களும் பிளாஸ்டிக் வரவால் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன .
 
       உலகெங்கும் கொண்டாடப்படும் ஒளியின் திருநாள் பற்றி தந்தி தொலைக் காட்சியின் 360 உலகைச் சுற்றி நிகழ்ச்சி அவ்  விழாக்கள் பொதுவாக சூரியனுக்கு மக்கள் நன்றி சொல்கின்ற நாள் என்பதனைத் தெளிவாகச் சொன்னது . அந்த ஆதவன் மார்பிலேயே பெரிய ஓட்டை போட்டு விட்டு  ஒளியின் நாளைக் கொண்டாடும் நாம் நம் பழம்  கலாச்சாரம் பாரம்பரியம் இயற்கையுடன் ஒட்டிய வாழ்வு இவற்றை உலக நாடுகள் பலவற்றின் பாரம்பரியங்களோடு நினைவு கூறும்  வகையில் ஒளிபரப்பான 360 உலகைச் சுற்றி நிகழ்ச்சியில்  சொலப்பட்டவற்றைத் தாண்டி நம்மை சிந்திக்க வைத்தது சிறப்பு அம்சமாகும் . ஆங்கிலச் சொற்கள் தேவைக்கு ஏற்ப பயன் படுத்தப் பட்டிருந்ததாலும் பன்னாட்டு சம்பவங்களின் தொகுப்பில் தவிர்க்க முடியாது என்பதாலும்  சுருங்கச் சொல்லி விளங்க வைத்த மொழி நடையும் காட்சித் தொகுப்பும்  பாராட்டுக்குரியவை .Media  என்பது அறிவுறுத்துவது தகவல் தருவது பொழுது போக்கிற்குரியது என்பதைக் கடந்து நின்ற  தந்தி தொலைக் காட்சியின் 360 உலகைச் சுற்றி தீபாவளி நிகழ்ச்சி அற்புதம்