ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

பா.ஜ.க.பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டியா 

மாஃபியா கும்பலுக்கு சாமரம் வீசும் போலி அறிவு ஜீவிகள் 

முன் குறிப்பு 

நான் பா.ஜ .க கட்சியினைச் சேர்ந்தவள் இல்லை 


கடந்த சில நாட்களாக இந்திய ஜனநாயகத்திற்கும் தமிழக மக்களின் நலனுக்கும் எதிரான காட்சிகள் அரசியல் களத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.அதன் உச்சக்  காட்சியில்  தமிழக மக்கள் தோற்றுப் போய் கையறு நிலையில் வெம்பிப் போய் நிற்கிறார்கள். இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப் பட்ட முன்னாள் முதல்வரின் காரணகாரியங்கள் கிடைக்காத மர்ம மரணம் முதல் ஊழல் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்டவர் கைகாட்டிய ஒருவர்  முதல்வராகத் தம்  தலையில் கட்டப் பட்டது வரை அவலங்களைச் சந்தித்து வருகிறார்கள்.இதையெல்லாம் கூட சகித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது .ஆனால் அறிவு ஜீவி என்ற போர்வையில் பா.ஜ .க கட்சியினைப் பூச்சாண்டியாகக் காட்டி அந்தப் பிள்ளை பிடிக்கும் கட்சியிலிருந்து தப்பிக்க மாஃபியா கும்பலை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் அதுவே ஜனநாயகம் என்று மக்களுக்குச் சொற்பொழிவாற்றுகின்ற சில போலி அறிவு ஜீவிகளைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை .

தனியார் தொலைக்காட்சிகளின் விவாத அரங்குகளில் ,முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் இந்த மேம்போக்கு மேதாவிகள்   மக்களின் மனநிலைக்கும் விருப்பத்திற்கும் அவர்களின் நலனுக்கும் விரோதமான கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிடுகிறார்கள்.எம் மக்களின் உடனடித் தேவை ஒரு நல்லாட்சி .ஊழலற்ற ஆட்சி அவர்களின் உரிமைக்கும் சுய மரியாதைக்கும் பங்கம் விளைவிக்காத ஆட்சி .

 மணல் கொள்ளை.சுரண்டல்.விவசாயிகளின் தற்கொலை வறுமை என்று மக்களைப்  படுகுழியில் தள்ளி அவர்களின் தகர்ந்து போன கனவுகளின் மீதும் நைந்து போன வாழ்வின் மீதும் பல்லக்கு ஏறியிருக்கும் ஒரு கொள்ளைக்கார கும்பலின் அதிகார வெறிக்கு மக்களைப் பலியாக்கத் துடிக்கிறார்கள் சில சிந்தனாவாதிகள் .எந்த ஆட்சி அதிகாரமும் இல்லாத வேளையிலேயே ஆட்சிக் கட்டிலில் இருந்தவரின் நிழலாக இருந்து மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்த கும்பல் ஊழல் குற்றவாளியாகத் தண்டிக்கப் பட்ட பின்பும் பினாமி ஆட்சி நடத்துவதையும் அதற்காக மக்கள் பிரதிநிதிகளைக் கடத்திச் சிறை வைப்பதையும் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?

  தமிழ் நாட்டில் காலூன்றவே அவசர அவசரமாக சசிகலா மீதான ஊழல் வழக்கில் ஒரே வாரத்தில் நீதிமன்றத்தினைத் தீர்ப்பு வழங்க வைத்தது பா.ஜ .க  என்று முகநூல் காணொளியில்  கதறுகிறார்கள்  .தண்டிக்கப் பட்டவரும் அவர் சார்ந்த கும்பலும் தமிழ் நாட்டை மீட்க வந்த ரட்சகர் போலவும் அதனைத் தடுத்து நிறுத்தி பா.ஜ.க மதவாத அரசியலைத் திணிக்க முற்படுவது போலவும் பேசுகிறார்கள் . அய்யா கனவான்களே என்றேனும் ஒரு நாள் நீதி வெல்லும் என்ற சாமானியர்களின் நம்பிக்கையை உண்மையாக்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு இது . எல்லாத் தரப்பு மக்களும் வரவேற்கிறார்கள் ,திருவிழா போலக் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் இந்த மாஃபியா கும்பல் சூறையாடியது எம் மக்களின் வாழ்வையும்  வளத்தையும்தான்.  தமிழ் நாட்டையும் மக்களையும் மாஃபியா கும்பலிடமிருந்து காப்பாற்றுங்கள் என்ற ஓலம் எம் மக்களின் ஒருமித்த குரலாய் எழுந்திருக்கும் இவ்வேளையில் ;யார்தான் மாஃபியா இல்லை' என்று விதண்டாவாதங்களை வெட்கமின்றிப் பதிவிடுகிறார்கள்.

 இந்த மதவாதம் மண்ணாங்கட்டிவாதம் பிதற்றலை நிறுத்துங்கள்.  வயிற்றுக்குச் சோறும் உடுத்த உடையும் ஒண்ட ஒரு குடிசையும் கூட இல்லாமல் இயற்கை வளங்களையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து,யார் அதனைப் பறித்தார்களோ அவர்களின் முறையற்ற அரியணை ஏறும் முயற்சியைத் தடுக்க இயலாது தவிக்கும் எம் மக்களிடம் உங்கள் அண்ணாவித்தனத்தை, பா.ஜ.க. வைப் பூச்சாண்டியாகக் காட்டி எம் மக்களை வஞ்சிக்க நீங்கள் போடும் கபட நாடகத்தை நிறுத்திக்   கொள்ளுங்கள் .


மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.தமிழக வரலாறு வெறும் 60 ஆண்டு கால அரசியலுக்குள் அடக்கமில்லை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல் வேறு சமயங்களையும் சமயச் சண்டைகளையும் கண்டதுதான் தமிழகம் .இயற்கை வழிபாடு, முருகன்,அருகன் சைவம் ,வைணவம் சமணம் பௌத்தம் என்று பல மத நெறிகளையும் ,ஏன்  மதமே இல்லாத வழிபாட்டு முறையையும் கண்டவர்கள் . இறைவனையே பித்தா என்று உரிமையோடு அழைத்து காதலிக்கே தூது விட்ட சைவ மதத்திடமிருந்து அன்பே சிவம் என்று கற்றுக் கொண்டவர்கள்   தமிழர்கள் . என்னை மதிக்காத ஊரில் உனக்கென்ன வேலை உன் பை நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு நீயும் கிளம்பு என்று ஆண்டவனுக்கே உத்தரவு போட்ட வைணவத்திடம் சுயமரியாதையைக் கற்றுக் கொண்டவர்களய்யா தமிழர்கள் .கொல்லாமையை சமண பௌத்தத்திலிருந்தும் வாழும் முறையினை இயற்கையிடத்திருந்தும் தெரிந்து கொண்டவர்கள் நாங்கள் அனல் வாதம் புனல் வாதம் என்ற சமயச் சண்டைகளையெல்லாம் ஏற்கனவே பார்த்ததுதான் தமிழகம் . அதை எல்லாம் கடந்து தெளிவான பாதையைத் தேர்ந்தெடுத்து வாழும் திறன் படைத்தவர்கள் தமிழர்கள்.  நிலம் நீர் ஆகாயம் என்று இயற்கையையும் செல்வத்தை வழங்கும் கால் நடைச் செல்வங்களையும் வணங்குபவர்கள் தமிழர்கள் .இங்கு இந்த மதவாத முடக்குவாத தந்திரம் எல்லாம் எடுபடாது .

 தமிழக வரலாற்றில்  வரி வாங்காதே நீர்நிலைகளைக் காப்பாற்று என்றுமன்னர்களுக்கே அறிவுரை வழங்கிய புலவர்கள் இருந்தார்கள் . இன்று நாம் பேசும் நீர் மேலாண்மை பற்றி அப் புலவர் பெருமக்கள் அறிவுறுத்தியதுடன் செயல் படுத்தவும் செய்தார்கள் .இந்த நவீன அறிவுஜீவித் தரகர்களோ .பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு எம் ஜீவநதிகளைத்  தாரை வார்த்துக் கொடுத்து விட்டு மணல் கொள்ளை போன்ற அடாவடித்தனத்தால் விவசாயத்தையும் மக்களையும் புதைகுழியில் தள்ளி விட்ட  மாஃபியாக்களுக்கு பட்டாபிஷேகம் செய்யத் துடிக்கிறார்கள் .

இது எம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல .அவர்களின் சுயமரியாதைக்கு விடப் பட்டிருக்கின்ற சவால் .மதியாத மன்னனிடம் பரிசில் பெற்று வாழ்வதைக் காட்டிலும் மடிந்து போவதே மேல் என்று எம் தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்தார்கள் .அவர்களும் குயவராகவும் பொற்கொல்லர்களாகவும் உழைத்து வாழ்ந்தார்கள். காசுக்காக இப்படி அநீதிக்குக் கொடி பிடிக்கவில்லை.


    மக்கள் தங்கள் கொள்கைகளில் தெளிவாகவே இருக்கிறார்கள் .எனவே   "சாப்பிடு  இல்லேன்னா பூச்சாண்டி பிடிச்சிட்டுப் போயிடுவான் " என்று தாய்மார்கள் குழந்தைக்குச் சோறு ஊட்டுவது போல    #பா.ஜ.க  கட்சியினைப் பூச்சாண்டியாகக் காட்டி மக்களுக்குப் போதனைகள் செய்கின்ற வேலைகளை விட்டு விடுங்கள்.

தரகு வேலை பார்க்கும்  போலி அறிவு ஜீவிகளின் பிதற்றல்கள் எங்களுக்குத் தேவையில்லை. சிலர்  ஆய்வாளர்கள் என்ற போர்வையிலும் மக்கள் நலனுக்கு முரணான  வெற்றுக் கூச்சல்களை முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு'ஆய்வாளர் ' காமராஜர் ஆட்சியை விட மிகச் சிறப்பான ஆட்சி மக்களுக்கு இப்போது கிடைத்திருப்பதாகப் புகழ்ந்து கொண்டிருந்தார் .இவர்களெல்லாம் என்ன மாதிரியான ஆய்வினைச் செய்தார்கள் ?முனைவர் அதாவது P.HD பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபடும் சிலர் பல்கலைக் கழகத்தில்  தங்கள் பெயரைப் பதிவு செய்வதுடன் சரி .யாரோ ஒருவர் எழுதித் தர, பட்டத்தை மட்டும் இவர்கள்  கூசாமல் வாங்கி விடுவார்கள்.சில போலி அறிவுஜீவிகளும் அவர்கள் மக்கள்களும் கூட இப்படிச் செய்வதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்   இப்படி பா.ஜ.க.பூச்சாண்டி என்று வெற்றுக் கூச்சல் போடுவதை விட்டு விட்டு மாஃபியாக்கள் எப்படி  எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்  என    #உண்மை  அறியும் குழு மூலம் கண்டு பிடிக்க முயற்சி செய்யலாம்.

மக்களுக்குத் தேவை மக்களுக்கான நல்லாட்சி .மக்களாட்சி .எங்களிடமிருந்தே  கொள்ளையடித்த பணத்தில் ஜனநாயக வழிமுறைகளைக் கொன்று விட்டு  அரியாசனம் அமரத் துடிக்கும் மாஃபியாக்களின் கொடுங்கோல் ஆட்சி அல்ல .

கடைசியாக ஓன்று

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

நீங்கள் நல்லது செய்யவில்லையென்றால் கூடப் பரவாயில்லை , தீயதைச் செய்யாதீர்கள் என்று புறநானூற்றுப் புலவன் சொல்கிறான் .கொஞ்சம் தமிழ் இலக்கியத்தையும் வரலாற்றினையும் படித்து விட்டு விவாதிக்க வாருங்கள்


திங்கள், 28 மார்ச், 2016

'தலித் எழுத்தாளர்' அடையாளம் என்ற தீண்டாமை

'தலித்  எழுத்தாளர்' அடையாளம் என்ற தீண்டாமை


கொடிய  தீண்டாமையின்  நெடிய வரலாறு  பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர் போல பாரதீய 
ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் அவர்கள் வர்ணாசிரமம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்கு எழுத்தாளர் ‪#‎இமையம்‬ அவர்களின் மறுப்பும் கருத்தும் இன்றைய 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளி வந்துள்ளது . வர்ணாசிரமம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்கு எழுத்தாளர் ‪#‎இமையம்‬ அவர்களின் மறுப்பும் கருத்தும் இன்றைய 'The Hindu' ஆங்கில நாளிதழில் வெளி வந்துள்ளது.சாதீயம்,பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என சமூகப் பிரச்சினைகள் பற்றி தனது கலாபூர்வமான படைப்புக்களின் வழியாக நம்மிடம் தொடர்ந்து உரையாடி வரும் திரு #இமையம் சுருக்கமாகவும்செறிவாகவும் தனது மறுப்பினைப் பதிவு செய்துள்ளார்.தனது கருத்துக்கு அரணாக அயோத்தி தாஸ் பண்டிதரின் சிந்தனையையும் பகிர்ந்து கொண்டுள்ளார் 


.சாதீயம் பற்றிய இல கணேசனின் கருத்துக்கு 'தலித் அறிவுஜீவிகளின் ' எதிர்வினை என்ற வாசகத்துடன் இமையம் அவர்களின் கருத்து பிரசுரிக்கப் பட்டுள்ளது .ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆணவக் கொலைகளாக அதிகரித்து வரும் இன்றைய சூழலில் சாதிக் கொடுமைகள் பற்றி எழுதுவது சிந்தனையாளர்கள் மற்றும் ,படைப்பாளிகளின்  {அவர்கள்  எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் } கடமையாகிறது.அந்தக் கடமையைச் சரியாகச் செய்கிறார் என்பதற்காகவே எழுத்தாளர் #இமையம் அவர்களை 'தலித்எழுத்தாளர்' 'தலித்அறிவுஜீவி' என்று ஒரு வட்டத்துக்குள் அடையாளப் படுத்துவது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை. சாதீயத்துக்கு எதிரான வெறும்'பரப்புரையாக' இல்லாமல் சிறந்த கலைப் படைப்புக்களாக நிலைத்து நிற்பவை அவரது நாவல்களும் சிறுகதைகளும் நாடகங்களும்!  

தலித்துகள் பற்றி எழுதுவதனால் ஒருவரை தலித் எழுத்தாளர் என்று இங்கு அடையாளப் படுத்துவதில்லை.எழுதுபவர் தலித்இனத்தவர் என்றால் மட்டுமே இப்படி அடைமொழி கொடுத்து அழைக்கப் படுகிறார்.பெண்களின் உலகம் ,அவர்களின் வலி ,தாராளமயமாக்கலில் சந்தைப் படுத்தப் பட்டு விட்டகல்வி என்று பல விஷயங்களை எழுதி வரும் இமையம் அவர்கள் இந்த அடையாளங்களுக்குள் அடைபட வேண்டியவர் இல்லைஎன்பது என்னுடைய கருத்து.

ஒரு சந்தேகம் !

நமது சமூகத்தில் யாரேனும் 'நாடார் எழுத்தாளர்' 'பிள்ளைமார் எழுத்தாளர்' 'மீனவ எழுத்தாளர்' அல்லது 'பிற்படுத்தப் பட்ட இனத்து எழுத்தாளர்'  அல்லது 'மிகவும்
பிற்படுத்தப் பட்ட இனத்து எழுத்தாளர்' என்று அடைமொழி கொடுத்து அடையாளப் படுத்தப் பட்டிருக்கிறார்களா?

தலித் மக்களின் வாழ்வையும் கண்ணீரையும் ,பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப் பட்டவர்களாக ,ஒதுக்கப் பட்டு வாழும் அந்த விளிம்பு நிலை மக்களின் அவலங்களையும்  பதிவு செய்யும் ஒரு படைப்பாளி தலித் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை  ,"தலித் எழுத்தாளர் என்று அழைப்பதும் தீண்டாமையே 

வெள்ளி, 25 மார்ச், 2016

கிங்' விஜயகாந்த் குடும்பத்தாரின் தமிழ்ப் பற்று ?

'கிங்' விஜயகாந்த் குடும்பத்தாரின் தமிழ்ப் பற்று ?

தமிழகத்தை வாழ வைக்க இனி விஜயகாந்தை விட்டால் ஆளில்லை ,நாதியற்றுப் போன தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் பவர் ஸ்டார் [அட நடிப்புல பவருங்கோ} விஜயகாந்த் என்று அவரை முதலமைச்சர் வேட்பாளராக்கி விட்டார்கள் மக்கள் நலக் கூட்டணியினர் .ஒரு சமூகத்தின் தலைவனாக வர விரும்புபவன் அந்த மண் சார்ந்தவனாகவும் மக்களில் ஒருவனாகவும் இருக்க வேண்டும் .அந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பவனாக ,அந்த மக்களின் நலன் நாடுபவனாகவும் இருக்க வேண்டும் .அந்த மண்ணின் மொழியையும் பாதுகாப்பவனாக இருக்க வேண்டும் .ஏனென்றால் ஒரு சமூகத்தை ,ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் ஆயுதம் ஏந்தத் தேவையில்லை ! அந்த இனத்தின் தாய் மொழியினை அழித்தாலே போதும் !அவர்கள் அடையாளாம் இழந்து அழிந்து போவார்கள் .ஏனென்றால் தாய் மொழி என்பது ஒரு இனத்தின் வாழ்வு நெறிகளின் ,பண்பாட்டின் ,கலாச்சாரத்தின் அடையாளம் !

எதற்கு இவ்வளவு பீடிகை என்று யோசிக்கிறீர்களா ?கிங் விஜயகாந்த் தெலுங்கர் என்றாலும் தமிழை நேசிப்பவர் என்ற ஒரு எண்ணம் இங்கு நிலவுகிறது .தமிழ் எனது மூச்சு தமிழ் எனது பேச்சு அதுவே எனது வாட்ச்சு என்று சினிமாவில் பூச்சாண்டி போல் கண்களை உருட்டிப் பேசியவராயிற்றே !
அது எவ்வளவு பெரிய பொய் ! சென்னையின் பிரபலமான கல்லூரியில் தமிழ்த் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் ! தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களுக்காக அடிப்படைத் தமிழ் வகுப்பு  நடத்தப் படும் ,.பல்கலைக் கழக உத்தரவின் பேரில் நடைபெறும் இந்த வகுப்புக்களில் பங்கெடுத்து ,தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டதாரியாக முடியும் .பெரும்பாலும் மணிப்பூர் ,நாகலாந்து ,ஆந்திரா ,கேரளா கல்கத்தா போன்ற மாநிலங்களிலிருந்தும்  வெளி நாடுகளிலிருந்தும் வந்து படிக்கும் மாணவர்கள் இதில்  பங்கெடுப்பார்கள் ,

அ னா ஆவன்னா விலிருந்து தொடங்கி உயிர், மெய், உயிர்மெய் எழுத்து,எனத் தொடர்ந்து பிறகு அணில், ஆடு ,காய் கனிகள் என்று சொல்லிக் கொடுப்பதற்குள் ஆசிரியருக்குத் தாவு தீர்ந்து விடும்  .ஒரே வகுப்பில் ஒரே நேரத்தில் 60 க்கும் மேற்பட்ட பலதுறை பயிலும்  மாணவ மாணவியருக்குத் தனித் தனியாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் .  பெரும்பாலும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும்  கேரளாவிலிருந்து வந்து படிக்கும் மாணவ மாணவியரும் தேர்வுக்காக என்று இல்லாமல் ஆர்வத்துடனேயே கற்றுக் கொள்வதைக் கவனித்திருக்கிறேன்.

ஒரு நாள் அந்த வகுப்பில் கையில் பாடப் புத்தகமோ எழுதுவதற்கு நோட்டோ எதுவும் இல்லாமல்  ஒரு மாணவன் முன் வரிசையில் அமர்ந்து பேசிக் கொண்டும்  மற்றவர்களையும் எழுத விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் .அவனை அது வரையில் அந்த அடிப்படைத் தமிழ் வகுப்பில் நான் பார்த்ததேயில்லை . விசாரித்த   போது பெயர் சண்முக பாண்டியன் என்பதும் அவன் கல்லூரிக்கே ஒழுங்காக வருவதில்லை எனவும் தெரிந்தது .இனி தவறாது வகுப்புக்கு வருவதாகச் சொன்னவன்  முந்தைய நாளைப் போலவே நோட்டுப் புத்தகம் எதுவும் இன்றி வந்து  சள சளவென்று பேசிக் கொண்டிருந்தான் .அவனுடைய நோட்டு எங்கே எனக் கேட்டதும் பக்கத்திலிருந்தவனின் நோட்டுப் புத்தகத்தைப் பிடுங்கி தன்னுடையது என்று காட்டிச் சாதித்தான் .

அவனுக்கு என்னதான் பிரச்சினை என்று கேட்டேன் .தனக்குத் தாய்மொழி தமிழ் இல்லை என்றான் .அப்படிப் பட்டவர்களுக்காகத் தான் இந்த வகுப்பு ,ஆப்பிரிக்க தேசத்து மாணவர்கள் கூட ஆர்வத்துடன் படிக்கிறார்கள் என்றதும் "இதப் படிக்கலேன்னா     என்ன பிரச்சினை "எனக் கேட்டான் .டிகிரி வாங்க முடியாது என்றேன் என்னால் கண்டிப்பாகத் தமிழ் படிக்க முடியாது  .விதி விலக்கு வாங்க முடியுமா என்று கேட்டான் ஏதோ தோஷத்துக்குப்  பரிகாரம் உண்டா என்பது போல !விதி விலக்கு உண்டு  சில மாற்றுத் திறனாளிகள்  குறிப்பாகப் பார்வையற்றோர் விலக்கு பெறமுடியும் என்பதைத் தெரிவித்தேன் .சரியான மூளை வளர்ச்சி இல்லாமல் படிக்க வரும் மாணவர்களுக்கும்  மொழிப் பாடத்திலிருந்து பல்கலைக் கழகத்தால் விதி விலக்கு வழங்கப் படும் என விளக்கினேன் .பலத்த யோசனையுடன் சென்றான் .


மீண்டும் சில நாட்கள் அவனை வகுப்பில் காணவில்லை .விசாரித்த பொழுது "அவன்  எப்பொழுதும் இப்படித்தான் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 மதிப் பெண்களுக்கும் குறைவா வாங்கியிருந்தான் .நல்லா படிக்கிற யாருக்காவது அந்த சீட் ஐக் கொடுத்திருந்தால் பிரயோஜனமாயிருந்திருக்கும்  என்று மாணவர்கள் அலுத்துக் கொண்டார்கள் 1150 மதிப்பெண் பெற்ற படைப் பூக்கமும் ஆர்வமும் கொண்ட  பல ஏழை மாணவர்களுக்கே அக் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்   துறையில் இடம் கிடைக்காத போது இப்படிப் பட்ட மாணவனுக்கு எப்படிக்  கிடைத்தது ?
நான் திகைத்துப் போய் நின்றிருக்க ,அவன் விஜயகாந்தின்   மகன். .முதலில் அவனுக்கு சீட் தரமுடியாது என்றுதான் மறுக்கப் பட்டது .சட்ட மன்ற எதிர்க் கட்சித் தலைவர் மகனுக்கே இடம் தர முடியாதா?  என்று விஜயகாந்த் நேரில் வந்து சண்டை போட்டு வாங்கினாராம்  என்றார்கள் மாணவர்கள் .அரசல் புரசலாகக் கேள்விப் பட்டிருந்த விஷயம்தான் .ஆனால் அயர்ச்சியாக இருந்தது ,

நீண்ட இடைவெளிக்குப் பின் கிங் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் என்னை வகுப்பில் வந்து சந்தித்தான் .முகத்தில் விடுதலை உணர்வும் சந்தோஷமும்  ஆர்ப்பரித்தன .கையில் வைத்திருந்த பேப்பரைக்  கொடுத்தான் தான் மொழிப் பாடம் அதாவது அ ,ஆ என அடிப்படைத் தமிழ் கூடப் படிக்கத் தேவையில்லை என்று பல்கலைக் கழகத்திலிருந்து விலக்கு வாங்கி விட்டதாகக் கூறினான்  ."எப்படி விலக்கு வாங்கினாய் ?உடலில் ஊனம் என்றா ??அல்லது மூளை வளர்ச்சி குன்றிய மாணவன்? என்றா என நான் அவனிடம் கேட்கவில்லை  .கம்பீரமாகத் திரும்பிச் சென்று கொண்டிருந்த அவனைப் பார்ப்பதற்கே  அருவருப்பாக உணர்ந்தேன் .


அதே அருவருப்பான உணர்வினை கிங் விஜயகாந்த் தமிழக முதல்வருக்கான வேட்பாளர்  என இடது சாரி காம்ரேட்டுகள்  சொன்ன கணத்திலிருந்து உணர்கிறேன் .கிங் விஜகாந்துக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று தானே சொல்லித் திரிகிறார் .அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தமிழ் மொழியே பிடிக்காது  !அவர்களைப்  பொறுத்த வரை தமிழ் தீண்டத் தகாத மொழி.  எம் மொழி பல்லாயிரம்  ஆண்டுகள் பழமையும் வளமையும் கொண்ட மொழி !அமுதத் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எங்கள் தமிழ் இனம்  தொன்மையான நாகரிகமும் பண்பாடும் கொண்ட மாண்புயர் இனம் !
எங்கள் மொழியினை வெறுக்கும் ஒரு மனிதன் ,திரைப் பட நடிகன் {அதுவும் லாஜிக் எதுவும் இல்லாத மசாலாத்திரைப்படம்}  என்பதைத் தவிர எந்த அடையாளமும் இல்லாத ஒருவர் எம் மண்ணையும் மக்களையும்
ஆளத்  துடிப்பது எங்கனம்?எம் தமிழ் மொழியை வெறுப்பவர் எம் மண்ணில் வாழ்வதற்கே தகுதியற்றவர்  .இதனை இடது சாரி அறிவு ஜீவிகள்  உனராமலிருக்கலாம் .ஆனால் எம் மக்கள் ஏமாளிகள் இல்லை .அதனைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் 

ஞாயிறு, 13 மார்ச், 2016

பேராசிரியர் அருணன் அபத்தங்களின் அவதாரம் பாகம் 1

பேராசிரியர் அருணன் அபத்தங்களின் அவதாரம் பாகம் 1

தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது .வாக்காளப் பெருமக்களைக் குழப்பி முட்டாளாக்க முனையும் வேலையில் சி.பி.எம் கட்சியினைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் போன்றவர்களின் தொலைக்காட்சி விவாதக் கோமாளித்தனங்களையும் ,எதிராளியைப் பேச விடாது கத்திக் குதறும் பண்பாடற்ற செயல்களையும் கண்டு சின்ன வயது பூச்சாண்டி பிம்பங்கள் வந்து பயமுறுத்துகின்றன .இதையெல்லாம் கூடத் தாங்கிக் கொள்ளலாம் போலத் தெரிகிறது .மெத்தப் படித்த பேராசிரியர் அருணன் அவிழ்த்து விடும் பொய்களைக் கேட்டு ,சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் என்று மனம் குமுறுகிறது .

சில நாட்களுக்கு முன்பு 7 நியூஸ் தொலைக் காட்சி விவாதத்தில் 'நாம் தமிழர் கட்சி ' யைச் சேர்ந்த திரு .அறிவுச் செல்வன் என்பவரைப் பேச விடாமல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த பேராசிரியர் அருணன் "நீங்கள் பிராமணியக் கடவுளைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள் ,முருகப் பெருமானுக்காகப் போராடுகிறீர்கள் ,நீங்கள் இந்து முன்னணியின் மறு பதிப்பு என்று பித்துப் பிடித்தவர் போலக் கத்திக் கொண்டிருந்தார் .தமிழர்களின் மரபு ,கலாச்சாரம் ,பண்பாடு ,நெடிய வரலாறு இவை பற்றியும் அதில் குறிஞ்சி மலைக் கடவுளாகிய முருகப் பெருமானின் இடம் பற்றியும் அறிவுத் தெளிவோ புரிதலோ இல்லாமல் பேசிக் கொண்டிருத்த பேராசிரியர் அருணன் இனி விவாதங்களுக்கு  வருவதற்கு முன்னால் இது குறித்துப் படித்து தெரிந்து கொண்டு வருவது நல்லது .

தமிழர்களின் மொழி,அதன் இலக்கியச் சிறப்பு ,வழிபாட்டு முறைகள் ,வாழ்வியல்  நெறிகள் சூழலியல் இயற்கையோடு இயைந்த அவர் தம் வாழ்வு என எல்லாப் பரிமாணங்களிலும் அவர்களின் பெருமைக்குரிய பண்பாட்டு அடையாளமாக ஒளிர்பவர் வேலன் என்ற முருகன் .'நீங்கள் மலைவாழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள் ?'என்று நாம் தமிழர் கட்சியினைப் பார்த்துக் கேள்வி எழுப்பும் அருணன் மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் என்று சங்க இலக்கியத்தில் போற்றப் படும் முருகன் தமிழர்களின் அடையாளம் என்பதை வசதியாக மறந்து விட்டுப் பேசுகிறார் .

"தெலுங்கரான பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்கள் இதோ "என்று சில நூல்களின் பெயர்கள் இணையத்தில் பட்டியலிடப் பட்டிருக்கின்றன .இதன் மூலம்  என்ன செய்தி சொல்ல முன்வருகிறார்கள் ? தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும்ஆதராகவோ ஏன் எதிராகவோ கூட தமிழிலேயே ஒரு வெள்ளைக்காரன் கூட கட்டுரை எழுத முடியும் .அதனாலேயே அவர் தமிழராகி விடமுடியுமா ?  இத்தாலி நாட்டு வீரமாமுனிவர் செய்த தமிழ்த் தொண்டை விடவா ஒருவர் அதிகம் செய்து விட முடியும்  ?அவர் இருந்த போதும் இறந்த பிறகும் அழைக்கப் படுவது இத்தாலியர் என்றுதானே ?

அப்படி என்னதான் தெலுங்கர் பேராசிரியர் அருணன் தமிழில் எழுதி விட்டார்
என்று பார்த்தால் 'தமிழரின் தத்துவ மரபு ' என்ற நூல் அதுவும் இரண்டு பாகங்கள் !  ஒவ்வொரு சமூகத்திலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் அந்தந்த சூழலுக்கேற்ப எழுதப் படும்   இலக்கியங்களில் மாக்ஸியத்தின் பொருள் முதல்வாதத்தை முன் வைத்து அக் குறிப்பிட்ட மக்களின் தத்தவ விசாரத்தையும்  ,மரபையும்  கண்டறிய முற்படுவது பார்வையற்றவர் யானையைத் தடவி அதனை விளக்க முனைவதைக் காட்டிலும் அபத்தமானது  . அதனால் தான்   மேட்டுக் குடியினரை மட்டுமே சென்றடைந்த ஓஷோ வின் தத்துவம் தமிழரின் வாழ்வில்  ஏற்படுத்திய தாக்கம் பற்றியெல்லாம் அருணன் எழுதியுள்ளார் .

தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்று தத்துவப் பேராசிரியராக விளங்கும் கத்தோலிக்கக்  குருவான பேராசிரியர் நிஷாந்த் இருதய தாசன் Nishant Irudayadason' ECOLOGICAL CONSCIOUSNESS IN THE MURUKAN CULT'என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஆங்கிலக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கும் ஆழமான கருத்துக்கள் இங்கு நோக்கத்தக்கது .கீழை மேலை என எல்லா  தேசங்களிலும் எந்த ஒரு மதம் அல்லது கடவுள் கொள்கைக்கு மையமாகவும் மூலமாகவும் நமது  பூமியே இருக்கிறது என்றும் மதங்களின் சடங்குகள் ,வழிபாடுகள் அனைத்தும்  பிரபஞ்சத்தைப் பேணுவதற்கான நெறிகளாகவே வகுக்கப் பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார் .அந்த நோக்கில் தமிழ்க் கடவுளாகிய முருக வழிபாடும் காலம் தோறும் அவரைப் பற்றி பரிணாமம் பெற்ற புராணங்களும்  இயற்கையோடு இயைந்த இறைச் சிந்தனைக்கு எப்படி விளக்கமாக  இருக்கின்றன என்பதனைச் சான்றாதாரங்களுடன் தெளிவு படுத்துகிறார் .முருகனது பிறப்பிலேயே பஞ்ச பூதங்களின் பங்கு இருப்பதனை தமது ஆய்வுக் கட்டுரையில் தகுந்த விளக்கங்களுடன் நிறுவியுள்ளார் .குறிஞ்சி நிலத்தின் தலைவனாகிய முருகன் ,தமிழ் மக்களின் தெய்வம் மட்டுமல்ல .மலை சார்ந்தும் காடு ,கடல் ,வயல்கள் சார்ந்தும் குறிஞ்சி ,முல்லை மருதம் நெய்தல் என நிலங்களில் தன்னை இணைத்து ,இயைந்து வாழ்ந்த தமிழரின் பழம் சிறப்பின் அடையாளம் !பண்பாட்டின் பெருமை மிகு குறியீடு  !

பின்னாளில் வைதீக நெறியின் கலப்பால் ஸ்கந்தனாக மாறிப் போன ஆதித் தமிழரின்  வேலன் பற்றிய செய்திகள் நிஷாந்த் இருதயதாசன் அவர்கள் கட்டுரையில் இடம் பெறவில்லையே என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அதைப் பற்றிய ஆய்வில் தாம்   ஆழமாக  ஈடுபட்டிருப்பதாகவும்  விரைவில் அதையும் ஒரு நூலாகக் கொண்டு வரவிருப்பதாகவும் தெரிவித்தார் ..பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பண்பாட்டுக் கலப்பு  தவிர்க்க முடியாது என்று தெரிவித்த அவர் வைதீக நெறியில் கலந்து வேறு ஒரு பரிமாணம் அடைந்திருக்கும் ஸ்கந்தனான முருக வழிபாடு ஏற்புடையது என்றாலும் ஆதி முருகனை மீட்டெடுப்பதும் நமது கடமை எனத் தெரிவித்தார் .அவர் அடுத்துக் கூறிய செய்தி மிக முக்கியமானது .அவ்வாறு மீட்டு எடுக்கும் முயற்சியில்தான் நாம் தமிழர் கட்சி ஈடு பட்டிருப்பதாகவும் அது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார் .பேராசிரியர் நிஷாந்த் இருதயதாசன் {Nishant Irudayadason} பெரும்பாலும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும்தான் கட்டுரைகள் எழுதுகிறார் என்றாலும் தம்மை ஆங்கிலேயன் என்றோ பிரெஞ்சுக்காரன் என்றோ சொல்லிக் கொள்வதில்லை  என்பது குறிப்பிடத்தக்கது .

இனி மேல் முருகன் பிராமணியக் கடவுள் என்று எகத்தாளமாக பேராசிரியர் அருணன் பேச முற்படுவதற்கு முன்னால் சங்க இலக்கியத்தில் முருகன் குறித்து  இடம் பெறும் வேலன் வெறியாட்டு போன்ற செய்திகளையெல்லாம் படித்து விட்டு  வருவது நல்லது .நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படை என்ற நூலில் தமிழ்க் கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளும் அவனது பெருமைகளும் விவரித்துக் கூறப் படுகின்றன .ஆனால் பிற்காலத்தில் வடமொழியில் உள்ள சிவசங்கரசங்கிதையின் ஒரு பகுதியான ஸ்கந்தனின் வரலாற்றைக் கூறும் கந்தபுராணம்  வடமொழி வைதீக நெறி கலந்து எழுதப் பட்டுள்ளது .இதனால் முருகன் தமிழ்க் கடவுள் இல்லை என்றாகி விடுவாரா ?

இடதுசாரிக் கொள்கைப் பிடிப்பும் அதே நேரத்தில் நல்ல இலக்கியத் தேர்ச்சியும் புலமையும் ஆழமான அறிவோடு பண்பட்ட உள்ளத்துடன் பழகுகின்ற  சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர்  இன்குலாப் பேராசிரியை சரசுவதி ராஜேந்திரன் போன்றவர்களுக்கு, தம்மையும் இடதுசாரி அறிவு ஜீவியாகக் காட்டிக் கொள்ளும் பேராசிரியர் அருணன் இழிவை உண்டு பண்ணுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும் .

பேராசிரியர் அருணனின் அடுத்த அபத்தமாக அவரது அர்த்தமற்ற பிராமணிய சாடல்  பற்றி அடுத்து பதிவு செய்கிறேன் இப்பவே கண்ணைக் கட்டுதே !

புதன், 24 பிப்ரவரி, 2016

ஜெயஷாந்தியின் பரணி கட்டுரையாளரின் கதை சாம்சன் துரை சா. உதவிப் பேராசிரியர், ஊடகக் கலைகள் துறை

ஜெயஷாந்தியின் பரணி
கட்டுரையாளரின் கதை
சாம்சன் துரை சா.
உதவிப் பேராசிரியர், ஊடகக் கலைகள் துறை
லொயோலா கல்லூரி, சென்னை-34
Loyola_Sam2000@Yahoo.Com
இலக்கியங்களிலிருந்து கதைக்கருக்கள் எடுக்கப்பட்டு திரைப்படத்திற்கேற்ற காட்சியமைப்பு கதைகளாக உருவாக்கப்பட்ட மரபு கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உலகளாவிய நிலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற ஜான் ஸ்டீஃபன் பெக் போன்ற இலக்கிய உலகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள், திரைக்கதைகளை எழுதியிருக்கிறார்கள்.
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் அதற்குப் பின் வந்த நீதி நூல்கள், இடைக்கால இலக்கியங்கள், தற்கால இலக்கியங்களில் நாவல்கள், சிறுகதைகள் என்று தமிழில் காலம் தோறும் தோன்றிய இலக்கிய வகைகளிலிருந்து ஏராளமான கதைக் கருக்களை தமிழ்த் திரைப்படத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும். அந்த வரிசையில், 2001ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘பரணி’ என்ற நாவல் திரைப்படமாக்கப்படுவதற்குரிய கதையம்சத்தைக் கொண்டுள்ளது என்பதை விளக்குவதே இக்கட்டுரை.
“வார்த்தைகளின் வலிமை கொண்டு வாசகர்களை பார்க்கவும் கேட்கவும், அதையும் மீறி காட்சிப்படுத்தவும் செய்வது எழுத்தின் கடமை” என்கிறார் எழுத்தாளர் ஜோசஃப் கான்ராட். ஒரு நாவல் திரைப்படமாகும்போது வாசகன் படிக்கும் அனுபவத்திலிருந்து அவனைக் காட்சி உலகிற்குக் கொண்டு செல்கிறது. வரி வடிவில் இருக்கும் கதையைக் காட்சியமைப்பிற்குள் கொண்டு வருவது இயக்குநரின் திறமை மட்டுமல்ல; அவர் முன் வைக்கப்படுகின்ற பெரும் சவாலும் ஆகும். ஆனால், சில நாவல்கள் இயல்பாகவே காட்சியமைப்பினை எளிதாகப் பெற்றுவிடும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன. பரணி நாவலிலும் அந்த இலகுத் தன்மையைக் காண முடிகிறது.
கிராமப் பின்னணியில் ஆரம்பிக்கப்படுகின்ற கதையில், குடும்ப உறவுகளும் உணர்வுச் சிக்கல்களும் நடப்பியல் பாங்கில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
‘வக்கத்தவன்தான் வாத்தியார் வேலைக்குப் போவான் வசதியாயிருக்கிற நம்ம குடும்பத்திலயிருந்து நீ ஏன் வாத்தியார் வேலைக்குப் போகணும்’ என்று தன்னுடைய தாய் எவ்வளவோ மறுத்தும் ஆசிரியர் பணிக்கே செல்ல வேண்டும் என லட்சிய நோக்கத்துடன் அப்பணியைத் தேர்ந்தெடுக்கிறான் சிவனேசன்.
கணவனை இழந்து கைம்பெண்ணாக வயல்வெளியில் வேலை செய்து உருக்குலைந்து போகும் பேச்சி, தன் மகன் கருப்பண்ணனை நன்றாகப் படிக்க வைக்கிறாள். அவனோ பட்டணத்துப் படிப்பை முடித்ததும் மேல்தட்டு வர்க்கத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன் தாயையும் தங்கை செண்பகத்தையும் கிராமத்தையும் ஒரேயடியாகப் புறக்கணித்து விடுகிறான். இதனால் படிப்பின் மீதே வெறுப்பு கொள்ளும் பேச்சி, தன் மகள் செண்பகத்தின் படிப்பை நிறுத்திவிட்டு வயல் வேலைக்கு அழைத்துச் செல்கிறாள். செண்பகம் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் சிவனேசனால் விரும்பித் திருமணம் செய்துகொள்ளப்படுகிறார். அவர்களுக்குப் பிறக்கின்ற மூத்த மகளான பரணியின் அடையாளச் சிக்கல்களைப் பிரதானப்படுத்தி எடுத்துச் செல்கிறது நாவல்.  கலப்புத் திருமணம் பற்றிய பல்வேறு சர்சைகளும் சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், இந்த நாவல் திரைப்படமாகும்பொழுது விவாதிக்கப்படும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடும்.
யதார்த்தமான கிராமங்களும், அழகான குடும்ப உறவுகளும், நெகிழ வைக்கும் சின்னச் சின்ன சுவாரஸ்யமான நிகழ்வுகளுமாகச் செல்லும் கதை ஓட்டத்தில், பெண்களின் நிலையும் விவாதிக்கப்படுகிறது. பள்ளிப் படிப்பு இல்லையென்றாலும் சிவனேசனால் புத்தகங்கள் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் செண்பகம், அறிவுபூர்வமாகச் சிந்திப்பவளாகவும் பேசுபவளாகவும் காட்டப்பட்டிருக்கிறாள். மகள் பரணியும் தந்தையைப் போலவே சிந்திப்பவளாகவும், நிறைய கேள்விகள் கேட்பவளாகவும் உருவாக்கப்பட்டிருப்பதுடன், தனித்தன்மை கொண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.
கல்லூரியில் படிக்கும் பரணி, அவள் தாய்மாமன் கருப்பண்ணன் மகனாலும், அவனுடைய நண்பனாலும் காதலிக்கப்படுவதும், கடைசியில் அவள் கல்யாண விஷயத்தில் எதிர்பாராத முடிவை எடுப்பதும் கதையின் உச்சம் எனச் சொல்லலாம். 
பரணியுடன் விடுதியில் தங்கிப் படிக்கும் இலங்கையைச் சேர்ந்த காந்தா, நாகலாந்தைச் சேர்ந்த ஷெரில் மற்றும் கிராமத்துப் பெண்ணான சொர்ணா ஆகியோரது குடும்பமும் கதைகளும் தனித் தனியே திரைப்படமாக்கக் கூடிய அளவுக்குச் செறிவான காட்சியமைப்புடன் உணர்ச்சி பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு நல்ல திரைப்படமென்பது கலை படைப்பாகவும், அதே நேரத்தில் சமூகத்திற்குத் தேவையான கருத்துக்களோடு விறுவிறுப்பாகவும் எடுக்கப்பட வேண்டும். அதற்கு வலுவான கதையமைப்பும், கதாபாத்திரங்களும் அவசியம்.
கல்வி வியாபர மயமாகிவிட்டது என்று கவலைப்பட வைக்கும் இக்காலச் சூழலில் ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சிவனேசன் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. ஊரில் ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும் என்று, அதற்காக இடையறாது முனைப்புடன் பாடு படுவதும், கிராமத்துக்கு நூலகம் கொண்டு வருவதற்காக உழைப்பதும், குடும்பத்தின் நல்ல தலைவனாகத் திகழ்வதோடு, சமூக அக்கறை கொண்ட ஆசிரியருமாகப் படைக்கப்பட்டுள்ளார் சிவனேசன்.
வன்முறைகளும், நோக்கமற்ற காதலும் கொண்ட திரைப்படங்கள் பல இன்று நம் தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை அமைப்பான குடும்பங்களின் அற்புதமான உறவுகளைப் பற்றிப் பெரும்பாலும் பேசுவதில்லை. பரணி நாவலில், பரணியைத் தவிர, அவளது தம்பியர் கணேசன் மற்றும் முருகன் இவர்களுடைய பாசம், சின்னச் சின்ன சண்டைகள், பிறகு விட்டுக் கொடுத்தல் என்று குடும்பங்களில் நிகழும் சிறு, சிறு சம்பவங்களால் பின்னப்பட்டுள்ளக் கதை, உணர்வு பூர்வமானதாக உள்ளது.
குண்டாக இருக்கும் கணேசன் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதும், பாம்பு பிடிப்பதும், புத்தகப் பையில் உண்டிகோலை எடுத்துச் செல்வதும், தம்பி வைத்திருக்கும் மயிலிறகை எடுத்து வைத்துக்கொண்டு ‘குட்டிப் போடுதான்னு பார்க்கிறேன்’ என்று அவனைச் சீண்டுவதும், மேலும், கண் திறக்காத அணில் குட்டிகளை வீட்டுக்குக் கொண்டு வந்து இங்க் ஃபில்லரால் பாலூட்டி ரகசியமாக வளர்ப்பதுமாகக் கதையோட்டம் சுவாரஸ்யமான நிகழ்வுகளால் விறுவிறுப்பாகக் கொண்டு செல்லப்படுவதோடு குடும்ப அமைப்பின் அழகும் தேவையும் உறுதி செய்யப்படுகிறது. இந்தக் காலத்திற்கும் தலைமுறைக்கும் நிச்சயமாக இது தேவைப்படுகின்ற படம் என்பதற்கு இதுவே பெரும் சான்றாகும்.
குழந்தைகளின் அற்புதமான உளவியல் உலகமும், இயற்கையிலேயே அவர்களுக்கு இருக்கின்ற முன்னுணர்வு ஆற்றலும் கணேசன் பாத்திரம் வழியாக புலப்படுத்தப்படுவதோடு கதையை நகர்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திரைப்படத்திற்கே உரிய திருப்புமுனைகள் பல இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன. தன் குடும்பத்தாரால் மட்டுமல்ல, ஊர் மக்கள் அனைவராலும் நேசிக்கப்படும் சிவனேசன், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுவிட்டதாக வரும் செய்தியும், ஊர் மக்கள் அதிர்ச்சியும் அழுகையுமாக இருக்க, செண்பகம், பரணி, கணேசன், முருகன் கையற்ற நிலையில் இருக்க, அவர் பக்கத்து ஊர் பிரச்சினையை சமாளித்துவிட்டு கம்பீரமாகத் திரும்பி வருவதும் பரபரப்பானதும் பரவசமானதுமான காட்சியமைப்பாக இருக்க முடியும். அதே போல, தாயையும், தந்தையையும், ஊரையும் துறந்து போன கருப்பண்ணன் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, செண்பகமும் பரணியும் அவரைச் சந்திப்பதும், கதையின் அடுத்தத் திருப்பு முனையாகவும், பரணியின் திருமணம் பற்றிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதாகவும் கதைப் பின்னல் சுவாரஸ்யமாகச் செல்கிறது. திரைப்படத்திற்கேற்ற கதைக் களங்களும் கூட சூரியகாந்தி வயல்களும், பச்சை பசேல் என்ற கொடிக் கால்களுமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.
உழைக்கும் கிராமத்துப் பெண்களின் கதை முன்னிறுத்தப்பட்டுள்ளது. பரணி நாவலின் பெரிய சிறப்பு. அதுவே இக்கதை திரைப்படமாக்கப்பட்டால் பெரும் பலமாகவும் அமையும்.
பதிப்பாசிரியர் பதிவு:
‘நூற்றுக்கு நூறு’ படத்தில் காட்டப்படும் அப்பழுக்கற்ற கல்லூரி பேராசிரியரை நினைவுபடுத்தும் கிராமத்து ஆசிரியர் சிவனேசன் கதாபாத்திரமும், குடும்ப உறவுகளின் அழகை பெண்ணிய சிந்தனைகளோடு கலந்து கொண்டு செல்லும் பாத்திர படைப்புகளும் வலுவான ஒரு திரைக்கதைக்கு பலமாக அமையும்.

*****

திங்கள், 8 பிப்ரவரி, 2016

'இறுதிச்சுற்று' - திரைப்பட விமர்சனம்

- கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்ற அசட்டு வாதத்தை முன்வைத்து - 

முகநூல் பக்கத்தில் சிலர் இறுதிச்சுற்று கிறிஸ்தவத்திற்கு எதிரான படம், நல்ல பெண் இயக்குநர் தமிழ் திரையுலகிற்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது இதுபோன்ற பெண் இயக்குநர்களின் வருகைக்காகத்தானா போன்ற புலம்பல்களைப் பார்க்க நேரிட்டது. இதற்காகவே இறுதிச்சுற்றுப் படத்தை உடனடியாகப் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். போலியான மதச் சார்பின்மைவாதிகளின் பிதற்றலே முகநூல் பக்கத்தில் நான் பார்த்தது என்பதைப் படத்தைப் பார்த்ததும் புரிந்துகொள்ள முடிந்தது.

வலுவான கதையும், திரைக்கதை அமைப்பும் காட்சிக்குத் தேவையான பொருள் செறிந்த வசனங்களும் மாதவன் மற்றும் உண்மையில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங்கின்  தேர்ந்த நடிப்பும், ஒவ்வொரு காட்சியிலும் மின்னிய இயக்குநரின் சிந்தனைத் திறனும், வேகமான காட்சி நகர்வும், வாழ்க்கையைப் போலவே எதிர்பாராத திருப்பங்களுமாக அழுத்தமான தனி முத்திரை பதித்திருக்கும் திரைப்படம் இறுதிச்சுற்று.

பொதுவாக யாரும் கையாண்டிராத பாக்சிங் துறையில் பெண்கள் பற்றிய கதைக்கருவை எடுத்துக்கொண்டு பல்வேறு துறைகளைப் போலவே இந்த விளையாட்டுத் துறையிலும் பெண்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள், வக்கிர மனிதர்களின் பாலியல் வன்கொடுமைகளை வன்மையாகவும், அதே நேரத்தில் கொஞ்சங்கூட விரசம் கலக்காமலும் சொல்லும் விதத்தில் கதையை நுட்பமாகவும், கவனமாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

இப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய இருக்கின்றது. ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு கிறிஸ்தவத்திற்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான படம் போல் முகநூல் பக்கங்களில் ஒருசிலரால் ஏன் உருவாக்கப்பட்டது என யோசித்தால், ஒரே ஒரு பதிலை அவர்கள் தருகிறார்கள்.
சாதாரண ஒரு மீனவக் குப்பத்தில் பிறந்து வளரும் இரு பெண்களின் தந்தையான சாமிக்கண்ணு, பொறுப்பின்றித் திரிபவராகவும், பெரும் குடிகாரராகவும் வலம் வருகிறார். (தமிழ் நாட்டில் நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்).

குத்துச்சண்டையில் தேர்ச்சி பெற்று எப்படியாவது போலீஸ் வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என பல வருடங்கள் விடாது முயற்சி செய்துகொண்டிருக்கும் மூத்த பெண், விளையாட்டுத்தனமும் துடுக்குத்தனமுமாக இருந்தாலும், மொத்த குடும்பத்திற்கும் சோறு போடுவதற்காகவும், தனது தமக்கை குத்துச்சண்டையில் தேர்ந்து போலீஸ் வேலைக்குப் போய்விட வேண்டும் என்று மீன் விற்கும் இரண்டாவது பெண். இவர்களுடைய தந்தையாக வருகின்ற சாமிக்கண்ணு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து, “இப்ப நான் சாமிக்கண்ணு இல்ல. சாமுவேல்.” எனத் தள்ளாடியபடியே சொல்வதும், அதே தள்ளாட்டத்துடன் “அல்லேலூயா” கோஷம் போடுவதும் வேடிக்கையாக இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் யோசிக்க வைக்கிறது. அந்தக் காட்சியில், ‘காசுக்காக மதம் மாறிட்டியா?’ என சாமுவேலாகிப் போன சாமிக்கண்ணுவின் மனைவி கத்துவதும், சில போலி மதச்சார்பின்மை பேசுபவர்களுக்கு உறுத்தியிருக்கிறதுபோலும்! ‘காசுக்காக மதம் மாறிட்டியா?’ என்ற கேள்வியில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கிறிஸ்தவம் வேர்விட்டு எழுந்து நிற்கும் இடங்களிலெல்லாம் மதம் மாற்றப்பட்டவர்கள் ஆன்மீக காரணத்திற்காக அல்ல, ஏதேனும் ஒரு உலகக் காரணத்துக்காகவே அந்த மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மணப்பாடு பகுதியில் ஒரே நேரத்தில் கத்தோலிக்க மதத்தைத் தழுவிய ஆயிரக்கணக்கான மீனவர்கள் இஸ்லாமிய படையெடுப்புக்கு அஞ்சியே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக வரலாறு சொல்கிறது. எந்தக் கத்தோலிக்க மதம் தங்கள் கடல் வளத்தையும், தொழிலையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் என நம்பி தங்களை இணைத்துக் கொண்டார்களோ, அதே கத்தோலிக்க மதம் அவர்களைச் சுரண்டி விளிம்புநிலைக்குத் தள்ளியது வேறு கதை. இதைப்பற்றி கதை வடிவிலும் ஆழமாகவும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், ஜோ டி குரூஸின் ஆழி சூழ் உலகு, கொற்கை, மற்றும் ராஜம் கிருஷ்ணனின் அலை வாய்க்கரையில் ஆகிய நாவல்களைப் படிக்கலாம்.

கோவாவில் போர்ச்சுகீசியர்களின் வருகை நிகழ்ந்திருக்காவிட்டால், அது ஒரு இஸ்லாமிய மாநிலமாக உருமாறிப் போயிருக்கும் என்பதுவும் நாம் அறிந்ததுதான். பல அரசியல் சூழல்களின் அடிப்படையிலும் தங்களுடைய எதிரிகளாகப் பாவித்துக்கொண்டவர்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்கள் முதல் பல்வேவறு இனக்குழுவினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள் அல்லது வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த விவாதத்தில் காசுக்காக மதம் மாறுவது எங்கிருந்து வருகிறது என யாரேனும் கேட்கக் கூடும். ஏழை எளிய மக்கள் கோதுமைக்காகவும், ரொட்டித் துண்டுகளுக்காகவும் மதம் மாறிய கதைகள் தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் பேசப்படுபவைதான். இன்றும் கூட ஆன்மீகம் என்ற பெயரில் வழிவழியாக தாங்கள் வணங்கிவரும் குல தெய்வங்களையெல்லாம் குப்பையில் வீசிவிட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவுவதற்கு சாதாரண ஜனங்கள் தூண்டில் வீசிப் பிடிக்கப்படுகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மைதானே.

இந்தக் குறிப்பிட்ட காட்சியமைப்பின் உரையாடலில் சாமுவேலாகிப்போன சாமிக்கண்ணு அல்லேலூயா எனக் கோஷம் போடுகிறார். காசுக்காக மனம் மாறிவிட்டதாக அவர் மனைவி ஆத்திரப்படுகிறார். இந்தக் காட்சியிலும் வசனத்திலும் ‘கிறிஸ்தவத்திற்கு எதிரானது’ எனக் குற்றம் கண்டுபிடித்தவர்கள், படத்தின் இறுதிக் காட்சியில் தன் மகள் குத்துச்சண்டையிடும் நேரலைக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் அதே சாமிக்கண்ணு, கையில் ஜெபமாலை மணியை உருட்டியபடி, “என் குழந்தையக் காப்பாத்து இயேசப்பா.” என நெஞ்சுருக வேண்டுகிறாரே. அதைப் பார்க்க மறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. திக்கற்றவர்களுக்கு எந்த தெய்வமும் துணை ஆகலாம். தெய்வம் மட்டுமே துணையாக முடியும். பணமோ, பதவியோ, அதிகாரமோ இல்லாத எளிய மக்கள் இறுகப் பற்றிக் கொள்வது தெய்வம் என்ற நம்பிக்கையைத்தான். அது இயேசுவோ, சிவ பெருமானோ, அல்லது முருகனோ. இந்தக் காட்சியில் சாமுவேல் என்ற சாமிக்கண்ணுவோடு சேர்ந்து நம்மையும் மனம்பதைக்க பிரார்த்தனை செய்ய வைக்கும் சுதா கொங்கராவின் நுண்ணிய உணர்வு இதில் அற்புதமாக வெளிப்படுகிறது. பொதுவாகவே கிறிஸ்தவம் பற்றிய சரியான புரிதல் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு இல்லை (மணிரத்தினம் உட்பட) என்பது என் எண்ணம். கிறிஸ்தவத்தின் சில மரபுகளைப் புரிந்துகொண்டு திரைப்படம் எடுத்த ஒரு காலமும் உண்டு. அன்னை வேளாங்கண்ணி என்ற திரைப்படத்தை உருவாக்கிய வேளையில் கத்தோலிக்க மதத்தின் நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளுக்கு முரண்பட்டு ஒரு காட்சி கூட அமைந்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்த அப்படக் குழுவினர், மறைந்த பிஷப் தாமஸ் ஃபெர்ணாண்டோ அவர்களிடம் ஆலோசனை கேட்டு சில காட்சிகளில் மாற்றங்களையும் செய்தார்களாம். ஆனால் காலப் போக்கில் தங்கள் புரிதலின்படியே எந்த ஆலோசனையும் இன்றி படம் எடுத்தபொழுது பல குளறுபடிகள் நேரிட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வெள்ளை ரோஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் மூன்று என்ற படத்தில், சிவாஜி கணேசன் கத்தோலிக்கப் பாதிரியாராக வருகிறார். அதில் அவரது மகளாகவே ரஞ்சனி காட்டப்படுகிறார். இறுதியில் அவர் தனது வளர்ப்பு மகள் என்று சொல்லும் இடத்தில், சொந்த மகள் இல்லையா? வளர்ப்பு மகளா என்று நாயகன் ஆச்சரியமாகக் கேட்பது போல காட்சியமைப்பு கோமாளித்தனமாக இடம்பெற்றிருந்தது. உலகெங்கிலும் கத்தோலிக்கப் பாதிரிகளுக்கு திருமணம் செய்துகொள்ள இன்றுவரை அனுமதி இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், இதைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், படம் முழுக்க அந்த ஊரில் இருக்கின்ற கத்தோலிக்கர்களே பாதிரியாரின் சொந்த மகள் ரஞ்சனி என்று இயல்பாக நினைத்துக் கொண்டிருப்பதாகவே படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அன்றைய நாளில் எந்தக் கேள்வியும் எழவில்லை. ஒருவேளை கத்தோலிக்க மக்களே, ‘அட என்ன பெருசா எடுத்துட்டான், இதுல என்ன இருக்கு?’ என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அது ஒரு மதத்தின் ஒரு அடிப்படையான அம்சத்திலிருந்து முற்றிலும் முரண்பட்டு நிற்கின்ற விஷயம்.

சமீபத்தில் வெளிவந்த 'கடல்' திரைப்படத்தில் கத்தோலிக்க சாமியாராகப் போக விரும்பும் ஒரு இளைஞன் கிறிஸ்தவக் கல்லூரியில் தான் செய்த தவறை மற்றொருவன் காட்டிக் கொடுத்ததால் அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட, அதற்குக் காரணமான கதாநாயகக் கத்தோலிக்கப் பாதிரியாரைப் பழிவாங்கும் கதை. இப்பொழுதெல்லாம் கத்தோலிக்க சாமியாருக்குப் படிப்பது என்பது அரிதான சிலரைத் தவிர, ஒரு புரொஃபஷனல் கோர்ஸ் படிப்பது போலத்தான் என்பதும் ஒருவேளை அதிலிருந்து வெளியேற்றப்பட்டால் யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பதும் இயக்குநர் மணிரத்தினத்திற்கு யாரும் சரியாகச் சொல்லவில்லைபோலும்! இறுதிச்சுற்று படத்திலும் இதுபோன்ற கிறிஸ்தவக் குழப்பம் வருகின்றது.

சாமுவேலாகிப்போகும் சாமிக்கண்ணு ‘அல்லேலூயா, அல்லேலூயா’ என்றே சொல்கிறார். பொதுவாக பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்தவர்களே அடிக்கடி அல்லேலூயா, அல்லேலூயா என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். இந்த பெந்தேகோஸ்தே சபையினருக்கும், புரொட்டெஸ்டாண்ட் என்கிற பிரிவினை சபையினருக்கும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கன்னிமாதா என்று கொண்டாடும் அன்னை மரியும், ஜெப மாலையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால் சாமுவேலோ, மகளைக் காப்பாற்றச் சொல்லி இயேசுவிடம் பிரார்த்திக்கும்பொழுது ஜெப மாலையைக் கையில் வைத்திருக்கிறார். இதையும் கூட பெரிய குறைபாடாக எடுத்துக்கொள்வதற்கு இல்லை.

உலகம் முழுக்க 6000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகளும், அததற்கு என்று வெவ்வேறு நடைமுறைகளும் இருக்க, கிறிஸ்தவர்களே குழம்பிவிடும் நிலையில், இதுபோன்ற வேறுபாடுகளை சுதா கொங்கரா எங்கிருந்து அறிந்துகொள்ள முடியும்? இது கிறிஸ்தவ மதத்தின் குறைபாடே தவிர, இயக்குநரின் குறைபாடில்லை.

இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தனியாகவே ஒரு கட்டுரையாக எழுதலாம். ஆனால், நான் இங்கு சொல்ல விரும்புவது வேறொன்று.

ஆண்கள் பல காலம் கோலோச்சிவரும் திரைப்படத் துறையில் ஒரு பெண் இயக்குநரின், பெண்களுக்கு உத்வேகம் தரும் விதத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் இருக்கின்ற பல நல்ல அம்சங்களையெல்லாம் விட்டுவிட்டு தேடித்தேடி குறை கண்டுபிடிப்பதுபோல் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான படம் என்று எப்படிச் சொல்ல முடிகிறது?

அடிமட்டத்திலிருந்து வரும் பெண்கள் தங்கள் உடலைக் குறிவைத்துத் தாக்கப்படும் சூழலில் இருந்தெல்லாம் கிளர்ந்தெழுந்து சவால்களைச் சந்திப்பதும், வெற்றி பெறுவதும் சாத்தியமான ஒன்று என்ற கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட படம் இது. குறிப்பாகப் பெண்கள் அவ்வளவாகப் பிரவேசித்திராத குத்துச்சண்டை போன்ற துறைகளில் கூட பொருளாதார வசதியற்ற நிலையிலிருக்கும் பெண்களும், முயன்றால் சாதிக்கலாம் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் சுதா கொங்கரா.

மங்கோலிய மன்னன் செங்கிஸ் கான் வரலாறு படிக்கின்ற மாணவர்களுக்கு ஒரு அதீத கனவு நாயகன். தன்னிடம் இருக்கும் பலவீனத்தையே பலமாக மாற்றி எதிரியை வீழ்த்தும் அவனது திறனும் உத்தியும் இந்தப் படத்தில் மிகப் பொருத்தமாக எடுத்தாளப்பட்டுள்ளது. வரலாறு என்ற பாடமே பள்ளி, கல்லூரிகளிலிருந்தும், மக்களிடமிருந்தும் மறைந்துகொண்டிருக்கும் சூழலில் மறக்கப்பட்ட ஒரு வரலாற்று நாயகனை எதிரிகளைத் தோற்கடிக்கும் அவனது யுக்தியைக் கொண்டாடுவதன் மூலம் கொஞ்சமேனும் வரலாற்று ஆர்வத்தை இந்தப் படம் தூண்டிவிட்டிருக்கும் என்றால் அது பெரும் சாதனையே.

பெண்களின் மனது, உணர்வு, ஆன்மா எதையும் பொருட்படுத்தாது உடலை உடைமையாக்கத் துடிக்கும் ஆண்களுக்கு மத்தியில் வாழ்க்கையில் தோற்றுப்போனவராய் ஆவேசம் கொண்டு அலைந்தாலும், ஒரு மீனவக் குப்பத்துப் பெண்ணைத் தன் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் நாயகியாக உயர்த்தும் கதாப்பாத்திரத்தில் மாதவன் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்! இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் நம்முடன் நேரடியாகப் பேசுகின்றன. நம்மை உலுக்கி எழுப்புகின்றன.

கேமராவும், இசையும் பலம் சேர்த்திருக்கின்றன. மொத்தத்தில் நடிகர்களின் கடுமையான உழைப்பில் ஒரு திறமையான இயக்குநரின் தெளிவான படம்.


வழக்கமான ஆண்-பெண் மோதல், காதல், கலாட்டா, நம்பமுடியாத சண்டைக் காட்சிகள், நாயக வழிபாடு போன்ற மசாலாக்கள் இடம்பெற்றிருக்கும் தமிழ்ப் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் பாராட்டப்பட வேண்டிய படத்தை, கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்று குறை கண்டுபிடிக்கும் நண்பர்கள் அதிகார மமதையில் சாதிய துவேஷம் கொண்டு பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் செய்து, அல்லது அதற்குத் துணையாக நின்று கோர முகம் காட்டும் சில கத்தோலிக்க கார்ப்பரேட் நிறுவனங்களைக் கேள்விக்குட்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவது சமுதாயத்திற்கு நலம் பயக்கும்.


திங்கள், 18 ஜனவரி, 2016

ஒரு கிராமத்து நதி

ஒரு கிராமத்து நதி 

அடிப்படையில் வரலாற்று மாணவி நான் .இங்கிலாந்து வரலாறும் பிரெஞ்சு தேசத்து வரலாறும் பிடித்தமானவை .அதனாலேயே 2006 ஆம் ஆண்டு பாரீஸ் நகருக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்த போது வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம் .நம்ம பூலோக கற்பக விருட்சமான பனை மரத்தைப் பேணுவதற்காக மாணவருடன் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தின் சில கிராமங்களில் செயல் படுத்திய திட்டம் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததால் 40 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட போட்டியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தோம்.முதல் இரு நாட்கள் சுற்றிப் பார்க்க நேரம் கிடைத்தது .ஈபிள் கோபுரத்தின் கம்பீரம் இன்னும் கூட நெஞ்சில் நிமிர்ந்து நிற்கிறது .அங்கும் கூட நம்மூரைப் போலவே சிலர் குறிப்பாகப் பெண்கள் அச்சடிக்கப் பட்ட காகிதத்தைக் கையில் கொடுத்து வேறு நாட்டிலிருந்து வந்தோம்  திரும்பிச் செல்ல பணம் இல்லை உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். உலகம் பல விஷயங்களில் உருண்டைதான் போலும் !

நெப்போலியன் ஆரம்பித்து வைத்து அவன் எல்பா சிறையில் மாண்டு பல வருடங்களுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்ட' வெற்றி வளைவு' போரில் மடிந்து போன  ' பல்லாயிரக்கணக்கான வீரர்களின் வீரத்திற்கு மட்டும் அல்லாமல் நெப்போலியனின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் கூட சான்றாக நிற்கிறது . அந்த நகரத்தில் என்னை அதிகம் கவர்ந்தது பாரீஸ்  நகரைச் சுற்றிப் பாம்பு போல வளைந்தோடும் ஸீன்  நதிதான் .புனிதம் என்ற பொருள் கொண்ட அந்த நதி  மாசற்ற குழந்தையின் முகம் போல உயிர் தொடும் தூய்மையுடன் ததும்பிச் செல்கிறது .அதில் படகுச் சவாரி செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை .நதியின்  அழகைப் பார்த்தபடி நின்றிருந்த அந்த  அற்புதக் கணத்தில் உடன் நின்றிருந்த மாணவி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்  அவர்களின் 'ஒரு கிராமத்து நதி' கவிதைத் தொகுப்பு பற்றிப் பேசத் தொடங்கினாள். 

என்னிடம் படித்த மாணவ மாணவியரில் கவிதை எழுதும் திறன் கொண்டவர்களின் ஆற்றலை வெளிக் கொணர, அவர்கள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இறங்கிய போது தமிழின் முக்கியமான கவி ஆளுமைகளின் கவிதைத் தொகுப்புகளைப் படிக்கச்  செய்தேன் .வகுப்புகளில் திறனாய்வு செய்யவும் வைத்தேன் .அப்போது அதிகமாக வாசிக்கப் பட்டதும் விவாதிக்கப் பட்டதும் 'ஒரு கிராமத்து நதி' .வானம்பாடி இயக்கத்தின் மிக முக்கிய முன்னோடியான சிற்பி அவர்களின் பொது உடைமைச் சித்தாந்தக் கவிதைகளிலிருந்து இத் தொகுப்பு வித்தியாசப் பட்டிருப்பதாக நானும் உணர்ந்திருக்கிறேன் .படிமங்கள் பல பயின்று வந்திருக்கும்  'ஒரு கிராமத்து நதி ' வாசிக்க வாசிக்க வேறு வேறு தளங்களுக்குள் நம்மை இட்டுச் செல்பவை .அதனால்தான் 'கனல் மணக்கும் பூக்கள்' என்ற தலைப்பில் மாணவர்களின் கவிதைத் தொகுப்பு வெளி வந்த பிறகும் 'ஒரு கிராமத்து நதி 'யின் கவியொலி எங்கள் மனதில் நீங்காதிருந்தது .

ஸீன் நதியின் தூய்மையில்,மனிதர்களின் பேராசையாலும் அலட்சியத்தாலும் மொட்டையக்கப் பட்டு மூளியாகிப் போன  நம்  தமிழ் நாட்டுக் கிராமத்து நதிகளின் கையறு நிலையும் கலங்கலாகத் தெரிந்தது .வெகு நேரம் கழித்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்லும் போது வழி தவறி ரயில் நிலையத்தில் அலை மோதினோம்.பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் திருமூலரும் தெரிதாவும் பற்றி முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த என் சகோதரர் நிஷாந்த் இருதயதாசன் விடுமுறைக்காக அப்போது லண்டன் சென்றிருந்தார் .அடிப்படையில் பிரெஞ்ச்சுக்காரர்கள் மனித நேயம் மிகுந்தவர்கள் .ஆனால் அப்போது லண்டனில் liquid bomb மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடை பெற்றிருந்ததால் நட்பு பாராட்டுதலோ உதவியோ அவர்களிடமிருந்து எதிர் பார்க்க முடியாது என்று சொல்லியிருந்ததுடன்  அங்கிருந்த தமிழ் நாட்டு நண்பர்கள் சிலரையும் அறிமுகம் செய்திருந்தார் .ரோமிங் வசதி பெறாததால் அவர்களை எங்களிடமிருந்த கைப் பேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.வேற்று கிரக வாசிகள் போலத் திகைத்து நின்ற போதுதான் அந்த மாணவி 'ஒரு கிராமத்து நதி 'என்று கத்தினாள்.பயத்தில் மூளை குழம்பி விட்டதோ என்று நான் மிரண்டுதான் போனேன் .  அவள் சுட்டு விரல் நீண்ட திசையில் ஒரு மனிதர் முகத்தில் தமிழர் என்ற அடையாளம் .அவர் கையில் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின்  'ஒரு கிராமத்து நதி '!

அவருக்கு அருகில் நம்ம ஊர் செவ்வந்திப் பூ சூடியிருந்த அவர் மனைவி .
பக்கத்தில் சென்று பேசுவதறியாது நின்ற வேளையில் என் மாணவிதான் ஆரம்பித்தாள்  .சார் ...இந்தக் கிராமத்து நதி ..என்று .அவர் உற்சாகமாகி விட்டார் .அவர் காரைக்காலைச் சேர்ந்தவர் என்றும் ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு கிராமத்து நதியினை வாங்கி வந்ததாகவும் வாசிக்கும் தோறும் மண் வாசனையில் மகிழ்வதாகவும் சிலாகித்தார் .பேச்சின் ஊடாக எங்கள் நிலையறிந்தவர் உடனே அவர் கை பேசியில் தேவையான எண்களைத் தொடர்பு கொண்டு  பேசச் செய்தார் .லண்டனிலிருந்த என் சகோதரரரிடமும் என்னைப் பேச  வைத்து எனக்கு உற்சாகமூட்டினார் .மொத்தத்தில் திசை தெரியாது தவித்துக் கொண்டிருந்த எங்களைக் கரை சேர்த்தது அன்று சிற்பி அவர்களின் கிராமத்து நதிதான்.

பரந்து விரிந்த உலகத்தில் தேசம் கடந்தும் மனிதர்களை இலக்கியம் இணைக்க முடியும் என்று  நாங்கள் உணர்ந்த தருணம்அது. உலக அளவில் 1500 பல்கலைக்கழகங்களில் மூன்றாம் இடத்தை  வென்று இந்தியாவுக்குத் திரும்பியதும் நான் என் அம்மாவுடன் சென்றது முத்தாலங்குறிச்சி ஊருக்குத்தான். .தாமிரபரணிக் கரையோரம் அமைந்திருந்த அந்தச் சிற்றூரில்தான் என் குழந்தைப் பருவம் விசித்திரக்  கனவுகளில், கட்டற்ற விளையாட்டில்  கனிந்தது .ஒரு ஆசிரியர் தன்னிடம் பயிலும் ஒவ்வொரு மாணவரையும் சொந்தக் குழந்தையாகவே எண்ணி அறிவிலும் பண்பிலும் வளர்க்க வேண்டும் என்பதை ஆசிரியர்களாயிருந்த என்  அப்பாவும் அம்மாவும் அந்த ஊரில்தான் வாழ்ந்து காட்டினார்கள் .ஊரை வளைத்துச் சென்ற அந்த தாமிரபரணியில்தான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு மறு ஜென்மம் எடுத்தேன்.

நதிக்கரையில்தான் நாகரிகம் வளர்ந்ததாகப் படிக்கிறோம் .ஒவ்வொரு பொங்கலின்  போதும் மாட்டுப் பொங்கல் அன்று மாலையில் பனங்கிழங்கு,கரும்பு போன்றவற்றை எடுத்துக் கொண்டு  முத்தாலங்குறிச்சி ஆற்றங்கரையில்,ஊர் காவலாய் வீற்றிருக்கும் அம்மன் கோவில் அருகில்  விழுதுகளும் கிளைகளும் பரப்பி உயர்ந்து நிற்கும் ஆலமரத்தினடியில், பறவைகளின் சங்கீதம் கேட்டபடி, ஊர் மொத்தமும் பகிர்ந்து உண்டு சிரித்து மகிழ்ந்ததில் பங்கெடுத்த நினைவுகள் இன்றும் பசுமையாய்!ஆற்றில் நீர் வற்றும் காலங்களில் மணலில் ஊற்று தோண்டி சின்னச் செப்புக் குடத்தில் தேங்காய்ச் சிரட்டையால் நீர் மொண்டு  ஊற்றி உடுத்தியிருந்த துணி தண்ணீராலும் மண்ணாலும் நிறைந்திருக்க நட்பு வட்டத்துடன் கதை பேசிச் சென்றதும்  அதே ஆற்றங் கரையோரம் குலை குலையா  முந்திரிக்காய் விளையாடியதும் மீண்டும் மீண்டும் அந்தக் கணங்களில் இன்றும் வாழ முடிகிறது .இன்று வரை என்னோடு பயணிக்கின்ற  அந்தத் தவிர்க்க முடியாத நினைவுகளினால்தான் என்னுடைய நாவல்கள் பரணி, சங்கவை   இரண்டிலும் நான் முத்தாலங்குறிச்சி என்ற ஊர் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறேன் .

அகன்று ஓடிய அந்த அழகான துய்மையான குடிநீராகவும் விவசாயிகளின் பயிருக்குப்  பசுமை நீராகவும் பயன் தந்த அந்த நதி நான் பிரான்சிலிருந்து திரும்பி வந்ததும்  சிற்பியின் கவிதை கிளர்ந்து விட்ட நினைவுகளால் அங்கு சென்று பார்த்த போது முது மக்கள் தாழியில் குறுகிப் போன ஜீவனற்ற உடம்பு போலத்  தோன்றியது .லாரியில் யார் யாரோ மணல் அள்ளிக் கொண்டிருந்தார்கள் .வெற்றிலைக் கொடிக் காலும் நெற்கதிர் கழனியும் தொலைந்து போன கனவுகளாய் ,செங்கல் சூளைக்காக வெட்டப்பட்ட பனை மரங்களின் சுவடு கூட இல்லாமல் ,இயற்கை அந்த ஊரிலிருந்து ரொம்ப தூரம் காணாமல் போயிருந்தது .

நதிகளை இழந்தால் நாகரிகம் ,பண்பாடு ,மனிதம் என்று எல்லாவற்றையும் இழந்து விடுவோம் .பொங்கல் நாளிலும் சிற்பியின் 'ஒரு கிராமத்து நதி 'தான் என் நினைவில் ,முத்தாலங் குறிச்சி ஆற்றினைப் பற்றிய ஆற்றாமையுடன்!

வெள்ளி, 15 ஜனவரி, 2016

சபரிமலையும் பெண்களும்

ரிக் வேதமும் அர்னாப் கோஸ்வாமியும் 



10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பது பற்றிய சர்ச்சை, வழக்கு, விவகாரம் சமீபத்தில் Times Now தொலைக்காட்சியில் விவாதிக்கப்பட்டது. அதென்னமோ தெரியவில்லை. பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றாலே நடிகையரும், அரசியலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் மட்டுமே இதுபோன்ற விவாதங்களில் கலந்துகொள்ள தொலைக்காட்சிகள் இடம் தருகின்றன. விவாதத்தில் பங்கெடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு சபரிமலை தேவ ஸ்தானத்தின் சார்பாக பெண்கள் ஐயப்பன் சந்நிதானத்திற்குள் செல்லும் தடையை நியாயப்படுத்திப் பேசியவரிடம் உங்களைப் பெற்றது தாய்தானே, மனிதர்களைப் பெற்றெடுப்பதும் பெண்தானே, ஏன் அந்த சந்நிதானத்தில் இருக்கின்ற சாமியைப் பெற்றெடுப்பதும் பெண்தானே என்றெல்லாம் பழைய வழக்கினையே பேசிக்கொண்டிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், சுவாமி ஐயப்பன் மோகினியாக உருவெடுத்த திருமால் என்ற ஆண் கடவுளுக்கும், சிவன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்தவர் என்பதுதான் ஐதீகம்.


பொதுவாகவே, கடவுள் அவதாரங்களின் பிறப்பு இயற்கையானது இல்லை என்பது வேறு விஷயம். நம்மூர் மதுரை மீனாட்சியம்மனே கருவறையில்லாமல் பிறந்தவர் என்பதுதான் நம்பிக்கை. கிறிஸ்தவ கடவுளான இயேசுவின் பிறப்பு கூட இயற்கைக்கு அப்பாற்பட்டதாகவே விவிலியத்தில் சொல்லப்படுகிறது. எனவே, கடவுள் அவதாரங்களின் தாய்மார்கள் பற்றி தர்க்கம் அபத்தமானதுதான். இது ஒருபுறம் இருக்கட்டும்.

தேவ ஸ்தானத்தைச் சேர்ந்தவரும் இன்னும் ஒரு பண்டிட்டும், சுவாமி ஐயப்பன் பிரம்மச்சர்ய கடவுள் என்பதால் பெண்களுக்கு அங்கு அனுமதி இல்லை என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க, எதிர் வழக்காடிய பெண்களோ, மாதவிடாய் பிரச்சினைதானே அதற்கு முன் வைக்கிறீர்கள். அதனால் பெண்கள் தூய்மையற்றவர்களாய்ப் போகிறார்களா எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்து மதத்தில் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் எந்தக் கோவிலுக்குமே பெண்கள் செல்வதில்லை என்பது எழுதப்படாத சட்டமாக எவ்வளவோ தலைமுறைகள் இருந்து வருவது இவர்களுக்குத் தெரியாதா?

இந்து மதத்தில் மட்டுமல்ல. கிறிஸ்தவ மதத்திலும் கூட அந்தக் காரணத்தினாலேயே பெண்கள் குருக்களாக நியமிக்கப்படுவதில்லை என்பதுவும், அதனைப் பல பெண் எழுத்தாளர்கள் கடுமையாக விமரிசனம் செய்து இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதையும் காண முடிகிறது.

Gabriele Dietrich என்ற ஆங்கில கவிஞர், கத்தோலிக்க பாதிரிகளுக்கு இவ்வாறு அறைகூவல் விடுக்கிறார்:

I am a woman
and the blood
of my sacrifices
cries out to the sky
which you call heaven.
I am sick of you priests
who have never bled
and yet say:
This is my body
given up for you
and my blood
shed for you
drink it.
Whose blood
has been shed
for life
since eternity?
I am sick of you priests…

எனவே, பெண்ணின் மாதவிடாய் அவளைத் தீண்டத்தகாதவளாக கோவில்களிலும் தேவாலயங்களிலும் ஒதுக்கி வைக்கிறது, கிறிஸ்தவ மதத்திலும் கூட.

என்னுடைய கேள்வி இதுதான். ஒரு குறிப்பிட்டக் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதால் மட்டும் பெண்களுக்கு சமமான உரிமை கிடைத்துவிடுகிறதா? Times Now விவாதத்தின்பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக இருக்க, கோவிலுக்குள் மட்டும் பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.

ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் HumHindu.Com-ன் பண்டிட்ஜியைப் பார்த்து ரிக் வேதம் ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கிறதே. நீங்கள் ரிக் வேதத்தைவிட மேலானவரா என்று அர்ணாப் கோஸ்வாமி ரிக் வேதத்திலிருந்து சில பகுதிகளை உருவி உச்ச ஸ்தாயியில் முழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய வாதம்தான் என்ன? ரிக் வேதம்தான் இந்திய மக்களின், ஆண், பெண் வாழ்வியலைத் தீர்மானிக்கும் மேலான சக்தி என்கிறாரா. ரிக் வேதத்திற்குப் பிற்பட்ட சாம அதர்வண வேதங்கள், கைம்மை, குழந்தைத் திருமணம் - இவற்றையெல்லாம் ஆதரிக்கிறதே... அவையும் மேலானவை என அவர் சொல்வாரா?

சமீபத்தில் பேராசிரியர் அ. ராமசாமி அவர்கள் இந்தியாவை ஒற்றைப் பண்பாடு, ஒற்றைப் பெருமதம் நோக்கி வெகு சிலர் காய்கள் நகர்த்துவதாக தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள், பழங்குடியினர் அவர்தம் வழிபாடு நம்பிக்கைகள் - இவற்றைப் புறந்தள்ளி ஒற்றைப் புள்ளியை நோக்கி நகர்த்தும் அந்த ஆபத்தான முயற்சியின் வெளிப்பாடாகவே ரிக் வேதத்தைவிட நீங்கள் மேலானவரா என்ற அர்ணாப் கோஸ்வாமியின் கேள்வியை அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஜீவாதாரத்திற்கு வழியில்லாமல் உழைப்பு உறிஞ்சப்பட்டு பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் அடித்தட்டுப் பெண்களுக்கு இந்தப் பெருங் கோவில்களுக்குள் செல்வது பற்றிய எந்த அக்கறையும் இருக்கப்போவதுமில்லை, அது அவர்களுக்குத் தேவையுமில்லை. தொலைக்காட்சிகளின் விவாத மேடையில் சாதாரண உழைக்கும் பெண்கள் எப்பொழுது குரல் கொடுக்க அனுமதிக்கப்படுகிறார்களோ, அதுதான் உண்மையான பெண்ணியமாகவும், கருத்துச் சுதந்திரமாகவும் அமையும்.

2001-ஆம் ஆண்டில் நான் எழுதிய பரணி என்ற நாவலில் மாதவிடாய் சமயங்களில் கோவில்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படாது விசித்திரத் தீண்டாமைக்குப் பழக்கப்படுத்தப்படுகின்ற மேல்சாதிப் பெண்களைக் காட்டிலும், எப்பொழுதுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத தலித் பெண்களின் நிலை மேலானது என்ற வரிகளை இங்கு நினைவு கூறுகிறேன்.

திங்கள், 2 நவம்பர், 2015

சாரு நிவேதிதாவின் அகம்பாவ அறிவீனம்

எழுத்தாளர் சாரு நிவேதிதா 'நிலவு தேயாத தேசம்' என்ற தலைப்பில் அந்திமழை இதழில் தனது துருக்கிப் பயணம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். பள்ளிக் காலத்திலிருந்தே வரலாறு எனக்கு மிக மிக விருப்பமான பாடம்.  பாளையம்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்த போது  அமெரிக்க வரலாறு, இந்திய வரலாறு, இங்கிலாந்து வரலாறு, முக்கியமாக பிரஞ்சு தேசத்தின் வரலாறு போன்றவை ஆர்வத்தை ஏற்படுத்தியவை. மேலும் மேலும் படிக்கத் தூண்டியவை. ஆனால் சீனா, துருக்கி ஆகிய இரண்டு நாட்டு வரலாறுகளும் ஏனோ கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை; தேர்வுக்காகப் படித்ததுடன் சரி. எனவே இந்தப் பயணக் கட்டுரையினைப் படிக்கலாமே என வாசிக்கத் தொடங்கினேன். இதை நான் ஏன்  குறிப்பாகச் சொல்கிறேன் என்றால் சாரு  நிவேதிதாவின் எழுத்துக்களில் எனக்கு ஆர்வமில்லை. தமிழகத்தில் பாலியல் வறட்சி எனச் சொல்லிக் கொண்டு அந்த வறட்சியில்  அல்லல்படுபவர்களக் கடைத்தேற்ற வந்தவன் தான் என்பது போல எழுதப் படும் அவரது எழுத்து எனக்குப்  பெரிய ஒவ்வாமையே. ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றியது அல்ல. எனக்கு ஏன் அவரது எழுத்து பிடிக்கவில்லை என்று சொல்வதற்காக இப் பதிவினை நான் எழுதவில்லை. அது தேவையற்றது.

துருக்கிப் பயணம் பற்றிய தனது பதிவின் ஊடாக சங்க காலத்து ஔவையாரைப் பற்றிப்  போகிற போக்கில் முரணான, சரியாகச் சொல்வதென்றால் பொய்யான தகவலைச் சொல்லிச் சென்றிருக்கிறார். எழுத்தாளன் என்றாலே ஏழைதான் எனச் சொல்லும் அவர் அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் ஔவையார் கூட, தனக்குத் தானம் தராத மன்னனைக் கன்னா பின்னாவென்று ஏசிச் செல்வதாகவும் அதுவும் மன்னனின் முகத்துக்கு நேரே ஏசினால் சிறைச்சாலை என்பதால் வாயில் காப்போனிடம் வசை பாடிச் செல்வதாகவும் எழுதியிருக்கிறார். அந்த மன்னன் யார் என்ற குறிப்பு அதில் இல்லை. வெளிநாட்டுக்குச் சென்று வந்து பயணக் கட்டுரை எழுதுவதற்கும், தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கும் பணம் கொடுங்கள் என்று இணையத்தில் தனது வங்கிக் கணக்கினை #சாருநிவேதிதா கொடுப்பதும் அவரது எழுத்துக்களால் உலகம் அல்லது குறைந்த பட்சம் தமிழ்ச் சமூகம் பெரும் பேறு  பெற்று விடும் என நம்பி வாசகர்கள் பணம் கொடுப்பதும் அவர்களுடைய விருப்பம் அல்லது உரிமை.

தன்னுடைய செயலையோ நிலைப் பாட்டினையோ நியாயப் படுத்திக் கொள்வதற்காக சங்க இலக்கியத்தின் பெரும் ஆளுமையான ஔவையாரை ஏன் சாரு நிவேதிதா  கொச்சைப் படுத்த வேண்டும்?  அதியமானைச் சந்தித்துப் பரிசில் பெற வரும் ஒளவையாரை  அவனது அரண்மனையில் அமைச்சர் உள்ளிட்ட பலரும்  நன்கு உபசரிக்கின்றனர். ஆனால் அதியமான் அவளைச் சந்திக்காமல் காலம் தாழ்த்துகிறான். அவளைப் பார்த்துப் பரிசில் வழங்கி விட்டால் அங்கிருந்து சென்று விடுவாள்: மேலும் சில காலம் அவள் தன் அரண்மனையில் தங்க வேண்டும் என்பதனாலேயே அவன் அவ்வாறு செய்கிறான். அறிவுச் செருக்கும் துணிவும் கொண்ட ஔவையாரோ  தன்னை நேரில் சந்தித்து, தன் பாடலில் மகிழ்ந்து, தனக்குப் பரிசில் தராத மன்னனின் அரண்மனையில் தங்குவது தனது தன் மானத்துக்கு இழுக்கு என எண்ணுகிறாள். அவ்வேளையில்தான் வாயில் காப்போனிடம் அவள் பாடுகின்ற பாடலைத்தான் சாரு நிவேதிதா குறிப்பிடுகிறார்.  புறநானூற்றில் 206வது பாடலாக இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அப்பாடலின்,

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?

என்ற வரிகளில் அதியமான் தன்னுடைய தரம் அறியாதவனா அல்லது என்னுடைய தரம் அறியாதவனா எனக் கேள்வி எழுப்பும் அவர் தான் வெறும் சோற்றுக்காக அங்கு வந்து தங்கவில்லை என்றும் மன்னன் தன்னைச் சந்திக்காமல் காலம் கடத்துவது தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால் செல்வதாகவும், கற்றறிந்த புலவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு.

எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே

எனக் கூறுகிறாள். அதன் பிறகே அதியமான் உடனே அவளை நேரில் சந்தித்து வரவேற்று உபசரிப்பது மற்றும் நெல்லிக்கனி கொடுப்பது, அவனுக்காக அவள் தொண்டைமானிடம் போர் வேண்டாம் என தூது செல்வது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அதியமான்-ஔவையார் நட்பு தமிழைக் கற்றறிந்த அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்று. அவன் இறந்த பிறகு அவள் பாடும் கையறு நிலை பாடல் அந்த நட்பின் மகத்துவத்திற்குச் சான்றாகப் போற்றப்படுகிறது.

அதியமானின் மகன் பொருட்டெழினிக்குக் கூட ஔவையார் அறிவுரை கூறும் பாடல்களும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த உண்மைகளையெல்லாம் ஒருவேளை சாரு நிவேதிதா தமிழ் இலக்கியத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ளாததினால் அறியாமல் இருக்கலாம். தமக்குத் தெரியாததினாலேயே வாய்க்கு வந்ததைத் தாறுமாறாக எழுதி ஞானச் செருக்கு மிக்க ஔவையாரையும் அதியமானின் கொடைத் தன்மையையும் புலவர்களிடம் அவன் கொண்ட பேரன்பையும் அவமதித்துள்ளார்.

பொதுவாகவே, அரிதாக சில மன்னர்கள் தவிர மற்ற மன்னர்கள் சிற்றரசர்கள், புலவர், பாணன், பாடினி, பொருநர், என அனைவரையும் மதித்துப் போற்றியுள்ளனர். கரிகால் பெருவளத்தான் பரிசிலும் கொடுத்து ஏழடி புலவர் பின்னே சென்று அவர்களை வழியனுப்பி வைத்ததாக சங்க இலக்கியத்தின் வழி அறிகிறோம். 

தம்மை நேரில் பார்க்காது யாரேனும் ஒரு மன்னன் பரிசளித்தால் அதை வாங்க மறுத்துள்ளனர் புலவர்கள். புறநானூற்றின் 208வது பாடல், நேரில் தன்னைச் சந்தித்து மனமுவந்து கொடுக்காத பரிசிலை ஏற்றுக்கொள்வதற்குத் தான் ஒன்றும் வாணிகப் பரிசிலன் அல்லேன் என பெருஞ்சித்திரனார் மறுப்பதாகச் சொல்கிறது.

எந்த பழந்தமிழ் மன்னனும் புலவரை, பொருநரை சிறையில் அடைத்ததாகவும் பாடல்கள் சொல்லவில்லை. புலவர்கள் சொல்லும் அறிவுரைகளைக் கூட ஏற்று அதன் வழி மன்னர்கள் நடந்ததாகப் பல பாடல்கள் பதிவு செய்துள்ளன. சங்கப் பாடல்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதற்கு வெவ்வேறு கோணங்களில் பொருள் கொள்ள முடியும். ஆனால், அடிப்படைப் பொருளையே மாற்றி தவறான ஒரு செய்தியைப் பரப்புவதற்குக் காரணம் சாரு நிவேதிதாவின் அறிவீனமா அல்லது தனக்கு எல்லாம் தெரியும், தான் என்ன சொன்னாலும் மற்றவர்கள் நம்பிவிடுவார்கள், அல்லது நம்பியே ஆகவேண்டும் என்ற அகம்பாவமா? இந்த இலட்சணத்தில் இவர் இன்றைய தலைமுறையினர் தமிழை வளர்க்க வேண்டும் என்றும் தமது கட்டுரைகளில் கூப்பாடு போடுகிறார். இப்படித் தவறான, பொய்யான தகவல்களை எழுதினால் இளம் தலைமுறை எப்படித் தமிழை வளர்க்கும்?

#அந்திமழை என்ற இதழை பல கல்லூரிகளில் கூட வாங்குகிறார்கள். சாரு நிவேதிதாவின் கட்டுரைகளை வெளியிடும்போது அதில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் நீக்கிவிட்டுப் பிரசுரித்தால் நல்லது. சாரு நிவேதிதாவும் தனக்குத் தெரியாததை மாற்றியும், திரித்தும் எழுதுவதை நிறுத்திக் கொண்டால் தமிழுக்கு நல்லது.

வியாழன், 1 அக்டோபர், 2015

பெரியாரின் பெண்ணிய வெங்காயம்

வலம்புரி ஜான் என்ற பெயர் தமிழ் நாட்டில் பரவலாக அறியப்பட்ட ஒன்று. அரசியல்வாதி, மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சியில் உடல் நலக் குறிப்புக்கள் வழங்கிப் புகழ்பெற்றவர் என அவரைப் பற்றி ஏராளமாகச் சொல்லலாம். 1980களில் பல மேடைகளில் அவர் சொல்லும் வித்தியாசமான சின்னச் சின்ன கவிதைகள் கை தட்டலை அள்ளிச் செல்லும். காந்தி பற்றி ஒரு மாணவன் எழுதியதாய் அவர் சொன்ன கவிதை இன்றும் என் நினைவில் உள்ளது.

“வெங்காயமே, வெங்காயமே
நீயும் ஒரு காந்தியவாதிதான்
உரிக்க உரிக்கச் சும்மா இருந்துவிட்டு
உரித்த பின்பு உரித்தவனையே
அழ வைத்துவிடுகிறாயே!"

காந்தியின் அஹிம்சை வழிப் போராட்டத்தில் எதிரிகளே சோர்ந்துபோய் பின்வாங்கி விடுவார்கள் என்ற பொருளில் கூறப்பட்ட கவிதை இது. (இது கவிதையே இல்லை என்று யாரேனும் இலக்கியச் சண்டைக்குள் செல்ல விரும்பினால், அது அவரவர் விருப்பம்).


பெரியார் மிகப்பெரும் சீர்திருத்தவாதி, வைக்கம் வீரர், ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட இயக்கம் கண்டவர், சிந்தனையாளர், மிகப்பெரும் பெண்ணியவாதி என்றெல்லாம் போற்றப்படுபவர். குறிப்பாக பெண்ணிய சிந்தனை பேசும் திராவிட இயக்கப் பின்னணியில் வந்த சில பெண் கவிஞர்களும் சிந்தனாவாதிகளும் தங்களுக்குப் புதிய தரிசனம் கிடைத்தது 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற அவருடைய புத்தகத்தில்தான் எனப் பெருமை பேசுவதைக் கவனித்திருக்கிறோம். ஆனால், பெண்ணை அடிமையாகவே சிந்திப்பதும், வெறும் உடலாகவும், ஆண் அனுபவிக்கக் கூடிய உடைமைப் பொருளாகவும் அல்லது போகப் பொருளாகவும் சிந்திக்கின்ற வழக்கமான ஆண் மனது பெரியாருக்கும் கூட இருந்திருக்கிறது என்பதை அவரது கட்டுரைகளில் நாம் காண முடிகிறது.

பெண்ணுக்குச் சொத்துரிமை உண்டு. பெண்ணுக்குக் கற்பு தேவையில்லை. பாலுறவில் அவளுக்கு சுதந்திரம் வேண்டும். அவளை அடிமைப் படுத்துகின்ற கர்ப்பப் பையை அவள் அகற்றிவிடலாம் என்ற பெரியாரின் போதனைகள் பெண்ணிய சிந்தனையில் ஒரு பெரிய புரட்சி என்று அவர் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர் பலரும் பேசுகிறார்கள். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பெண்ணின் உள்ளாடைகளை எரித்து எங்களுக்கு விடுதலை வேண்டும் எனப் பெண்கள் போராடி ஆண்களை அதிர்ச்சியடையச் செய்தது போன்ற ஓர் அதிர்ச்சி வைத்தியம் போலதான் பெரியாரின் பெண்ணிய முழக்கமும். உள்ளாடை எரிப்பு என்பது ஒரு அடையாளமேயன்றி ஆண்-பெண் சமத்துவத்தில் அதற்கான வழிமுறைகளில் என்ன பங்கு வகிக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டதும் உண்டு.

பெண்ணியம் என்பது ஒரு பெண் ஆணாக மாறுவது அல்ல. பெண், தனக்குரிய இயல்பான சுதந்திரத்தோடு ஆணுக்குத் துணையாக மட்டுமல்லாமல், இணையாக வாழ்வது. பெண்கள் வெறும் உடலாகவும், உயிரை உற்பத்தி செய்யும் கருப்பையாக மட்டுமே பொதுவாகப் பார்க்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், கருப்பையை வெட்டி எடுப்பதால் மட்டும் சுதந்திரமும் உரிமைகளும் கிடைத்துவிடுமா? இது ஆணாதிக்கம் புரையோடிப்போன சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சி வைத்தியம். அதாவது இந்து மதத்தின் சில ஒவ்வாத சடங்குகளை, சம்பிரதாயங்களை, சாதியப் பாகுபாடுகளை எதிர்ப்பதற்காக அம்மதத்தின் கடவுள் சிலைகளையே செருப்பால் அடித்து, செருப்பு மாலை போட்டு, “இதோ பார், எனது கடவுள் மறுப்பு கொள்கையை!” என்ற பெரியாரின் நாத்திகச் சிந்தனை போன்றதுதான் அவருடைய பெண்ணியமும்.

அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே என்று வாதிட்டாலும், அவரே அதில் முரண்பட்டு நிற்கிறார் எனும்போது, அவர் உரக்கச் சொல்லிய கொள்கைகளில் நேர்மையும் சத்தியமும் இல்லை என்றுதானே பொருள்?”

கடவுள் மறுப்புக் கொள்கை பேசும்போது ஆரியக் கடவுள் என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களையும், இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான இராமாயண, மகாபாரதத்தையும் வகை தொகை இல்லாமல் வசை பாடுகிறார்!

ஒரு காவியம் அல்லது இலக்கியம் எழுதப்பட்ட காலச் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே ஆராயப்பட வேண்டும். அதிலும் மகா காவியங்களான இராமாயணமும் மகாபாரதமும் வெவ்வேறு காலகட்டத்தில் இந்தியாவிற்குள்ளும் இந்தியாவைக் கடந்தும் பேசப்பட்டு அந்தந்த ஊர் மக்களின் வாழ்வுச் சூழல், கலாச்சார, பண்பாடு, விழுமியங்கள் ஆகியவற்றை ஏற்று கலந்து பல்வேறு பரிமாணங்களைப் பெற்று இன்றளவும் காலத்தைக் கடந்து ஏற்றம் பெற்று நிற்கின்றன.

ஒரு கத்தோலிக்க கிறித்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதிலும் எங்கள் தந்தையால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பஞ்ச பாண்டவர் கதைகள், வாழ்வில் நீதியையும் நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்ற நியதியைக் கற்றுக் கொடுத்தன.

கம்பராமாயணம், பேரிலக்கியத்தின் தமிழ்ச் சுவையோடு சகோதரத்துவத்தையும், மனிதனாகும் கடவுளின் தத்துவத்தையும் சிவபக்தன் இராவணன் பிறன் மனை நோக்கியதால் பேராண்மை இழந்த இழிவையும் இளம் வயதில் நெஞ்சில் பதிய வைத்தது.

பதின்ம பருவம் கடந்து மார்க்சியத்தையும், பொதுவுடைமைத் தத்துவங்களையும் நீட்சேயையும் படித்தாலும் அவற்றின் சாராம்சங்களின் பின்னணியில் இந்த இரு பெரும் இதிகாசங்களை ஆராய்ந்தால் ஆய்வுக்குரிய, சர்ச்சைக்குரிய விஷயங்கள் மனதில் எழுந்தாலும் அதற்குரிய விடைகளும் இந்தக் காவியங்களிலேயே நாம் காணப் பெறுவோம்.

பெண்ணியம் பேசும் பலர் (குறிப்பாக இலக்கியவாதிகள்), சீதையை இராமன் அக்கினிப் பிரவேசம் செய்ய வைத்தான் என்றும் திரௌபதி ஐந்து கணவர்களோடு வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டாள்; இது தகுமா? என்றும் கேள்விகள் எழுப்புவது வழக்கம். அந்த இதிகாசங்கள் முழுமையையும் ஆழ்ந்து படிக்காமல் மானுட உணர்வுகளை மனப் போராட்டங்களை, அவலங்களை, அந்தச் சமூக சூழலின் பின்னணியோடு இணைத்துப் பார்க்காமல் முன் வைக்கப்படும் இந்த வறட்டு வாதங்களைக் கூட கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிடலாம். ஆனால், பெண்ணுக்குக் கற்பு தேவையில்லை என்று பேசிய அதே பெரியார், சீதை கற்போடு இருந்தாளா? எனவும், ஐந்து கணவர்களோடு வாழ்ந்த திரௌபதி பத்தினியாக முடியுமா? எனவும் மலிவான கேள்விகளை முன் வைத்ததும், இவர்கள் ஆண்களால் 'அனுபவிக்கப்பட்டார்கள்' என்று இழிவான சொற்களால் ஏளனப்படுத்துவதும், பெண்ணிய சிந்தனைவாதி எனப் பாராட்டப்படும் ஒருவரின் பகுத்தறிவுத் தளத்திலிருந்து எண்ணத்திலிருந்து உருவான அலங்கோல மலினம் அல்லாமல் வேறென்ன?

ஒரு சிறு உதாரணம்: சித்திர புத்திரன் என்ற பெயரில் குடியரசு இதழில் 08-03-1936-இல் பெரியார் எழுதிய கட்டுரை பெண்ணைப் பற்றி ஆபாச சிந்தனைகளை விதைக்கும் ஒரு மஞ்சள் பத்திரிகை அளவுக்கு மலினமான வார்த்தைகளாலும் கருத்துகளாலும் பரப்பப்பட்டிருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அம்மதம் தொடர்பான கதைகளில் இடம்பெறும் பெண்களை, இவள் கற்பிழந்தவள், சீதை இராமனுடன் விரும்பிச் சென்றாள் என்று எழுதுவதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. சீதை கற்பு நெறி தவறியவள் என்பதைத் தான் நிறுவியே ஆகவேண்டும் என்பதற்காக ஒரு படி மேலே போய், “சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையை கற்பிப்பதற்கு ஆக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள். இந்தப் பெருமையைப் பற்றியும் கதையில் வால்மீகி ஜாடை மாடையாய் காட்டி இருப்பதுபற்றியும் நமக்கு இப்போது தகறார் இல்லை. ஆனால் கதையின் தத்துவப்படி மூலகாரணப்படி சீதை கற்புடையவளாக இருந்திருக்க முடியுமா என்பதுதான் கேள்வியாகும்.” என வாதிடுகிறார்!

பெண்ணுரிமை பேண விரும்பும் எவரும் இப்படி எழுதுவதற்கோ, பேசுவதற்கோ வாய்ப்பில்லை. ஒரு உக்கிரமான போரில் வெற்றி பெற்ற பிறகு தோல்வியுற்றவர்களின் பெண்களை வேட்டையாடும் வெற்றி பெற்றவர்கள் போல ஒரு தாக்குதலை பெரியார் சீதை மேல் நிகழ்த்துகிறார். கடவுளை நம்புவதும், ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் அவரவர் விருப்பம். கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் அநியாயங்கள் இழைக்கப்பட்டால் அவை கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டுமே தவிர, அம்மதம் தெய்வங்களாகக் கொண்டாடும் பெண்களை குறைந்த பட்சம் நாகரீகம் கூட இல்லாமல் தாக்குவது பெண்ணியத்தின் ஒரு அங்கம் ஆகுமா?

பெரியாரின் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம் என்று மார் தட்டிக்கொள்ளும் சிலரும் இந்த மலினமான வேலையைச் செய்கிறார்கள். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தின்போது ஃபிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழச்சி என்ற சகோதரி, தனது முகநூலில் எழுதியிருந்த பதிவு பலரைப் பதறச் செய்தது, சிலரை முகம் சுளிக்கச் செய்தது. கன்னி மரியாள் என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் மரியாள் வீதியில் நடந்துசென்றபோது இராணுவ வீரன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதன் விளைவாகவே இயேசு பிறந்ததாகவும் வெகு ஏளனமான மொழிநடையில் பதிவிட்டிருந்தார். அதற்குச் சில நூல் ஆதாரங்களையும் குறிப்பிட்டிருந்தார். யூதர்களின் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களை அறிவதற்கும் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை அறிந்துகொள்வதற்கும் உதவியாக இருக்கும் பைபிள், கிறித்தவ மக்களால் புனித நூலாகக் கருதப்படுகிறது. ஆனால், பலரால் எழுதப்பட்ட ஏடுகளில் கிடைக்கப்பெற்ற சில ஏடுகளிலும் கிறித்தவம் ஆராய்ந்து பார்த்து வெகு சிலவற்றை ஏற்றுக்கொண்டு மற்றவற்றைப் புறந்தள்ளிவிட்டது. அப்படிச் சில ஏடுகளை எடுத்துக்கொண்டு ஆதாரமின்றி அம்மதத்தின் போற்றப்படும் பெண்ணை மட்டும், அதிலும் அவள் கற்பு நெறி தவறியவள் என்று சேற்றை வாரி இறைப்பதுதான் பெரியார் வழிப் பெண்ணிய சிந்தனையா?

நான் முதுகலை முதலாம் ஆண்டு படித்தபோது, உடன் பயின்ற மாணவர் திருமந்திரம் நடத்திக்கொண்டிருந்த பாதிரியாரிடம் திடீரென்று ஒரு கேள்வி எழுப்பினார். பைபிளில் கிறிஸ்து பிறக்கும் வரை அவர் (அதாவது இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஜோசப்) அவளை (அதாவது இயேசுவின் தாய் மரியாள்) அறியாதிருந்தார் என்று எழுதப்பட்டுள்ளதே. அப்படியென்றால் அதன் பிறகு என்ன நடந்தது? எனக் கேட்டார்.  பல மொழி புலமை கொண்ட பாதிரியார் பொறுமையாகப் பதிலளித்தார்.

கிரேக்க மொழியில் வாக்கிய அமைப்பு இவ்வாறே இருக்கும். அது அந்த மொழியின் தனித்தன்மையே அன்றி அதுவரையில் அறியாதிருந்தார் என்றால் அதன் பிறகு அறிந்தார் என்பது பொருளல்ல என்ற விளக்கம் அறிவு பூர்வமானதாக இருந்ததோடு எந்த இலக்கியமோ, மதமோ, மதம் தொடர்பான புத்தகங்களோ, எழுதப்பட்ட மொழியின் இலக்கணத் தன்மையோடு வாசித்து அறியப்பட வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தியது.

பைபிளில் சில இடங்களில் திடீரென்று இயேசு பெத்தானியாவிற்குச் சென்றார் எனச் சொல்லப்படும். பெத்தானியா என்ற ஊருக்குள் ஒருவன் பிரவேசித்துவிட்டால் அவன் அங்கிருந்து வெளியேறும் வரையில் கைது செய்யப்படக் கூடாது என்ற நடைமுறை அன்றைய யூதர் காலத்தில் இருந்துள்ளது. இந்தப் பின்புலம் தெரிந்தால் மட்டுமே அக்குறிப்பிட்ட நேரத்தில் இயேசு பெத்தானியாவிற்கு ஏன் சென்றார் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

எனவே, ஒரு இலக்கியமோ, மதம் சார்ந்த இதிகாசமோ படிக்கப்படும்பொழுது, அது எழுதப்பட்ட மொழி, அதன் இலக்கணம், எழுதப்பட்ட காலம், அப்பொழுது நிலவிய அரசியல் பண்பாட்டுச் சூழல் போன்ற அம்சங்களைக் கணக்கில் கொண்டே வாசிக்கவும் ஆராயவும் வேண்டும். அதைவிடுத்து மேம்போக்காக தான் உருவாக்கிக் கொண்ட ஒரு பிம்பத்திற்கு உண்மை உருவம் கொடுப்பதும்ஆங்காங்கே தகவல்களையும், வார்த்தைகளையும் உருவி எடுத்துப் பொருள் கொள்ளுவதும் பெண்ணிய சிந்தனாவாதியாகப் பேசிவிட்டு பெண்களையே, அதுவும் தானே ஏற்றுக்கொள்ளாத கற்பு நெறி சார்ந்து தாக்குவதும் எந்த வகையில் நியாயம் ஆகும்?

பெரியார் பல சமூக சீர்திருத்தங்களை தான் வாழ்ந்த காலத்தில் முன்னெடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவர் எழுதிய இதுபோன்ற கட்டுரைகள் அவர் உதிர்த்த பெண்ணிய கருத்துகளுக்கு முரணானவை மட்டுமல்ல, எதிரிடையானவை. உரிக்க உரிக்கச் சும்மா இருந்துவிட்டு உரித்த பின்பு உரித்தவனையே அழ விடும் வெங்காயம் போல, பெரியாரின் பெண்ணிய வெங்காயம் உரித்து, உரித்துப் பார்த்தாலும், இது தானா பெரியாரின் பெண்ணியம் என்று கடைசியில் நெஞ்சிலும் கண்ணிலும் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.


~~~~~



புதன், 30 செப்டம்பர், 2015

தேவை கண்ணீர் சிந்தும் கடவுள் அல்ல! சுதர்சனச் சக்கரம் ஏந்தும் கிருஷ்ணனே!

கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால்... ஆராயவே வேண்டியதில்லை, மேலோட்டமாகப் படித்தாலே அதன் ஊழல் படிந்த கோர முகமும் அறிவியலுக்கு எதிரான வறட்டு ஆன்மீகத்தின் கொலை முகமும் நமக்கு பட்டவர்த்தனமாக விளங்கும். நிறுவன மயமாக்கப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையில்தான் பணம் கொடுத்தால் பாவ மன்னிப்பு உண்டு என்றும் போப் அவர்களின் முடி அல்லது நகத்தை விலை கொடுத்து வாங்கினாலே சொர்க்கத்துக்குப் போய்விடலாம் என்ற வியாபாரமும் நடைபெற்றது. இன்று ரோமாபுரியில் கன கம்பீரமாக எழுந்து நிற்கும் செயின்ட் பீட்டர்ஸ் கதீட்ரலை கட்டுவதற்காக ஒரு போப் போனிஃபஸின் தலை முடி கத்தரித்து விற்கப்பட்டதில் அவர் மொட்டையாகிப் போன கதையும் ஐரோப்பிய வரலாற்றில் உண்டு. Pope is both spiritual and temporal head என்று மேற்கு உலக நாடுகளின் மன்னர்களே தாள்பணிந்து நின்ற ராசாதி ராச ராச கம்பீர போப் ஆண்டவர்கள் ஆற்றிய அளப்பரிய செயல்கள் புல்லரிக்கச் செய்பவை.

ஒரே நேரத்தில் மூன்று போப்புகள் இருந்ததாகவும், இறந்து மண்ணுக்குள் சென்ற ஒரு போப்பின் உடலை வெளியே எடுத்து அவருக்குப் பின்னே வந்த போப், 'I excommunicate you', அதாவது உன்னைத் திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கிறேன் என்று சபித்ததாகவும் வரலாறுகள் உண்டு.

ஆனால், இந்த அலங்கோலங்களினால் கத்தோலிக்கத் திருச்சபையின் உலகளாவிய அதிகாரம் ஒடுக்கப்பட்டதும் நல்லதே. கத்தோலிக்கத் திருச்சபையிலும் பெரும் அறிவு ஜீவிகள் என்று பெருமை பாராட்டும் இயேசு சபையினரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டு அதையும் இப்பொழுது கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

விஷயம் அதுவல்ல. அது முக்கியத்துவம் வாய்ந்ததும் அல்ல. அந்த சபையைச் சேர்ந்த தற்போதைய போப் ஃபிரான்சிஸ், சமீபத்தில் செய்த அமெரிக்க விஜயம் பற்றியது.

இதற்கு முன்பு இரண்டாம் ஜான் பால் பல நாடுகளுக்கும் பயணம் செய்தபோது அமைதிப் புறாவாகவே பார்க்கப்பட்டார். போற்றவும்பட்டார். முந்தைய காலங்களில் உலகம் உருண்டை என்று சொன்ன கலிலேயோவை எரித்ததற்காகவும் யூதர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டபோது முகம் திருப்பிக் கொண்டதற்காகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் பகிரங்க மன்னிப்புக் கேட்டார் அவர்.

ஆனால், இயேசு சபை 'எங்கள் குரு' என்று பெருமைபட்டுக் கொள்ளும் தற்போதைய போப் ஃபிரான்சிஸ், நியூயார்க், ஃபிலடெல்ஃபியா போன்ற ஊர்களுக்குப் பயணம் சென்றிருந்தபோது 1980களில் கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஆண், பெண், குறிப்பாக சிறுவர் சிறுமிகளைச் சந்தித்தபோது கூறிய வார்த்தைகள் கடும் கண்டனத்திற்குரியவை.

அவர்களிடம், 'கடவுள் உங்களுக்காக கண்ணீர் வடிக்கிறார்' என்று சொல்லிய போப், பொதுவான கூட்டத்தில் அவர்களைச் சந்திக்காமல், தனியாக சந்தித்ததில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என அமெரிக்காவில் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மோசமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தைகளைப் பார்த்து 'கடவுள் உங்களுக்காக கண்ணீர் சிந்துகிறார்' என்று மனசாட்சியே இல்லாமல் சொல்லப்பட்ட வார்த்தைகளில் தெரியும் பசப்புத் தன்மை எரிச்சலைத் தருகிறதுஅவர்கள் அந்த கொடுமைக்கு உள்ளான காலத்தில் அதற்குக் காரணமான பாதிரிகளை பணியிட மாற்றம் செய்து அதுதான் தண்டனை எனப் பரைசாற்றிக்கொண்டது. ஆனால், அமெரிக்க அரசாங்கமோ அவர்களை சிறைக்கு அனுப்பி நேர்மையாய் நடந்துகொண்டது. ஏறக்குறைய ஒரு லட்சம் குழந்தைகள் கத்தோலிக்க தேவாலய பாதிரிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பிறகு, அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ளிய பிறகு இனியும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை ஒளித்து வைக்கத் தேவையில்லை என்று ஒப்புக்குச் சொல்லியிருக்கும் போப் ஃபிரான்சிஸ் இதற்கு முன்னால் காப்பாற்றப்பட்ட பாதிரிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவதில் தீவிரம் காட்டுவாரா?

பாதிப்பிற்குள்ளான குழந்தைகளிடம் ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் இதைவிட மோசமாக யாரும் பேச முடியாது. குற்றவாளிக்குத் தண்டனை தராத கடவுள் கண்ணீர் விடுவதால் என்ன பயன்? பாதிக்கப்பட்டவனுக்குக் கிடைக்கும் நிவாரணம்தான் என்ன? கடவுளின் நீதி என்பது இதுவல்லவே!

இரண்டாம் ஜான் பாலிடம் வெளிப்பட்ட அந்த நேசம் நிறைந்த நேர்மை இயேசு சபையைச் சேர்ந்த போப் ஃபிரான்சிசுக்கு இல்லாமல் போனது ஏன்?

இந்தியாவிலும் கூட இப்போது கிறிஸ்தவத்திற்கு எதிரான பரப்புரைகள் பல நடந்துவருகின்றன. ஆனால் அவ்வாறு செய்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் தாக்க வேண்டியதும், தரை மட்டமாக்க வேண்டியதும் பெரும் வணிகமயமாகிவிட்ட நிறுவனங்கள் (கல்வி நிறுவனங்கள் உட்பட) நடத்துபவர்களும், எளியவர்களுக்கு எந்த வகையிலும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இல்லாத, சாதியத்தையும், இன வெறியையும் தூக்கிப் பிடிக்கும் சில கத்தோலிக்க சபைகளையே என்பதை ஏனோ அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.

இயேசு ஒருவரே வழி என்று முச்சந்தியில் நின்று அறைகூவினாலும், பல பெந்தேகோஸ்தே சபைகள் வணிக நோக்கில் செயல்படுவதில்லை. மிக மிக எளிய பின்புலத்தில் இருந்து செல்லும் மக்கள் இந்த ஆலயங்களுக்குச் செல்லும்பொழுது ஏதோ ஒரு விதத்தில் மன ஆறுதலும் நிறைவும் அடைகிறார்கள். பாவம் செய்வது தவறு என்று நல்வழியாவது திரும்பத் திரும்ப அங்கு கற்பிக்கப்படுகிறது.

காலம் காலமாக வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பைபிள் இதுபோன்ற பெந்தேகோஸ்தே சபைகளில் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அர்த்தம் செய்துகொள்ளப்பட்டு வேத வாக்காகப் பறைசாற்றப்படுகின்றன என்ற குறை இருந்தாலும் தன்னை நாடி வரும் எளிய மக்களின் மேல் ஏறி மிதித்து தலைக்கனம் கொண்டு திரிவதில்லை அச்சபையினர்.

அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை அதிகார கூடங்களாகக் கையில் வைத்திருக்கும் சில கத்தோலிக்க சபைகள் இயேசு அன்று எடுத்த சாட்டையால் அடித்துத் துவைக்கப்பட வேண்டியவர்கள். அவர்களே தங்கள் நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல கொடுமைகளையும் நிகழ்த்திவிட்டு கடவுள் உங்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறார். குற்றவாளியைக் காப்பாற்றியே தீருவோம் என கயமைத்தனத்தின் உச்சமாகத் திகழ்பவர்கள். இப்படிப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கு தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர் என்று பரிகாசம் செய்யப்பட்ட சிலுவையில் தொங்கும் இயேசு கையறு நிலைக் கடவுளாகப் போய்விட்டார் என்றால் கையில் சுதர்சனச் சக்கரம் ஏந்திய கிருஷ்ணனே இன்றைய தேவை.


பாவம் இயேசு கிறிஸ்து! பகைவனுக்கு அருள்வாய் நன்னஞ்சே என்ற தமிழரின் மகத்தான உணர்வை மண்ணுக்குள் விதைத்த மகான் அவர். ஆனால் அதிகார மமதையில் எளியவரைப் பார்த்து கடவுள் உங்களுக்காக கண்ணீர் வடிக்கிறார் என்று சொல்லும் பாசாங்குக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். மீட்பரே தன்னை இவர்களிடமிருந்து மீட்டுக்கொள்வது எப்போதோ?